விழும்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் அரும்பட்டு என்னும் கிராமத்தில் பெரும்பான்மையாகப் பறையர்களும், மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் சக்கிலியர்களும் வசிக்கின்றனர். வன்னியர்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வசிக்கின்றனர். அஜித்குமார் (19, கல்லூரி மாணவர்), சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த மோனிஷா (17, பள்ளி மாணவி) பறையர் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் ஓராண்டுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 20.07.2018 அன்று இருவரும் ஊரைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். 27.07.2018 அன்று இரவு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது அருந்திவிட்டு அஜித்குமார் வீட்டில் அவர்களின் அண்ணி பாரதி என்பவரை அடித்து வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். அஜித்குமாரைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது இரண்டு குழந்தைகளையும் அடித்துள்ளனர். பாரதி திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு கொடுக்கிறார். காவல் நிலையத்தில் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை.

மறுநாள் காலையில் பெண்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் பாரதியையும் அவரின் குழந்தைகளையும் தாக்குகின்றனர். பெண்கள் துடைப்பம் போன்றவற்றைக் கையில் எடுத்து வந்துள்ளனர். பாரதியின் மகன் அதை விடியோ எடுத்துள்ளார். அதைப் பறிக்க முயற்சித்தபோது அவர் ஜட்டிக்குள் போட்டு மறைக்கிறார். செல்போனைப் பறிப்பதற்காக அவரின் உயிர்நிலையை கசக்கி துன்புறுத்தி செல்போனை பறிக்கின்றனர். அவர் போனைக் கொடுத்து விடுகிறார். பாரதியின் ஆடையை கிழித்துத் துன்புறுத்துகின்றனர். 28 ஆம் தேதி மதியம் பாரதி மற்றும் குழந்தைகள் முண்டியம்பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

29 ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மோனிஷாவின் தந்தையும் மைனர் பெண்ணைக் கடத்தியதாக அஜித்குமார் மற்றும் அவரின் தாய், தந்தை மீது வழக்குக் கொடுத்துள்ளார். அஜித்குமாரின் பெற்றோர்கள் அருகிலுள்ள சமத்துவபுரத்தில் வசிக்கின்றனர். அவர்களின் வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

மைனர் பெண்ணைக் காதலிப்பது சரியா?

இந்த ஜாதிவெறித் தாக்குதலை ஒட்டி சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது, முற்போக்கு பேசுகிற அமைப்புகள், ஜாதி ஒழிப்பு இயக்கங்கள், பொதுஉடைமை இயக்கங்கள் என அனைவரிடமும் ஒரு விவாதம் கிளம்பியுள்ளது. மைனர் பெண்ணைக் காதலிப்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. கண்டிப்பாக நாம் ஆதரிக்க முடியாது. அது எந்த சமூகப் பெண்ணாக இருந்தாலும் 18 வயது பூர்த்தி அடையாத காதலை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் இங்கு சமூகத்தில் பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பாலும் பெண்ணின் வயது 18க்கும் குறைவுதான். ஆனால் அப்படி நடக்கும் திருமணங்கள் வயது குறைவு காரணமாக நிறுத்தப்பட்டதாகச் செய்தி மிகக் குறைவாகக் கூட வருவதில்லை. காதல் திருமணம் என்று வருகின்ற போதுதான் அவர்கள் எந்தச் சமூகமாக இருந்தாலும் வயதைக் காரணம் காட்டுகிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீது பலமுறை இந்தக் குற்றச் சாட்டை வைத்துள்ளனர். அப்போது அமைதியாக இருந்த பலர் இப்போது வயதைக் காரணம் காட்டுகின்றனர்.

பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரை உரிய வயது வராமல் நடக்கும் எந்தத் திருமணத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்படி இரண்டுங்கெட்டான் வயதில் ஏற்படும் காதல்களை, ஈர்ப்புகளை எப்படி அணுகுவதென்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கண்டிப்பாக பாலியல் கல்வி, பாலின சமத்துவம் போன்றவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாததுதான் பாலின சமத்துவம் பற்றிய பரப்புரையும் ஆகும்.

ஜாதீயத் தாக்குதல் இந்து உளவியல்

வயது குறைவு மட்டும் காரணமாக இருந்தால், காணாமல் போனவுடன் வழக்குக் கொடுத்து பிரச்சனையைப் பேசி இருவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் இங்கு பார்ப்பனிய உளவியல் அனைவரின் மண்டைக்குள்ளும் இருக்கிறது. அதே கிராமத்தில் பறையர்-வன்னியர் ஜாதி மறுப்பு நடந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அவர்கள் அதே ஊரிலே வசித்தும் வருகின்றனர்.

சக்கிலியர்களை மட்டும் வீடு புகுந்து தாக்குவதற்கான காரணம் எளியவர்களாகவும் வலிமை குன்றியவர்களாகவும் சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களாகவும் இருப்பதால்தான். இந்து மதம் விதைத்த பார்ப்பனிய நஞ்சு ஒவ்வொரு ஜாதிக்குக் கீழேயும் ஒரு ஜாதி இருக்க வேண்டும் என்ற மனநிலை தான்.

