theni1 350''எங்கள் நிலத்தையும்  கிணற்றையும் விவசாயிகள் வாங்கிக்கொள்ளுங்கள்''- O. ராஜாவின்  (OPS தம்பி) தெனாவெட்டு! எதிர்காலம் என்ன?

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் உள்ளது லட்சுமிபுரம். அக்கிராமத்தின் மக்கள் கடந்த சில மாதங்களாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

'நிலத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவந்த ஓபிஎஸ்சின் தம்பி O. ராஜாதான் பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு எதிர்த் தரப்பாக ஆஜர் ஆனார்.  

''எங்கள் நிலத்தை விவசாயிகள் வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று    O. ராஜா   சொல்லியுள்ளார். ''தலித்துகள் உங்கள் நிலத்தைக் கேட்டால் கொடுப்பீர்களா?'' என்று விவசாயிகளைப் பார்த்து சீறியுள்ளார்... தலித் ஒருவரைத் தற்கொலைக்குத் தள்ளிய வழக்கில் குற்றவாளியான O. ராஜா!

NABARD board 350''நாங்கள் நாய்கள்.. நக்கித்தான் குடிக்க முடியும்.. உங்களைப் போன்று நீரை உறிஞ்ச எங்களால் முடியாது. உங்கள் நிலத்தை வாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை'', என்றும், ''தலித்துகளும் நாங்களும் ஒற்றுமையாக நிற்கிறோம்'', என்றும் பதிலளித்ததாக போராட்ட குழு உறுப்பினரும் முன்னாள் ஊராட்சித் தலைவருமான ஜெயபாலன்  சொன்னார். இவர் கடந்த முறைகள் தொடர்ந்து  உள்ளாட்சித் தலைவராக வெற்றிபெற்றவர். எந்தக் கட்சியையும் சாராதவர்.

இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி முடிந்ததாக விவசாயிகள் தரப்பு சொன்னார்கள். சரி.. என்னதான் பிரச்சனை? சற்று விரிவாகப் பார்ப்போம்.

லட்சுமிபுரம் விவசாயம் பற்றிய சிறு குறிப்பு

லட்சுமிபுரம் என்ற அந்த ஊராட்சி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஊரில் உள்ள கண்மாய்களுக்குக் கோம்பையில் இருந்து நீர் வருகிறது. கோம்பை என்பது மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இடம். மூன்று மலைகளின் சரிவுகளில் பெய்யும்  மழை நீரும் ஆறாகப் பெருக்கெடுத்து வெளியேறும். அந்த   நதி கோம்பையின் திறப்பில் மூன்றாகப் பிரிகிறது. லட்சுமிபுரத்தின் அருகே ஓடும் வறட்டாறு என்பது வற்றாத ஆறு என்பதின் திரிபு என்று ஒரு விவசாயி சொன்னார். ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் இருக்கும். இதெல்லாம் 1960, அல்லது அதற்கு முந்தைய நிலைமை.

தற்போது கரும்பு விவசாயம் நடக்கும் பகுதிகள் அப்போது வானம் பார்த்த பூமியாக இருந்தன. மூன்று ஆறுகளும் கண்மாய்களை நிரப்ப, கண்மாய் பாசனம் லட்சுமிபுரத்தினை ஒட்டி நடந்திருக்கிறது. ஊருக்கும் மலைக்கும் இடைப்பட்ட பகுதி மானாவாரியாக, கம்பு, பயிறு வகைகள் விளையும் பூமியாக இருந்திருந்திருக்கிறது.

villagers well. 350jpg1960களின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சி நிலைமையைப் புரட்டிப் போட்டது. மானாவாரி பாசனப்பகுதியில் பூமியைத் தோண்டி கிணறுகள் வெட்டி, கரும்பு விவசாயம் ஆரம்பித்தது.

