07-01-2018, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகலில், சென்னை, மேற்கு மாம்பலம், சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மா.பெ.பொ.க. சார்பில் நடைபெற்ற உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 :

இந்தியாவில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 126 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மொழிகளைப் பேசுகிறார்கள். அவற்றுள் முன்னூறு மொழிகள் வளர்ச்சி பெற்ற மொழிகள். இந்தியாவில் வாழும் மக்கள் பல்வேறு மதங் களையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கொண்டவர்களாக வாழ்கிறார்கள். இப்படிப் பட்ட இன்றைய இந்தியா 25000 பேர்களால் மட்டுமே பேசப்படுகின்ற சமஸ்கிருதம் கலந்த, "தேவ நாகரி வடிவிலான 40 கோடி மக்களால் பேசப்படுகின்ற இந்தி, இந்திய இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இருக்கும்" என்று, இந்திய அரசமைப்புச் சட்டவிதி 343(1)இல் எழுதப் பட்டுள்ளது. இது, இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான தாய் மொழிகளைப் பேசுகின்ற இந்தி பேசாத எல்லா மக்களின் உரிமைகளையும் அடியோடு பறிப்பதாகும்.

எனவே, 'இந்திய அரசமைப்புச்சட்டத்தில் உள்ள விதி 343அய் இந்திய அரசும், நாடாளு மன்றமும் உடனடியாக நீக்க வேண்டும் என இம்மாநாடு இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 1 (அ) :

இந்தி எந்த வடிவத்திலும் இந்தி பேசாத மக்கள்மீது திணிக்கப்படக் கூடாது என்று கோரி, இந்தி பேசாத எல்லா மொழி மக்களும் மொழி வேறுபாடு, கட்சி வேறுபாடு இவற்றை மறந்து ஒன்றுபட்டு இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துத் தொடர்ந்து போராடவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 2 :

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆவது பகுதியில் உள்ள விதி 343 தவிர்த்த, விதி 344 முதல் விதி 351 முடிய உள்ள எல்லா விதிகளும் இந்தி மொழியின் பயன்பாட்டை எல்லாத் துறைகளுக்கும் விரைவுபடுத்துவதையும் இந்தியை வளம் பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டவை. இந்திய ஒன்றியத்தின் எல்லாத் துறைகளின் பயன்பாட்டிலும் திணிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளவை. இவை 12-க்கு மேல் உள்ள திராவிட மொழிகள் மற்றும் மராத்தி, குசராத்தி, பஞ்சாபி, ஒடியா, காஷ்மீரி முதலான இந்தியத் தாய்மொழி களையும், பழங்குடிகள் பேசுகின்ற மொழிகளின் உரிமை களையும் புறந்தள்ளிவிட்டு, அம்மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை அடியோடு பறிப்பதாக இருப்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியை அடியோடு உடனே நீக்கிவிட வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 3 :

இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள பகுதி 17க்கு மாற்றாக, விதி 343(1) - இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் விதிகள் 344(1) மற்றும் 351 ஆகிய விதிகளின் “மொழிகள்” என்ற தலைப்பின்கீழ் உள்ள அசாமி, பெங்காலி, போடா, டோகிரி, குசராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமற்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 மொழிகளையும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் எல்லாத் துறை அலுவலகங்களிலும் அன்றாட நிர்வாக அலுவல் மொழிகளாகவும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேசப்படும் மொழிகளாகவும், உச்சநீதிமன்ற நடவடிக்கைக்கு ஏற்புடைய மொழிகளாகவும் ஆக்கி, புதிய இந்திய அரசமைப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசையும், எல்லா இந்திய மொழிகளின் மக்களையும், எல்லாக் கட்சிகளையும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 (அ) :

அய்க்கிய நாடுகள் அவையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், சுவிட்சர்லாந்து ஓர் அமைதியான நாடு. அந்நாட்டில் 2016ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 84 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுள், கீழ்க்கண்ட மொழிகளைப் பேசும் மக்கள்:

செர்மன் பேசுவோர்    -     63.66 %

பிரெஞ்சு பேசுவோர்    -     20.37 %

இத்தாலியன் பேசுவோர்     -     6.46 %

அல்பேனியன் பேசுவோர்    -     1.3 %

போர்ச்சுகீசு பேசுவோர் -     1.23 %

ஸ்பானிஷ் பேசுவோர்  -     1.05 %

ரோமன்ஸ் பேசுவோர்  -     0.48 %

வாழ்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இரண்டாவது பகுதியான கூட்டாட்சியின் அதிகாரமய்யங்கள் என்பதை அடுத்து "அரசியல் சட்ட மறுஆய்வு செய்தல்" அடுத்த உள்ள பாகம் 5இன் கீழ் உள்ள இரண்டு விதிகள் குறிப்பிட்டத்தக்கவை. விதி 16 - மொழிகள் : செர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ரொமன்ஸ் ஆகிய நான்கு மொழிகள் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகள் (National Languages) என அழைக்கப்படுகின்றன.

