விலங்குதல் என்றால் குறுக்கே வளர்தல் என்று பொருள். மிருகங்கள் குறுக்கேதான் வளர்கின்றன. அதனாலேயே அவைகட்கு விலங்குகள் என்று பெயர். விலங்கு நிலைக்கு முன்னிலை ஓரறிவு உயிர்களாம் தாவர நிலை. தாவரங்கள் குறுக்காவும், உயர வாட்டிலும் வளரும். பரிணாமத்தில் விலங்குகள் குறுக்கே வளர்தல் என்ற நிலையை மட்டும் கைக்கொண்டன. குறுக்கு வழியில் வளர்பவையும் விலங்குகள் தான். விலங்கு நிமிர்ந்தது. மனிதன் பிறந்து விட்டான். ஆக நிமிர்வே மனித அடையாளம். நிமிர்வே உயர்வு. வளைவே தாழ்வு. வளைவுகள் வைக்கத் தொடங்கி, வாழ்நிலையைத் தாழ்நிலை ஆக்கிக் கொள்கிறான் இன்றைய மனிதன்.

வணங்குதலும், தாழ்தலும் இறைவனுக்கு மட்டும்தான். மற்ற படைப்புகட்கு இல்லை. ஆண்டவனிடம் மட்டும்தான் அச்சம். அச்சமற்ற தன்மையே, தைரியமே நிமிர்வு. உயிர் பிரிந்த உடலைப் பார்த்துப் பிணம் என்று அஞ்சுகிறான் மனிதன். உடலை விட்டுப் பிரிந்த உயிரை, ஆவி, பேய் என்று அஞ்சுகின்றான். உயிரும், உடலும் சேர்ந்த மனிதனைப் பார்த்து எவ்வளவு அஞ்ச வேண்டும்?

தன்மானமும், சுயமரியாதையும் அச்சமற்ற நிமிர்வையே அகமும், புறமுமாகக் கொண்டவை. இவை இரண்டு மற்றவை விலங்குகள். இவை இரண்டுமற்ற அடிமைகளும் விலங்குகள் தான். உலகம் அவர்களுக்குத் தொழுவம் ஆகிவிடுகிறது. உருதுக் கவிதை ஒன்று. உரையாடல் வடிவில்.

ஒருவன்: நேற்றைக்கு நம் ஊரில் நிகழ்ந்த, அந்த செல்வந்தர் வீட்டு விருந்துக்கு நீ ஏன் வரவில்லை.
மற்றவன்: அழைப்பில்லை. அதனால் வரவில்லை.
முன்னவன்: ஓ! அழைத்தால்தான் வருவாயோ?
இரண்டாமவன்: இறைவனின் வீடு மஸ்ஜித் (பள்ளிவாசல்). அங்கிருந்து அழைப்பு (பாங்கு) வந்த பிறகுதான் தொழுகைக்கே போகிறேன்.

இந்த நிமிர்வு பக்தியில் சுயமரியாதை. ஆண்டவனைப் பாடும் வாயால் ஆள்பவனைப் பாட மாட்டேன் என்றான் காஞ்சி நகர்த் தமிழ்ப் புலவன் கணிகண்ணன். அவனை அரசன் நாடு கடத்தினான். தன் குருவிடம் சொல்லி விட்டுச் சீடப்புலவன் காஞ்சியை விட்டுச் செல்கின்றான். குரு அந்த நிமிர்வை வியந்து, தானும் புறப்பட்டுப் போகும் வழியில், பெருமாளைக் கோவிலில் கண்டு, அழிவில்லா உன்னை மட்டுமே பாடுவேன், அழியும் மன்னனைப் பாடமாட்டேன் என்ற கணிகண்ணனே காஞ்சியை விட்டு நீங்குகையில்

“கணிகண்ணன் போகின்றான், காமருப் பூங்கச்சி
மணிவண்ணா! உன் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்”

என்றார். தமிழ் புலவர்களைப் பின் தொடர்ந்து பெருமாள் சென்றான். அதனாலேயே பிறிதொரு புலவன் பெருமாளை “பைந்தமிழின் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே” என்று பாடினார். அச்சமற்ற தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மனிதனை மதித்து, அந்த நிமிர்வை மதித்து ஆண்டவன் சென்றான் என்பது தமிழ் மரபு. அரசன் தன்னை காணாது வழங்கிய பரிசிலை மறுத்து

“காணாது ஈத்த பரிசிற்கு யானோர்
வாணிகப் புலவன் அல்லேன்”

என வாட்டும் வறுமை நிலையிலும் சென்ற சங்கப் புலவனின் நிமிர்வும், முற்காலச் சான்றானால் “அம்மி கொத்த சிற்பி எதற்கு?” என இளையராஜாக்களிடம் அடிமை ஆகாத கவிக்கோவின் நிமிர்வும் தற்காலச் சான்றாகும்.

