விமான நிலையத்திற்குப் போவதற்கு, ஊருக்கு முன் டாக்ஸி வந்துவிட்டது. எங்கள் இருவருக்கும் டிக்கட் காரியம் ஆகவில்லை; வெகு சீக்கிரமாக வந்து முயற்சித்தால் இடம் கிடைக்கலாம் என்று, அன்று பிற்பகல்தான் ஏர்லயன்ஸிலிருந்து போன் வந்தது. மூன்று மாதங்கள் ஸ்பெயினிலும், நான்கு மாதங்கள் அமெரிக்காவிலும் தங்குவதாக ஏற்பாடு. ஸ்பெயினில் சைவ உணவு கிடைப்பது குதிரைகொம்பு; மொழி தெரியாததால் பல குழப்பங்கள் நேரலாம்; தவிர இந்திய மளிகை கடைகளும் பரவலாக இல்லை. ஆகவே, பருப்பு, புளி, ஊறுகாய் இத்யாதி என்று ஆரம்பித்து சில பாத்திரங்களும் சேர்ந்து, ஒன்று பத்தாகப் பெருகி, பெரிய கனமான பெட்டிகளும், கைபைகளுமாக மூச்சு முட்ட எப்படியோ டாக்ஸியில் ஏற்றி, வண்டிஓட்டியின் முணுமுணுப்பைக் காதில் போட்டுக்கொள்ளாமல் ஒரு வழியாகக் கிளம்பினோம். 

விமனத்தில் இடம் கிடைத்துவிட்டது. 

Madridஎன் கணவரை (ஒரு விஞ்ஞானி) ஸ்பெயின் அரசாங்கம் மத்ரீத் வர அழைத்திருந்தது. மார்ச் மாதம் 6-ந் தேதி இங்கு வந்தோம். விமானநிலையத்தில், மீட்டர் இருந்தும் டாக்ஸிக்குப் பேரம் பேசவேண்டியிருந்தது; சென்னை ஆட்டோரிக்க்ஷ¡ அனுபவம் எங்களுக்குக் கைகொடுத்தது. நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் ஏற்கனவே பரிச்சயமானதால் ஒரு நொடியில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மூன்று மாத வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டோம். ஒவ்வொரு முறை வரும்போதும் வாடகை ஏறும், சௌகர்யங்களில் துளி மாறுதலும் இல்லாமல்.

நாங்கள் வந்த சில நாட்களுக்குள், இவரை ஆவலுடன் வரவழைத்த நண்பர் ஆஸ்கர், பார்ஸலோனா போயிருந்தார்; அங்கிருந்து காலை பதினோருமணிபோல் போன் செய்து மத்ரீதில் கலவரம் என்றும் என் கணவர் பாதாள ரயிலில் அலுவலகம் போகாதிருப்பது நல்லது என்றும் சொன்னார். நல்லவேளையாக, இவர் எப்போதும்போல் அன்றும் கால் நடையாகவே கிளம்பிவிட்டிருந்தார். அன்று காலை ஆறுமணிவாக்கில் சுற்றுபுற ஊர்களிலிருந்து மத்ரீத் ரயில் நிலையத்தை அணுகிக்கொண்டிருந்த சில ரயில்களில் குண்டு வெடித்து நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டது என்று தெரிந்துக்கொண்டேன். ரேடியோ இருந்தது, பாஷை புரியவில்லை; கம்ப்யூட்டர் இருந்தது, தொடர்பு ஏற்படவில்லை; பேப்பர் வாங்கி உபயோகம் இல்லை- ஆகமொத்தம் உலக நடப்பு ஏதும் அறிந்துக் கொள்ளாமலிருந்த எங்களுக்கு இது திடீர் அதிர்ச்சியாக இருந்தது. 

