இல்லாத இருட்டுக்குள் இருக்கும் ஒளியின் மறுபக்க பிறழ்வுகளில் திரை திறக்கும் தரை தட்டும் முன் எப்போதோ ஒரு முறை நினைத்த கப்பலின் காகிதம் ஒரு மரம் சாகும் தத்ரூபத்தில் கொத்தப்படுகிறது.. உன் காடு பார்த்து ரசித்த மரங்கொத்தியின் டக் டக் டக் என.

பிம்பங்களின் பின் நின்று மெல்ல சதுரமாகும் வேகத்தில் முழு நிலவின் புதுக்கனவு எனக்கு. தொடுவானம் கடந்துதான் விட்டிருந்தேன் பார். எட்டிக்குதிக்கும் சில்மிஷ ஸ்பரிசத்தில் அப்படிதான் தோன்றியிருக்கும் உனக்கும். பிசாசுகளின் பிதற்று நிலைக்குள் யாருமற்ற பாதங்களின் வழியே ஒரு பயணம் எனதெங்கும். பின் எங்கெங்கும். கொழுத்த சப்தங்களை கொய்யா நிறத்தின் வேர்வரை சொட்டும் யாருமற்ற தானின் நிலைக்குள் நிற்பதும் நடப்பதும் பறப்பதும் எனதன்றி எதுவோ.

பிக்காஸோ பறக்கும் நிலை. வான்கா திறவு நிலை. பால் செசான் மீளும் நிலை. ரவி வர்மனின் மறதிக்குள் யாரோ ஒரு தூரத்து புள்ளி இவன். எல்லையில்லா சுவர்களுக்குள் நானும் நீயும் உடைந்து விழும் முன்பொரு கால சுட்ட கல். பின்பொரு தாள வட்ட சொல். புறம் நீளும் பின்னிரவுக்குள் அகம் தீரும் அற்புதம் புரண்டு படுத்த தலையணை என கொள்க. கொல்ல கொல்ல இனிக்கும் கடவுளின் சாகா வாரத்தில் துள்ளி எழட்டும் மீளா துறவு. சவத்தின் நிறைவு.மந்திரப்புன்னகை என மாறிடும் சொல்லுரைத்தல் என்று திரும்பவும் திரும்பிடும் திரும்புதலின் திரும்பா நிலைக்குள் திரும்ப திரும்ப திரும்பி நிற்கும் திரும்புதல் திரும்பித்தான் ஆக வேண்டும் வா திரும்பி.

செத்துக்கொண்டே பிறக்கும் இருளின் சுவாசத்தை பிடித்து பிடித்து பறித்துக் கொள்ள பட்டென நிலை மாறும் வண்ணத்து பூச்சியின் நிறத்தில் ஒன்றை கொட்டுதல் உன் குணம். எறும்பின் வரிசைகளில் திடுமென வந்து போகும் பெரும்பாதம் இந்த காதல். கழுத்திருக்கி தூக்கினாலும் வாத்தின் மெத்தனத்தில் தான் உன்  பூதம் வளர்க்கும் நான். சிறுக சேர்த்த மலை முகடுகளின் உரசல்கள் மேகமாகி தீர கொஞ்சம் வீசியெறியும் வாடைக் காற்றின் சூத்திரம் நமது திசைகள்.

இதுதானென அறிந்த பிறகு இது தான் என்றிருக்கும் இதற்குள் அறியா முப்பொழுதின் சாக்கு போக்குக்கள் சத்தியமாய் சிவந்த வானம் சமைக்கலாம். கொஞ்சம் சில்லிடும் பூமியை துவைக்கலாம். உன் இருப்பின் சமீபத்தை இறப்பின் தூரத்தை வாய்மொழி தாண்டி வசந்தங்கள் தூவும் இலை மறை சருகுகளின் காற்றோடு நான் கிஞ்சித்து நழுவுகிறேன்.  மீண்டும் ஒரு சித்திரம் புகுந்தேன். தாண்டும் கனவுக்குள் ஒரு அதிகாலை முயன்றேன். பின்னிரவைக் கொலுசொலிகள் மீட்டி எலிகளின் கீச்சொலி செய்கின்றன. அவைகள் அப்படி ஒரு தாம் தூம் என தத்தளிக்கும் அலைகளின் ஆரவார சிரிப்புகளின் பெருங்கனவு துகளென இருக்கத்தான் நினைக்கின்றன.  

