அறுவடை செய்த நெல்வயல்
கோடைமழையில் துளிர்த்த
பசும்புல்லை மேயும் செம்மறியாய்
அவ்வளவு பேரின்பம்
உனைக் கண்டது.
மேயும் வெள்ளாட்டின் மீது ஏறி
உட்கார்ந்து இரைதேடும் கரிச்சானாய்
உன் காதில் ஜிமிக்கியாய் என் பகல்.
நீளும் வரப்புகளில் ஜோடியாய்
முளைத்து நிற்கும் பனைகளாய்
அருகருகே நம் நெஞ்சம்.
அரசமரமும் வேம்பும்
பின்னிப் பிணைந்து
வளர்ந்திருப்பது போல
நம் பெயர்கள்.
ஏரிக்கரைகளில் வரிசை கட்டி
வளமை கூட்டும் நெடும் பனைகளாய்
வேர்களில் காதலைச் சேமித்த
நம் நிலங்கள்.
உயிரின் அடிவாரத்தில்
அடர்ந்த மூங்கில் வனமாய்
குருத்தாகி துளிர்க்கிறது
குருதியில் உன் வாசனை.
வெக்கை சூழ் வாழ்விலும்
ஒரு ஜோடி நுணா பூக்களாய்
உன்னை சுமந்தினிக்கும் வரமெனக்கு.

- சதீஷ் குமரன்

Pin It