இதற்குள் என்னுடைய நெருங்கிய உறவினர்கள் ஈ-மெயில் மூலமும், போன் மூலமும் தொடர்பு கொண்டார்கள்; என்னுடைய அண்ணா "எந்த இடமும் நூறு சதவிகிதம் பாதுகாப்புடையது என்று சொல்ல முடியாது என்ற நிலையிலிருந்து, அநேகமாக எல்லா இடங்களும் அபாயமானது என்கிற நிலைக்கு அரசியல் நம்மை தள்ளியிருக்கிறது" என்று எழுதியிருந்தான். இதைவிட, பொருத்தமான வார்த்தை எதுவும் இருக்காது என்று நான் சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.

இந்த சம்பவம் நடந்த மூன்று நாட்களில், உலக வன்முறையின் பாதிப்பைப் பார்க்கும் ஆவலில், 'அதோசா' என்னும் ரயில் நிலையத்தைப் பாதாள ரயில் மூலம் வந்தடைந்தோம். அப்போது நேரம் பகல் பன்னிரெண்டு மணியைத் தாண்டிவிட்டது. குண்டு வெடித்த இடத்தைச் சுற்றி தீவிரமான தடுப்பு போட்டிருந்ததால் வெகு அருகில் சென்று பார்க்க முடியவில்லை. இரண்டு தளம் உள்ள இந்த ரயில் நிலையத்தில், மேலும்- கீழுமாக, பல முக்குகளில் மெழுகுவர்த்திகள் வரிசையாக நின்று எரிந்து கொண்டிருந்தன. இந்த குண்டுவெடிப்புக்கு ஒரு முக்கிய காரணம், இஸ்பானிய அரசாங்கம் இராக் படையெடுப்பில் அமெரிக்காவிற்கு மிகவும் உதவியது என்று பரவலாகக் கருதப்பட்டது; இதன் பிரதிபலிப்பாக சில வாசகங்கள் அட்டைகளில் எழுதபட்டிருந்தன. ஒரு மௌனமான சோகத்தை உணரமுடிந்தாலும் பெரிய இழைப்பின் வேறு அறிகுறிகள் இல்லாமல் எல்லாம் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன.

நகரத்தின் புராதனப்பகுதியில் உள்ள மூர் இனத்தாரின் கட்டிடக்கலை மிக சிறந்தது என்று பல இடங்களில் படித்திருந்ததால் அந்த இடத்தை நோக்கி நடந்தோம். அகண்ட சுத்தமான நடை பாதைகளும், அழகான பூங்காக்களும், ரம்மியமான நாற்சந்திகளுமாக, மத்ரீத் ஒரு நகர சௌந்தர்யம்; ஞாயிறு விடுமுறையுடன் தேர்தல் விழாவும் சேர்ந்துக்கொணடு தெருவெங்கும் கோலாகலமான கொண்டாட்டம். இதமான வானிலையில் களைப்பில்லாமல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் வந்திருக்கும் இடம் இலவாபியஸ் என்று பார்த்தோம்; உடனே, எங்களுடைய இஸ்பானிய சிநேகிதர், தொமாஸ் (இந்தியாவின் தீவிர ரஸிகர்-ஹிந்தியும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் கற்றுக் கொண்டிருக்கிறவர்), இந்த இடத்தில் இந்திய மளிகைகடை இருக்கிறது என்று சொன்னது ஞாபகம் வந்தது; இவ்வளவு அருகில் வந்துவிடோம், பின்னால் தேவைப்பட்டால் உதவும் என்று, வலப்புறம் தொடர்ந்து செல்லாமல், அந்த கடைக்குப்போக விலகி சற்றே இடப்புறம் திசை திருப்பினோம். 

அங்கு எகிப்து, மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பலவித பொருட்கள் விற்கப்படும் என்று கடைகளின் மேல் எழுதியிருந்தது. இப்படியாக பராக்கு பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று "இங்கு தங்குவதற்க்கு இடம் தேடுகிறீர்களா" என்று எங்களை அணுகி ஒருவன் ஹிந்தியில் கேட்டான்; இங்கேயா, நாங்களா, செத்தாலும் இருக்கமாட்டோம் என்று மனதில் உறுமினோம் (நடந்ததோ வேறு). ஒருவாறு, இந்திய மளிகைகடையைத் தேடி பிடித்தோம்; ஆனால், அது பூட்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதான் காரணமோ, இஸ்பானிய நடுப்பகல் அயர்ச்சிக்காக (ஸியஸ்தா) மூடியிருந்ததோ, தெரியவில்லை. 