எழுத்தாளன் என்பவன் எப்படியிருக்க வேண்டும்?

“எழுதுபவன்
எழுதுகோல் போல
இருக்க வேண்டும்!
எழுதுகோல்
ஒன்றுமில்லா
ஏழை
தாள் கண்டால்
பணிகிறது!
பணம் வைக்கும்
சட்டைப்
பைக்குச் செல்கையில்
தலை நிமிர்கிறது”

எழுதுகோலின் பணிவும், குனிந்த ஏழையை நிமிர்வடையச் செய்யவே. ஆபத்திற்கு மனிதன் அஞ்சியிருந் தால் உலகம் என்னவாகி இருக்கும்? சோதனைக்கும், தொடர் தோல்வி களுக்கும் எடிசன் அஞ்சியிருந்தால் இருட்டுத்தான் பாரினைப் பற்றியிருக்கும். காட்டு நெருப்புக்கு மனிதன் அஞ்சியேயிருந்தால் கைவிளக்கு சாத்தியப்பட்டிருக்காது. அலை மோதுகிறதே; புயல் அடிக்கிறதே; பெருமழை பெய்கிறதே என்றஞ்சி மீன்கள் நிலத்தை நோக்கித் துள்ளினால், காசினி கருவாட்டுக் கடையாயிருக்கும். புயலை எதிர் கொண்டவன்தான், புல்லாங்குழலுக்குள் காற்றை அடக்கி ராகங் கண்டான். வெள்ளம் வராத வரை மனிதன் படகைக் கண்டுபிடிக்கப் பயணப்பட்டிருக்க மாட்டான். பார்வையை இடரும் பாறையைத்தான் படிக்கல் ஆக்கிக் கொண்டான். தன் வயிற்றுப் பட்டினி நெருப்பில் பொசுங்கிப் போகாதவன்தான், அந்த நெருப்பை அடுப்புக்குள் பணியாளாய் ஆக்கிக் கொண்டான். கிழிசல்களே ஊசியைப் பெற்றிருக்க வேண்டும். ஊசித் துவாரமும் தொப்புள்தான். விமானங்களின் இரண்டு சிறகுகள் யார் தெரியுமா? மரத்திலிருந்து கிழே விழுந்த ரைட் சகோதரர்கள் தான்.

ஆனால் வரவர மனிதன் ‘அஞ்சல்’ நிலையமாகவே ஆகிக் கொண்டிருக்கின்றான். விதையில்லாக் கனியாகவே விருந்துகளில் பரிமாறப்படுகிறான். அரசியல், மத, கறிக் கோழியாகவே ஆகி வருகிறான். எந்தச் சிக்கலுக்கும், ஆபத்திற்கும், ஆட்பட்டு, எதிர்கொள்ளும் திறனை இழந்து வருகிறான். உழைப்பும், சிரமமும் இல்லாமலேயே உற்பத்தியை ஆக்கி விடலாம் என நம்புகின்றான். அவன் வேர்வை கூட உப்பில்லாப் பண்டம் ஆகி வருகிறது. ஆறுகள் அப்படியே நடந்து வந்து, வீட்டுக் குழாய்க்குள் விழ வேண்டும் என எண்ணுகின்றான். எந்தத் துன்பமும் மேற்கொள்ளாமல் காற்று வந்து கைவிசிறியாகி விட வேண்டும் எனக் கனாக் காண்கிறான். மழையை எதிர்கொள்ளத் தயாராய் இல்லை; ஷவரே அவனுக்குப் போது மானதாகி விட்டது. ஏரும் கீறிடாமல், நிலம் சோறிடுமா? விதை நெல்லையே வாய்க்கரிசியாக்க முற்பட்டு விட்டான். பிணமாகும் போது மட்டுமே நிமிர்கிறான்.

ஆங்கிலக் கவிதை ஒன்று அலறுகிறது.

“எல்லோரும் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள்!
ஆனால்
யாரும்
சாவதற்குத் தயாராக இல்லை”

தற்போதைய மனித மனோபாவத்தை இதனை விட எப்படித் துல்லியமாகச் சித்தரிக்க முடியும்? தன் குழந்தைக்கான இனிஷியல் எழுத்தைக் கூட இவன் அடுத்தவன் அச்சுக் கூத்தில் தேடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காய்க்காத கரங்களுக்கு கனிகள் கிடையாது என்றொரு அவசரச் சட்டம் போட்டால் பரவாயில்லை. அதுவரை இலவச நிலத்தை மயானமாக்கி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவப்பெட்டியாக்கிக் கொள்ளலாம். வேலையில்லாச் சந்ததிகள் அரசு உதவித் தொகையால் மலர் வளையம் வாங்கலாம். கேஸ் அடுப்பில் மரண விருந்துக்கு, இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி, இலவச அரிசியோடு வாங்கலாம்!

Pin It