வளர்ந்து வரும் தலித்திய ஆய்வாளர்களுள் முக்கியமானவராக அடையாளப்படுத்தப்படும் ஸ்டாலின் ராஜாங்கம், கடந்த காலத்தில் தமிழ்ச்சமூகத்தில் செயல்பட்ட தலித் ஆளுமைகள் மற்றும் போராட்டங்களிலிருந்து வரலாற்றைக் கட்டமைப்பதனை அவசியமானதாகக் கருதுகிறார்; அத்தகைய முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். இவரது நூல்களுள் ‘தீண்டப் படாத நூல்கள்’ (டிச. 2007), ‘வஞ்சி நகரம் கந்தன்’ (மே 2008), ‘வரலாற்றை மொழிதல்’ (ஆக. 2008) ஆகிய மூன்றும் தொடர்ச்சியான தேடல் மற்றும் கள ஆய்வினூடாகத் தலித் அறிவு மரபின், ஆளுமைகளின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறது.

இவ்வரலாற்றைக் கட்டமைப்பதற்கான தரவுகளைச் சேக ரிக்க இவர் மேற்கொண்ட முயற்சி மதிக்கத்தக்கது. பத்தொன்ப தாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டு களில் ஒடுக்கப்பட்டோர் சார்பாக வெளிவந்த இதழ்களையும் நூல்களையும் குறுவெளியீடுகளையும் அக்காலப் பின்னணியோடு ஆவணப்படுத்துகிறார். தமிழ்ச் சமூகம் அச்சுக் கருவியினூடாகத் தனது இலக்கிய மூலத்தையும் சாதி மூலத்தையும் தேடிக் கொண்டிருந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் சார்ந்து மேலெ ழுந்த குரலை அரசியல் அர்த்தத்தோடு பதிவு செய்கிறார். அறி வார்ந்த தளத்தில் மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்டோருக்காகச் சமூகத் தளத்தில் நின்று களப்பணி ஆற்றிய ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் பதிவுசெய்துள்ளார். இப்பதிவுகள் ஆவணங்களாக மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு உளவியல் ரீதியான போராட்ட பலத்தையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சு ஊடகத்தினை ஒடுக்கப்பட்டோர் அரசியலுக்காகப் பயன்படுத்திய ஆளுமைகளைப் பதிவுசெய்யும் இவரது நூலில் ஐந்து ஆவணங்கள் மட்டுமே பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. குறிப்பாக வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை ஆகியோர் ஆதிதிராவிடன் இதழைக் ‘கற்பனையான பத்திரிகை’ எனக் கூறியதனை மறுக்கும்பொழுது, அவ்விதழின் முகப்புப் பக்கத்தையாவது பின்னிணைப்பில் தருவது அவசியம். அல்லது சிக்கலுக்குரிய பகுதியை அவ்விதழிலிருந்து மின்னணுவாக்கம் செய்து தரவேண்டும். மறுபதிப்பிலாவது ஸ்டாலின் இதனைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

1990களில் உருப்பெற்ற தலித் அரசியல் எழுச்சியை அம்பேத்கர் நூற்றாண்டு நிகழ்வோடு மட்டுமே இணைத்துப் பார்க்காமல், மேலை நாடுகளிலிருந்து பெற்ற புதிய சிந்தனைகள் -குறிப்பாக விளிம்புநிலைக் கருத்தாடல்கள்-அறிவுலகத்தில் தலித்திய அரசியலுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியதாக இவர் மதிப்பிடுகிறார். அதேபோல் காந்தியின் அரிசன சேவையை விமர்சிக்கும்பொழுது அத்தகைய நெருக்கடியைத் தோற்றுவித்த தலித் இயக்கங்கள், தலைவர்கள் பற்றியும் இணைத்து அணுகவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தலித் அல்லாதவர் களும், தலித்துகளும் சுகாதாரம் குறித்துப் பேசுவதில் உள்ள வேறுபாட்டினை நுட்பமாகப் பதிவுசெய்கிறார். இவ்வாறு தலித்திய ஆய்வாளர்கள் மதிப்பிடாத சில புள்ளிகளை மிக நேர்த்தியான மொழியில் தர்க்கபூர்வமாக விவாதிக்கிறார்.

