சேலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த வளர்மதி மற்றும் ஜெயந்தி என்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இதில் வளர்மதி என்பவர் வேளாண்மையில் பட்டம் பெற்றவர். தற்போது இதழியல் படித்துவருகின்றார். இயற்கை பாதுகாப்புக் குழு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Valarmathi studentஇந்த அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்துக்காகவும் தஞ்சை காவிரி படுகையில் விவசாயத்தை அழிக்க மத்திய அரசு செயல்படுத்த திட்டம் தீட்டியிருக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தொடர்ச்சியாக மக்கள் முன் அம்பலப்படுத்தி வந்திருக்கின்றார். இப்படி தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அவரையும் அவரது தோழியையும் வெற்றிகரமாக கைதுசெய்து தமிழக காவல்துறை தனது புஜ பல பராக்கிரமத்தைக் காட்டியுள்ளது.

அவர்கள்மீது அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதாகவும் ஐபிசி153, 505(1பி)-71(ஏ) சிஎல்ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. போலீசுக்கு அவர் நக்சலைட்டாக இருக்கலாம் என சந்தேகமாக உள்ளதாம். போலீசுக்குப் போராளிகள் மீது எவ்வளவு வஞ்சினம் இருந்தால் இது போன்ற கீழ்த்தரமான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடுவார்கள். மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் போராடுபவர்கள் எல்லாம் நக்சலைட்டாகத்தான் இருப்பார்கள் என்று எச்சிகலை ராஜா சொல்வதற்கும் காவல்துறை சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது. தமிழக காவல்துறையில் பெருமளவு ஆர்.எஸ்.எஸ் கும்பல் நுழைந்துள்ளத்தைத்தான் இது காட்டுகின்றது. மாடுகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளை மறித்து அவர்களிடம் பணம் பறிப்பது, தமிழகத்துக்கு மாடுவாங்கவரும் வெளிமாநில வியாபாரிகளை வழியிலேயே மிரட்டி திருப்பி அனுப்புவது என தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ்- பிஜேபி கும்பலின் கூலிப்படையாக தமிழக காவல்துறை செயல்பட்டுவருகின்றது.

எப்படி மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து அதிகாரவர்க்கத்தைக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்களாகவும் போலீஸின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ அதே போல மக்கள் எக்கேடு கேட்டு நாசமாய் போனால் நமக்கென்ன அதிகாரவர்க்கத்தை நக்கி பதவி வாங்கினோமா, காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்துச் செய்து தினம் தினம் பல ஆயிரங்களை பார்த்தோமா, கள்ளச்சாராயம் விற்பவன், கஞ்சா விற்பவன், பான்மசாலா, குட்கா விற்பவன் போன்றவர்களிடம் கோடிகளில் லஞ்சம் வாங்கிக்கொண்டு தாலியை அறுப்பதற்கு அனுமதிகொடுத்தோமா என வாழும் போலீஸாரை பார்த்தால் கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரர்களைவிட மிக கொடூரமான குற்றக்கும்பலாக தெரிகின்றார்கள். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே தமிழக காவல்துறைதான். டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக சாராய பாட்டில்கள் வாங்கி கிராமங்கள் தோறும் உள்ளூர் அதிமுக குண்டர்கள் விற்பனை செய்து வருகின்றார்கள். அதுமட்டும்  அல்லாமல் பல இடங்களில் சாராயம் காய்ச்சியும் விற்படுகின்றது. இது எல்லாம் காவல்துறைக்குத் தெரிந்தே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. காவல்துறைக்குச் சேரவேண்டிய பங்கை சரியாக கொடுத்துவிட்டால்  நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளலாம். மிக கேவலமான, மட்டமான அருவருப்பான குற்றக்கும்பலாகத்தான் பெரும்பாலான காவல்துறையினர் உள்ளனர்.

காவல்துறைக்கு வேலைக்கு வரும் யாரும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாம் வருவதில்லை. இருப்பதிலேயே அதிகமாக பொறுக்கித்தின்ன வாய்ப்பு கிடைக்கும் துறை என்பதால் தான் போட்டி போட்டுக்கொண்டு பல லட்சங்களை கொடுத்து வேலைக்கு வருகின்றார்கள். காவல்துறையில் நேர்மையான அதிகாரிகளை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். எந்தவித உலக அனுபவமும் இல்லாத மார்க்சியம் என்றால் என்ன, லெனினியம் என்றால் என்ன, நக்சல்பாரிகள் என்றால் என்ன, மாவோயிஸ்ட்கள் என்பவர்களின் சித்தாந்தம் என்ன என்ற எந்தவித அடிப்படை அறிவும் இல்லாத அரசியல் பொருளாதார அறிவில் தற்குறிகளாக உள்ள கூமுட்டைகள் தான் காவல்துறை முழுவதும் நிரம்பி வழிகின்றார்கள். அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே போராளிகளை நக்சலைட்டுகள் என்றும் மாவோயிஸ்ட்கள் என்றும் அவர்களால் முத்திரைகுத்த முடிகின்றது.