கரும்பு விவசாயிகள் கரும்பை அவர்களே பிழிந்து   வெல்லமாகக்  காய்ச்சி கேரளாவிற்கு அனுப்ப ஆரம்பித்தனர். சர்க்கரை ஆலைகளுக்கு, அவர்கள் கரும்பை அனுப்புவதில்லை. இன்றைய நிலரவத்தில் 1 ஏக்கர் பரப்பில் கரும்பு விவசாயம் செய்தால், வெல்ல உற்பத்தியின் மூலம்,  1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிகர வருமானம் என்ற நிலையிருக்கிறது. விளைவாக, 1962ல் ஆரம்பித்த கரும்பு விவசாயம் மெல்லப் பரவியது. அதன்பின், லட்சுமிபுரத்தைச் சுற்றியுள்ள 4500 ஏக்கர் பரப்பிலும் கரும்புதான் விவசாயம்.

கரும்பினால் கிடைத்த வருமானத்தில், பின்தங்கிய கிரமமாக இருந்த லெட்சுமிபுரம் வளர ஆரம்பித்தது. அது ஒரு கிராமப் பஞ்சாயத்து. ஆனால், பெரியகுளத்தில் இருக்கும் அரசு வங்கிகள் எல்லாம், பெரியகுளத்து வங்கிகளை விடப் பெரிய கட்டிடத்தில் இயங்குகின்றன. கூட்டுறவு வங்கி தனியானதொரு வளாகத்தில் இயங்குகிறது. ஏடிஎம்கள் பல இருக்கின்றன. கல்யாண மண்டபங்கள் பெரியகுளத்து மண்டபங்களைவிடப் பெரியதாக இருக்கின்றன. விவசாயிகளின் வெல்ல மண்டி இயங்குகிறது. ஊரின் பொருளாதாரம் ஒரு சிறு நகரப் பொருளாதாரமாக வளர்ந்துவிட்டது.

vilage weell 350கைவிட்ட பசுமைப் புரட்சியும், நீராதாரமும்

ஆனால், பசுமைப் புரட்சித் தங்களைக் கைவிட்டுவிட்டது.. அதன் நோக்கம் நல்லது.. ஆனால், அதிகாரிகள் கெடுத்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள் விவசாயிகள்.

ஆனால், பிரச்சனை வேறு ஒரு மட்டத்தில் வளர்ந்து வந்ததை விவசாயிகளோ, அரசாங்கமோ கவனிக்கவில்லை.

துவக்கத்தில் தோண்டப்பட்ட கிணறுகள்  ஒவ்வொரு ஆண்டும் ஆழப்படுத்தப்பட்டு வந்தன. இப்போது, சில கிணறுகள் 100 அடியைத் தொட்டுவிட்டன. இருண்ட சுரங்கம் போல அவை நிலத்திற்குள் நீள்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டு வறட்சியில் ஏறக்குறைய 2000 ஏக்கர் தரிசாகிப் போனது. லட்சுமிபுரத்தை ஒட்டியுள்ள நிலங்களில் சீமைக்கருவை கோலோச்சுகிறது. அந்த அளவு நீர்ப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

1960களுக்கு முன்பு மானாவாரி இருந்த விவசாயம், பசுமைப் புரட்சி வந்து நீர்த்தேவை அதிகமான கரும்பு வந்தவுடன் வீரியமாக வளர்ந்து, இப்போது சரிகிறது. நீராதாரத்தைக் காக்கவில்லை என்றால் அழிவு நிச்சயம் என்ற நிலையை விவசாயம் எட்டியுள்ளது.

அதனை அரசின் கொள்கைகள் விரைவுபடுத்துகின்றன. இந்த நிலையில், பருவ மழை பொய்த்துப் போவது பிரச்சனையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அறிமுகமான சொட்டு நீர்ப் பாசனம் பயனளிக்கவில்லை. சொட்டும் நீருக்கும், அதனை வாங்கும் மண்ணுக்கும் உள்ள உறவு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. அதனால், போட்ட குழாய்கள் வேஸ்ட் என்றார் ஒரு விவசாயி.

எதிர்த்து நிற்கும் சிறுவிவசாயிகள்

ஊரில் 1000 விவசாயிகள் இருக்கின்றனர். அவர்களில் 80 சதத்தினருக்கு 2 முதல் 5 ஏக்கர் வரையிலான நிலம் மட்டுமே இருக்கிறது. நிலம் மேலும் துண்டாவது அதிகரித்து வருவதால் பிரச்சனை மேலும் தீவிரமடைகிறது. பத்துக்குக் குறைவான விவசாயிகள் மட்டுமே, 30 ஏக்கர் அளவுக்கு வைத்துள்ளனர்.