இவரது ‘சனநாயகமற்ற சனநாயகம்’ (ஜன. 2007), ‘ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது’ (ஜன. 2008) ஆகிய இரு நூல்களும் அரசியல், சமூக, ஊடக வெளிகளில் நுட்பமாக வினைபுரியும்-சில சமயங்களில் வெளிப்படையாகவே செயல் படும்-சாதிய அதிகாரத்தின் மீதான விமர்சனமாக அமைகின் றன. சமீப காலங்களில் ‘மாற்றுப்படம்’ எனும் மாயையோடு கிராமியச் சூழலை உள்வாங்கிக்கொண்டு ‘யதார்த்தமாக’ உருவாக்கப்படும் திரைப்படங்களிலுள்ள உள்ளார்ந்த சாதியத் தன்மைகளை வெளிப்படுத்துகிறார். இருபத்தோறாம் நூற்றாண் டின் மின்மயக் கருவிகளைப் பயன்படுத்தி, தலித் எழுத்துகள் அச்சு வடிவத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாசகர்களி டமாவது சென்று சேர்கின்றன. அதேசமயம் பெரும் மூலதனத் தையும் வெகுசன நுகர்வையும் எதிர்பார்க்கும் சினிமா, தலித்து களையும் அவர்களின் பிரச்சினைகளையும் மையப்படுத்துவ தில்லை. தலித் இலக்கியம், தலித் அரசியல் போல தலித் சினிமா எனும் தனித்த போக்கு உருவாகவில்லை. இவ்வாறு முதலாளித் துவமும் வெகுசன மனோபாவமும் கவனத்தில் கொள்ளாத கூறுகளைக் குறும்படங்களே காட்சிப்படுத்துகின்றன. இந்நூலில் ‘தீக்கொழுந்து’ குறும்படம் குறித்து ஸ்டாலின் விமரிசனம் செய்துள்ளார். ‘ஒரு பிரச்சினையில் வர்க்கம் மட்டுமே மையமாக இருக்குமா?’ (2008; ப. 83) எனும் கேள்வியை எழுப்புகிறார். ஆனால் பல இடங்களில் சாதி மட்டுமே பிரச்சினைகளுக்குக் காரணம் எனக் குறுக்கிப் பார்க்கிறார் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமிழ்ச் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டு கால இடைவெளிக்குள் நிகழ்ந்துள்ள அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு சாதியமைப்பையோ அது தரும் அதிகாரத்தையோ பாதிக்காத வகையில் நிகழ்ந்துள்ளன என்பதை விவாதிக்கிறார். தேசிய இயக்கத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த திராவிட இயக்கம், தலித்துகள் தவிர்த்த பார்ப்பனரல்லாதார் அதிகாரத்துடன் செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் வட்டாரத் தில் பெரும்பான்மையாக வாழும் சமூகங்களுக்கே சாதகமாக இருப்பதனைச் சரியாகவே மதிப்பிடுகிறார். (ஆனால் பார்ப்பன, வெள்ளாள ஆதிக்கத்திலிருந்து அடுத்த நிலையினர் அதிகாரம் பெற்றனர் என்பதும் உண்மை.) அதேசமயம் தலித்துகளுக்குள் ளும் பெரும்பான்மை வாதமும், ‘தமிழ்த் தேசிய உணர்வின்’ அடிப்படையில் ஒதுக்குதலும் நிகழ்வதை மௌனப்படுத்து கிறார். சில இடங்களில், அடர்த்தியாக வாழ்பவர், பறையர் பூமி, பூர்வ பௌத்தர் என்று பெருமைப்படவும் செய்கிறார். பறையர்களுக்குள்ளும் வள்ளுவர் சமூகம் குறித்த பெருமித உணர்வோடு எழுதுகிறார். அயோத்திதாசர் (2007; ப. 41) மற்றும் கே.ஆர். நாராயணன் (2008; ப. 83) குறித்த அறிமுகத்தில் இதனை உணரமுடிகிறது.

