இன்றைய வாழ்வியல் நெருக்கடிகளுக்கிடையில் ‘நான் இருப்பதா? அல்லது இறப்பதா?’ என்ற கேள்வி உள் மனதில் எழும்போதெல்லாம் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் வாழ்வு தரும் வக்கிரங்களையும், வன்மங்களையும் தின்றாவது வாழ்ந்து காட்டு என்று மனிதத்தை உசுப்பி வாழ்வின் ருசியை எழுத்துக்கள் மூலம் உணர வைத்த ஷேக்ஸ்பியரை உலகம் மறந்துவிட முடியாது.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையைப் பற்றி நம்பத்தகுந்த மாதிரியான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை. இருந்தும் ஏப்ரல் 23-ம் தேதி 1564-ல் வார்விக்ஷையர் என்ற மாகாணத்தில் ஸ்டாட்போர்டு ஆன் அவான் என்ற இடத்தில் பிறந்ததாக வரலாற்று தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. இவரின் தந்தை ஜான் ஷேக்ஸ்பியர், தாயார் ஆங்லோசேக்சன்-நார்மன் வம்சாவழியினைச் சேர்ந்தவர் ஆவார்கள். இவர் 1531-ல் ஸ்டார்ட்போர்டு நகரில் பிழைப்பிற்காக சோளம், கோதுமை, தோல் மற்றும் விவசாயத் தொழிலில் தழைத்தோங்கினார். ஷேக்ஸ்பியர் நாடக உலகத்தின் தந்தையாக வர்ணிக்கப்பட்டாலும் இவரது பெற்றோர் படிப்பறிவு இல்லாமலே இருந்திருக்கின்றனர். ஸ்டார்ட்போர்டில் இலக்கணப் பள்ளியில் படித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் லத்தீனையும் கிரேக்கமும் அறிந்தவாராக திகழ்ந்தார்.

William Shakespeare

ஷேக்ஸ்பியரின் குடும்பம் பொருளாதாரத்தில் செழித்து இருந்த போதிலும் பின்னர் கடன் சுமையில் வாடியது. இதன் விளைவாக ஷேக்ஸ்பியர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பத்தின் பிழைப்பிற்காக பள்ளியில் ஆசிரியராகவும், சட்ட வல்லுநரிடம் எழுத்தராகவும் பணி செய்திருக்கிறார். 1582-ல் தன்னைவிட எட்டு வயது அதிகமான மேரி ஆன் ஹேத்தவே-யை திருமணம் செய்து கொண்டார். 1587-ல் லண்டனுக்கு வந்த வில்லியம் ஷேக்ஸ்பியர் ஸ்டார்ட்போர்டின் தாமஸ் பூங்காவில் மான்குட்டியைத் திருடி அதனைத் தொடர்ந்து வருகின்ற விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக லண்டன் வந்த ஷேக்ஸ்பியர் பர்பேஜ் கம்பெனியில் நாடக நடிகனாக , எழுத்தானாக, கவிஞனாக தன்னை இணைத்து வலம் வந்திருக்கிறார்.

கீரிஸ், இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள இலக்கியத்தின் அம்சங்களை தனது தனி உத்தியுடன் நாடக உலகத்தைத் தனது வரிகளால் கட்டிப் போட்டவர். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், செல்வந்தர்கள் முதல் சாமானியர்கள் வரை அப்போது நாடகம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த 17-ம் நுhற்றாண்டு அது. குதிரை லாயத்தில் வேலை கிடைத்த போதிலும், ஷேக்ஸ்பியரின் இதயம் சமூகத்தின் கருப்பு வெள்ளைப் பிரச்சனைகளைப் பற்றியே சதா அசைப்போட்டுக் கொண்டிருந்தது. எப்படி ஒரு நிகழ்வு, சந்தர்ப்பம், சூழல் மற்றும் சந்திப்பு வாழ்வின் போக்குகளை புரட்டிப் போடுவது இயல்பானதோ, அதைப்போலத்தான் அது வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்விலும் நிகழ்ந்தது. இங்கிலாந்து நாட்டின் இராணியாக வலம் வந்த எலிசபெத்தின் வீச்சில் ஷேக்ஸ்பியர் வாழ்க்கை குதிரை லாயத்திலிருந்து கோபுரம் ஏறத் தொடங்கியது. காதல், வஞ்சகம், துரோகம் போன்ற வாழ்வின் அடிப்படைச் சிக்கல்களை வள்ளுவனுக்கு நிகராக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

