எந்தவொரு மொழியும் பிரிவினையை ஏற்படுத்துவதில்லை. மொழிசார்ந்த அரசியல் களம் தான் இங்கு பிரிவினைவாதமாகச் செயலாற்றுகிறது. பன்மய தன்மைகளை ஒடுக்கியும், மொழி சார்ந்த அடையாள, பண்பாட்டுக் கூறுகளையும் நிர்மூலமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மொழிகள் தேச உருவாக்கத்தின் அடிப்படையாக இருக்கிறது. மொழிகளின் கணக்கெடுப்புகளும் மொழி பேசுவோரின் இனத்தோடு இணைத்துத்தான் நிகழ்த்தப்பட்டன என்ற அடிப்படை பன்முகத் தன்மையைக்கூட மறுதலிக்கும் போக்கு தலை தூக்குகிறது.

Hindi Impositionகிழக்குப் பாகிஸ்தான் வங்க தேசமாக மாறுவதற்கு முன்பு வங்காள மொழியை அங்கீகரிக்க வேண்டி பிப்ரவரி, 21, 1952 அன்று நடந்த போராட்டத்தில் இறந்த டாக்கா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்களின் நினைவாக வங்க தேச அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடனும் ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு, 1999 இல் பிப்ரவரி 21-ஐ சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது. தாய்மொழித் தினத்தன்று மொழிகளின் அரசியல் நிலைப்பாட்டினைக் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

          இன்றைக்குச் சிறுபான்மையின மொழிகள் அந்தந்த மாநிலங்களில் அலுவல் மொழியாக இருப்பதற்கு மக்கள் கொடுத்த விலை பன்மடங்கு. தேசிய அளவில் பெரும்பான்மையான மொழியாக அறிவிக்கப்படவிருந்த இந்தியை ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்மொழி அலுவல் மொழியாகவும் நடைமுறைப்படுத்த தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை கொஞ்சம் நஞ்சமல்ல. மொழிப் போராட்டத்தின் பொருட்டு இராணுவம், துப்பாக்கிச்சூடு, சிறையில் உயிரிழப்பு, மாணவர்கள் உயிரிழப்பு என அதிகார அடக்குமுறையின் கேலிக்கூத்தைச் சுமந்து கொண்டுதான் வந்திருக்கிறது தமிழ்நாடு.

தற்போது புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துதல்மூலம் மறைமுகமாக இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. மேடைகள்தோறும் இந்தி மொழிப் பிரச்சாரம், வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு என இந்தி மொழியை உயர்த்திப் பிடிக்கிறவர்களின் குரல்கள் மேலெழுந்த வண்ணமிருக்கிறது.

மொழி என்பது தொடர்பாடல் கருவி மட்டுமன்று. தாய்மொழி, இன அடையாளம், பண்பாடு, இன வரலாறுடன், சிந்தனை, கருத்தாளுமைகளுக்கும் ஊன்றுகோலாய் இருப்பது. மொழி நவீனப்பட்டும், ஆக்கத்தோடும் இயங்குகின்றபொழுதுதான் பண்பாட்டிலும் சிந்தனைத் தளத்திலும் ஊக்கத்துடனும் நிலைத்து நிற்க முடியும். ஆனால் இன்றைக்கு ஒற்றை அடையாளத்தை ஏற்படுத்தும் பொருட்டு வரலாறு, மொழி பிரிவினை, பழைமை, புராணம் என்று முன்னால் காலத்தை நகர்த்துகின்ற நிலைப்பாடும், தனது அடையாளத்தில் மாற்றத்தை விரும்பாத மனப்பாங்கும் தன்னை இச்சமூகத்தின் மூத்த மற்றும் மேட்டிமை குடிமகனாகக் கட்டமைத்துக் கொள்ள வேண்டிய செயற்கை முன்னெடுப்புகளுக்கு இட்டுச்செல்கின்றன.

பல தாய்மொழிகளை ஆதிக்கச் சக்திகள் தாங்கள் பிரதானப்படுத்தும் மொழியோடு சேர்க்கும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இந்தி என்ற பெயரில் வகைப்படுத்தப்படும் மொழிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை மொழி விரிவாக்கம், கருத்துப் பரவலுக்கு ஏற்றது என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது.