இவர்களுடைய செல்வச் செழிப்பில் ஏழ்மையின் அர்த்தமே வேறு என்றாலும் 'ஒரு மாதிரியான குப்பத்திற்கு' வந்திருக்கிறோம் என்று புரியாமல் இல்லை; இடுப்பு பாக்கெட்டிலிருந்து பர்ஸை கோட்டின் உள்பாக்கெட்டிற்கு மாற்றம் செய்தார் என் கணவர். தெருவில் கணிசமாக ஆப்பிரிக்கர்களும், அரேபியர்களும் காணப்பட்டார்கள். ம்த்ரீதின் நடுப்பகுதி என்று அழைக்கப்படும் 'பரிதிவாசலை' (Puerta del Sol) நோக்கி நடை போட்டோம். கல் பதித்த பாதைகளும், மேலும்- கீழுமாகவும், வளைவு-நெளிவாகவும் செல்லும் குறுகிய சந்துகளும் ஒருவித கவர்ச்சியை அளித்தன. சில நிமிடங்களில், ஜனரஞ்சகமான சந்தியை அடையலாம் என்ற கணிப்பில் போக்குவரத்து இருந்த ஒரு குறுகிய பாதையில் நுழைந்தோம்; வலது நடைபாதையை ஒட்டி நடக்க நடக்க, குட்டிச்சுவரும் கூடவே வந்தது; அவ்வப்போது மதிலில் இடைவெளி; உள்ளே சென்றால் ஒரு திறந்தவெளி; மூன்று பக்கங்களிலும் நான்கைந்து மாடி உள்ள கட்டிடங்கள். 

இந்த மாதிரி ஒரு இடைவெளிக்குள் சென்று நான், "இதுதான் மத்ரீதின் குடிசை வாரியமோ" என்ற எண்ணத்துடன் தொடர்ந்தேன். பாதையின் இடது சாரியில் கட்டிடங்களும், பொட்டல் வெளியுமாக இருக்க, அங்கங்கே சில இளைஞர்கள் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருந்தார்கள். ஸெனகல் நாட்டிலிருந்து குடியேறியவர்கள் இவர்கள் என்று பிறகு தெரியவந்தது.

அப்போது, தீடீரென பூனைபோல் பின் பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து, யாரோ என் கழுத்தை நெறுக்கி, இடைவெளிக்குள் இழுத்துச் செல்லத் தள்ளினார்கள்; அதிர்ச்சி வயிற்றைக் கவ்வ, பகற்கொள்ளை என்று உணர்ந்தேன்; என் கண்வர் எங்கே என்று தேடவும், உட்கார்ந்திருந்த இளைஞர்கள் கவனத்தை இழுக்கவும் இடபக்கம் தலையைத் திருப்பி சப்தம் எழுப்ப முயற்ச்சித்தேன்; ஆனால், அதற்குள் பிடியை அழுத்தி வாயை மூட, நான் நினைவிழந்தேன். அதற்குமுன் என்னைத் தாக்கியவன் உயரமான ஒரு கறுப்பன் என்பதைப் பார்க்க முடிந்தது.

