தென்தமிழகத்தில் கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டு கால கட்டங்களில் பகடை என்னும் அருந்ததிய இனமக்கள் சிலர் பெரும் செல்வந்தர்களாவும் நிலவுடைமையாளர்களாகவும் பாளையத் தலைவர்களாகவும் படைத் தலைவர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். பகடை ராஜா, மதுரைவீரன், ஒண்டிவீரன், கட்டபொம்மன், முத்துப்பட்டன், சின்னத்தம்பி போன்ற வீரர்களின் சமூக மற்றும் வரலாற்றுக் கதைப் பாடல் மற்றும் சில கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக இதை அறிந்து கொள்ள முடிகிறது.

வி.நிர்மலா தேவியின் தொகுப்பில் சென்னை ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘The Wandering Voice: Three Ballads from Palm-leaf Manuscripts’ (1987) என்ற நூலில் ‘சின்னத்தம்பி கதை’ என்ற தலைப்பிலும், ச.சீனிவாசன் மற்றும் வே.பொன்ராஜ் தொகுத்து சென்னை காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘தலித் கதைப்பாடல்கள்: தென்மாவட்டங்கள்’ (2010) என்ற நூலில் ‘ராமப்பகடை-சின்ன நம்பி கதைப்பாடல்’ என்ற தலைப்பிலும் மாவீரன் சின்னத்தம்பிப் பகடையின் வரலாறு கதைப்பாடல் வடிவில் பதிவாகியுள்ளது.

மேற்குறித்த நூல்களின் வழி சின்னத்தம்பிப் பகடையின் வரலாற்றைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. அருந்ததியர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கு நிகரான நீண்ட நெடிய வரலாறு இருந்திருக்கிறது. எழுதப்பட்ட வரலாற்றில் அது திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மை வரலாற்றை மீட்டெடுத்து அதை ஏனைய சமூகத்தினரும் தெரிந்துகொள்ள ஏதுவாக இங்குப் பதிவு செய்யப்படுகிறது.

tamil soldierதிருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி வட்டத்தில் திருக்குறுங்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு அரண்மனையும் கோட்டைவாசலும் கட்டிக் குறுநில மன்னனாக மாணிக்கவாசகம் பிள்ளை என்பவர் ஆண்டு வந்தார்.

மாணிக்கவாசகம் பிள்ளையின் படையில் போர்வீரர்களாகவும் தோல்ச் சாவடியில் தோல்த் தொழில் செய்பவர்களாவும் அவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும் செல்வந்தர்களாகவும் நிலக்கிழார்களாகவும் நிலச்சுவான்களாகவும் பகடை இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தப் பகடை இன மக்களுக்குத் தலைவனாக இருந்தவன் இராமப்பகடை.

  ‘பாலோடு பவுசோடு பாக்கியங்கள் மெத்தையோடு

  நாலாடுக்கு மாளிகையாம் நடுவிலே ஒரு சாவடியாம்

  சூழ அரண்மனையாம் சுற்றுக் கட்டு மாளிகையாம்

  இருபேரும் ஆண்டுவரார்’ (49-52)

எனப் பகடை இனத்தவரின் செல்வச் செழிப்பு குறித்து ‘ராமப்பகடை- சின்ன நம்பி கதைப்பாடல் பதிவு செய்கிறது.

இராமப்பகடை பூலுடையாள் தம்பதியினருக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் ஒரு குழந்தை இல்லையே என்ற மனக் கவலை இருந்து வந்தது. ஒரு நாள் ஒரு ஜோதிடரை அழைத்துக் குறி கேட்டனர். ஜோதிடர் உங்களுக்குச் சர்ப்பதோஷம் உள்ளது. அதனால் சர்ப்பசாந்தி செய்ய வேண்டும். ஏழைகளுக்குத் தான தர்மம் செய்வதுடன் குல தெய்வ வழிபாடு செய்தல் வேண்டும் என்றார்.

இராமப்பகடையும் ஜோதிடர் சொன்னபடி தனது குல தெய்வமான பித்தநேரி செவுட்டுச் சாத்தானை வழிபட்டுத் தான தர்மம் செய்து வந்தான். கோடை காலத்தில் வழிப்போக்கர்களின் தாகம் தணிக்க தண்ணீர் மடங்களும் சத்திரங்களும் கட்டினான். ஊரில் கல் கிணறு வெட்டினான். சாலையோரம் மரக்கன்றுகளைத் தளுக்க வைத்தான். பங்குனி மாதம் தனது குல தெய்வக் கோவிலுக்கு வருவோருக்குப் பாதரட்சை செய்து கொடுத்து அன்னதானமும் வழங்கி வந்தான். சில நாட்களில் அவனது வேண்டுகோள் பலித்தது. பூலுடையாள் கருவுற்றாள். பத்தாவது மாதத்தில் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றேடுத்தாள். அதற்கு அய்யனாள் என்று பெயர் சூட்டிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்து வந்தனர். அடுத்தது தமக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாட்கள் பல கழிகின்றன.

  “ஊருக்குப் பெற்றேடுத்தேன் உத்த பிள்ளை எனக்கிலையே”!