நூற்று ஐம்பத்து நான்கு பாடல்களை எழுதிய ஷேக்ஸ்பியர் மேரி பிட்டன், சவுத்தாம்டன்பிரபு, சவுத்தாம்டன்பெம்புரோக் ஆகியவர்களுடனான உறவினைப் போற்றும் விதமாக இருப்பதாக இலக்கிய தரவுகள் கூறுகின்றன. நாடகங்களின் நுட்பங்களை தாமஸ் கிட், கிரிஸ்டோபர் மார்லோ-வின் படைப்புகளில் இருந்து வில்லியம் ஷேக்ஸ்பியர் பெற்றிருக்கிறார் என்றும் சமகாலத்திலும் அதற்கு பின்பும் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒட்டுமொத்த மானுடமே மரித்தாலும் அவன் ஒருவன் மட்டும் உயிரோடிருந்தால் இந்த உலகம் மீண்டும் தழைத்தோங்கும் என இங்கிலாந்து மக்கள் அனைவரும் ஒற்றைக் குரலில் சொல்ல வைத்ததின் மகத்துவம் ஷேக்ஸ்பியர் எழுத்தில் மிளிர்ந்தது. ஷேக்ஸ்பியர் எழுத்தில் மிளிர்ந்த ஒத்தல்லோ என்னும் நாடகத்தில் இயாகோ என்னும் கதாபாத்திரம் என்றென்றும் அசைபோடும் வில்லத்தனம் தனி பாங்கு உடையது. பாத்திரப்படைப்பில் ஷேக்ஸ்பியரின் கைவண்ணம், உளவியல், மதம், மனிதம் காதல் ஆகிய அடிப்படைக் கூறுகள் நற்றாளமிடும் என்பதிற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஜீலியட் சீசர்-இல் நயவஞ்சகம், பொறாமையின் உச்சத்தில் அழிந்துபோன புரூட்டஸ் மேகபத்-இல் கணவன் நாடாளும் அரசனாக வேண்டும் என்ற பேராசையில் வீழ்ந்துபோன லேடி மேக்பத், ஹேம்லட்-இல் அண்ணன் இறந்தவுடன் அவனை புதைத்த கைகளோடு அண்ணனின் மனைவி ஜெர்டியூட்ஐ மணந்து கொண்ட கிளாடியஸ், அந்தப் புயல்-இல் அண்ணன் பிராஸ்பரோவையும் அண்ணன் மகள் மிராண்டாவையும் நாடுகடத்திய அண்டானியாவையும் வெனிஸ் நகர வியபாரி இல் ஒட்டு மொத்த கிருத்துவர்களை வெறுப்பது மட்டுமல்லாது கடனுக்கு கடும் வட்டி வசூல் செய்யும் ஷைலக் மற்றும் இதர வில்லன்களான ஏஞ்சலோ, ஆரோன், ரீகன், டாமோரா எனப் பல வில்லன் கதாபாத்திரங்களை ஷேக்ஸ்பியர் ஆளுமை செய்திருந்தாலும் ஒத்தல்லோ நாடகத்தின் இயாகோ என்ற வில்லன் மட்டும் ஷேக்ஸ்பியரின் புதிய வார்ப்பு. அடிப்படையில் காவியங்களிலும், நாடகங்களிலும் வில்லன்களுக்கு பொருந்தாதிருக்கும் அறிவும், புத்திக் கூர்மையும் ஷேக்ஸ்பியரின் இயாகோவிற்கு பொருத்தமாய் பொருந்தியிருந்தது. மில்டனின் தொலைந்த சொர்க்கம் என்ற காவியத்தில் மானுடத்தின் வாழ்வை ஒரு சிறிய ஆப்பிளின் உதவியோடு வெகுளியின் மகுடத்திலிருந்து அறிவெனும் பரபரப்பு மாகாணத்திற்குள் அடக்கிவிட்ட சைத்தானை முந்தி சென்றவன் இயாகோ. இரக்கம், அன்பு, கனிவு கருணை என்பது இயாகோவிற்கு எட்டாக்கனி. ஒரு வில்லனின் தனித்துவமான நுட்பத்தினை ஷேக்ஸ்பியர் ராட்சஷ கேமிரா உதவியுடன் படம் பிடித்துக் காட்டும் முனைப்பு தனித்துவமானது.

