பார்ப்பனியம் தேசிய இன ஒடுக்குமுறை என்ற இன்னொரு முகமும் கொண்டது
பார்ப்பனியம் என்பது சாதிய சமூகத்தை உருவாக்கி அதைக் கட்டிப் பாதுகாத்து வருகிறது எனப் பார்த்தோம். சாதிய சமூகத்தின் இருத்தலே நிலபிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கத்தோடு பின்னிப் பிணைந்ததாகும். இவ்வாறு சாதிய ஒடுக்குமுறை என்கிற ஒற்றை முகம் மட்டும் கொண்டதல்ல பார்ப்பனியம். தேசிய இன ஒடுக்குமுறை என்கிற இன்னொரு முகமும் பார்ப்பனியத்திற்கு உண்டு.
கடந்த காலத்திலும் இன்றும் பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறையை பற்றி விரிவான விவாதங்கள் நடைபெறுகிறது. அதன் தேசிய ஒடுக்குமுறையின் மீதான விரிவான விவாதம் அன்றும், இன்றும் விரிவாக நடைபெறவில்லை.
பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி அதற்கு எதிராகப் போராடிய பெரியார் அதன் தேசிய இன ஒடுக்குமுறை சமக்கிருத வடிவத்திலும், இந்தி ஆதிக்க வடிவத்தில் நடைபெறுவதையும் உணர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
பாரப்பனியத்தின் அரசு வடிவமாக 'இந்திய தேசியம்' கட்டமைக்கப்படுகிறது, எனவே தமிழ் நாடு தமிழர்களுக்கு வேண்டும் என பெரியார் முழங்கினார்.
பார்ப்பனியத்தின் தேசிய இன ஒடுக்குமுறை எவ்வாறு நடக்கிறது?
மக்களின் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்க்கிருத மொழியை 'தேவபாஷை' அதாவது தெய்வத்தின் மொழி என பார்பன சக்திகள் நிறுவிக் கொண்டனர்.
சமஸ்க்கிருத எழுத்துவடிவத்தை 'தேவநாகரி' என்றும் அழைத்துக் கொண்டனர். ஆரியவர்த்தம் என்ற கங்கைச் சமவெளியில் அறியப்பட்ட இந்த மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பி மக்களின் தேசிய இனமொழிகளை சிதைத்து அழிக்கும் வேலையை இரண்டாயிரமாண்டுகளாக பார்ப்பனிய சக்திகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மக்களின் உயிரணைய தாய்மொழிகளை நீச பாஷை எனவும் அந்த மொழி பேசும் மக்களை நீசர்கள் எனவும் கூறி அவமதித்து வருகின்றனர். வட புலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த பாலி, பிராக்கிருத மொழிகளை அழித்து ஒழித்து விட்டனர்.
சமஸ்க்கிருத கலப்பால் தமிழை ஒழிக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
தமிழ் மொழி கடும் போராட்டத்தில் தன்னை தற்காத்துக் கொண்ட போதும் சிதைந்து போனதும் வரலாறு. தமிழை சமக்கிருதக் கலப்பாக்கி மலையாளம் உருவாகியுள்ளது. மலையாளத்திலுள்ள தமிழ் சொற்களையும், சமக்கிருத சொற்களையும் பிரித்துவிட்டால்் மலையாளம் என்ற ஒன்ற இருக்காது. இதே போல கன்னடம், தெலுங்கு மொழிகளும் அமைந்துள்ளது.
நமது தொடரின் தொடக்கத்தில் கூறியுள்ளபடி பார்ப்பனிய மொழியாக இந்தி மொழியை உருவாக்கி அதை 'ஆரியபாஷை' எனவும் அறிவித்துக் கொண்டனர்.
இந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது?
இந்திய தேசியம் என்பது சமூக வளர்ச்சி விதிகளுக்கு மாறாக உருவாக்கப்பட்ட ஒரு தேசியக்(ஏகாதிபத்தியக்) கட்டமைப்பாகும். ஒரு மொழி பேசுகிற மக்களே இயல்பான தேசங்களின் இனக் கூறாக இருப்பர். அவ்வாறு இந்திய தேசியத்தின் இனக் கூறாக இருப்பது இந்தியர் என்ற ஒரு இனம் அல்ல. அப்படியானால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களுக்கும் பொதுவானதாக இருப்பது பார்ப்பனிய சாதி சமூக அமைப்பேயாகும்.
இரண்டாயிரமாண்டுகளாக அனைத்து தேசிய இனங்களிலும் ஊடுருவிய பார்ப்பனிய சக்திகள் அந்தந்த தேசிய இன மன்னர்களோடும், நிலப்பிரபுக்களோடும் கூட்டணி அமைத்துக் கொண்டு சாதிய சமூக அமைப்பை உருவாக்கியது. இந்த பார்ப்பனிய இந்துமதக்கூறே இங்கு பொது அம்சமானது.