என்று பூலுடையாள் வருந்துவதாக சின்னத்தம்பி கதை பேசுகிறது. மேலும் ஆண் குழந்தை வேண்டி விரதங்கள் பல இருந்தாள்.

அச்சமயம் கேதாரம் என்ற புனிதத் தலத்தில் இருந்து கன்னியாகுமாரிக்குக் கிருஷ்ணதாசர் என்ற பிராமணச் சாமியார் கால் நடைப்பயணம் வருகிறார். அவர் கொப்பளங்களுடன் நடக்க முடியாமல் வேப்பிலாங்குளத்தில் ஒரு ஆலமரத்தடி நிழலில் தங்கினார். இந்தச் செய்தி அறிந்த பூலுடையாள் அந்த ஆலமரத்தடிக்குச் சென்று அவரைச் சந்தித்தாள். கிருஷ்ணதாசர் அவளது மனக்குறைய அறிந்து பெண்ணே உன் குறை நீங்க, நீ திருக்குறுங்குடி அழகிய நம்பியைத் தரிசிப்பாய், நீ கேட்டது கிடைக்கும் எனக்கு வழி நடக்கப் பாதரட்சை செய்து தருவாய் என்றார். அவளும் தனது கணவன் இராமப்பகடையிடம் நடந்தவற்றைக் கூறிக் கிருஷ்ணதாசருக்கு நல்ல ஒரு பாதரட்சை செய்து கொடுத்தாள்.

உடனே, இராமப்பகடையும் பூலுடையாளும் கிருஷ்ணதாசர் சொல்படி திருக்குறுங்குடி சென்று அழகிய நம்பியைப் பூசித்து வழிபாடு செய்து வந்தனர். 40 நாட்கள் (ஒரு மண்டலம்) வாசனம் இருந்தனர். ஏழை எளியோருக்குத் தானம் தர்மம் செய்தனர். அவர்களது கடும் தவத்தின் பலனாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது, மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்து பதினாறாம் நாள் பரதேசிகளுக்கு அன்னம் இட்டுக் கோவிலுக்கு விடுவதாக இருந்த நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வணங்கி அக்குழந்தைக்குச் சின்ன நம்பி (சின்னத்தம்பி) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இதனை ,

 ‘நேர்ச்சை செய்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் தீர்த்துவைத்துச்

  சின்னத்தம்பி என்றுபெயர் செப்பினார்கள் மூன்றுதரம்’ (168-169)

என்று சின்னத்தம்பி கதை பதிவு செய்கிறது.

அக்குழந்தைக்குப் பசும்பொற் சங்கிலி பூட்டிப் பால்மரத் தொட்டிலில் அக்குழந்தையைக் கிடத்திப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கின்றனர். அவனுக்குத் தக்க வயதில் பாடசாலையில் சேர்த்துப் படிக்க வைத்து அறிவுப் பாடம் புகட்டினர். ஆனையேற்றம், குதிரையேற்றம், சிலம்பு வித்தை முதலான வீரக்கலைகளில் தேர்ச்சிபெறச் செய்கின்றனர். மாயவித்தை, குறளிவித்தை, மந்திர – தந்திர வித்தைகளுடன் மரபான வைத்திய முறைகளையும் கற்றுக் கொடுத்துச் சின்னத்தம்பியை வீராதி வீரனாக உருவாக்கினர். சின்னத்தம்பி கதை இதை,

  ‘ஆனையேத்தங் குதிரையேத்தம் அதுபடித்து முடித்தவுடன்

  மாயாவித்தை குறளிவித்தை மந்திரத்தால் ஜெயிக்கும் வித்தை

  கண்கட்டு வித்தைகளும் கற்றறிந்தான் சின்னத்தம்பி’ (175-177)

எனப் பதிவு செய்கிறது.

சின்னத்தம்பி தனது 15-வது வயதில் ஒரு நாள் வேட்டையாட ஆசை கொண்டு தன் தாய் தந்தையரிடம் பூச்சி நாயின் பெருமைகளை எடுத்துரைத்து தனக்கு வேட்டையாடப் பூச்சிநாய் வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான். இராமப்பகடையும் பூலுடையாளும் தாம் தவம் இருந்து பெற்ற மகனின் விருப்பத்தை ஏற்று அவனது விருப்பப்படியே இராமப்பகடை குதிரையேறி வெகுநாட்களாகத் தேடி அலைந்து இறுதியாகத் திருநெல்வேலி, கயத்தார் ,வானரமுட்டி வழயாக சிப்பிப்பாறை என்ற ஊரை அடைந்து அங்கு அன்னாசாமி நாயக்கரிடம் பேரம் பேசி இறுதியாக ஆயிரம் பொன் கொடுத்து பூச்சி நாயை வாங்கி வந்தான்.

இந்த நாயுடன் வேப்பிலான்குளம் காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி மகிழ்ந்தான். களக்காடு மக்களின் வெள்ளாமையை அழிக்கும் காட்டுப் பன்றிகளைத் தன்னந்தனியாகச் சென்று வேட்டையாடி மகிழ்ந்தான். வேட்டையாடுவதில் வல்லவனாகத் திகழ்ந்தான். மற்றும் வீர விளையாட்டுகளில் அவனை யாரும் வெல்ல முடியாது என்ற நிலை வந்தது. இவனுடன் பகடை இன இளைஞர்களுக்கும் மற்ற சமூக இளைஞர்களுக்கும் இணைந்தனர். சின்னத்தம்பியின் தலைமையின் கீழ் ஒரு பெரும் இளைஞர் படை உருவானது.