தமிழ்ப் பௌத்தம் பேசிய அயோத்திதாசர் (1845-1914) ‘இலக்கியப் பனுவல்கள் யாவற்றையும் பௌத்த பொருள் படுத்துவதிலும் தலித்மயமாக்குவதிலும் கவனம்’ கொண்டவராக ஸ்டாலின் மதிப்பிடுகிறார். ஆனால் இவர் சக்கிலியர் மற்றும் பெண்கள் குறித்து கொண்டிருந்த கருத்துகளை விமர்சிக்கவோ வெளிப்படுத்தவோ இல்லை. இவ்வாறு ஸ்டாலின் அயோத்தி தாசரைச் சுற்றி ஒளிவட்டம் கட்ட முனைகிறாரோ எனும் ஐயம் எழுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அயோத்தி தாசரைத் திராவிட இயக்கம் இருட்டடிப்பு செய்துவிட்டதாக வும், அயோத்திதாசர் முன்னோடியற்றவராகவும் குறிப்பிடுவ தனைப் புரிந்துகொள்ள முடிகிறது. பார்ப்பனியத்தால் ஏமாற்றப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக அயோத்திதாசர் யாரை (மட்டும்) அடையாளப்படுத்தினார் என்பது முக்கியம். “தலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளைச் செய்வதைச் சுட்ட வேண்டும். தாழ்ந்த சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என ஒரு பாகுபாட்டைச் செய்தார். குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாங்களாகவே தாழ்ந்த சாதிகள் என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றில் பிறரால் வஞ்சகமாகத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் எழுதினார் (ராஜ்கௌதமன், 2004; ப. 87).

மேலும் அயோத்திதாசர் பறையர்களைக் குறவர், வில்லியர், தோட்டி, சக்கிலியரோடு சேர்த்து பஞ்சமர் எனப் பெயரிட்டதைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் ராஜ்கௌதமன் குறிப்பிடுகிறார். தமிழ் + பௌத்த அடையாளங்களின் மூலம் அயோத்திதாசர் அருந்ததியர் களையும் பள்ளர்களையும் நீக்கிவிடுகிறார். அவர் எடுத்துக் கொண்ட பிரதிகள் கூட இந்த விலக்கலுக்கும் தமிழ் பௌத்த அடையாளத்துக்கும் பொருந்திவரக் கூடியனவே. இப்பின்புலத்தில் தான், நவீன சிந்தனை மரபுகளை உள்வாங்கி இந்துத்துவ, பார்ப்பனிய அதிகாரத்தைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொண்ட இந்து சுயக்கியான சங்கம் (1878), தத்துவ விசாரிணி, தத்துவ விவேசினி ஆகிய இதழ்களும் அதில் பங்காற்றியவர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர் (பார்க்க: வீ. அரசு, கவிதாசரண், ஆக. 2007-பிப். 2008, பக் 43-47).

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லட்சுமி நரசு (1860-1934), க. அயோத்திதாசர், ம. சிங்காரவேலர் (1860-1946) ஆகியோர் தத்தம் கொள்கை சார்ந்து பௌத்தத்தை முன்னெடுத்தோராக உள்ளனர். லட்சுமி நரசு தத்துவ விவேசினி குழுவோடு தொடர்புகொண்டிருந்தவர். அயோத்திதாசர் இவரோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். திராவிட இயக்கம் அயோத்திதாசரைப் பின்பற்றியதா அல்லது இந்து சுயக்கியான சங்கச் செயல்பாடு களைப் பின்பற்றியதா என்பதற்கு இந்து சுயக்கியான சங்கம்-லட்சுமி நரசு-அயோத்திதாசர் எனும் உறவின் முழுமையான புரிதல் நமக்கு அவசியம். இதன் மூலமே அச்சு ஊடக வருகைக்குப் பின்னர் நவீன தன்மைகளை உள்வாங்கி, தமிழ்ச் சூழலில் சாதிபேதமற்றக் கருத்தாக்கத்தையும் பௌத்த மதத்தையும் யார் முன்னெடுத்தனர், எதன்பொருட்டு முன்னெடுத்தனர் என்பது விளங்கும்.