நினைவு வந்து எழ முயற்சித்தபோது வலது கால் ஆடிற்று; எங்கு இருக்கிறேன் என்று புரிவதற்குள் சில நொடிகள் ஓடிவிட்டன; தரையில் படுத்திருப்பதை உணர்ந்து சிவுக்கென்றெழுந்தபோது என் அகத்துகாரர், சற்று தள்ளி நின்றுகொண்டு பேச முயன்று கொண்டிருந்தார்; "நாம் உயிருடன் இருக்கிறோம்" என்றார். அவர் சொன்னதிலிருந்து, இன்னொருவன் அவருடைய குரல்வளையை அமுக்கி கீழே முகம் படும்படி வேகமாகத் தள்ளியிருக்கிறான்; அப்போது அவர் "என் துணிபையில் வெறும் குடிதண்ணீரும், மேப்பும்தான் இருக்கின்றன" என்று சொல்லிக்கொண்டே நினைவிழந்திருக்கிறார். வெற்றுபோக்காக அமர்ந்திருந்த இளைஞர்கள், எல்லாவற்றையும் ஒருவித உண்ர்ச்சியும் காட்டாமல், பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நினைவு திரும்பி சுதாரித்துக் கொண்டபோது, எங்கிருந்தோ மூன்று பேர்கள் எங்களைச் சுற்றியிருந்தார்கள்; சில நாய்கள் கத்த ஆரம்பித்தன, எல்லாம் முடிந்தபிறகு (போலீஸ் நாய்களோ)! இந்த மனிதர்கள் திடீரென்று எங்கிருந்து முளைத்தார்கள், யார் இவர்கள் என்றெல்லாம் ச்ந்தேகம் ஏற்பட்டது. சற்றே உள்ளுக்குள் நின்று கொண்டிருந்த ஒரு நடுவயது மாது ஏதோ விளக்க முயற்சித்தாள்; எங்களுக்குப் புரியவில்லை; வயதான மற்றொருத்தி, சமாதானப்படுத்த முடியாமல் விசும்பலுக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்தாள்; இவளுக்கும் இந்தமாதிரி அநுபவம் ஏற்பட்டதோ என்று கேட்க முடியாமல் மொழி குறுக்கிட்டது. மூன்றாவதாக, சிறிது தள்ளி தெருவில் நின்று கொண்டிருந்த இஸ்பானிய இளைஞ்ன் சுமாராக ஆங்கிலம் பேசினான்; உடனே, தன் மொபைலில் போலிஸைக் கூப்பிட்டான். 

நாங்கள் கீழே விழுந்திருப்பதையும், அதே சமயத்தில் ஒருவன் (மொராகன் என்பது இவன் யூகம்) ஒரு பையுடன் ஓடிபோனதையும் யதேச்சையாகப் பார்த்ததாகச் சொன்னான். போலிஸ் வண்டி வருவதற்கு ஒரு யுகமானதுபோல் இருந்தது; ஆனால், பத்து நிமிடங்களில் வந்திருக்கும் என்று வையுங்களேன். அதற்குள், முரடர்கள் வீட்டிற்கு நிதானமாகப்போய் தூங்கியிருந்திருப்பார்கள். பார்த்துக் கொண்டிருந்த ஸெனகல் இளைஞர்களைச் சாட்சியாகக் கேள்விகள் கேட்கும்படி எவ்வளவு சொல்லியும் காதில் போட்டுக் கொள்ளவில்லை; எனக்கு தெரிந்தளவு என்ன நடந்தது என்பதைச் சொன்ன போதும் கண்டுக்கொள்ளவில்லை. நாம் இருப்பது மத்ரீதா பீஹாரா என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது. 

வண்டியில் எங்களை உட்காரச்சொல்லி, போலிஸ் தான்தோன்றித்தனமாக அங்குள்ள தெருக்களைச் சுற்றிவந்து, குற்றவாளியைப் பார்த்தால் அடையாளம் காட்டமுடியுமா என்று எங்களைக் கேட்டார்கள் (ஆரத்தியுடன் வரவேற்கக் காத்துக்கொண்டிருக்கிறார்களோ!). காவல் நிலையத்தில் நடந்ததை விவரித்தால் திரைப்படங்களில் அவர்களைப் பரிகசிப்பது மிகையே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். எங்களுக்கு மிகவும் உதவிய இளைஞன், எங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்தான். அந்த இடத்தில் எங்களை முதலில் சந்தித்தது ஒரு மொழிபெயர்ப்பாளர்; அவரிடம், இந்த இளைஞனின் வாக்குமூலம் வாங்கிக் கொள்ளும்படி நாங்கள் கேட்டுக் கொண்டதை மறுத்ததுமில்லாமல், அவனை உடனே வெளியில் அனுப்பிவிட்டார் (இந்த உபத்திரவம் நமக்கெதற்க்கு எண்று கருதினார் போல்)! 

