Jayalalithaa roasaiah

                1967 க்கு முன்பு தி.மு.க. எதிர்க்கட்சியாய் இருந்த காலத்தில் ஒவ்வொரு மாநாட்டிலும் மாநில சுயாட்சி பற்றி தனித் தீர்மானம் நிறைவேற்றுவது வழக்கமாக இருந்தது.

                “பாதுகாப்பு, தபால் தந்தி, வெளியுறவு, ரூபாய் நோட்டு அச்சடிப்பு ஆகிய நான்கு அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குரியன” – என்ற முழக்கத்தை முன் வைத்தார்கள்.

                “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” என்ற கோஷத்தின் முக்கிய அம்சமாக “டெல்லியிலிருந்து நியமிக்கப்படும் ஆளுனர் என்பவர் மாநில அரசை வேவு பார்க்கும் உளவாளி என்றும், அரசியல் சட்டத்தின்கீழ் எந்த அதிகாரமும் இல்லாத ஆளுனர் என்ற பதவியே தேவையில்லை” என்றும் வலியுறுத்தினார்கள்.

                பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆளுனர் பதவி தேவையற்றது என்ற தீர்மானத்தை முன்மொழியும் போது அவருக்கே உரித்தான உவமை நயத்தோடு “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை” என்று அழகாகச் சொன்னார்.

                ஆட்சியதிகாரம் கைக்கு கிடைத்தபின் திராவிட இயக்கம் பல உயிர்மூச்சான கொள்கைகளையும், லட்சியங்களையும் கை கழுவியதைப் போல 'ஆளுனர் பதவியை நீக்கு' என்ற கோரிக்கையையும் கைவிட்டார்கள். துரதிருஷ்டமாக இடதுசாரிகள் “ஆளுனர் பதவியின் தேவையின்மை” பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை.

                அரசியல் சட்டத்தில் ஆளுனர் பதவிக்கு தேவைப்படும் தகுதி, அதிகாரம், பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. 35 வயது முடிந்த இந்திய குடிமகன், எம்.எல்.ஏ., எம்.பி பதவி வகிக்காத நபர் ஆளுனர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படலாம். கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை.

                டெல்லியிலுள்ள “ஜனநாயகத்துக்கான ஆய்வு மையம்” நடத்திய ஆய்வில் 1952 லிருந்து 2014 வரை நியமிக்கப்பட்ட ஆளுனர்களின் சராசரி வயது 63. ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன் 90% பேர் மத்திய, மாநில அரசின் ஆளுங்கட்சியில் அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்கள். 10% ஆளுனர்கள் மட்டும் முன்னாள் ராணுவ அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள், வெளியுறவுத் துறை செயலாளர்களாக பதவி வகித்தவர்கள் என்று தெரியவருகிறது.

                மேலும் ஒரு கசப்பான உண்மை - பல ஆளுனர்கள் மத்தியில் அல்லது மாநிலங்களில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு மத்திய அமைச்சராகவோ, அல்லது மாநில முதல்வராகவோ மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

                மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மாநில காங்கிரஸ் பிரமுகர் ஷிண்டே, கர்நாடக மாநிலத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, உ.பி. மாநில என்.டி.என் திவாரி என்று இன்னும் பல பலரைச் சொல்லலாம். ஆளுனர் பதவிக்கு மக்களின் பணம் பல கோடிகள் வீண் விரயமாக்கப்படுகிறது. ராஜ்பவன் எனப்படும் ஆளுனர் இல்லம் குறைந்தது 100 ஏக்கர் பரப்பளவில் ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் இருக்கிறது.

                ஆளுனர்தான் மாநிலங்களில் இயங்கிவரும் அனைத்து பல்கலைக்கழகங் களுக்கும் வேந்தர். வேந்தரின் வாரிசுகள் ராஜ்பவனில் தங்கி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர், பேராசிரியர்கள் உட்பட பலரை பதவி நியமனம் செய்வதில் கோடிக்கணக்கில் சொத்து சம்பாதித்த உதாரணம் ஏராளம் .

                காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.என்.திவாரி ஆளுனராக இருந்த போது “பலான பெண்கள்” விஷயத்தில் மாட்டி சந்தி சிரித்ததை நாடறியும். அண்மையில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு ஆளுனராக பதவி வகிக்கும் திருவாளர் நரசிம்மன் மாதம் ஒருமுறை “திருப்பதி ஏழுமலையானை” தரிசிக்க குடும்பத்துடன் வந்து போனதற்கான செலவு பலகோடி என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

                ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் டெல்லியின் துணைநிலை ஆளுனர் நஜிப் ஜங் எதிர்க்கட்சித் தலைவர் போல மத்திய அரசின் ஏஜண்டாக செயல்படுவதை நாடறியும்.

                சாதாரண காலங்களில் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்ற கட்சித் தலைவருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது, மற்ற நேரங்களில் துணிக்கடை, நகைக்கடைகளை திறந்து வைப்பதைத் தவிர இவர்களின் வேலைதான் என்ன? பதவிப்பிரமாண வேலையை அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே செய்யலாம் என்று அரசியல் சட்டம் சொல்கிறது.

                பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து புதிய ஆளுனர்களும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள். அவர்களுக்கு கிடைத்த பம்ப்பர் பரிசு ஆளுனர் பதவி.

                “மக்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை செய்து கொள்ளலாம்” என்று அதை தொகுத்த சட்டமேதை அம்பேத்கரே சொல்லியிருக்கிறார்.

                அனுபவத்தின் அடிப்படையில் எந்த அதிகாரமும் இல்லாத மாநில சட்ட மேலவைகளை தமிழகத்தில் ஒழித்தோம். இன்னும் ராஜஸ்தான், பிகார், உ.பி., ம.பி. என்று ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் இருக்கின்றது. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் எந்த காலத்திலும் சட்ட மேலவை இல்லை.

                ஆகையால் மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாக விழுங்கும், எந்த அதிகாரமும் இல்லாத ஆளுனர் பதவியை அரசியல் சட்டத்திலிருந்தே ஒழித்துவிடுவது காலத்தின் கட்டாயமும், அறிவுடமையுள்ள நடவடிக்கையுமாகும்.

- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

Pin It