கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சென்ற இதழ் தொடர்ச்சி

1997இல் ஊடகங்களில் வெளி வந்த ஊழல்களில் பெரும் ஊழல் ஜெயின் நாட்குறிப்பேட்டு ஊழலாகும். வெளிநாட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்து உள்நாட்டுப் பணத்தை மறைமுகமாக மாற்றி அயல்நாட்டு செலாவணி ஒழங்குமுறைச் சட்டத்தை மீறிய செயல்கள் இந்த நாட்குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. இந்தியாவின் பத்து மூத்த தலைவர்கள் இந்த ஹவாலா மோசடியில் இடம் பெற்றிருந்தனர்.

பிரதமர் நரசிம்மராவ் அவரது மகன் பிரபாகர் ராவ் இந்திரா காந்தியின் தனிச்செயலராக இருந்த தவான், சந்திராசாமி, காங்கிரசு மத்திய அமைச்சராக இருந்த வி.சி. சுக்லா, மாதவராவ் சிந்தியா நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த பல்ராம் ஜாக்கர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நாட்குறிப்பை வைத்துக்கொண்டு வருமானவரி அமலாக்கத் துறைகள் மத்தியப் புலனாய்வுத் துறை பல வழக்குகளைப் போடுவதற்கு ஆயத்த மாயின. பாஜக தலைவர் அத்வானியின் பெயரும் ஜெயின் நாட்குறிப்பில் இடம் பெற்றிருந்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் மெய்ப்பிக்கும் வரையில் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்ற மாட்டேன் என்று கூறிப் பதவி விலகினார் திருவாளர் அத்வானி. பாஜகவின் மூத்தத் தலைவரான  அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமர் நரசிம்மராவின் பெயர் இக்குறிப் பேட்டில் உள்ளதால் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜெயின் நாட்குறிப்பு 1991 மே மாதம் 3ஆம் நாள் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டாலும், ஆவணத்தில் இடம்பெற்ற தலைவர்களின் பெயர்களும் குறிப்புகளும் 1997இல்தான் வெளிவந்தன. 1982-83 ஆண்டுகளில் இத்தாலியில் இயங்கி வந்த  அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெர்னி வழியாகத்தான்  சோனியா காந்தியின் குடும்ப நண்பர் குவோத்ரோச்சியைச் சந்தித்தேன். ரூர்கேலா உருக்காலைக்குத் தேவையான பெரும் கருவிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளித் தொடர்பாக குவோத்ரோச்சியிடம் பேசினேன். அது போன்று  ஜம்மு காஷ்மீரில் நீர்மின் திட்டம் அமைப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாகவும் பேசினேன். இதன் தொடர்பாக சுவீடனில் இருந்து வந்த யுரி என்பவரையும் பென்போர்ன் என்பவரையும் யுடீடீ குழுமங்களின் துணைத்தலைவர் ஆகியோரை அன்றைய ராஜிவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அருண் நேருவும், சிவசங்கரும் அறிமுகப்படுத்தினர். இதில் தொடர்புடையவர்கள் எல்லாம் இந்த ஒப்பந்தங்கள் வழியாக எனக்குப் பல நூறு கோடி வருமானம் வரும் என்று குறிப்பிட்டார்கள் என்று ஜெயின் நாட்குறிப்பில் இடம் பெற்றி ருந்தன.

1991 மார்ச்-மே மாதங்களில் ரூபாய் 4 கோடியை நான் ராஜிவ் காந்தியிடம் அளித்தேன். இந்தப் பணத்தை ஜெயலலிதாவிற்கு கொடுக்கப் போகிறேன் என்று ராஜிவ்காந்தி தெரிவித்தார் (I have paid Rs.4 crore to Rajiv Gandhi in March and May 1991 because he had demanded the said amount for making payments to Jayalalitha – Jain Dairy). ராஜிவ்காந்தியின் தனிச்செயலராக இருந்த ஜார்ஜிடம் எனது இல்லத்தில் 2 கோடியை அளித்தேன். விசராணையின் போது ஜெயின் இன்னொரு முதன்மையானக் கருத்தை வெளியிட்டார்.

தற்போதைய பிரதமர் மோடியின் ஆதரவோடு பெரும் முதலாளிகளாக வலம் வரும் அம்பானி சகோதரர்களின் தந்தையான திருபாய் அம்பானியைப் போன்று நானும் பெரிய அளவில் வளர வேண்டும் என்று விரும்பினேன். அவர் பெரிய ஒப்பந்தங்களை அரசியல்வாதிகளின் தொடர்போடு அவர்களுக்கு ஊழல் பணத்தில் பங்கு அளித்து பெரும் பணக்காரராக ஆனார் என்பது எனக்குத் தெரியும்.