சில நாட்கள் கழிந்தன அறுவடை நேரம் மக்கள் மகிழ்ச்சியுற்று இருந்தனர். ஆனால், பணங்குடி களக்காடு மலைகளில் இருந்து காட்டுப்பன்றிகளாலும் துஷ்ட மிருகங்களாலும் வெள்ளாமைக்கு அழிவுகள் நேர்ந்தன. வேட்டைக்காரர்கள் மலைக்குப் போக முடியாமல் பயந்திருந்தனர். பணங்குடி திருக்குறுங்குடியில் வன விலங்குளின் அட்டகாசத்தை ஒடுக்கச் சொல்லித் தம் படைத் தளபதிகளுக்கு கட்டளையிட்டார் மன்னர் மாணிக்கவாசகம் பிள்ளை. ஆனாலும், யாரும் காட்டுக்குச் செல்ல முடியாமல் பயந்து இருந்தனர். சின்னத்தம்பியும் வன விலங்குகளின் உபத்திரத்தை நேரில் கண்டான். பயிர்கள் நாசமடைவதைக் கண்டான். உழவர்களின் நிலைக்கு மனமிரங்கினான். நிலச்சுவான்கள் செயலற்றிருப்பதைப் பார்த்தான். தானே தனது இளைஞர் படையுடன் சென்று மலையில் உள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடிப் பயிர்களுக்கு அழிவு நேர்வதைத் தடுப்பதாக உறுதி கொண்டான்.

நாளைய தினம் வேட்டை என்று களக்காடு, பணங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனது இளைஞர் படையுடன் சென்று தமுக்கடித்தான். சின்னத்தம்பியின் இச்செயலைப் பார்த்துச் சின்னத்தம்பிக்கு ஆதரவாக வேடர்களும், இளைஞர்களும் சின்னத்தம்பியின் படையில் இணைந்தனர்.

மறுநாள் சுண்டு வில்லும், வாருதாடியும், வல்லயமும், கட்டாரியும், சமுதானமும், கைக்கத்தியும், கேடயமும், வேல்க்கம்பும் தாங்கிய இளைஞர் படையுடன் பூச்சி நாய்களான வரி வேங்கை, நரிவேங்கை முன் நடக்க சின்னத்தம்பி தன் குதிரை மீது ஏறினான். கொடிய காட்டு விலங்குகளைக் கண்டு நாடே பயந்து இருப்பதை எண்ணி சின்னத்தம்பியின் தாய் பூலுடையாள் மகனே நீ மலைக்குப் போக வேண்டாம் மலை நீர் உனக்கு ஒத்துக்காது என்று கூறினாள். அதை லட்சியம் செய்யாமல் வேட்டைக்குத் தனது தலைமையிலான இளைஞர் படையுடன் மலையேறிச் சென்றான் சின்னத்தம்பி. காட்டைச் சுற்றி வேலி அமைத்து கடி நாயை ஏவிவிட்டனர். பணங்குடி மலையில் காட்டுப்பன்றியை வேட்டையாடினர். களக்காடு மலையில் கரடி கடுவாய்களைக் கொன்று கருவறுத்துக் குரவையிட்டனர். வேட்டையை முடித்துத் தன் நண்பர்கள் படையோடு திரும்பிய சின்னத்தம்பியை ஊர் மக்களும் இளம் பெண்களும் ஒன்று கூடி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உழவர்கள் உள்ளம் குளிர்ந்தது. மக்கள் தங்களைப் பாதுகாவலனாகச் சின்னத்தம்பியைப் போற்றினர். அவனது புகழ் எங்கும் பரவியது. அப்பகுதி மக்களால் சின்னத்தம்பிப் பகடை “மாவீரன் சின்னத்தம்பிப் பகடை” என அனைவராலும் அழைக்கப்பட்டான்.

இச்செய்தி அப்பகுதி ஆண்ட மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளையின் காதில் விழுந்தது. மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு சக்கிலியனால் தனது மதிப்புக் குறையும் என்று அவர் எண்ணினார். அதனால் அவனை தன் சேவகத்தில் இருத்தி அவனுடைய திறமையைத் தனது நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணினார். அதோடு அவனுக்கு விரோதிகளையும் உருவாக்கி விடும் வஞ்சக நோக்கமும் மாணிக்கவாசகம் பிள்ளைக்கு இருந்தது.