தமிழ்த் தேசிய, தமிழ் பௌத்த அடிப்படையில் மட்டுமல்லா மல் வேறு பல இடங்களிலும் அருந்ததியர்களை ஸ்டாலின் புறக்கணிக்கிறார். தலித் வரலாற்றைக் கட்டமைக்கும் ஸ்டாலின் மறந்தும்கூட ஒரு அருந்ததியர் பெயரையோ நாவிதர் (மருத்துவர்) பெயரையோ சுட்டவில்லை. சைவசமயம் சார்ந்த சகஜானந்த சுவாமிகளைப் பற்றி விரிவாக எழுதுகிறார்; ஆனால் திராவிட இயக்கக் கருத்தியலோடு செயல்பட்ட எல்.சி. குருசாமியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. தவிரவும் 1921ஆம் ஆண்டு, சென்னை பின்னி ஆலை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒட்டியெழுந்த கலவரத்தில், தாழ்த்தப்பட்டோ ருக்கு ஆதரவாக நின்ற எல்.சி. குருசாமி, எச்.எம். ஜெகநாதன் ஆகியோரைக் குறிப்பிடாமல் எம்.சி. ராஜாவை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றார். இங்கு எல்.சி. குருசாமியின் சில செயல்பாடுகளைக் குறிப்பிடுவது அவசியம்.

- எல்.சி. குருசாமி தந்தை பெரியாரைப் போல, மக்களைத் திரட்டி திருவாங்கூர் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர்.

- பத்து ஆண்டுகள் (1920-1930) சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.

-      1927ஆம் ஆண்டு சைமன் குழுவில் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான வாக்குரிமை பற்றிய தன் அறிக்கையை சமர்ப்பித்தவர்.

- தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக லண்டன் சட்டமேதை மாநாட்டில் கலந்து கொண்டவர்.

- சென்னை அருந்ததியர் சங்கக் கிளைகளுள்ள இடங்களில் எல்லாம் பாடசாலைகள் அமைத்தவர்.

-      1920களிலேயே சக்கிலியர்களுக்கான (சாக்கியா உ சக்கிலியர்) பௌத்த மூலத்தை அடையாளப்படுத்தியவர். (‘அருந்ததியர் இயக்க வரலாறு’ நூலில் பரவிக்கிடந்த செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.)

இன்றும் புத்தமித்திரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் சக்கிலியர்கள் பூர்வ பௌத்தர்களே என்பதற்கான தர்க்க பூர்வமான விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டே தலித் வரலாற்றைக் கட்டமைக்கிறார். இவர் தலித், ஆதிதிராவிடர், ஒடுக்கப்பட்டோர் என யாரை (மட்டும்) அடையாளப்படுத்துகிறார் என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது.

டி.பி. சின்னசாமி (1904-1981) எனும் தலித் ஆளுமையின் செயல்பாடுகளைப் பற்றி குறிப்பிடும்போது ‘குருமன்ஸ் என்ற மலைச்சாதியினர் பெயரால் குரும்பர் என்னும் சாதி இந்துக்கள்’ சலுகைகள் பெற்று வந்ததற்கு தடையாணை பெற்றார் என்பதை முக்கியப்படுத்துகிறார்.

-      ‘குருமன்ஸ்’ எனும் பெயரில் பழங்குடி இனம் எதுவும் இல்லை. குருபா, குருபர், குரும்பர் எனப் பலவாறு உச்சரிக்கப்படும் பெயர்களின் பொதுவான ஆங்கிலச் சொல் லாகவே ‘குருமன்ஸ்’ என்பதை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.