அவர் வழியைப் பின்பற்றித்தான் உயர் பதவியில் இருந்த அதிகாரிகளுக்கு ஊழலின் ஒரு பங்கை அளித்தேன். இவை எல்லாம் 1987இல் தொடங்கி 1991 வரை தொடர்ந்தது. ஒரு முறை நரசிம்மராவ் என்னிடம் தனியாகப் பேசினார். மத்திய அமைச்சர் சதிஷ் சர்மாவிற்கு 50 இலட்சமும் தனக்கு 50 இலட்சமும் சாமியார் சந்திராசாமிக்கு 2 கோடியும் அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அன்றைய காங்கிரசுத் தலைவராக இருந்த சீத்தாராம் கேசரிக்கும் 2 கோடி ரூபாய் அளித்தேன் என்று ஜெயின் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் மத்திய புலனாய்வுத் துறையிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் முதன்மையான அரசியல் பிரமுகர்கள் தொடர்புடைய இந்த ஹவாலா ஊழல் இறுதியில் எதிர்பார்த்தது போல, எவ்விதத் தொடர் நடவடிக்கைகள் இன்றிக் கைவிடப் பட்டது. இதைத்தான் மத்திய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர் லால் தனது நூலில் (Who Owns CBI)) விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் ஒன்றிய அரசோடு தொடர்புடையவர்கள் ஊழல் செய்தால் அது பெரும் ஊழலாகக் கருதப்படுவதில்லை. அதே நேரத்தில் மாநில முதல்வர்கள்  செய்கின்ற  ஊழல்கள் பெரிதுப்படுத்துப்பட்டு வருகின்றன. அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு மாநில முதல்வர்களை மிரட்டும் போக்கு இன்றும் தொடர்கிறது. அண்மையில் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கின்ற விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக ஒரு தாளில் 89 கோடி அளவிற்குக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, தொடர் விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தினகரன் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையத்திற்கு தில்லித் தரகர் வழியாக ரூ.60 கோடி கொடுப்பதாக  இருந்தார் என்ற குற்றச்சாட்டும் இப்போது சொல்லப்படுகிறது.  வருமான வரித்துறையும் அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் மாநில முதல்வரையும் ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களையும் அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று ஏற்கெனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் வல்ல-நீக்கமற நிறைந்துள்ளவர்தான் கடவுள் என்று ஆத்திகர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் ஊழல்தான் நீக்கமற எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் நிறைந்துள்ளது என்பது உண்மையாகிறது (Omnipotent and omnipresent).