ஆங்கிலேயர்களின் வருகையால் இங்கிருந்த வைசியர்களும், பார்ப்பன சக்திகளும், நாட்டுக் கோட்டை செட்டி போன்றவர்களும் தொழில் துறைக்குள் நுழைந்தனர். இப்படி தொழில்துறையில் நுழைந்தவர்களில் இந்த நாட்டுக் கோட்டை செட்டிகள் தவிர அனைவருமே பூநூல் அணியும் இருபிறப்பாளர்கள் எனக் கூறிகொள்ளும், பனியா, மார்வாடி, சேட்டுகள் ஆவார்கள். இவர்கள் யாரும் ஒரு தேசிய இன வட்டகை கொண்டவர்கள் அல்ல. மாறாக வெள்ளையர்களின் தரகர்களாக இந்தியா முழுவதும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று தொழில் செய்தவர்கள் ஆவர். இவ்வாறு ஏகாதிபத்திய நலனோடு பின்னிப்பிணைந்த இந்த முதலாளிவர்க்த்தினர் எப்போதும் நாட்டுநலனோடும் மக்கள் நலனோடும் இணைந்தவர்கள் அல்ல.
1857 இல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த முதல்இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிளர்ச்சியில் விவசாயிகளும், படை வீரர்களும் பங்குபெற்றனர். அவர்களோடு நிலப்பிரபுத்துவ. மன்னர்களும் கூட ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டனர். ஆனால் பெரும் பணக்கார வணிகர்களாகவும், வட்டித் தொழில் செய்து வந்த சேட்டுகளும், மார்வாரிகளும், தாகூர்களும் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்தது மட்டுமன்றி ஏகாதிபத்தியக் கம்பெனிகளுடன் கூடிக் குலாவிக் கொணடும் ஏகாதிபத்தியத்தியத்திற்கு நிதி உதவியும் செய்து கொண்டும் இருந்தனர். இந்தியச் சந்தை ஒன்றை உருவாக்கி இந்தத் துணைக் கண்டத்தையே சுரண்டிக் கொழுப்பதே இவர்களின் நோக்கம்.
இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் ஐரோப்பிய முதலாளியத்தின் தோற்றத்திலிருந்து மாறுபட்டது
இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றிய முறையும் அதன் குணாம்சமும் ஐரோப்பிய. முதலாளித்துவத்தின் தோற்றத்திலிருந்தும் குணாம்சத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது.
ஐரோப்பாவில் ஒரு தேசிய இன வட்டகையில் இருந்த கைவினைஞர்களும், சிறு பட்டறை நடத்துபவர்களும் நவீன தொழில் உற்பத்தி முறைக்குள் நுழைந்தனர். இவர்கள் இயல்பிலேயே தனது தேசிய வட்டகைக்குள் மூலப்பொருட்களைப் பெற்று அதே வட்டகைக்குள் தயார் செய்யப்பட்ட நிறை பொருட்களை சந்தைப் படுத்துபவர்களாக இருந்தனர். தமது தொழில் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருந்த நிலபிரபுத்துவத்தையும் அதன் ஆட்சி முறையையும் தூக்கியெறிந்து விட்டு ஒரு முதலாளித்துவ ஜனநாயகத் தன்மை கொண்ட தேசிய அரசுகளை நிறுவினர். இவ்விதம் இந்த முதலாளி வர்க்கத்தினர் சமூகத்தின் வளர்ச்சிக்கான புதிய நிலைமைகளை உருவாக்கினர். ஐரோப்பிய முதலாளிவர்க்கமே தேசிய அரசுகளை நிறுவியது. கட்டற்ற முதலாளிய வளர்ச்சியை ஊக்குவித்தது. நிலபிரபுத்துவ நுகத்தடியில் பிணைக்கப்பட்டிருந்த மக்களுக்கு ஜனநாயகம், சுதந்திரம் என்ற வசந்தத்தைக் கொண்டு வந்தது.
இதற்கு நேர்மாறாக இந்தியாவில் தொழில்துறையில் இறங்கிய முதலாளிகள் வட்டித்தொழில் செய்பவர்களாக, நிலபிரபுத்துவ பின்புலம் கொண்டவர்களாக, ஏகாதிபத்தியத்தின் தரகர்களாக, ஊக வணிகத்தில் பணம் சேர்த்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஒரே தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாகவும் இல்லை. இந்திய சாதிய சமூகத்தின் மேல்தட்டு சாதியினராக. இயல்பிலேயே பார்ப்பனியத்தின் பாதுகாவலராக இருந்தனர்.