ஒரு நாள் மாணிக்கவாசகம் பிள்ளையின் அரண்மனையில் உள்ள ஆயிரம் குதிரைகளில் ஒரு குதிரை பேய்க் குதிரை. அந்தக் குதிரையின் முன்னே யாரும் செல்ல முடியாது. முன்னே செல்வோரைப் பாய்ந்து முகத்தில் கடித்திடும், பின்னே செல்வோரை பின்னங்காலால் உதைத்திடும். அதன் மீது ஏறிச் சவ்வாரி செய்வோரை மரத்திலோ, சுவற்றிலோ அல்லது தரையிலோ வைத்து மோதிக் கொன்று விடும். அதற்குத் தண்ணீர் கொடுக்கக் கூட யாரும் முன்னே செல்ல முடியாது. இந்த வடக்கு வாசல் குதிரை சங்கிலியால் பூட்டப்பட்டு அடங்காமல் வெகு நாட்களாக இருப்பதைப் பார்த்து மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளை தனது வடக்கு வாசல்த் தலைவன் வைத்தியநாதத் தேவரை அழைத்துக் குதிரையை அடக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் வைத்திய நாதத்தேவரால் அக்குதிரையை அடக்க முடியாமல் போனது. தனது இயலாமையைக் காரணம் காட்டி ஆயிரம் பொன் ஊதியத்தையும் இழந்து ஊரைவிட்டே போய்விடுகிறார் வைத்தியநாதர். அவரை அடுத்து வீரர்கள் பலர் குதிரையை அடக்க முயற்சித்தார்கள். ஆனாலும் முடியவில்லை. குதிரையை அடக்க அரண்மனையில் இருந்து பரிசுப் பொருட்கள் பல அறிவிக்கப்பட்டன. அக்குதிரையை அடக்க யாரும் முன் வரவில்லை.

இதனால், மாணிக்கவாசகம் பிள்ளை ஒரு நாள் அரண்மனை மந்திரிகள் தளபதிகள் அனைவரையும் அழைத்து ஆலோசனை செய்தார். அப்போது பலர் வேப்பிலான்குளம் வாழும் மாவீரன் சின்னத்தம்பிப் பகடை வந்தால் குதிரை அடங்கும் என்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவு பெற்ற சக்கிலியன் சின்னத்தம்பிப் பகடையைத் தனக்குக் கீழ் கொண்டு வர இது தான் சரியான தருணம் என்று எண்ணி மாவீரன் சின்னத்தம்பிப் பகடைக்கு அழைப்பு விடுத்தார். மன்னனின் அழைப்பை ஏற்றுத் தனது பெற்றோரிடம் ஆசி பெற்றுக் குதிரையின் மீது ஏறி வடக்கு வாசல் கோட்டைக்கு விரைந்தான் மாவீரன் சின்னத்தம்பி.

வடக்கு வாசல் கோட்டையில் மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளையைச் சந்தித்து உத்தரவு வாங்கிக் கொண்டு நான் அடங்காத பேய்க் குதிரையின் கட்டினை அவிழ்க்கப் போகிறேன். ஆகையால் தெருவில் குழந்தைகளும், மகளிரும், முதியோரும், குருடரும், நொண்டியரும் வெளியே வராமல் இருக்க வேண்டி மக்களுக்கு அறிவிப்புச் செய்தி சொல்லித் தமுக்கடித்தான். மக்களும் சின்னத்தம்பிப் பகடையின் அறிவிப்பை ஏற்று மக்கள் பாதுகாப்பு வேலிகள் அமைத்துக் கூட்டம் கூட்டமாகவும் மரக்கிளைகளிலும் மதில் சுவர்களிலும் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர். உயர் மேடை அமைத்துத் தளபதி மற்றும் மந்தரிமார்கள் உடன் மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளை அமர்ந்து வேடிக்கை பார்த்தார்.

தான் கற்றறிந்த மாய வித்தைகளைப் பயன்படுத்தி அடங்காத பேய்க்குதிரையின் கட்டினை அவிழ்த்தான். தன் மீது பாய்ந்து வந்த குதிரையை விரட்டியடித்தான். அது கனைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியது. குதிரையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி குதிரையின் செவுள்களைப் பிடித்து அதன் மேல் ஏறி அமர்ந்தான். குதிரையின் துள்ளல்களுக்கும் வேகமான ஓட்டத்திற்கும் கீழே விழாமல் இருந்து கொண்டு தன் இருப்பில் இருந்த குதிரைச் சவுக்கை எடுத்து அடித்தான், கைகளால் குத்தினான். போராட்டம் செய்தான். சில நாழிகைகளில் குதிரையத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தான். குதிரை தள்ளாடிக் கால் சுழன்று தத்தளித்துப் போய் நின்றது, அதன் வாயில் வெண்நுரை தள்ளியது. குதிரைசைய விட்டுக் கீழே இறங்கி அருகில் இருந்த சுரைக்கொடியை அறுத்து அதன் கழுத்தில் கட்டி இழுத்து வந்தான்.

வெகு நாட்களாக யாருக்கும் அடக்கத் திறன் இல்லாமல் இருந்த இந்த வடக்கு வாசல் குதிரையை அடக்கிய மாவீரன் சின்னத்தம்பிப் பகடையின் வீரத்தை மெச்சி, மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளை தனது வடக்கு வாசல் கோட்டைக்குத் தலைவனாக இருந்த வைத்தியநாதத் தேவரை நீக்கி விட்டு அதற்குப் பதில் சின்னத்தம்பிப் பகடையை வடக்கு வாசல் கோட்டைத் தலைவனாகவும் தனது பிரதான தளபதியாகவும் நியமித்து ஆயிரம் பொன் சம்பளம் கொடுத்தார். அடக்கிய அடங்காக் குதிரையைச் சவாரிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்ட சின்னத்தம்பியின் தாய் தனது மகனின் பெருமையைக் கேட்டு பூரிப்படைந்தாள். சின்னத்தம்பியின் இளைஞர் படையும் பொது மக்களும் மகிழ்ச்சியுற்றனர்.

