இந்தியக் கம்யூனிஸ்டுகள் :
கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்திற்கு தலைமையளிப்பதன் மூலம் சமுதாய மாற்றத்தை சாதிக்கும் கொள்கை கொண்டவர்கள்.
இந்திய சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமெனில் இந்திய சமூக அமைப்பின் பார்ப்பனியத் தன்மையையும் அதன் இரண்டாயிரமாண்டிற்கும் அதிகமான வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்டுகள் இந்திய சமூக வரலாற்றை காலனிய காலத்திலிருந்தே ஆய்வுகளை செய்து கட்சித் திட்டம் வகுத்துள்ளனர்.
ஆனால் இந்திய சமூத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் சாதியப் பிரச்சனையும், தேசிய இன ஒடுக்குமுறை என்ற பிரச்சனையும் காலனிய காலத்திற்கு முன்பிருந்தே வேர்கொண்டிருந்தது.
இந்த மிக முக்கியமான இரண்டு பிரச்சனைகளுக்கும் பார்ப்பனியத்திற்கும் உள்ள தொடர்பை இ.பொ. இயக்கத்தின் எந்தப்பிரிவும் புரிந்து கொள்ளவில்லை.
பார்ப்பனியத்தின் இரண்டு கூறுகளாக உள்ள சாதி ஒடுக்குமுறையும், தேசிய இன ஒடுக்குமுறையும் நேரடியாக வர்க்க ஒடுக்கு முறையோடு இணைந்தே உள்ளது.
வர்க்கப் போராட்டம் என்பதை இ.பொ. இயக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிரபுத்துவ எதிர்ப்பு என்ற பொருளாதார அம்சத்திலிருந்து மட்டுமே அணுகியது.
ஆனால் இந்திய சமூகத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் பிரச்சனைகளாக சாதியப்பிரச்சனைகள் இருந்து கொண்டே வருகிறது. மண்டல் குழு போராட்டமாக இருந்தாலும் கடந்த கால இட ஒதுக்கீட்டிற்கான போராட்டமாக இருந்தாலும் பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என இந்தியக் கம்யூனிஸ்டுகள் பார்க்கவில்லை.
அதே போல காசுமீர் விடுதலை, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை இனவாதம் என ஒதுக்கியது.
இவ்வாறாக இந்திய சமூகத்தின் அடிப்படையாக பார்ப்பனியம் இருப்பதையும் அதன் ஒடுக்குமுறைக்கு எதிராக நடைபெறும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் கம்யூனிஸ்டுகள் கண்டு கொள்ளவே இல்லை.
இதனால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் தனிமைப்பட்டே இருந்தனர்.
பார்ப்பனியத்தை அணுகியதில் கம்யூனிஸ்டுகளிலிருந்து மாறுபட்டிருந்தனர் அம்பேத்கரும், பெரியாரும்.
அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம்
அம்பேத்கர் அவர்களைப் பற்றிய. எனது மதிப்பீடு இ.தே.ஜ.பு என்ற ஆய்வு நூலில் தோழர் கார்முகில் அவர்கள் முன்வைத்ததை அடிப்படையாகக் கொண்டது. அதே போல பெரியார் பற்றியும்.
இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கரைப் போல பார்ப்பனியத்தின் வர்ண-சாதி ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராடியவர்களைக் காண்பது அரிது.
இந்து மதத்தின் புனித நூல்கள் என்று சொல்லி வந்தவைகளையெல்லாம் அலசி ஆராய்நது அதன் பார்பனியத்தன்மையை அம்பலப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட. மக்களின் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். வர்ண-சாதி முறையே இந்து மதம் என அடையாளம் காட்டியவர்.
இந்தியாவில் நிலவி வரும் சாதியக் கொடுமைகளையும், தீண்டாமையையும் ஒழித்துக்கட்ட சாதி மதமான இந்து மதத்தையும்-சாதியின் மறுவடிவமான பாரப்பனியத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என திட்டவட்டமாக முன்வைத்தார்.
. இந்து மதத்தையும், பார்ப்பனியத்தையும் ஆதரித்த காந்தியை எதிர்த்து கடுமையாக அம்பேத்கர் போராடியது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டவர்களை காந்தி ஹரியின் மக்கள் -ஹரிஜன் என அழைத்தார். இதை அம்பலப்படுத்திய அம்பேத்கா் "காந்தி அவர்களே, நாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்றால் நீங்கள் பிசாசின் பிள்ளைகளா?"என்றார்.
சாதிகளற்ற இந்தியாவைக் கனவு கண்ட அம்பேத்கர் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்தார்.
இட ஒதுக்கீட்டால் பலனடைந்த தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சிறு பகுதியினர் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட மேல்தட்டு வர்க்க சாதிப்பிரிவினராக மாறியுள்ளனர்.
. இட ஒதுக்கீட்டுக் கொள்கை அனைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் நிலையில் முன்னேற்றம் கொண்டு வரவில்லை. சாதிக் கொடுமைகளும் மறையவில்லை.
இந்தியா என்பது ஒரு தேசமல்ல, அப்படியானால் வேறென்ன?
இந்திய தேசியத்தை பாஜகவினர் இந்து தேசியமாக்கி வருகின்றனர் என இ.பொ.க(மா) பொதுச்செயலாளர் சீதாராம் யச்சூரி அவர்கள் பேசி வருகிறார்.
இந்திய தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கும் உள்ள வேறுபாடு பசு என்பதற்கும் மாடு என்பதற்கும் உள்ள வேறுபாடுதான் என்பதை யச்சூரி போன்றவர்கள் புரியாமல் இருப்பதுதான் பிரச்சனை.