பள்ளர், பறையர், சக்கிலியர் என்று சொல்லப்படும் பட்டியலின மக்களுக்குள் வரும் பிரச்சனைகளை அவர்களின் சமூக ஒடுக்குமுறையின் அளவை வைத்துக் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியராகக் குற்றம் சுமத்துகிறார்கள். பட்டியலின மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக சொல்கின்றனர்.

மேற்கண்ட பிரச்சனையில் மோனிஷாவின் தந்தை “ஒரு சக்கிலிப் பயலோடு ஓடிப் போய்ட்டான்னு கேவலமா இருக்கு” என்று கூறுகிறார். இந்த உளவியலை மாற்ற வேண்டும். இதே உளவியல்தான் நாயக்கன் கொட்டாய் வன்னியர்களிடமும் உள்ளது. கோகுல்ராஜைக் கொன்ற கவுண்டர்களிடமும் உள்ளது. பார்ப்பனரின் முன்னால் அனைவரும் சூத்திரர்களே.

மேலும் ஆர்.எஸ்.எஸ். ஒரு திட்டமிட்ட வேலையைச் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதுதான் இந்து மதத்தின் எதிரியாகவும், ஜாதி ஒழிப்பின் அடையாளமாகவும் இருந்த நமது தலைவர் அம்பேத்கரை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் பள்ளர், பறையர், சக்கிலியர் சமூகங்களின் பெயரால் இந்து மன்னர்களுக்குத் தளபதிகளாக இருந்தவர்களை முன்னிறுத்தி ஒவ்வொரு சமூகத்திற்கும் உயர் குடியாக்கச் சிந்தனையை விதைத்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நமது இயக்கங்களும் அதற்குப் பலியாகி உள்ளன.

தன்னை பெரிய ஜாதி, ஆண்ட பரம்பரை என்ற சிந்தனை யாருக்கு வந்தாலும் தனக்குக் கீழே ஒரு ஜாதி வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அமைப்புகள் “நாங்கள் பூர்வ பவுத்தர்கள்“ என்று மேடைதோறும் சொன்னாலும் மக்கள் இந்துக்களாகத்தான் உள்ளனர். அவர்களின் இந்து மனநிலையை மாற்றாமல் சமத்துவத்தை அடைய முடியாது.

இயக்கங்களின் போக்கு

சமுதாய அக்கறை உள்ள ஜாதி ஒழிப்பு இயக்கங்கள், தங்கள் அளவுகோலை மாற்றிக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் செய்கின்ற வன்கொடுமைகளையும், ஆணவக் கொலைகளையும் கண்டிக்கிறவர்கள் பட்டியலின மக்களுக்குள் வரும் பிரச்சனைகளைக் கண்டும் காணாமலும் நகர்ந்து செல்கின்றனர். பார்ப்பனிய உளவியல் பிற்படுத்தப்பட்டவரிடம் இருந்தால் அது எவ்வளவு கண்டனத்துக்குரியதோ, அதே அளவுக்கு பட்டியல் சமூகங்களுக்குள்ளும் இருக்கக் கூடாது என்பதே சரியான நிலையாகும்.

இப்படிப்பட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டினால் நட்பு சக்திகள் கோவித்துக் கொள்வார்கள் என்ற மனநிலைதான் அனைவரிடமும் உள்ளது. சரியானவற்றைச் சுட்டிக் காட்டினாலே கோபித்துக் கொள்வார்கள் என்றால் அவர்கள் எப்படி நட்பு சக்தியாக இருக்க முடியும்?

பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் படங்களைத் தங்கள் இல்ல விழாக்களிலும், ஊர் நிகழ்வுகளிலும் போட்டுக் கொண்டு அவர்கள் சொன்ன தத்துவத்திற்கு எதிராக இருப்பது எப்படிச் சரியாகும்? நாம் “தலைவர்கள் வாழ்க, தத்துவம் ஒழிக” என்ற மனநிலையை மாற்றி யார் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கும் போராடுவதற்கும் தயங்கக்கூடாது.

அனைத்து அமைப்புகளும் அவரவர் பகுதிகளில் ஜாதி ஒழிப்புச் சிந்தனையை, அதுவும் சுயஜாதி ஒழிப்புச் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். பட்டியலின மக்களிடம் தாங்கள் இந்துக்கள் அல்ல என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மழலையர் வகுப்பிலிருந்தே ஆண், பெண் இருவரையும் கலந்து அமர வைப்போம். பாலின சமத்துவத்தையும் பாலியல் கல்வியையும் கற்றுக் கொடுப்போம். தெளிவான புரிதலோடு ஜாதி, மதம் கடந்து உருவாகும் காதலை ஆதரிப்போம். அகமணங்களை அழித்தொழிப்போம். ஜாதிய உளவியலோடு யார் செயல்பட்டாலும் அவர்களைக் கண்டிப்போம்.

Pin It