பிறகு, மாற்றி-மாற்றி எங்களை இந்தத் தோரணையில் விசாரித்தார்:

பாஸ்போர்ட், கார்ட் ஏதாவது தொலைந்ததா?

ஒன்றுமில்லை; என் வாலட் என் கோட்டுபாக்கெட்டுக்குள் இருந்தது; அதை அவர்கள் எடுக்கவில்லை.

எவ்வளவு கிரடிட் கார்ட்கள் தொலைந்தது?

ஒன்றும் தொலையவில்லை என்றுதான் சொன்னேனே.

நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?

ஹ¥வான் ப்ராவோ அபார்ட்மெண்டில்.

விலாசம் இருக்கிறதா?

இருக்கிறது.

டெலிபோன் நம்பர் என்னா?

இங்கு இப்போது இல்லை; ஆனால் கண்டுபிடிக்கலாம்.

எப்படி கண்டுபிடிக்கமுடியும்?

உங்களிடம் இன்டர்நெட் இருக்குமே....

இங்கு அதெல்லாம் கிடையாது. உங்கள் கைப்பையில் என்ன இருந்தது?

பணத்துடன் ஒரு பர்ஸ் இருந்தது.

அந்த பர்ஸ் எவ்வளவு பெரியது?

(சைகையால் காண்பித்தேன்.)

உங்கள் அம்மாவின் முதல் பெயர் என்ன?

சிவகாமி.

உங்கள் பெற்றோர்கள் உயிருடன் இருக்கிறார்களா?

ஒருவரும் உயிருடனில்லை.

உங்கள் அம்மாவின் பெயர் என்ன?

இப்போதுதானே சொன்னேன்...

உங்களைத் தாக்கிய இடத்தின் விலாசம் என்ன?

எங்களை இங்கு அழைத்து வந்தவர்களைக் கேட்கலாமே....

உங்களை என்று தாக்கினார்கள்? 

உங்கள் வண்டி இப்போதுதானே எங்களைக் கொண்டுவந்தது....

இந்த ரீதியிலேயே மேலும் கேள்விகள் கேட்டு முடிந்தபிறகு, 'மரியாதைக்குரிய' போலிஸ் அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். மொழிபெயர்ப்பாளர்க்கு விஷயத்தைப் பதிவு செய்ய அதிகாரம் இல்லையா? எங்களுடைய வாக்குமூலத்தை கம்ப்யூட்டரில் செலுத்திக் கையெழுத்திட எங்களிடம் கொடுத்தார்கள்; என் பெயரே தப்பாக எழுதப்பட்டிருந்தது; தவறுகளைத் திருத்தி கையெழுத்துப் போட்டு முடித்தோம். இதற்குள், காவல் நிலையம் வந்து இரண்டுமணி நேரமாகிவிட்டது; 'டாய்லட்' எங்கே என்ற கேள்விக்கு 'இங்கு அதெல்லாம் கிடையாது' என்ற பதில் கிடைத்தது; அது இப்போதே எங்களுக்குத் தேவை என்று வற்புறுத்திய பிறகு, எங்கிருந்தோ கிடைத்தது! ஆனால் சாவியைத் தேட வேண்டியிருந்தது!

அன்று வீடு திரும்பியபோது, மாலை ஆறு மணி; கால் வீங்கி, தொண்டை ரணமாகி, மனசு தளர்ந்திருந்தாலும் காவல் நிலையத்தில் நடந்த இலவச நாடகத்தை நினைத்து சிரிப்பும் வந்தது! இந்த வருடம், ஐன்ஸ்டைனின் பிறந்தநாள் இப்படியாகக் கொண்டாடினோம். 

- அனுராதா

Pin It