ஆனால் திருக்குறுங்குடிக் கோட்டை வாசல் காவல் பணியைப் பரம்பரை பரம்பரையாக நம்பித்தலைவன் பட்டயம் என்ற ஊரில் உள்ள தேவரினத் தலைவர்களே வகித்து வருதல் வழக்கமாக இருந்தது. நிலமை இவ்வாறு இருக்க மன்னன் மாணிக்கவாசம் பிள்ளையின் இச்செயலைப் பார்த்துச் சுற்றுவட்டாரத் தேவரினத்தார் மத்தியில் கீழ் சாதியைச் சோர்ந்த பகடை ஒருவன் தம்பரம்பரைப் பதவிக்குப் போட்டியாக வருவதா? என்று எண்ணி மாவீரன் சின்னத்தம்பிப் பகடையின் மீது வன்மமும் சினமும் கொண்டனர்.

சின்னத்தம்பியின் சக கோட்டை வாசல் தலைவர்களான கிழக்கு வாசல் தலைவன் கிருஷ்ணதாசத் தேவரும், மேலவாசல்த் தலைவன் வேலுச்சாமித் தேவரும், தெற்குவாசல் தலைவன் சேதுராயத்தேவரும் பகடை ஒருவன் தன் திறமையாலும் வீரத்தாலும் முன்னுக்கு வந்து தன்னுடன் சம பதவியில் அமர்வதை அவர்கள் இழிவாகக் கருதினர். முன்னாள் வடக்கு வாசல்த் தலைவன் வைத்தியநாதத் தேரின் ஆலோசனைப்படி சின்னத்தம்பிப் பகடையைக் கொல்ல முடிவு செய்தனர்.

ஆனால் இவர்களின் முயற்சி பலிக்காமல் போனது. இவனை நேருக்கு நேர் நின்று கொல்ல முடியாது சூழ்ச்சியால் தான் கொல்ல முடியும் என்று எண்ணி மன்னன் மாணிக்கவாசம் பிள்ளையின் மைத்துனர் பாப்பான்குளம் ஆளும் மன்னன் தர்மராசு பிள்ளையின் உதவியையும் ஆலோசனையையும் நாடினார். தர்மராசு பிள்ளை வல்ல பலசாலி சூழ்ச்சிகாரனும் கூட!. மாவீரன் சின்னத்தம்பிப் பகடையை வீழ்த்தத் தக்க தருணத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

அதே வேளையில் சின்னத்தம்பிக்கு வயது ஆவதையும் அவனது பெருமையையும் பார்த்து ஒரு நாள் அவனது பெற்றோர்; சின்னத்தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணினர். அதன்படி அவனது மாமன் மகள் சோணச்சியை அவனுக்குப் மணம் பேசி முடித்தனர். வைகாசி மாதம் 25-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 5 நாழிகையில் திருமணம் செய்வதாகக் கூறி நிச்சயம் செய்து திருமண நாளையும் குறித்தனர்.

சின்னத்தம்பியும் தனது திருமணத்திற்காக மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளையிடம் அனுமதி வேண்டினான். மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளை சின்னத்தம்பிக்கு வாழ்த்துக் கூறி, பதினராயிரம் பொன் கொடுத்து ஏழு நாள் அனுமதியும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் சின்னத்தம்பி தனது சொந்த ஊரான வேப்பிலான்குளம் வந்தடைந்தான்.

இந்த வேளையில் பாப்பான்குளம் தர்மராசன் பிள்ளை வயல் ஒன்றின் பெயர் கரையாளன் வயல். அதை மாடன்சாம்பன் என்பவன் பயிர் செய்து வந்தான். ஒரு நாள் மாலை வேளையில் அவன் வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தான். அவன் வரப்பை வெட்டும் போது ஒரு இடத்தில் கரை தட்டியது. தோண்டிப் பார்த்தான். உள்ளே ஏழு கடாரங்கள் நிறைய பொற்காசுகள் இருக்கக் கண்டான். உடனே வயலுக்குச் சொந்தக்காரனும் மன்னனுமான தர்மராசு பிள்ளையிடம் நடந்தவற்றைக் கூற பாப்பான்குளம் அரண்மனைக்கு விரைந்தான். ஆனால் அரண்மனையில் தர்மராசுப் பிள்ளை இல்லை. அவர் அன்று இரவு நத்தன் தட்டை என்ற ஊரில் பொன்னி என்ற தாசி வீட்டில் தங்கி இருப்பதாகச் செய்தி அறிந்து அவன் நத்தன் தட்டையில் பொன்னி என்னும் தாசி வீட்டிற்குச் சென்று அங்கு மன்னனை எழுப்பி நடந்தவற்றைக் கூறினான். உடனே தர்மராசுப் பிள்ளை பாப்பான்குளம் அரண்மனைக்கு நடுநிசி வேளையில் விரைந்து வந்து தனது கணக்கர்களான ஆண்டபிள்ளை அழகப்பிள்ளை இருவரையும் அழைத்து ஆலோசனை கேட்டார்.