நீக்ரோ பாரம்பரியத்தைக் கொண்ட ஒத்தெல்லோவின் பார்வையில் இயாகோ எப்பொழுதும் நேர்மையின் சான்றாகவே காட்சியளித்தான். தாழம்பூவில் கருநாகம் ஒளிந்திருந்தும் அதனைப் பார்ப்பவர்களுக்கு பூவின் இதழ்கள் ஆபத்தினை அறிவிக்காமல் சிரித்துக் கொண்டேயிருக்கிறதே அதேபோலத்தான் இயாகோவின் சிரிப்புக்குள் எப்பொழுதும் இறுக்கமான உள்ளீடு. ஆர்மி ஜென்ரலாயிலிருக்கும் ஒத்தெல்லோ தனக்கு அடுத்த நிலையிலிருக்கும் பதவியான ‘லெப்டினன்ட்’ பதவிக்கு இயாகோவை பின்னுக்குத்தள்ளி கேசியோவை நியமித்ததின் காரணமாக பழிவாங்கும் உச்சத்திற்குச் சென்ற இயாகோ மலரினும் மென்மையான ஒத்தெல்லோவின் காதல் மனைவி டெஸ்டிமோனாவிற்கு களங்கம் ஏற்படுத்தி அவளது கணவன் கைகளினாலேயே படுக்கையறையில் வக்கிரமாய் கழுத்தை நெரித்து கொலை செய்ய வைப்பது, இயாகோ ஒத்தெல்லோவிற்கு செய்த துரோக்கத்தின் உச்சமாகும். டெஸ்டிமோனா தன் கணவனான ஒத்தெல்லோவால் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம் வரை, தான் இயாகோவின் வஞ்சகத்தாலேயே இன்னலில் பறிதவித்துக் கொண்டிக்கிறோம் என்று தெரியாமல்தான் மிகவும் வெகுளியாக தனது கணவனுக்கு நெருங்கிய இடத்தில் இருக்கும் தாங்கள் (இயாகோ) என் பிரச்சனைகளுக்கு உதவும்படி மன்றாடுகிறாள்.

நான் என்னவாக தெரிகின்றேனோ அதுவல்ல நான் என்று இயாகோ சொல்லும்போது அக்காலத்தில் குளோப் தியேட்டர் கைத்தட்டல்களில் களேபரமாகியிருந்திருக்கலாம். டெஸ்டிமோனா தன் காதலன் ஒத்தெல்லோவுடன் காதல் மணம் கொண்டதை அவளின் தந்தை பிரபான்ஷியோவைவிட இயாகோவை சற்று அதிகமாகவே காயப்படுத்தியிருந்தது, ஏனெனில் இயாகோ தன் பகையாளியான ஒத்தெல்லோவிற்கு வெள்ளைக்கார பெண் ஒருத்தி வாய்த்திருந்தது ஒருபுறமிருந்தாலும், செல்வமிக்க ரோடரிகோவிற்கு டெஸ்டிமோனாவுடன் கலவி செய்வதற்கு உதவுவதாயிருந்தான். துருக்கியின் படையெடுப்பின்போது அப்படையினரை சிதறியடித்து ஓட வைத்ததின் விளைவாக ஒத்தெல்லோவின் புகழ் மீண்டும் சைப்ரஸ் தீவு மக்களிடம் ஓங்கியிருந்தது. பகைவர்களை பந்தாடத் தெரிந்த ஒத்தெல்லோவிற்கு எப்பொழுதும் இயாகோ என்ற கயவனின் நயவஞ்சகப்பிடியில் நீர்த்துப் போயிருந்தான். சைப்ரஸ் தீவிற்கு கூடுதல் ஆர்மி ஜெனரலாக பொறுப்பெடுத்துக்கொண்ட ஒத்தெல்லோ தன் காதல் மனைவி டெஸ்டிமோனாவிற்கு காவல் பணியை செய்வதற்கு இயாகோவிற்கு கட்டளையிட்டிருந்தான். இதன் மூலமாக இயாகோ ஒத்தெல்லோவிற்கு தான் எவ்வளவு யோக்கியமானவன் என்பதை அவ்வப்பொழுது ஊர்ஜிதம் செய்துகொண்டிருந்தான். அதற்கான சந்தர்ப்பமும் அவனுக்கு எளிதாக வாய்த்திருந்தது. காதல் என்பது இனிப்பைத்தேடும் எறும்பு, இரத்தத்தை அடையத் துடிக்கும் இன்பம் என்பதாக இயாகோ புரிந்து வைத்திருந்தான். ஒத்தெல்லோ – டெஸ்டிமோனா திருமணம் நிலைத்து நிற்காது மாறாக விரைவில் சிதையுமென இயாகோ சிந்தை கொண்டிருந்தான். ஷேக்ஸ்பியரின் நாடக வசனங்களில் மிகவும் செறிவாக பார்க்கப்படுவது ஷேக்ஸ்பியர் பயன்படுத்தும் கதாப்பாத்திரங்கள் தனிமையில் சோகம், காதல், கருணை, இன்பம் மற்றும் அடுத்தத்த திட்டங்களை குறித்துப் பேசும் வசனங்கள் மயிர்க்கூச்செரியச் செய்யும் ஒத்தெல்லோ-இல் இயாகோ தனிமையில் தனது வில்லத்தனத்தை பேசி வெள்ளோட்டோமிடுவது வில்லத்தனத்தின் கோரமுகம்.