விதி 117 - மொழிகள் : செர்மன், பிரெஞ்சு,இத்தாலியன் ஆகிய மூன்று மொழிகள் கூட்டாசியின் அலுவல் மொழிகள் (Official Languages) பின் பற்றத்தக்க உறுதி செய்ய என அறிவிக்கப்பட்டுள்ளன. இவை எல்லா இந்தியர்களும் அறியத்தக்கவை; சிந்திக்கத் தக்கவை.

தீர்மானம் 4 :

"இந்திய ஒன்றியம்" என்கிற பேரால் இயங்கும் இந்திய அரசின்கீழ் இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஒன்றிய அரசு அதிகாரப் பட்டியல், மாநில அரசு அதிகாரப்பட்டியல், இந்திய அரசுக்கும் - மாநில அரசுக்கும் உள்ள பொதுவான அதிகாரப் பட்டியல் எனத் தொடக்கத்தில் மூன்று பிரிவுகளாப் பிரிக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த 1950 முதல் இன்று வரையிலான 68 ஆண்டுகளுக்குள் ஏறக்குறைய 105 அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1975-1976ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 42ஆம் அரசியல் சட்டத் திருத்தம், 1919ஆம் ஆண்டு முதல் மாகாணங்களுக்கும் மாநிலங்களுக்கும் இருந்த பல துறை அதிகாரங்களை அடியோடு பறித்துவிட்டது. குறிப்பாக, கல்வித்துறை அதிகாரம், பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது மாபெரும் கொடுமை யாகும். எனவே, இப்படி மாநிலங்களின் அதி காரங்களைப் பறிக்கும் அதிகாரப் பகிர்வு முறையை அடியோடு மாற்றி, உண்மையான கூட் டாட்சியாக - கூட்டாட்சி முறை ஆட்சியாக (Confederation of India) மாற்றிட, இந்திய அரசும் இன்றைய ஆளும் கட்சியான பாரதிய சனதாக் கட்சியும், மற்றெல்லாத் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை ஒரு முகமாகத் தூக்கிப்பிடிக்க வேண்டும் என, இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 4 (அ) :

உண்மையான கூட்டாட்சி என்பது, 1947ஆம் ஆண்டு காங்கிரசினாலும் முஸ்லிம் லீக்கினாலும் இந்தியக் கூட்டாட்சியின் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டது.

  1.  பாதுகாப்புத் துறை (Defence)
  2.  பணத்தாள், நாணயம் அச்சிடல் துறை (Currency)
  3.  அயலுறவுத் துறை (External Affairs)

ஆகிய மூன்று துறைகள் தவிர்த்த மற்ற எல்லாத் துறை அதிகாரங்களும், எஞ்சிய அதிகாரங்களும் இந்தியக் கூட்டாட்சி அரசின் உறுப்புகளாக விளங்கும் மொழி வழிப்பட்ட - முழுத் தன்னாட்சி பெற்ற மாநில அரசுகளுக்கே (Full Autonomous States) வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு இந்திய மக்களையும் இந்திய அரசையும் வற்புறுத்திக் கோருகிறது.

தீர்மானம் 4 (ஆ) :

மேலே கண்ட தன்மையிலான கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்று, கூட்டாட்சி உறுப்புகளான மொழிவழிமுழுத் தன்னாட்சி மாநிலங்களுக்கு, கூட்டாட்சி அரசமைப்புக்குக் கட்டுப்பட்டு இயங்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டமும், தனித்தனித் தேசியக் கொடியும் இருக்க உரிமையுள்ள உண்மையான இந்தியக் கூட்டாட்சிக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றிட எல்லோரும் முன்வர வேண்டும் என்றும், இன்றைய பாரதிய சனதாக் கட்சி அரசும் மற்றும் எல்லா மாநில அரசுகளும் இவற்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறோம்.

Pin It