அன்புள்ள தோழர். ம.மதிவண்ணன் அவர்களுக்கு

வணக்கம்.

கீற்று இணையதளத்திலும், புத்தகம் பேசுது இதழிலும் ஆதவன் தீட்சண்யா தங்களை நேர்கண்டு எழுதியவற்றைப் படித்தேன். தங்களின் இதயத் துடிப்புகளின் குருதியோட்டத்தில் கொப்பளிக்கும் ஆவேசமும் அடர்த்தியும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. செத்தவன் கை வெற்றிலையாக இருக்கும் செத்த எழுத்துகள் அல்ல இன்றையத் தேவை. எரிமலைக் கனலை விசிறிவிடும் ஊதுகுழல் எழுத்தே இன்றைய தேவை. இதில் உங்கள் பங்கும் குறிப்பிடத்தக்கது. 

பெண்களின் பிரசவ வலியை எந்தவொரு ஆணாலும் பெண்ணைப் போல் ஒருக்காலும் உணர முடியாது; `ஈர நசநசப்போடு ஒருநாள் முழுக்க இருந்து பாருங்கள்` என ஆணுக்கு ஒரு பெண் கவிஞர் விட்ட சவால் பொருள் பொதிந்தது. ஐயமில்லை பெண்கள் இவற்றை பதிவு செய்யும் போது இவற்றின் ஆழமும் கூர்மையும் வெப்பமும் அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆயினும் பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த ஆண்களை; எழுத்தாளர்களை குறைத்து மதிப்பிட்டு விட முடியுமா?

தலித்துக்களின் வேதனையை, கண்ணீரை, மனக்காயத்தை இன்னொரு சமூகத்தவர் அந்த வலி யோடு உணர்வது அசாத்தியமே. ஆயினும் சமூக கண்ணோட்டத்தில் அந்த வேதனையை உணர்ந்து எழுதுகிறவர்களை நட்போடு பார்ப்பதுதானே ஜனநாயகம்?

அருந்ததியர்கள் பிரச்சனையாகட்டும்; அல்லது தலித்துகள் பிரச்சனையாகட்டும் இன்று உருவாகி இருக்கிற "போர்க்குணமிக்க விழிப்புணர்வு" நேற்று இல்லை. நாளை அது மேலும் வலுப்பெறும். இன்று அதற்கான வியூகம் உருவாகிறது. இதெல்லாம் வரலாற்றில் நாம் விழையும் முற்போக்கு செயல்பாடுகள். இன்றைய உணர்வை நேற்றைய எழுத்தில் எதிர்பார்ப்பது; அவர்கள் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் அவர்கள் முன்னடி எடுத்து வைத்ததை பார்க்காமல் சகட்டு மேனிக்கு நிராகரிப்பது நாம் திரட்ட வேண்டிய பெரிய படைவரிசைக்கு தடையரணாகி விடக் கூடாது அல்லவா?

தகழியின் "தோட்டி மகன்" பற்றிய பார்வையில் ஆதவன் தீட்சண்யாவும் தாங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது இன்றைய விழிப்புணர்வின் வெளிப்பாடாக இருப்பினும் அவர் வாழ்ந்த காலச்சூழலோடு பொருத்திப் பார்த்தால் தகழியின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை. மறு வாசிப்பில் குற்றப்பத்திரிகை கூட வாசிக்க உரிமை உண்டு. ஏனெனில் வளர்ச்சியின் விதிகளுள் ஒன்று, "நிலை மறுப்பின் நிலை மறுப்பு" என்பதல்லவா? அதே சமயம் நண்பர் களை எதிரிகளாக்குவதும்; எதிரிகள் வட்டத்தை பெரி தாக்குவதும் ஆரோக்கியமானது அல்ல.

அரசியல் பார்வை என்று வரும்போது ஒரு விரிந்த ஜனநாயக மேடை தேவை என்பதை உணர்கிற தாங்கள்; அதன் நீட்சி இலக்கிய உலகிலும் வேண்டும் என்பதை மறந்து விமர்சனங்களைச் செய்வது விரும்பிய பலனைத் தராது. எல்லாம் மாறும். நேற்றைப் பற்றிய இன்றைய பார்வையும்; இன்றையப் பற்றிய நாளைய பார்வையும் மாறும்; எனினும் ஊடும்பாவுமாய் உள்ளோடும் நம்பிக்கைச் சரடு முற்போக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி தகழியோ, பெருமாள் முருகனோ, சூரியகாந்தனோ எழுதிய எழுத்துக்களை பற்றிய அணுகுமுறையில் சற்று நிதானம் தேவை என தோழமையோடு சுட்டிக் காட்டுகிறேன்.

அருந்ததியர் பாலான சமூகப் பார்வையும் வரலாற்றுப் பார்வையும் ஒடுக்கப்பட்டவர்கள் கோணத்தில் இருந்து மீள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது; "நமக்கிடையிலான தொலைவு" குறைந்து "நெருக்கமிக்க தோழமை" மலரும் காலம் வந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கும் ஏற்ற ஜன நாயக படை திரட்டலுக்கு தங்களின் உணர்ச்சி தெறிப்பு கள் இடையூறாகிவிடக்கூடாது அல்லவா?

நமது இலக்கு வெகுதூரத்தில் உள்ளது. நாம் செல்ல வேண்டியது நெடும்பயணம். இதில் யார் யார் எதுவரை வருகிறார்களோ அவரவர் அதுவரை வரட்டும்;

தோழர் மதிவண்ணன் அவர்களே! நானும் "மனுவி ரோதன்" நீங்களும் `மனுவிரோதன்' ஆதவன் தீட்சண்யாவும் `மனுவிரோதன்' - ஆக "நாமெல்லாம் மனு விரோதர்கள்" நாமெல்லாம் ஒன்று சேர `நான்' `நான்' `நான்' என `நாம்' சிறு சிறு குமிழியில் அடைபடல் சரியாமோ! ஒரு மரத்து இலைகளில் ஒரே மாதிரி இலைகளைக் காண முடியுமோ? ஆயினும் அது ஒரு மரத்து இலை இல்லை என்று ஆகிவிடுமோ?

ஜனநாயக சக்திகளுக்குள் கோபத்தின் டிகிரி அளவில் மாறுபாடு இருக்கலாம். சின்னச்சின்ன வியூகங்களில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் அது நட்பு முரணா இருக்கும்வரை அடுப்புக்கு அடங்கிய தீயாக இருக்கும் சமைக்க உதவும்; பகை முரணடாக விசிறிவிட்டால் நம் கூரையையும் சேர்த்து எரித்து விடுமே! தோழமைமிக்க இக்கடிதம் நட்பின்பாற்பட்டதென்று கொள்வீர் தாமே!

- சு.பொ.அகத்தியலிங்கம்