அதுமட்டும் அல்லாமல் பல போலீஸ் அதிகாரிகள் அடிப்படையில் இந்துத்துவ, சாதிய கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதனால் தான் கைது செய்யப்பட்டவர்கள் தலித்துகளாக இருந்தால் அவர்களை மிக கொடூரமாக தாக்குவதும், பொய்வழக்குகளில் சிக்க வைப்பதும் ஆதிக்க சாதியாக இருந்தால் கொஞ்சுவதும் நடக்கின்றது. காவல்துறைக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரம் அவர்களை அனைத்து அயோக்கியதனங்களையும் எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் செய்ய வைக்கின்றது.  யாரை கைது செய்ய வேண்டும், எதற்காக கைது செய்ய வேண்டும் என்ற எந்த தராதரமும் காவல்துறையினரிடம் இல்லை. ஆளும்வர்க்கம் கட்டளையிட்டாள் யாருக்கு வேண்டும் என்றாலும் விபச்சாரி பட்டம் கொடுக்கவும், தேசதுரோகி பட்டம் கொடுக்கவும், நக்சலைட்பட்டம் கொடுக்கவும், மாவோயிஸ்ட் பட்டம் கொடுக்கவும் அவர்கள் தயங்குவது இல்லை. காவல்துறை ஆளும்வர்க்கத்தின் கூலிப்படை என்பதைத்தான் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நிரூபிக்கின்றது.

 இல்லை என்றால் துண்டுபிரசுரம் கொடுத்ததற்காக அதுவும் மாநில அரசே தாங்கள் நிறைவேற்ற விடமாட்டோம் என சொல்லிக்கொண்டிருக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்வார்களா?. எவனாவது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, இந்துமுன்னணி பொறுக்கிகள் புகார் கொடுத்தால் எந்தவித விசாரணையும் செய்யாமல் கைது செய்வதையும் அவர்கள் மீது பொய்வழக்குகள் போடுவதையும் காவல்துறை தொடர்ச்சியாக செய்துவருகின்றது. காவல்துறைக்கு ஆர்.எஸ்.எஸ் கும்பலை பார்த்தால் தேசபக்தர்கள் போன்றும் போராளிகளைப் பார்த்தால் தேசவிரோதிகள் போன்றும் தெரிகின்றது.

முதலில் காவல்துறையினருக்கு அரசியல் கல்வி புகட்டப்பட வேண்டும். வெறும் உடல் வலிமை மட்டுமே ஒரு சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட போதுமானது இல்லை. சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு சித்தாந்தங்களைக் கடைபிடிக்கும் அமைப்புகள் பற்றிய குறைந்த பட்ச அறிவுகூட  காவல்துறையினரிடம் இல்லை என்றால் அவர்களுக்கும் பணம் வாங்கிக்கொண்டு அடிக்கும் குண்டர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது. இன்று மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்தார்கள் என்று கைது செய்யும் காவல்துறை ஜனவரி மாதம் சேலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாணவர்களை அனுப்பிய எத்தனை பள்ளி முதலாளிகளைக் கைது செய்தார்கள். காவல்துறையினருக்குக் கொஞ்சமாச்சும் வெட்கம் மானம் இருக்கின்றதா என்பதுதான் தெரியவில்லை. இருந்திருந்தால் இது போன்று கீழ்த்தரமாக நடந்துகொள்வார்களா? இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ் க்கு பேரணி செல்ல அனுமதி கொடுப்பார்கள். அதற்கு பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக தனியார் பள்ளி முதலாளிகள் அனுப்புவதை வெட்கம் கெட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்படும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடினால், துண்டுபிரசுரம் கொடுத்தால் கைது செய்வார்கள். என்னங்க சார் உங்க சட்டம்? மானங்கெட்ட சட்டம்.

பொதுவெளியில் பெண்கள் போராட வருவது என்பதே மிக குறைவாகத்தான் இருக்கின்றது.  அப்படி அஞ்சாமல் வரும் ஒரு சில பெண்களையும் இது போன்று மிரட்டி அவர்களை திரும்ப வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கும் வேலையைத்தான் காவல்துறை செய்கின்றது. பொறுக்கிகளுக்கும், புறம்போக்குகளுக்கும், திருடர்களுக்கும், ஊழல்பேர்வழிகளுக்கு, பெரும்முதலாளிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், மதவெறியர்களுக்கும் மட்டும் தான் நாங்கள் உண்மையாக நடந்துகொள்வோம் மற்றபடி சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றேன், முதலாளித்துவத்தை ஒழிக்கப்போகின்றேன், சாதி வெறியர்களுக்கு எதிராகவும் மதவெறியர்களுக்கு எதிராகவும் நான் போராடப்போகின்றேன் என்று கிளம்பும் ஒவ்வொருவரும் எங்கள் பரம எதிரிகள், அவர்களை அழித்தொழித்து நாங்கள் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மானங்கெட்ட சொகுசு வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்வதுதான் எங்கள் ஒரே குறிக்கோள் என்பதை காவல்துறையினர்  அப்பட்டமாக முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கின்றார்கள். எனவே மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் போராடும் கல்லூரி மாணவர்களும் ,மாணவிகளும் முதலில் தங்களின் எதிரி  யார் என்பதை நன்றாக தெரிந்துகொண்டு அதற்கு எதிராக தங்கள் போராட்டத்தை திருப்ப வேண்டும். மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி போராடும் அதே வேளையில் இந்தக் கூலிப்படை போலீஸின் யோக்கியதையையும் பொது மக்கள் முன் அம்பலப்படுத்தி அதிகார வர்க்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டும்.

- செ.கார்கி

Pin It