- எட்கர் தர்ஸ்டன் முதல் பக்தவச்சல பாரதி வரைக்குமான மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் வடஆற்காடு மற்றும் பிற பகுதியிலுள்ள குரும்பர்களை பழங்குடிகளாகவே வரையறை செய்துள்ளனர்.

- குரும்பர்களுக்கு கவுண்டர் பட்டம் இருப்பதனாலேயே அவர்கள் சாதி இந்துக்கள் ஆகிவிடுவார்களா? அப்படி யானால் பிள்ளை பட்டமுடைய யாதவர்களும் பறையர் களும் வேளாளர்களா? தமிழ்ச் சமூகத்தில் பட்டம் என்பதும் சாதி என்பதும் வெவ்வேறானவை. ஒரு சாதிக்கு பல பட்டங்களும், ஒரே பட்டம் பல சாதிகளுக்கும் தமிழ்நாட்டில் இன்றும் வழங்கப்படுகிறது.

- இன்று குரும்பர்கள் வசிக்கும் பஞ்சாயத்து பகுதிகள் சில (வேறு பழங்குடியினர் இல்லாத போதும்) பழங்குடி யினருக்கான தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. குரும்பர்களுக்கு எதிராக டி.பி. சின்னசாமி பெற்ற தடையாணையால் எவரும் பழங்குடிச் சான்றிதழ் பெற்று போட்டியிடுவது கூட சிரமமாக உள்ளது.

இவ்வாறு தலித்துகளுக்குள்ளேயே ஒரு பிரிவினர் பாதிக்கப் படும் வகையில் செயல்பட்ட தலித் ஆளுமைகள் குறித்து எவ்வித விமர்சனமுமின்றி ஸ்டாலின் ராஜாங்கம் தலித் வரலாற்றைக் கட்டமைப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது.

தலித்துகள் தங்களுக்குள்ளான உள்முரண்பாடுகளை அறிவார்ந்த தளத்திலும் அரசியல் தளத்திலும் விவாதத்துக் குட்படுத்தி, மேல்-கீழ் வித்தியாசங்களைப் புறந்தள்ளி ஒத்திசைவோடு இயங்கவேண்டியது அவசியம். இல்லாவிடில் பார்ப்பனர் பயன்படுத்திய ‘இந்து’ அடையாளத்தைப் போல, உயர்சாதி முதலாளிகள் பயன்படுத்திய ‘பார்ப்பனரல்லாதார்’ அடையாளத்தைப் போல ‘தலித்’ அடையாளமும் கேள்விக்குட் படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படும்.

துணை நூற்பட்டியல்

1. இளங்கோவன், எழில்., அருந்ததியர் இயக்க வரலாறு, கலகம் வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு: மே 2008.

2. ராஜ்கௌதமன், க., அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், முதல்பதிப்பு: நவம்பர் 2004.

ஸ்டாலின் ராஜாங்கம் நூல்கள்

3. சனநாயகமற்ற சனநாயகம், கவின் நண்பர்கள் வெளியீடு, விருதுநகர், முதல்பதிப்பு : ஜனவரி 2007.

4. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது, தென்திசை பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : ஜனவரி 2007.

5. தீண்டப்படாத நூல்கள், ஆழிப் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : டிசம்பர் 2007.

6. தீரா தியாகம் : வஞ்சிநகரம் கந்தன், வணங்காமுடி பதிப்பகம், மதுரை, முதல் பதிப்பு : மே 2008.

7. வரலாற்றை மொழிதல், ஒரு பைசாத் தமிழன் வெளியீடு, திருவண்ணாமலை, முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2008.

8. கவிதாசரண் இதழ், ஆக. 2007-பிப். 2008.

- ஜ.சிவக்குமார்

(சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்)

Pin It