நினைப்பதெல்லாம் நடந்துதான் விடுகிறது உனக்கும் எனக்கும். உன் பெருத்த கனத்த மாரின் வலிமையை கூடுடைத்த அன்று ஒரு சிறுபறவையின் மொழியில் கொத்தி கொத்தி நினைவு கூர்கிறேன்.  நீல நதிக்கரையில் துடி துடித்து தரை செதுக்கும் செதில்களின் துவாரத்தில் என் மீன்களின் நிலை காணாயோ கண்மணியே.  காதலுக்கும் சாதலுக்குமான இடைவெளி பிடித்த படத்தின் இடைவேளை நேரத்து சமோசா விக்கித்து தொண்டை பிதுங்கும் மரணத்தின் சவ்வூடு பரவுதலின் மிச்சமென இழுத்து மூடு.  மூச்சடைத்து பொங்கட்டும் கொஞ்சம் காமும். மிஞ்சும் யாமம். தஞ்சம் சாமம். 

பழுக்க நழுவிய மரத்தின் சூட்டுக்குள் கூடுகளின் கலைதல் வெளியின் கூர் அம்புக்குள் முளைத்த புத்தம் புது ஞாபகம். அழித்தொழித்த அத்தனை தூரத்துக்கு சமம் நீள இழுக்கும் ஒரு கோடு.  நீட்டித்து சிவக்கும் மறுமுறை அருகில் ஓய்ந்திடாத கோடுகள் சிறகடிக்கும் பைத்தியம் பிடித்தலின் நலன் கருதி. விரல் நீட்டி மீட்டும் வெற்றிடம் தாளம் விட்டு பாயும் கோல குயில் நெற்றி கற்றை. கூந்தல் சிறக்கும், கூவுதல் நிறைக்கும். யாவும் தாவும். மூச்சு முட்ட இழுத்து போர்த்திக் கொள்ளும் ஜன்னலோர இருமைக்குள் வியர்த்தல் நலம். இடம் பெயர்த்தல் சுகம். மார் முளைத்தல் தகும். மீசைக்குள் தாடிக்குள் கடவுள் பிடித்திழுக்கும் யாகத்தின் கடவுச்சொல்லை உள்ளாடை நழுவுகையில் விரல் பிடிக்கும். சூட்சுமக் கிணற்றுக்குள் தலை கீழ் தவம் கொள்ளும் நீரின் தனிமை வெம்மையின் இருபுற சலனத்தின் எதிர் புற நிழல் என எட்டிப் பார்க்கும் எனது உருவம் அல்லது மெட்டி தொலைக்கும் உனதிருள்.

முணங்குதல் மோகத்தின் பிம்பம். முயங்குதல் யோகத்தின் திண்ணம். நிலை அடுக்கின் நித்திரைக்குள் கவிழ்ந்த நீட்சிக்குள் மெல்லப் பரவும் சுப்ரபாத சீறுதலின் நிலைதன்னை தொடுவான கவளம் பிட்டு பிட்டு வாயில் போடும் வட்டலின் விரல்களின் வீறிட்ட ரத்த சுவடுகள்.  முட்டி முட்டி முளைக்கும் மெல்ல அறுபடும் பட்டு பட்டு சுழலும் சுழலி நீயாகவே இருந்து விட்டு போ. அரிக்கும் அர்த்த ராத்திரிகளை ஆங்காரம் தின்று செரிக்கும் பூரித்த அல்குலின் ஆரவார பூச்சொரிதல் ஆவென திறந்தே கொல். அவதிகளின் அடிவயிற்று சூடு ஆம் என பொருள் கூறும் நர்த்தனங்கள் மேலும் கீழும் தூவும் பூவும். 

