நாடே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. படித்து முடித்துக் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் தெருத் தெருவாக சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். சாமானிய மக்கள் விலைவாசி உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல தேசிய முதலாளிகளோ தொழிலை நடத்த முடியாமல் தங்களுடைய தொழிற்சாலையை மூடியும், வெளிநாட்டு தொழிற்நிறுவனங்களுக்கு விற்றுவிட்டும் ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள். நாடு முழுவதும் ஒரு அமைதியற்ற சூழ்நிலை நிலவுகின்றது. ஒரு பக்கம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய தரகு முதலாளிகளுக்கும் ஏற்ற பொருளாதார கொள்கைகளைத் தீவிரமாக ஆளும் வர்க்கம் கடைபிடிப்பதால் ஏற்படும் பொருளாதார சுமையாலும், மற்றொரு பக்கம் காவி பயங்கரவாதிகளின் மதவெறி பிடித்த பேச்சுக்களாலும் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

modi yogaஇனி எதிர்காலமே கிடையாது என்று பெரும்பாலான இந்திய மக்கள் தமக்குள் குமுறிக் கொண்டு இருக்கின்றார்கள். எப்போது வாய்ப்பு கிடைக்கும் இந்தப் பார்ப்பன பயங்கரவாதக் கும்பலை தூக்கி எறிவதற்கு என்று அவர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் மோடியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைவரையும் ‘ஓம் குண்டலினி’, ‘ஒம் குண்டலினி’ என்று ஏதோ யோகா செய்யச் சொல்கின்றார். யோகா செய்தால் எல்லாம் கிடைத்துவிடுமாம். மன அமைதி, ஆரோக்கியம், என அனைத்தும் கிடைத்துவிடுமாம். அதானால் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என யோகா குரு மோடி அவர்கள் கூறியிருக்கின்றார்.

யோகா செய்தால் மன அமைதி, ஆரோக்கியம் எல்லாம் கிடைக்குமா என்பதல்ல நமது பிரச்சினை. யோகா செய்தால் சோறு கிடைக்குமா என்பதுதான் நமது பிரச்சினை. இந்தியாவில் பட்டினியால் தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். 19.4 கோடி மக்கள் இந்தியாவில் பட்டினிசாவை எதிர்நோக்கி காத்திருப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் சுகாதார சீர்கேட்டாலும், போதிய ஊட்டச்சத்து இன்மையாலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறந்து போகின்றார்கள். இவர்கள் எல்லாம் யோகா தெரியாததால்தான் இறந்து போகின்றார்கள்!. எனவே இவர்களுக்கு பாபா ராம்தேவ், நித்தியானந்தா போன்றவர்களை கொண்டு சரியான படிக்குப் பயிற்சி அளித்தால் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவிடலாம்.

ஆளும் வார்க்கத்தின் மக்கள் மீதான குரூர பார்வையின் வெளிப்பாடே இந்த யோகா என்பது. தின்று கொழுப்பெடுத்துப்போன பன்றிகளின் உடல் பயிற்சியே இந்த யோகா. இது சாமானிய மக்களுக்கானதல்ல. நல்ல மனநிலையில் உள்ள யாரும் இந்தக் கருமத்தை எப்போதும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உலக மக்கள் தொகையில் 160 கோடி பேர் வறுமையால் துடித்துக் கொண்டு இருக்கும் போது, மக்கள் உள்நாட்டு கலவரங்களால் நாடுவிட்டு நாடு அகதிகளாக ஓடிக்கொண்டு இருக்கும் போது உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி ‘ஓம்’ சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வதா? இல்லை ஏமாற்றுப் பேர்வழி என்று சொல்வதா?

இதிலே கொடுமை என்னவென்றால் முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சில ‘வெங்காயங்களும்’ இதை ஆதரிப்பதுதான். அதிலே இருக்கும் ஆன்மீகத்தை நீக்கிவிட்டால் அது ஒரு அறிவியலாம். அது என்ன கருமம் பிடித்த அறிவியல் என்று நமக்குத் தெரியவில்லை. சுற்றியும் பற்றியெறியும் போது என்னால் மனதை ஒருமுகப்படுத்தி உட்கார முடிகின்றது என்று சொன்னால் நிச்சயம் அவன் சொரணை கெட்ட பயலாகவே இருப்பான். அவனுக்குள் இருக்கும் பிழைப்புவாதிதான் அவனை எல்லாவற்றையும் மறந்து குண்டலினிக்குள் தஞ்சம் அடைய சொல்கின்றது.

யோகா கற்றுக் கொடுப்பதாக சொல்பவனின் யோக்கியதையும், கற்றுக் கொள்வதாக சொல்பவனின் யோக்கியதையும் பார்த்தாலே இது எவ்வளவு பெரிய மோசடி என்று நாம் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்குக் ‘கதவை திற காற்றுவரட்டும்’ என்று சொன்ன நித்தியானாந்தா தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வந்த பல பெண்களை எப்படி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்று நாம் அனைவரும் சில வருடங்களுக்கு முன் பார்த்தோம். அதே போல அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியா யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா சொல்லிக் கொடுத்து வந்த இந்தியரான யோகா குரு பிக்ரம் சவுத்ரி என்பவன் தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வந்த பல அமெரிக்கப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் அந்த ஆன்மீக குருவின்மீது அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்குத் தொடரப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.