அவர்கள் மந்திரவாதி அக்காநல்லூர் குமாருபிள்ளையை அழைத்து யோசனையைக் கேட்டனர். அவர் மை போட்டுப் பார்த்துப் புதையலை எடுக்க வேண்டுமானால் பலி கொடுக்க வேண்டும், அவன் வீரனாகவும் பலசாலியாகவும் திருமணம் ஆகாத காளையாகவும் இருக்க வேண்டும் என்று மந்திரவாதி குமாருபிள்ளை சொன்னார். உடனே, தர்மராசுப்பிள்ளையின் மனதில் வைத்தியாதத் தேவர் கூறிய திருக்குறுங்குடியில் உள்ள தனது மைத்துனர் மாணிக்கவாசகம் பிள்ளையின் பிரதான தளபதியும் வடக்கு வாசல் கோட்டை தலைவனும் சூராதிசூரன் சுத்த மாவீரன் திருமணம் ஆகாத காளை மாவீரன் சின்னத்தம்பிப் பகடை நினைவிற்கு வருகிறான்.

மக்கள் செல்வாக்குப் பெற்ற சக்கிலியன் சின்னத்தம்பிப் பகடையை வீழ்த்த இது தான் சரியான தருணம் என்று எண்ணிப் புதையல் மீது பேராசை கொண்டு திருக்குறுங்குடி ஆளும் தனது மைத்துனருக்கு உடனடியாக இரண்டு ஓலையை அனுப்பினார். ஒன்றில் விசயத்தை வெளிப்படையாகச் சொல்லி உமது பிரதான தளபதி சின்னத்தம்பியை அனுப்பி வைத்தால் எடுக்கும் புதையலில் பாதி தருவதாகவும், மற்றொரு ஓலையில் தனக்கு உடல் நலமில்லை என்றும் அதற்கு மலை மேல் சென்று மூலிகை கொணரச் சின்னத்தம்பியை அனுப்பிவைக்கும் மாறும் எழுதினார். அதைக் கண்ட மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளைக்கு பணத்தாசை அளவுக்கு மீறிற்று. அதே வேளையில் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் தனது மதிப்புக் குறையாமல் இருக்கவும் மக்கள் செல்வாக்குப் பெற்ற மாவீரன் சின்னத்தம்பிப் பகடையை வீழ்த்துவதற்கும் இது தான் சரியான தருணம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.

வேப்பிலன்குளத்தில் அதிகாலையிலேயே சின்னத்தம்பியின் வீட்டில் பந்தல் போட்டு வெகு விமரிசையாக நாளை சின்னத்தம்பிக்கும் சோணச்சிக்கும் மணம் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். சோணச்சியையும் அழைத்து வந்து விட்டனர். இச்சமயம் ஒற்றன் ஒருவன் மாணிக்கவாசகம் பிள்ளையிடம் இருந்து ஓலை கொண்டு வந்தான். அதில் தனது மைத்துனருக்கு உடல் நலமில்லை. அதற்கு உடனே மலைமேல் சென்று மூலிகை கொணரச் சின்னத்தம்பி வர வேண்டும் என்று எழுதியிருந்தது. ஓலையுடன் உடனே புறப்பட்டு வரச்சொல்லி உத்தரவும் மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளையின் கட்டளையும் இருந்தது. உடனே புறப்பட்டான் சின்னத்தம்பி. பெற்றோரும், உறவினர்களும் திருமணம் பேசி முடித்துள்ளதால் போகாதே திருமணம் முடிந்ததும் போகலாம் என்றனஈர். அவன் அதை கேட்கவில்லை. மன்னன் கட்டளைப்படி போயிட்டு வருவேன் போராட்டம் செய்யாமல் விடை கொடுங்கள் உடனே போக வேண்டும் என்றான். தனது தாயிடம் கட்டுச்சோற்றைக் கட்டிக் கொண்டு தனது பூச்சி நாயுடன் குதிரையேறிப் பாப்பான்குளத்திற்குப் பறந்தான்.

சின்னத்தம்பியின் தாய் பூலுடையாளின் மனம் குமிறியது. அவள் உலக்கை எடுக்கும் போது பல்லியின் ஒற்றைக் குரல் கேட்டது. சாதம் வடிக்கும் போது தலையில் பல்லி வீழுந்தது, பதறினாள். சின்னதம்பிப் பகடை பாப்பான்குளம் மலைக்குச் சென்று மூலிகைகளை சேர்த்தான். குதிரை மீது போட்டுக் கொண்டு ஊர் திரும்பினான். வழியில் அக்காநல்லூர் ஆத்தங்கரையில் ஒரு கருவை மரத்தடி நிழலில் உட்கார்ந்து கட்டுச் சோற்றை அவிழ்த்தான். பல்லிக்குரல் கேட்டது. பல்லிக் குறியறிந்து இரு வாணிகச் செட்டிப் பெண்கள் மெதுவாக பேசிக் கொண்டு சென்றனர். அவர்கள் இருவரின் கண்களிலும் நீர் துளித்தது. சின்னத்தம்பி திரும்பிப் பார்த்து ஏன் அழுகிறீர்கள், என்னால் ஏதாவது ஆக வேண்டுமானால் சொல்லுங்கள் என்றான். அவர்களுள் ஒருத்தி இல்லை நான் கணவரைப் பிரிந்து பல வருடங்கள் ஆகின்றன. அவர் உம்மைப் போலவே இருப்பார். உம்மைக் கண்டதும் அவர் நினைவு வந்தது. கண்ணீரும் துளித்தது என்றாள். அவனும் அய்யோ பாவம் என்று சொல்லி உண்ணத் தொடங்கினான். சோறு விக்கிற்று நாய்க்குப் போட்டான். நாயும் உண்ணாமல் ஓடிப் போயிற்று.