எப்பொழுதும் பரந்துபட்ட மனப்பான்மையிலிருக்கும் ஒத்தெல்லோவின் சுபாவத்தினை இயாகோ அவ்வப்பொழுது சாதகப்படுத்திக் கொண்டேயிருந்தான். இயாகோ ஆழமாக நேசிப்பது குற்றங்களையும் அவைகள் விளைவிக்கும் கோர விளைவுகளை பற்றி மட்டுமே. குற்றங்களையும் அவைகளை நிறைவேற்றுவது என்பது சதா அவனுக்கு விளையாடுவதைப் போலிருந்ததாக 17-ம் நூற்றாண்டின் இயற்கை கவிஞனான கோல்ரிட்ஜ் குறிப்பிடுகிறார். புத்திக்கூர்மை, தன்னடக்கம், சூழலுக்கு ஏற்ப வெளிப்படும் கூர்மைபுத்தி, இயாகோவிடம் அபரிமிதமாய் இருந்தும் அவன் மனது எப்பொழுதும் அதிகாரத்தை அடையும் போதையில் தள்ளாடிக்கொண்டேயிருந்தது.

நயவஞ்சகம், கபடம், துரோகம் மற்றும் வக்ரங்களின் உச்சநிலையை ஷேக்ஸ்பியர் பிற மூன்று துன்பியல் நாடகங்களான கிங்லியர், மாகபெத், மற்றும் ஹேம்லட்-இல் கதாபாத்திரங்களின் மூலம் களமாடியிருந்தும் இயாகோ என்னும் பாத்திரத்தில் ஷேக்ஸ்பியரின் கை மேலோங்கியிருக்கிறது. வாசிப்பவர்களை நாடகத்தின் இறுதிப் பக்கங்களை நோக்கி நகர்த்தும்போது இயாகோவின் வில்லத்தனம் விஸ்வரூபம் பெறுகிறது, இயாகோவிற்கு கிடைத்திருக்க வேண்டிய பதவியை அலங்கரித்துக் கொண்டிக்கும் கேஸியோவை லெப்டினன்ட் பதவியிலிருந்து அகற்றுவது, மிகவும் சாதுர்யமாக லெப்டினன்டாகயிருக்கும் கேஸியோவை டெஸ்டிமோனாவின் காதலனாக அவளின் ஆசைக் கணவன் ஒத்தெல்லோவை நம்ப வைப்பது என இயாகோவின் அதிர்வெடுத்த மூளை அனைவரையும் நடுங்கச் செய்யும். இயாகோவின் சூழ்ச்சியில் லெப்டினன்ட் பதவியை இழந்த கேஸியோவிற்காக தனது கணவன் ஒத்தெல்லோவிடம் டெஸ்டிமோனா மன்றாடுகையில் இயாகோ ஏற்படுத்தும் காட்சிதிரிபு நயவஞ்சகத்திற்கு மற்றுமொரு சாட்சி.