இந்தியா என்பது மொழிவழிப்பட்ட தேசிய இனத்தை உள்ளடக்கியதுமல்ல, பல்வேறு தேசிய இனங்களின் விருப்பத்தோடு இணைந்து உருவான தேசிய இனங்களின் ஒன்றியமோ கூட்டமைப்போ அல்ல.
காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்டுகள் சொல்லும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது பகல் கனவாகிவிட்டது.
1992 உலகமயத்திற்கு பிந்திய அரசியல், பொருளியல் நிலையை மதிப்பீடு செய்யும் சமூகவியலாளர்கள் இது ஒரு புதுக்கானிய உருவாக்க சகாப்தம் என்கின்றனர்.
இது முற்ற முழுக்க மிகச்சரியானது என்பதை இந்திய அரசின் அன்றாட அரசியல், பொருளியல் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் சொல்லமுடியும் ஒன்றிரண்டை சுட்டுவோம்.
உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, ஐ.எம்.எப் போன்ற அமைப்புகள் இந்தியாவின் அனைத்துத் திட்டங்களையும் தீர்மானிக்கிறது.
'மக்கள் நல அரசு' என்று சொல்லி பல திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தது. குறிப்பாகக் கல்வியும், மருத்துவமும். இதில் கல்வியை முழுக்க வணிகமயமாக்கி தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரத்திற்கான நிதியைக் குறைத்து மருத்துவத்தை சந்தைப் பொருளாக்கியுள்ளனர்.
உணவுப் பாதுகப்பை கைவிட்டு ரேசன் கடைகளை மூடுகின்றனர், வேளாண் விளைபொருள் கொள்முதலைக் கை விடுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு கம்பெனிகளின் கையில் கொடுத்துவிட்டனர்.
ஒவ்வொரு தேசிய இன வட்டகையிலுள்ள கனிம வளங்களை அந்த மாநில அரசுகளின் ஒப்புதலின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அம்பானி, அதானி, வேதந்தா, டாடா, பிர்லா போன்ற இந்திய முதலாளிகளான சேட்டுகள், மார்வாடிகள் போன்ற கும்பலுக்குத் தாரை வாத்து வருகின்றனர்.
சமீபத்திய எடுப்பான எடுத்துக்காட்டு இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட அனில் அகர்வால் எனும் முதலாளியின் வேதந்தா நிறுவனத்திற்கு தஞ்சை வடிநிலப்பரப்பிலும் அதையொட்டிய கடல் பரப்பிலும் 4000 சதுர கி. மீ பரப்பு அதாவது 10 இலட்சம் ஏக்கரை தமிழக அரசின் ஒப்புதலின்றியே டெல்லியில் ஒப்பந்தம் செய்து விட்டனர்.
இது ஏதோ பாஜக காலத்திய செயல் திட்டம் மட்டும் அல்ல. 1990 களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடும் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சிகள் நடைபெற்றுள்ளது.
காங்கிரஸ், பாஜக கூட உலகமயம் நடைமுறைக்கு வந்த இந்த இருபது ஆண்டுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடுதான் ஆட்சி நடத்துகின்றன. ஆனால் சந்தையின் ஆதிக்கத்தில் சமூகத்தை நிருவாகிப்பது எனும் சந்தைப் பொருளாதாரத்திற்கு உலக மக்களை அடிமைப் படுத்துவது என்பது ஏகாதிபத்திய மூலதனக்காரர்களின் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதே உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி இவைகளின் அன்றாட வேலை.
அனைத்துக் கட்சிகளின் அரசுகளும் டெல்லியில் 1992க்குப் பிறகு ஆட்சிக்கு வந்தும் இந்தப் புதுக்காலனிய திட்டத்தையே செயல்படுத்துகின்றனர். ஏகபோக முதலாளிய நலனுக்காகவே 'இந்திய தேசிய அரசு' இந்தியாவிலுள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் வளர்ச்சியையும் பலி கொடுத்துள்ளது.
இறுதியாக அனைத்து தேசிய இன மக்களின் இயற்கை வளங்களைச் சூறையாடும் கொடூர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய காலனியக் கொள்கை அனைத்து மக்களின் வாழ்வையும் ஏகபோக மூலதன சங்கிலியில் பிணைத்து விட்டது.
இந்த நேரத்தில் யச்சூரி அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டு மூத்த தோழரான தா.பாண்டியன் அவர்கள் "எனது வளங்களை எங்களைக் கேட்காமல் டெல்லியில் இருக்கிறவன் பன்னாட்டுக் கம்பெனிக்குத் தாரை வார்த்தால் நாங்கள் ஏற்கமாட்டோம். மாநிலங்கள் என்பது தனிநாடுகளாக வேண்டும். இனி இந்தியா என்பது 32 நாடுகளின் ஒன்றியமாக வேண்டுமானால் இருக்கலாம்." என்ற ஒரு புதிய கருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்துகொண்டு எழுப்பி இருப்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தியதேசியத்தைப் பாதுகாக்கவே தன்வாழ்நாள் முழுவதும் எழுதியும், பேசியும் இராஜீவ் காந்தி கொலையின்போது குண்டுகளைத் தாங்கியும் வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் பாண்டியன் அவர்கள். அவர்" இந்தியா என்பது ஒரு தேசமல்ல" எனப் பிரகடனம் செய்துவிட்டார்.
- கி.வே.பொன்னையன்