பலமொழிகள் அட்டவணை (8) மொழிகளுக்கான தகுதி இருந்தும் தரம் பிரிக்கப்பட்டு படிநிலைப்படுத்தப்பட்டுள்ளன. இதனையும் தாண்டி பரிதாபகரமாக வழக்கொழிந்தும், தமது எழுத்துக்களைத் தொலைத்துவிட்டு நிற்கும் அபாய நிலையை இன்றைக்கு எட்டியிருக்கிறது. இத்தகைய நிலைப்பாடுகளில் மத அடையாளங்கள் மொழியை அரசியல்படுத்தும் போக்கும் காணப்படுகிறது. மொழி பற்றிய மதிப்பீடுகளில் மதத்தோடு மொழியை இந்து=சமஸ்கிருதம், சீக்கியம்= பஞ்சாப், கிறிஸ்தவம்=ஆங்கிலம், இஸ்லாம்=உருது என்று குறுகிய மனப்பாங்குடன் அணுகும் போக்கு, இந்திய போன்ற பன்மீய அடையாளங்களையும் பண்பாடுகளையும் கொண்ட ஒரு கூட்டாட்சி நாட்டில் குந்தகம் விளைவிக்கும் மனப்பாங்கினை வளர்ப்பதற்கு ஏதுவான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.

ஒரு மொழி எழுத்துருக்களை இழந்து, வழக்கொழிவது என்பது ஒரு இனக்குழுவின் அடையாளமான பண்பாடு, வரலாறு முற்றிலும் வேரறுந்துவிட்ட நிலையினை ஒத்தது. ஒரு இன அடையாளத்தை மொழியைக் கொண்டே கட்டமைக்க இயலும் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. இந்நிலைப்பாடுகளிலிருந்து மாநில மொழிகளின் பண்பாடு, இனம், வரலாறு, பண்பாடு, தனித்தன்மைகள் நோக்கப்பட வேண்டிய அணுகுமுறையை தவிர்த்து ஒருமித்த கண்ணோட்டத்துடன் ஒற்றைமையப்படுத்தல் என்பது பிற்போக்குத்தனமான சிந்தனை மற்றும் சமூக இயங்கியலுக்கு இட்டுச் செல்லும்.

ஒற்றைமய இந்தியா முன்னெடுப்புகளில் அனைத்திந்திய மொழிகளும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதிகாரப்பூர்வ நிலைக்குக் கொண்டாடும் இந்தியும், பல்வேறு வட்டார மொழிகளின் ஒருங்கிணைப்பால் உருவானது என்ற அடிப்படையினை மறந்துவிட்டு சமஸ்கிருத பூசாடல்களாலும், வடமொழியின் அதிகாரத்தாலும் மேட்டிமையுடன் பல வடஇந்திய சிறுபான்மை மொழியின் தன்மையை இழக்கச் செய்து கொண்டிருக்கிற அவலம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. சுதீப்தா கவிராஜ் குறிப்பிடுவதைப் போல, ‘நவீனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிற சமூகம் தன்னைக் கடந்த காலம், கலாசாரம் ஆகியவற்றின் மாறுவேடங்களில் ஒட்டுமொத்த நவீன கருத்துக்களும் உள்ளதாகத் தன்னைப் புதைத்துக் கொள்வதைச் செய்கிறது. அது நவீனத்தை எதிர்கொள்ள மறுக்கும் பயமும், நவீனத்தால் தான் சிதைவுறுவதை ஏற்க மறுக்கும் போக்குமே இதற்குக் காரணம்.’ என்பதை உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

          இங்கு சிந்தனை வளர்ச்சிக்கும் சமூகப் புரிதலுக்கும் நெருங்கிய தொடர்புடையதாக மொழி இருப்பதனை புரிந்து கொள்வதில் அரசியல் மேலீடுகள் தலையிடுகின்றன. இந்தியாவில் பல்கலைக்கழகம், பள்ளிகள், அதிகாரப்பூர்வ அலுவல் என்ற மூன்று நிலைகளில் மொழிகள் கட்டமைப்படுகின்றன.

          மொழியை அறிவது என்பது பண்பாட்டினை அறிவதாகும். ஏனெனில் பண்பாட்டுச் சூழ்நிலையின் சூழலமைவினை (Context of situation) அது எப்போதும் பண்பாடு சார்ந்தே அமைகின்றது என மானிடவியலாளர் மாலினோவஸ்கி குறிப்பிடுகிறார். மொழிசார்ந்த இனத்தின் அடையாள அழிப்புக்கு இத்தகைய ஒற்றைமையச் சிந்தனை இட்டுச் செல்லும் ஆபத்திலிருந்து சமத்துவ அங்கீகாரத்தை வென்றெடுப்பது ஒவ்வொரு மொழி இனத்துக்குமான தலையாய பணியாகும்.

செ.சௌந்தரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்-636011

Pin It