விவசாயத்திலிருந்து இளைய தலைமுறை விலகிப் போகிறது. விவசாயத் தொழிலாளர்கள் கூலி பற்றவில்லை என்பதால் விலகி வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். விவசாய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

இந்தப் பின்புலத்தில்தான் லட்சுமிபுர விவசாயிகளின் வில்லனாக அரசியல் கொள்ளையன் ஓபிஎஸ் வந்து பிரச்சனையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

ops well 350என்ன செய்தார் அரசியல் கொள்ளையன் ஓபிஎஸ்?

கோம்பையில் ஆறு மூன்றாகப் பிரியும் இடத்தில் லெட்சுமிபுரம் கிராம ஊராட்சி 50 அடி ஆழமுள்ள கிணற்றை அமைத்திருக்கிறது.  இது நடந்தது 2014-15 காலத்தில்.

அதன்பின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளாட்சியின் கிணற்றருகே, 100 அடிக்கு மேல் ஆழமுள்ள கிணற்றை வெட்டினார்.

அவரின் பினாமி ஒருவர் சில 10 அடிகள் தள்ளி மற்றொரு கிணற்றை வெட்டிக்கொண்டுள்ளார்.

அவற்றின் விட்டம் 60 அடிகள். பொதுவாக, விவசாயிகளின் கிணறுகளின் விட்டம் பத்து அடி அளவுக்கு இருக்கும். நீர் மட்டம் குறையும்போது ஆழப்படுத்துவார்கள்.

ஆனால், ஓபிஎஸ் 60 அடி விட்டம், 100 அடிக்கு மேல் ஆழமுள்ள கிணற்றைத் தோண்டியது அல்லாமல், கிணற்றின் பக்கவாட்டுகளில் பைப்பை இறக்கி (சைடு போர்) நீரை உறிஞ்ச ஆரம்பித்தார்.

உறிஞ்சப்பட்ட நீர் சில கிலோமீட்டர்கள் கடந்து அருகாமையில் உள்ள கைலாசம்பட்டி ஊராட்சி, தென்கரை பேரூராட்சி வரை கொண்டு செல்லப்பட்டு 60 X 20 அடி கொள்ளவு உள்ள  3 தொட்டிகளில் நிரப்பப்பட்டு ஓபிஎஸ் & Co விவசாயம் நடக்கிறது.

sugarcane 350மேற்படி பகுதிகளில், ஓபிஎஸ்ன் பினாமிகள் 2000 ஏக்கர் வரை நிலம் வாங்கியிருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். நிலத்தில் இருந்த மாந்தோப்புகளை அகற்றிவிட்டு தென்னையை ஓபிஎஸ் ஆட்கள் நடுகிறார்கள்.

மா ஆண்டுக்கு 1 காய்ப்பு கொடுக்கும். தென்னையோ 40 நாளைக்கு ஒரு வெட்டு (காய் பறிப்பு) கொடுக்கும்... அதாவது, ஆண்டுக்குக் குறைந்தது 8 முறை பலன் தரும்.

இப்படி உருவாகும் தென்னந்தோப்புகளைக் காக்கவே கோம்பையின் நீராதாரத்தை ஓபிஎஸ்சும் அவரின் பினாமிகளும் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.

ஓபிஎஸ் வாங்கியுள்ள வறண்டப் பகுதியில் நீராதாரம் இல்லை. மேலும் அப்பகுதியை அணுகுவதும் சிரமம்.

அதனால், அந்த நிலங்களைப் பிரதான சாலையுடன் இணைப்பதற்காக, ரூபாய் 10 லட்சம் செலவில்  குன்றின் மேலுள்ள கோவிலின் பின்புறம் முதல் லட்சுமிபுரம் சாலை வரை - மக்கள் குறைவாகப் பயன்படுத்தும் பாதையில்- ரூபாய் 100 லட்சம் செலவில் புதிய தார் சாலையைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

நிதியுதவி NABARD - விவசாயம் மற்றும் கிராமப்புர முன்னேற்றத்திற்கான தேசிய வங்கி- National Bank For Agriculture And Rural Development. (படம்  பார்க்கவும்) இது தமிழக அரசு யார் கையில் இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

ஓபிஎஸ் 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தார், இப்போது அவரின் செல்வாக்கு என்ன என்பதைக் கண்முன் கண்ட விவசாயிகள், அவரை மதிக்கத் தயாராக இல்லை. ஊரை அடித்து உலையில் போடும் ஒருவராகப் பார்க்கின்றனர்.

