தமிழர் என்றால் அவரது மொழி தமிழ், அவரது இனம் தமிழினம்.

மலையாளி என்றால் அவரது மொழி மலையாளம், அவரது இனம் மலையாள இனம்.

இதே போல கன்னடர், தெலுங்கர், குஜராத்தி, வங்காளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, மராத்தி, காசுமீரி, அசாமி என இந்தியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தனித்த இனங்களாக அவர்களது மொழியால் அடையாளம் காணலாம்.

hindi agitationஇந்த அளவுகோலின் படி இந்தியர் என்ற அடையாளம் ஒரு மொழிவழிப் பட்ட தேசிய இனம் அடையாளம் அல்ல என்பது தெளிவு.

இது பற்றி தோழர் கார்முகில் அவர்கள் தனது "இந்தியாவில் தேசியப் பிரச்சனையும், ஜனநாயகப் புரட்சியும்" என்ற ஆய்வு நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் "இந்தியா ஒரு தேசிய சமூகமல்ல என்பதில் விவாதத்திற்கு இடம் இருக்க முடியாது. இங்கு பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற வேறுபட்ட பண்படுகளையும், வரலாறுகளையும் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான தேசிய இனம். மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்கள், சமீபத்தில் தேசிய இனங்களாக உருவாகிய, உருவாகி வருகிற மக்கள் சமூகங்கள் என பற்பல உள்ளன. " (பக்கம்10)

தமிழ்த் தேசிய இனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட ஒரு தொன்மையான தேசிய இனம்.

"வடவேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகு" என தமிழர் வாழும் நிலப்பரப்பு உறுதி செய்யப் பட்டது.

தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒரியா, வங்காளி, மலையாளம், பஞ்சாபி, அசாமி, காஷ்மீரி போன்றவை மத்திய காலத்திலும் அதன் பின்னரும் உருவான தேசிய இனங்களாகும். இந்த தேசிய இனங்கள் அனைத்தும் வளமான வளர்ச்சியடைந்த மொழியையும், இலக்கியங்களையும் கொண்டது. இதே போல வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் தனக்கென தனித்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டு தனித்த அடையாளங்களோடு இயங்கி வருகிறன்றன.

இந்தி மொழி பேசுகிறவர்களை மட்டும் இந்தியர் என்று கூறலாமா என்றால் அது சாத்தியமே இல்லாதது. எனவே இந்தியர் எனில் ஓர் அரசு சமூகத்தில் வாழும் மக்களே தவிர பொது மொழி பேசும் ஒரு தேசிய இன மக்கள் அல்ல என்பதை ஜயந்திரிபறக் கூறுகிறோம்.

இந்தி என்பது உருவாக்கப்பட்ட மொழி, இயற்கையான மொழி அல்ல!

இந்தத் தலைப்பே பலருக்கும் வியப்பைத் தரலாம். பெரும்பான்மையான இந்திய மக்களிடம் இந்தி வட இந்தியா முழுவதும் பேசப்படுகிற பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக உள்ளது என்ற கருத்து உள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் பலர் இந்தி என்பது சமக்கிருதத்தின் குழந்தை என தெளிவுபடக் கூறியுள்ளனர்.

இந்திய சமூகத்தை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த தோழர் கார்முகில் அவர்கள் இந்தி மொழியின் வரலாறு குறித்து மிகத் தெளிவுபட எடுத்துக் கூறியுள்ளார்.

"இந்தி என்று இன்று வழங்கப்படும் மொழி 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவில் எங்கும் வழங்காத மொழியாகும். மொகலாயர், ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் பரவியிருந்த இஸ்லாமிய, கிருத்துவ மத ஆதிக்கங்களுக்கு ஏதிராக மீண்டும் இந்து மதத்தை நிலைநிறுத்தச் செய்வதற்காக. உருவான மதவாத இயக்கங்களுடன் இணைந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இந்துஸ்தானியை சமஸ்கிருதமயமாக்கி உருவாக்கப்பட்ட மொழியே இன்றைய இந்தியாகும்.

மொகலாயர் ஆட்சிக்காலத்தில் பாரசீக மொழி நீதி, நிர்வாக மொழியாக இருந்ததால் மொகலாய பிரபுக்களும், உயர்சாதி இந்துக்களும் பாரசீக மொழியை விரும்பிக் கற்றனர். இதனால் உள்ளூர் மொழிகளில் சமக்கிருத, பாரசீகச் சொற்கள் கலந்து இந்துஸ்தானி என்ற ஒரு புதுமொழி உருவாகி டெல்லிப்பகுதியில் வழங்கத்தொடங்கியது. அதிகமாக பாரசீக. மொழிச் சொற்கள் கலந்தும் பாரசீக எழுத்து வடிவிலும் எழுதப்பட்ட இந்துஸ்தானியை உருது என்றும், சமக்கிருத சொற்கலப்பு அதிகமாகவும், சமக்கிருத எழுத்துவடிவிலும் எழுதப்பட்ட இந்துஸ்தானியை இந்தி என்றும் வழங்கலாயினர். (இந்தி என்பது சமக்கிருத எழுத்து வடிவிற்கான பெயர் என்று குறிப்பிடுகிறார் நேரு) எனவே உருது, இந்தி என்று இருவேறு பெயர்களில் வழங்கப்பட்ட இந்துஸ்தானி மொழிக்கு சொற்கலப்பு அளவிலும், எழுத்து வடிவிலும் வேறுபாடு இருந்ததன்றி இலக்கண அமைப்பில் வேறுபாடு எதுவும் இல்லை. இந்தி என்றும் உருது என்றும் வழங்கப்பட்ட இந்துஸ்தானி இருவகை பேச்சு வழக்குகளாக 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி பகுதியிலிருந்து வட இந்திய நகரங்கள் பலவற்றிற்கும் பரவியது. மொகலாயர்களின் நீதி, நிர்வாக அமைப்புகள் வடிந்தியாவின் பல நகரங்களிலும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்தே இப்பரவல் ஏற்பட்டது"

( பக்கம் 14 இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயப்புரட்சியும்-இ. தே. ஜ. பு)

இந்தி இந்திய மக்களில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழி என்பது பொய்யானது!