. இந்தியா என்ற பரந்த சந்தையையும் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இனமக்களின் இயற்கை வளங்களையும் கைப்பற்றிக்கொள்ள தேசிய இனங்களின் அரசுரிமையை மறுக்கும் ஏகாதிபத்திய சிந்தனை கொண்டவர்களாகவுமே இருந்தனர். இவ்வாறு இந்திய முதலாளிவர்க்கம் சமூக வளர்ச்சிக்குத் தடையான ஏகாதிபத்திய மூலதனத்தோடும், பாரப்பனியத்தோடும் ஒட்டிப் பிறந்த ஒரு தரகு பார்ப்பனிய முதலாளிவர்க்கமாகவே இருந்தது.
இந்தியா முழுவதும் தேசங்களாக வளர்ச்சி பெற வேண்டிய தேசிய இனங்களின் அரசுரிமையை மறுப்பதும், ஜனநாயகத் தன்மையற்ற சாதிய சமூக அமைப்பைக் கட்டிக் காப்பதுமே இந்த முதலாளிவர்க்கத்தின் அரசியல் நோக்கமாகவும், இலக்காகவும் இருந்தது.
'இந்திய தேசியத்தின்' மூலவர்களான முதலாளிகள்
இந்திய முதலாளிகள் தரகுத் தன்மை கொண்டவர்களாகவும் பார்ப்பனியத்தோடு பிறந்தவர்கள் என்றும் சென்ற தலைப்பில் பார்த்தோம். இது குறித்து கார்முகில் அவர்கள் "இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயப்புரட்சியும்" என்ற நூலில் ஆய்வரையாக முன்வைக்கிறார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரும் இ.பொ.க.(மா.லெ) கட்சியின் முதல் தலைமைக்குழு உறுப்பினருமான சுனிதிகுமர்கோஷ் தனது "இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்" 1919-1947 என்ற இரண்டு பாகங்கள் கொண்ட நூலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு இணைந்து நின்று காந்தியைப் பயன்படுத்தி அதிகாரத்தை பிர்லாக்களும், தாக்கூர்தாஸ்களும், டாடாக்களும் கைப்பற்றினர் என்பதை ஆதாரத்தோடு விளக்குகிறார். முழுக்க முழுக்க பிரிட்டிசாருடன் பேரம் பேசி அதிகாரத்தை இந்த தரகு முதலாளிகள் கைமாற்றிக்கொண்டதை இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்தியாவில் தொழிற்துறையில் இறங்கிய முதல் வகையினர் ஜுஜுபாய், டாடாக்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு தொழில் தொடங்கினர். மார்வாரிகள் நாடுமுழுவதும் வணிகர்களாகவும், வட்டிக்கடைக் காரர்களாகவும் பேங்கர்களாகவும் பரவி இருந்தனர். தொழிற்துறையில் இறங்கிய இரண்டாம் வகையினர் பிர்லா, சிங்கானியா, தாபர்கள் போன்ற மார்வாரிகள். மூன்றாவது வகையினர் நிலப்பிரபுத்துவ, வட்டித்தொழில் வர்க்கங்களிலிருந்து தோன்றிய கோயாங்கோ, பாங்கூர் போன்றவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் இருபிறப்பாளர்கள் எனப்படும் மேல்தட்டு சாதிகளைச் சார்ந்தவர்களே. மேலும் ஒரு தேசிய இனத்துக்குள் மட்டுமல்லாது துணைக்கண்டம் முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இன மக்கள் பகுதிகளிலும் விரிந்த சந்தை கொண்டவர்களாக இருந்தனர். இந்த முதலாளிகளின் விரிந்த சந்தை நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய ஒற்றுமை அவசியமானதாக இருந்தது. எனவே இந்திய தேசியத்தின் இயக்க சக்திகளாக இந்தப் பெருமுதலாளி வர்க்கம் முன்னின்றது.
இந்திய தேசியத்தின் பெயரில்தான் பார்ப்பனியத்தை பாதுகாக்க முடியும். பார்ப்பனியத்தின் சாதி ஆதிக்க சமூக அமைப்புதான் நிலபிரபுத்துவ சுரண்டலைப் பாதுகாக்கிறது. எனவே இந்திய தேசியத்தை நிலபிரபுக்களும் உயர்த்திப் பிடித்தனர். தனது இரண்டாயிரமாண்டு ஒட்டுண்ணி வாழ்க்கையைத் தடங்கலின்றித் தொடர இந்திய தேசியக் கட்டமைப்பை பார்பன சக்திகளும் தாங்கி நின்றனர்.
இவ்வாறு தரகு முதலாளிய வர்க்கம், நிலபிரபுத்துவ வர்க்கம் பார்ப்பனிய சக்திகள் ஆகியவற்றின் கூட்டணிதான் இந்திய தேசியம் என்ற பெயரில் ஒரு தரகு முதலாளி பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை உருவாக்கிக் கொண்டது.
இது குறித்தான பிற விபரங்கள் தொடர்ந்து.........
- கி.வே.பொன்னையன்