லெப்டினன்டாக பணி செய்து கொண்டிருந்த கேஸியோவுடன் ஒத்தெல்லாவின் மனைவி டெஸ்டிமோனா கலவியில் ஈடுபட்டிருந்ததாக இயாகோவால் நம்ப வைக்கப்பட்டிருந்தான்.

இந்த நேரத்தில் தன் மனைவி காஸியோவிற்காக தன்னிடம் மன்றாடிக் கொண்டிருக்கும்போது வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையினைப் போல் மனதினுhடே புகைந்து கொண்டிருந்தான். மனைவியின் நடத்தையில் களங்கம் ஏற்பட்டிருப்பதாக கலங்கிவிட்டிருந்த ஒத்தெல்லோ, இயாகோவிடம் அதற்காக ஆதாரம் உள்ளதா எனக் கேட்டதும் இயாகோ முதன்முதலில் சிக்கலில் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆர்மி ஜெனரல் ஒத்தெல்லோவிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானதாய் இருந்ததோ அதைப்போலவேதான் ஒத்தெல்லோ– டெஸ்டிமோனா ஆகிய இருவரின் குடும்ப உறவுக்குள்ளே உருவாக்கியிருக்கும் குழப்பத்திற்கு மீண்டும் ஒரு ஆதாரம் அளிப்பது அவனுக்கு அவசியமாயிருந்தது. கேஸியோவை அவனது துhக்கத்தில் டெஸ்டிமோனாவின் பெயரை உச்சரிக்கச் செய்ய வைத்து, ஒத்தெல்லோவின் குடும்ப பாரம்பரியம் மிக்க கைகுட்டையை இயாகோ தனது மனைவி எமிலியாவால் எடுத்து வரச்செய்து அதனை கேஸியோவின் கைகளிலிருப்பதை இயாகோ ஒத்தெல்லோவை பார்க்க வைப்பதன் மூலம் தன் சாதுர்யத்தை நிலை நிறுத்திக் கொண்டான்.

கேஸியோவயும், டெஸ்டிமோனாவையும் ஒத்தெல்லோ நேரிடையாக விசாரித்திருந்தால் ஒருவேளை அங்கே இயாகோவின் மரணம் உறுதியாயிருந்திருக்கும். மாறாக, இயாகோ அதீத விசுவாசியாக ஒத்தெல்லோவின் மனத்திற்குப் பட்டதால் அவன் தான் அடைய நினைத்த பதவியான லெப்டினன்ட் சிம்மாசனத்தை அவனுக்கு அளித்ததோடு, நிஜத்தின் வெளிச்த்தில் குருடனாயிருந்த ஒத்தெல்லோ சந்தேகத்தின் கோரப்பிடியில் ஆட்பட்டிருந்த நிலையில் மனைவியைக் கொன்ற மறுநிமிடம் இருளில் கண்ட வெளிச்சமாய் உண்மையை உணர்ந்ததின் விளைவாக இயாகோவையும் இறுதியாய் கொன்றான். வக்கிரமும் துரோகமும் கலந்த வயல் வெளியில் வாழ்க்கைக்கான ஆலங்களை நட்ட மகா கலைஞன் ஷேக்ஸ்பியர்.

நிற்கும் போதும் நடக்கும் போதும், உறங்கும் போது கூட இப்படித்தான் வாழ்க்கை என்று அறத்தின் அதிர்வை தனக்கு கீழ் எப்போதும் சொற்களற்று இன்றளவும் நம் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது என்றால் நானூறு வருடத்திற்கு முன்பே மனித வக்கிரங்களை நேர் நிறுத்தி வாழ்வியல் அறந்தை விதைத்து விட்டு போய் இருக்கிறார் ஷேக்ஸ்பியர் என்று தான் சொல்ல வேண்டும்.

- வசுமதி மூர்த்தி

Pin It