சபித்த இரவுகளின் தோல் கிழிக்கும் பௌதீக நிலைமாற்றம் தோலுரித்த வெள்ளை ரத்த சதை அரிக்கும்.  பிறன்தகு யூகித்தல் மரத்து நிலைத்த புத்தனின் பின் மண்டை வழிதல் என வந்து கொண்டே இருக்கும் வருகைக்கும் வழி பாடும் வாகை சூடுதல் வரமின்றி தவம் ஆகும் தாக்கிய சுத்தியலின் கைப்பிடி மிச்சம். முலை பெருத்த கவிதைக்குள்ளும் மிச்சம் இருக்கும் கத்தும் குயிலோசையை காகம் கொன்று தீர்க்க கதை செய்தல் ரயில் புரண்ட காட்டில் கனவெனவே கொள்க. கதவுடைத்து செல்க. என்னைப் போல என்னையே செய்யும் எனதுருவத்தின் இயலாமை உன் நிறம் கொண்ட பிறகும்.. கண்ணாடி உடைத்த மறு நொடிகளில் நீ தீர்ந்த நிலையாமையும் பற்கள் நீண்ட பின்மதிய யோசனை ஆகிறது. வீடு முழுக்க தவழும் உன் நீண்ட நகங்களின் கிரீச்சுகள் வீட்டுக்குள் நகரும் நிழல்களை வளர்க்கின்றன.

காத்திருக்கும் காலத்தின் சுவடுகளை அடுக்கி வளைத்து நெளித்து உடைத்து... மலை உச்சி செய்திருக்கிறேன். வந்தமர்ந்து பின் எட்டிக் குதித்து மாண்டு போ. உன் மரணம் கொண்டாடும் பெரும் வேள்வியின் மீதொரு யாகம் என் தீ வளர்க்கிறது. அல்லது என் மலை உச்சி சாய்த்து கடலாகி என் ஊர் அழி. ஆழிப்பேரலை அசத்தும் அற்புத கண்ணாடி துகள்களின் நிர்வாணம் என்னை நிரப்பி பேரமைதி கொள்ளட்டும். அமர்ந்து பறந்த வானத்தின் கொஞ்சம் உன் துப்பட்டா சரிவென நிற்கட்டும். ஞாபக சூட்டின் மறதி பெரும் பாம்பு சீற்றம்.  கடற்கரை பாதங்களில் தனித்த நல்வயிர கொப்புளம் எனதாக நீ தூரத்தில் மணல் வீசி கண்கள் நறநறக்கும் காரியத்தை இன்னொரு முறை செய். அது மூடித்திறக்கும் அழுகையை மூச்சு விடாமல் தொடர்ந்து செய்ய ஏதுவாய் இருக்கும்.

இருக்கத்தான் இருக்கிறது இல்லாமையும். உனதில்லாமையும் இருக்கத்தான் இருக்கிறது இல்லாமையில். இருக்கிறேனா.... இல்லாத ஒன்றின் இருத்தலின் நிறத்தை பிட்டு பிட்டு தின்று போ... சற்று நேரத்தில் காணாமல் போகும் தேகத்தின் வளைவுகள் அதி பயங்கரம். உன் கொண்டை ஊசி வளைவுகளின் தத்ரூபம் காலுடைந்த தொடுவானம். சித்திரக் கனவுகளை வரவேற்கும் கடைசி பேருந்தை இம்முறையும் உன் ஊருக்கே தவற விடுகிறேன்.. தப்பித்து போ.... 

உன் போன்ற சூனியக்காரிகள் அழகென்றே இருக்கட்டும்.... இனியும்.......! கொழுத்த கனவுகளை உன் நிறத்தின் வேர்வரை சொட்டும் யாருமற்ற தானின் நிலைக்குள் நிற்பதும் நடப்பதும் பறப்பதும் எனதன்றி வேறெதுவோ ?

Pin It