லட்சுமிபுரத்திலும், தேனி மாவட்டத்திலும்,  ஓபிஎஸ்சுக்கு என்று பினாமிகள் இருக்கின்றனர். ஏறக்குறைய 20 நபர்களை விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களில் முதன்மையானவர் சுப்புராஜ் என்பவர். அவர் சாதாரண விவசாயக் கூலியின் மகன். இப்போது, சில கோடிகளைக் கையாளுபவர்.

எம்ஜிஆர்- ஜெயலலிதா பார்முலாவைப் பயன்படுத்தி சாதாரண நபர்களைக் கைத்தடி ஆக்கிக்கொண்டு, அவர்களின் பெயர்களில்  சொத்தைக் குவித்தார் ஓபிஎஸ் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

sugarcane manufacture 350இந்தப் பினாமிகள் அதிமுக கட்சியிலும் ஆற்றல் உள்ள நபர்களாக இருக்கின்றனர். பல்வேறு ஊர்களில், ஓபிஎஸ்சுக்காக,  காண்ட்ராக்ட் வேலைகள் பார்க்கின்றனர்.

இப்படியாக, கைத்தடிகளாக இயங்கும் கட்சியினர்- பினாமிகள், ஊழல் பணத்தில் சேர்த்த சொத்து- அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்பு என்று ஓபிஎஸ்சின் சாம்ராஜ்யம் விரிந்துள்ளது...

விவசாய நெருக்கடியுடன், ஓபிஎஸ் நெருக்கடியும்  சேர்ந்துகொள்ள, விவசாயிகள் தப்பிக்க வழியின்றி  போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பாடே லட்சுமிபுரப் போராட்டம்.

லட்சுமிபுரப் பகுதிக்கு நீர் வழங்கும் கோம்பை என்ற தொண்டையை ஓபிஎஸ்சின் கை நெறித்துக்கொண்டுள்ளது. அதனால்தான், ஓபிஎஸ் கிணறுகளை பஞ்சாயத்துக்கு எழுதித் தர வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.

இது குடிநீருக்கான போராட்டம் அல்ல... நீரைக் காப்பதற்கான... விவசாயத்தைக் காப்பதற்கான ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், உழைப்பாளர்களைக்  காப்பதற்கானப் போராட்டம்.

ஓபிஎஸ் கிணறு அமைந்துள்ள நிலத்தின் ஒரு பகுதி ஓபிஎஸ் மனைவி  பெயரில் உள்ளது என்றும் மற்றொரு  துண்டு பிரதான கைத்தடியான சுப்புராஜ் பெயரில் இருக்கிறது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

village sugarcane houseஇன்று இரவில், இந்தப் பதிவு எழுதப்படும் நேரத்தில், மெழுகுவர்த்திப் பேரணி ஒன்றை நடத்தும் கிராம மக்கள், அதன் பின் இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், ஓ. ராஜா சொன்னவற்றை விவாதிக்க இருக்கிறார்கள்.

போராட்டம் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.. ஏனெனில், ஒரு விவசாயி சொன்ன செய்தி இது... ''விரட்டுகிறது வயிறு... போராட வேண்டும் வேறு வழியில்லை''...

(படம் 1 கோம்பையின் பூகோள அமைப்பு.. படம் 2 NABARD  சாலை. படம் 3 விவசாயிகளின் கிணறு.. படம் 4  OPS  கிணறு. படம் 5  ஊராட்சியின் கிணறு. படம் 6  கரும்பு பிழியப்படுகிறது. படம் 6 காய்ச்சப்படும் வெல்லம். படம் 7 விவசாயிகளின் வெல்ல மண்டி.)

Pin It