அன்று மாலை சின்னத்தம்பி பாப்பன்குளம் தர்மராசுப்பிள்ளை அரண்மனை வந்து மூலிகைகளை அரண்மனை மந்தரிமார்களான ஆண்ட பிள்ளை அழகப்பிள்ளையிடம் கொடுத்தான். அவர்கள் நாங்கள் அரண்மனை வைத்தியரை வைத்து அரைத்துக் கொள்கிறோம் என்றனர். அப்போது அருகில் இருந்த மாடன்சாம்பன் அரண்மனை சூழ்ச்சிக்காரர்களின் சதித்திட்டத்தின் படி திருக்குறுங்குடி மன்னர் மாணிக்கவாசகம் பிள்ளையின் வடக்கு வாசல் தலைவனும் பிரதான தளபதியுமான சின்னத்தம்பியின் புகழ் பாடிச் சின்னத்தம்பியைத் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தான். உடன் இருக்க மந்திரிமார்களும் சென்று வா என்று கூற, சின்னத்தம்பி மாடன்சாம்பன் அழைப்பை ஏற்று மாடன்சாம்பன் வீட்டிற்குத் தொடர்ந்தான். மந்திரிமார்களும் அரண்மனை பிள்ளையும் சின்னத்தம்பிக்குத் தெரியாமல் மாடன்சாம்பன் வீட்டிற்குப் பயனித்தனர். மந்திரவாதி குமாரு பிள்ளை வயலில் பூஜை ஏற்பாடுகளைச் செய்ய விரைந்தான்.

மாடன்சாம்பன் வீட்டை அடைந்த சின்னத்தம்பி மாடன்சாம்பன் வீட்டின் முற்றத்தில் குதிரையையும், நாயையும் கட்டி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவன் கால் இடறியது. அதையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றான். அங்கு மாட்டுக்கறியும், கிடாக்கறியும் வகை வகையாகப் பொன்னி என்ற தாசி சமைத்து வைத்திருந்தாள். அதை மாடன்சாம்பன் எடுத்துப் பறிமாறினான். உடன் சாராயம், ஊம்மத்தன் சாறு, அபினி மற்றும் கஞ்சா கலந்த மயக்கம் தரும் உணவையும் கொடுத்தான். அந்த வேளை அரண்மனைக்காரர்களின் சூழ்ச்சித் திட்டத்தை அறிந்து கொண்ட பொன்னி சைகைகளின் மூலம் சின்னத்தம்பிக்கு விசயத்தைச் சொல்லப் புறப்பட்டாள். ஆனால், சின்னத்தம்பியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. போதையில் தன்னறிவு இல்லாமல் மயங்கி விழுந்தான்.

வீட்டிற்கு வெளியே இருந்த மந்திரிமார்களான ஆண்டபிள்ளை, அழகப்பிள்ளை, பண்ணையக்கார பிள்ளையும் உள்ளே வந்து சின்னத்தம்பியைக் கைத்தாங்கலாகத் தூக்கிக் கொண்டு காவக்காட்டு மூலையில் உள்ள கண்ணயடி வயலில் புதையல் இருக்கும் இடத்திற்கு இரவோடு இராவாகத் தூக்கிச் சென்றனர்.

பின்னர் மந்திரவாதி குமாருபிள்ளை பூசை போட்டான். மந்திர ஆற்றல் கொண்ட மையை சின்னத்தம்பியின் நெற்றியில் தடவித் திருநீரையும் தீர்த்தத்தையும் அவன் சிரசில் கொட்டி விட்டு வாளை எடுத்து மாடன் சாம்பனிடம் கொடுத்தான். மாடன்சாம்பனின் கண்ணில் கண்ணீர் வழிந்தது. மற்றவர்கள் கண்ணில் பேராசை பொறி பறந்தது. பின்னர் மந்திரவாதியின் சொல்லைக் கேட்டு மாடன்சாம்பன் சின்னத்தம்பியின் பிடரியிலேயே போட்டு நரபலி கொடுத்து விடுகின்றனர். கழுத்து துண்டாயிற்று, உடல் வேறு தலைவேறானது. தன்னுயிர் பிரிவதக்குள், தன் கொலைக்குக் காரணமான பாப்பான்குளம் வேளாளர்கள், மாடன்சாம்பான், மன்னன் மாணிக்கவாசகம் பிள்ளை ஆகியோரும் அவர்கள் பரம்பரையும் அழிந்து போக வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு உயிர் துறக்கிறான் சின்னத்தம்பி.