இந்தி இந்திய மக்களில் 27% மக்களால் பேசப்படும் மொழி என்றும் ஆந்திராவிற்கு வடக்கிலுள்ள அனைத்து மாநில மக்களும் இந்தி பேசுகிற மக்கள் என்றும் டெல்லியின் ஆட்சியாளர்களும் ஏக இந்தியக் கருத்தியலர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் வடபுலத்தில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.

அது பற்றி விரிவாகக் காண்போம். கிழக்கு பஞ்சாப், மேற்கு உத்திரப்பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வழங்குவது கனோஜ், புந்தேலி, பிரஜ்பாஷா, எனும் மொழியாகும். டெல்லியில் பேசப்படும் மொழி ஹந்தாலி, அல்லது டெல்வி என்று அழைக்கப்படுகிறது.

டெல்லிக்கு மேற்கே ஜாடு அல்லது பங்காரு எனும் மொழி வழங்கப்படுகிறது. வடக்கு உத்திரப்பிரதேசத்தில் வழங்கும மொழி பிரதேச ஹிந்துஸ்தானி எனப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் கோண்டி, பிலி ஆகிய மொழிகள் வழக்கத்திலுள்ளது. கோசலைப்பகுதியில் அவதி அல்லது பைஸ்வரி, பகேலி, சட்டிஸ்கரி ஆகிய மூன்று மொழிகள் வழங்குகின்றன. பீகாரில் மகத மொழி என்றழைக்கப்படும் போஜ்புரி, மகதி, மைதிலி ஆகிய மொழிகள் வழங்குகின்றன. இராஜஸ்தானில் இராஜஸ்தானி, ஹரியானாவில் ஹரியான்வி புழக்கத்திலுள்ளது.

இவ்வாறு பல்வேறு மொழி பேசுகிற பகுதிகளையெல்லாம் இந்தி பேசுகிற பகுதி எனக்காட்டுகின்றனர்.

அங்குள்ள வேறுபட்ட மொழிகளை மேலை இந்தி, கீழை இந்தி, ஹாரிபோலி இந்தி என புதிய பெயரிட்டு எல்லாம் இந்திமொழிதான் அந்தப்பகுதிகள் அனைத்தும் இந்திப்பகுதிகள்தான் எனக் காட்டி வருகின்றனர்.
பல்வேறுபட்ட மொழிகளின்இலக்கியங்கள் அனைத்தையும் இந்தி இலக்கியங்கள் என இட்டுக்கட்டி வருகின்றனர்.

அண்ணா நையாண்டியாகச் சொல்வார் "இந்தியிலுள்ள பெரிய இலக்கியம் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள இந்தி வழிகாட்டி புத்தகம் தான்".

இந்திக்கு என எந்த இலக்கியமும் இல்லை என்பதே உண்மையாகும்.

ஆக இந்தி என்பது இந்தியாவின் பெரும்பான்மை மொழி என பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

தரவுகள் ஆதாரம்: இந்தியாவில் தேசியப்பிரச்சனையும் ஜனநாயகப் புரட்சியும்

நூல் ஆசிரியர் கார்முகில் பற்றி :

இவர் தமிழ் நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். தனது மாணவப்பருவத்தில் பெருஞ்சித்திரனார் அவர்களின் இயக்கத்திலும் பின்னர் நக்சல்பாரி வழி வந்த இ.பொ.க (மா.லெ) இயக்கத்திலும் இணைந்தவர்.

தமிழக மா.லெ இயக்கத்தில் எழுந்த பல்வேறு தத்துவார்த்த கேள்விகளை ஆய்வு செய்து பல புதிய முடிவுகளை முன்வைத்தவர்.

தமிழ் நாடு அமைப்புக் குழு-இ.பொ.க (மா.லெ) என்ற பிரிவிற்கு தலைமையளித்து தமிழகத்தில் புரட்சிகர இயக்கத்தை வெகுமக்கள் இயக்கமாக மாற்ற வழிகாட்டியவர்.

இந்தியப் பொதுமை இயக்கம் இந்திய சமூகத்தின் ஆணிவேராக இருக்கிற பார்ப்பனியம் பற்றியும் அதன் எதிர்ப்புரட்சிகரத் தன்மை பற்றியும் அறியாமல் பார்பனிய அடிப்படை கொண்ட இந்தியாவை ஏற்று இருப்பதை தனது ஆய்வால் நிறுவியவர்.

இ.பொ. இயக்கத்தின் வரலாற்றைத் தொகுத்து அதிலுள்ள சிக்கல்களை முன்வைத்து தமிழ் தேசிய விடுதலைப் புரட்சி என்ற திட்டத்தை முன்வைத்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதை இலக்காக முன்வைத்து இயங்கி வருபவர். அவரது தலைமையின் கீழ் இயங்கி வரும் மக்கள் திரள் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணியாகும்.

- கி.வே.பொன்னையன்

Pin It