இதுதான் யோகாவின் யோக்கியதை. பெரும்பாலும் யோகாவை கற்றுக் கொடுப்பதாய் சொல்லும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அயோக்கியர்களாய் இருப்பதைப் பார்க்கின்றோம். இந்த உலகத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் உங்களை விடுவிப்பதாய் கூறிக்கொண்டு புறப்பட்ட அனைத்து ஆன்மீகவாதிகளும் கடைசியில் பார்ப்பனியத்தின் பாதாரவிந்தங்களை நக்கியே தனது ஆன்மீகத்தின் இறுதி பொருளை மக்களுக்கு சொன்னார்கள். யோகா செய்தால் நிண்ட ஆயுளை பெறலாம் என்று சொல்லி மக்களை நம்பவைத்துப் பெரும் பேரும் புகழும் பெற்ற ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாயிபாபா, அரவிந்தர், ரமண மகரிசி, சுவாமி சிவானந்தா, ரஜனீசு போன்ற அனைவரும் கடைசியில் மண்டையை போட்டதுதான் யோகாவின் வரலாறு. மரணமற்ற வாழ்வை பற்றி பிதற்றியவன் பல பேர் இந்த உலகத்தில் அதை மெய்பிப்பதற்கு இன்று உயிரோடு இல்லை.

யோகா செய்தால் கிடைப்பதாய் சொல்லப்பட்ட 64 சிறு சித்திகளையும், 8 சிறப்பு சித்திகளையும் அதாவது அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், இசித்துவம், வசித்துவம் போன்றவற்றை எந்த ஒரு காவிவேட்டி கட்டிய கம்மனாட்டியும் உண்மையில் நிரூபித்ததாக நமக்குத் தெரியவில்லை. எப்படி புஷ்யமித்திர சுங்கன் பெளத்தத்தை அழித்து பார்ப்பனியத்தை நிலைநாட்ட மனுதர்மத்தை பரப்பினானோ அதே போல நவீன கால புஷ்யமித்திரனான மோடி யோகாவை பரப்பி பார்ப்பனியத்தை நிலைநாட்டப் பார்க்கின்றார். அதற்காக தனது காவி பரிவாரங்கள் அனைத்தையும் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார். இவர்களின் முதன்மையான வேலை பார்ப்பனியம் கொடுத்த அதாவது மனு கொடுத்த வேலை திட்டத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிலைநாட்டுவதுதான்.

யோகா செய்வதால் மனமும் , உடலும் ஆரோக்கியமாகின்றதாக சொல்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் யோகா செய்யும் பல பேர் இந்த சமூகத்தில் இருந்து தன்னை அன்னியப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளாகவும், பிழைப்புவாதிகளாகவும் இருப்பதைத்தான் நாம் பார்க்கின்றோம். அதுமட்டும் அல்லாமல் பாலியல் வக்கிரம் பிடித்த நபர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்து நபர் ஒருவர் ஈசா யோகா மையத்தின் நீண்ட நாள் வாடிக்கையாளர். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது தான் யோகா கற்றுக் கொள்ள வரும் பல பெண்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததாக என்னிடம் கூறினார். அதற்கான காரணமாக அவர் கூறியது பெரும்பாலும் யோகா வகுப்புக்கு பெண்கள் குறைவாகத்தான் வருவார்கள். குடும்பத்தில் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவற்றால் வரும் பெண்களிடம் பேச்சுகொடுத்து அவர்களின் பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலாக பேசும்போதும் நம்மேல் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விடுகின்றது. அந்த நம்பிக்கையைப் பாலியல் ரீதியாக தான் பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். நித்தியானந்தாவில் இருந்து பிக்ரம் சவுத்ரி வரை இப்படித்தான் பெண்களை ஏமாற்றினார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே யோகா கற்றுக் கொள்வதாக சொல்லும் பெண்கள் யோகா குருவிடம் இருந்து மட்டும் அல்ல அவர்களின் சீடர்களிடம் இருந்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பின்பு அந்த நபரின் தொடர்பை நான் முற்றிலுமாகவே துண்டித்துவிட்டேன்.

இப்படி சமூக பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இந்த யோகா பயன்படுகின்றது. அதனால் தான் அதைப் பல்வேறு நாடுகள் தற்போது ஏற்றுக் கொண்டிருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலும், அமெரிக்காவிலும் தற்போது நடந்துவரும் கடுமையான மக்கள் போராட்டங்களை ஒடுக்க இது ஒரு கருத்தியல் ஆயுதமாக பயன்படப் போகின்றது. இதை கருத்தில் கொண்டுதான் ஐ.நா ஜூன் 21 ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்து இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கும் ‘முற்றும் துறந்த’ முனிவர்களான இந்திய கார்ப்ரேட் யோகா குருக்களின் சேவை இனி உலகம் பூராவும் தேவைப்பட போகின்றது. சுயநலவாதிகளையும், அற்பவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் பாலியல் வக்கிரம் பிடித்தவர்களையும் உலகம் நாடுகள் அனைத்திலும் இவர்கள் உற்பத்தி செய்யப் போகின்றார்கள். ஆபாசம் நிறைந்த பார்ப்பனியத்துக்கு ஒரு உலகலாவிய அங்கீகாரத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த யோகா பயன்படுத்தப்படப் போகின்றது. உலகிற்கு இந்தியா அளிக்கப் போகும் கொடை இதுதான்!.

- செ.கார்கி

Pin It