தர்மராசுப்பிள்ளை ’ஏழு கிடாரம் பொன்னையும் வண்டியில் ஏற்றி மந்திரவாதி துணையுடன் வண்டியின் பின்னே சென்றான். வண்டி நடுச்சந்திக் கிணற்றுக்கு அருகில் வந்த போது வண்டி மறிந்து கிணற்றுக்குள் விழுந்து ஏழு கிடாரம் பொன்னும் மாயமாய் மறைந்தது.

மாடன்சாம்பன் வீட்டில் கட்டியிருந்த சின்னத்தம்பியின் பூச்சி நாய் அறுத்துக் கொண்டு ஓடி வந்தது. சின்னத்தம்பி பலியான இடத்தில் ரத்தத்தில் விழுந்து புரண்டு ஊளையிட்டது. அழுது கொண்டே குறைத்தது. கொலையுண்ட சின்னத்தம்பி கையில் இருந்த கணையாழியைக் உருவி வாயில் கவ்விக் கொண்டு வேகமாக வேப்பிலான்குளம் சென்றடைந்தது. அங்கு சின்னத்தம்பியின் பெற்றோரும் மணப்பெண் சோணச்சியும் நாயையும் கணையாளியையும் பார்த்து துடிதுடித்துப் போய் அழுது கொண்டே நாயைப் பின் தொடர்ந்தனர். அது பாப்பன்குளம் காவக்காட்டு மூலையில் கண்ணியடி வயலில் சின்னத்தம்பி வெட்டப்பட்டுக் கிடக்கும் இடத்தைக் காட்டியது. சின்னத்தம்பியின் கொலைக்களத்தைப் பார்த்து அவனது பெற்றோரும் மணப்பெண் சோணச்சியும் அழுது புலம்பினர். தரையில் விழுந்து மோதியும், புரண்டும் ஆறாகக் கண்ணீர் வடித்தனர்.

சின்னத்தம்பியின் உடலைத் தோழில் தூக்கிக் கொண்டு பாப்பான்குளம் பள்ளி கொண்ட பொருமாள் கோவில் பக்கம் கட்டைகளை அடுக்கி மகன் சின்னத்தம்பிப் பகடையின் உடலுக்குத் தீ மூட்டினார். தான் தவம் இருந்து பெற்ற மகனை இழந்த துயரம் தாங்காமல் அங்கேயே சின்னத்தம்பியின் தாய் பூலுடையாள் நாக்கினைப் பிடிங்கிக் கொண்டு இறந்தாள்.

  ‘கொள்ளிவைக்கப் பிள்ளையில்லை குடமுடைக்கப் பாலனில்லை

   இருப்பதினால் என்னபலன் இறப்பதுவே நலமென்று

   சேலைபோட்டு நாவிழுத்துச் செத்திருந்து மாண்டாளே’ (653-655)

எனப் படுகளம் கண்ட தாயின் நிலையைச் சின்னத்தம்பி கதை குறிப்பிடுகிறது.

சின்னத்தம்பிக்கு நிச்சயிக்கப்பெற்ற சோணச்சி ’மாமன் மகன் சின்னத்தம்பி என் மணவாளன்’ என்று சொல்லி ஈஸ்பரரே தஞ்சமென்று இறந்துவிடுகிறாள். இராமப்பகடையும் அழுது விக்கி, மூச்சடைத்து விழுந்து இறக்கிறான். இவற்றை எல்லாம் பார்த்துப் பூச்சி நாய் ஊளையிட்டு இறந்து போனது. சின்னத்தம்பி சவாரிக்குப் பயன்படுத்திய பரியும் உயிர் விடுகிறது.

நடந்த காட்சிகளையெல்லாம் கண்ட கட்டாளம்மன் இறந்தவர்கள் அனைவரையும் தீர்த்தம் நீர்தெளித்து திருப்பிரம்பால்த் தட்டி உயிரெழுப்பி விட்டாள். சின்னத்தம்பிப் பகடை தன்னைக் கொலை செய்தவர்களையும் தன் கொலைக்குக் காரணமானவர்களையும் பலிக்குப் பலி வாங்க எண்ணினான். அந்தப் பாவம் போக்கப் புண்ணியத் தல யாத்திரை செய்தான்.

பின்னர் சின்னத்தம்பி கட்டாளம்மனை வணங்கி நிறையை வரம் வாங்கிக் கொண்டு கட்டாளம்மன் கோவில் முன் காவல் தெய்வமாகக் கோவில் கொண்டான். பாப்பான் குளத்தில் பிராமணர் முதல் யாவரும் பகடை சின்னத்தம்பியை பூடம் அமைத்து பொங்கலிட்டு வணங்கித் தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வீரன் சின்னத்தம்பியின் பெயரை வைத்து ஈத்துக் கூலி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சின்னத்தம்பி அனைவரையும் காக்கும் காவல் தெய்வமாகி விட்டான். அவன் வரலாறை மக்கள் கதையாகவும், கதைப்பாடல்களாகவும், வில்லுப்பாட்டாகவும், கேட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் சின்னத்தம்பி கொலையில் உதித்த குலசாமியாக இன்றும் மதிக்கப்படுகிறான்.

- பா.விஜயராகவன்

Pin It