சான்றாகப் போலி முத்திரைத்தாளினை தயாரித்து 32 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்தது இந்தியாவில் மட்டும்தான் நடந்துள்ளது. போலி முத்திரைத்தாள் 18 மாநிலங் களில் 72 நகரங்களில் 1992 முதல் 2002 வரை பத்தாண்டு களாக  விற்பனை செய்யப்பட்டுள்ளன. அரசு தெரிவித்திருந்த புள்ளிவிவரம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்று, பல வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ஊழலின் பரிமாணத்தைக் கணக்கிட்டால் ஊழல் தொகை இன்னும் பல ஆயிரம் கோடி பெருகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் தலைமையும் அதிகார வர்க்கமும் அதை எப்படிக் கண்டுகொள்ளாமல் பத்தாண்டுகள் விட்டதைப் பற்றிப் பலர் வியப்பைத் தெரிவித்தனர். மகாரா`டிர மாநிலத்தில்தான் இது தொடங்கியது. ஆந்திரா கர்நாடகா மேற்கு வங்கம் தமிழ்நாடு ராஜஸ்தான் உ.பி. ஆகிய மாநிலங்களின் அரசு வருவாய் பெரிதும் வீழ்ந்தது.  இதன் வழியாக மாநில அரசிற்குச் சேர வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனி மனிதர்களிடம் சேர்ந்தது. இக்காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பல சொத்துகள் போலியான முத்திரைத்தாள் வழியாக அந்தந்த மாநிலங்களின் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டாலும் அவைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியாவினுடைய  ரூபாய் தாள்களை  அச்சடிக்கும் நகரான நாசிக் அரசு அச்சகத்தில் உள்ள சில அதிகாரிகளின் துணை யோடுதான் இந்த மோசடி இந்தியா முழுவதும் பரவியது. இதில் பல காவல் உயர் அதிகாரிகளும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த ஊழலில் மகாராஷ்டிர மாநில முதல்வர் சரத்பவார் உட்பட பலரின் தொடர்பு இருந்ததாக, தெல்கி குறிப்பிட்டுள்ளார். தெல்கி பல தொழில் குழுமங்களை உருவாக்கி அதன் வழியாகப் பல அரசியல் தலைவர்களுக்கும் தனது ஊழல் பணத்தில் பங்கினை அளித்தார் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சான்றாக தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரசுக் கட்சி போன்ற கட்சிகளின் தலைவர்களோடு பல மணி நேரம் தொலைபேசியில் தெல்கி பேசியது வெளிக் கொணரப்பட்டது. இந்தக் குற்ற நடவடிக்கை மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயைத் தடுத்து நிறுத்திய போதும் பல மாநில முதல்வர்கள் கண்டும் காணாமல் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தெல்கிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் 2006இல் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. ஆயிரம் கோடி தண்டமும் அளிக்கப்பட்டது. இந்தத் தண்டத் தொகையைப் பெறுவதற்காக தெல்கியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1999இல் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது  கார்கில் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்துடன் இந்திய இராணுவம் சண்டையிட்டது. அப்போது பல இந்திய வீரர்கள் இறந்தனர். சவப்பெட்டி வாங்குவதில் 1.16 கோடி அளவிற்கு  அரசிற்கு இழப்பு ஏற்பட்டது. என இந்தியத் தலைமை கணக்காயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். இது தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை 2002இல் ஆய்வு செய்தது. இந்திய இராணுவ அதிகாரிகளான அருண் ராயி மாலிக், எப்.சி.சிங் ஆகியோர் மீதும் சவப்பெட்டி வழங்கிய அமெரிக்க நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இதே போல மராட்டிய மாநிலத்தில் ஆதர்` கூட்டுறவுச் சங்க ஊழலில் பல உயர் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். இராணுவத்தில் பணிபுரிந்த வர்களுக்கு அலுவலகங்கள் கட்டுவதற்கும் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தில் இந்த உயர் அதிகாரிகளும் மராட்டிய அரசும் இணைந்து ஊழலைச் செய்தனர்.

மேற்கு வங்கத்திலும் சுகுணா நில ஊழலில் இராணுவ அதிகாரிகளான அவதேஷ் பிரகாஷ் பி.கே.ராத் ஆகியோர் சிக்கினர். 72 ஏக்கர் இராணுவ நிலத்தைத் தனியார் கட்டிட ஒப்பந்தக்காரர்களிடம் கல்விக்காக ஒதுக்கியதாகக்  கூறி இந்த ஊழலைச் செய்தனர்.  காஷ்மீரில் 100 ஏக்கர் நிலத்தை அதிலும் குறிப்பாக ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகே தனியார் நிறுவனங்கள் விற்பது பற்றிப் புகார் வந்தது. ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை யிடம் விசாரணைக்கு அளித்தது. மத்தியப் புலனாய்வுத் துறை இத்திட்டத்தில் ஊழல் இருப்பதால் இதனை ரத்துச் செய்யும்படி கேட்டுக்கொண்டது.

புனே நகரில் தம்புராஜ் எஸ்.ஆர். நய்யார் ஆகிய இராணுவ அதிகாரிகள்  46 கோடி நிலத்தைத்  தனியார் இலாபம் பெறும்படி மாற்றினர். இது போன்று எண்ணற்ற ஊழல்களைத் தரைப் படை கப்பல்படை விமானப் படை அதிகாரிகள் செய்துள்ளார்கள். இந்த நில ஊழலில் 79.66விழுக்காடு இராணுவத்தினரும், 8.72 விழுக்காடு விமானப்படையினரும், 2.13 விழுக்காடு கப்பல் படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டைப் பாதுகாப்பவர்களே இராணுவ நிலங்களில் ஊழல்கள் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது.

மட்டைப்பந்து விளையாட்டில் மிகப்பெரிய ஊழல்களும் மோசடிகளும் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மட்டைப்பந்து விளையாட்டில் ஊழல் முதலில் சூதாட்ட வடிவில் உலக அளவில் தொடங்கியது. இந்த ஊழல் நோய் இந்தியாவில் புதிய பல பரிமாணங்களை எடுத்தது. புகழ்பெற்ற மட்டைப்பந்து ஆட்டக்காரர்கள் அசாருதின் ஜடேஜா, மனோஸ் பிராபாகர் போன்றோர் இந்தச் சூதாட்டப் பந்தயத்தில் பங்கேற்றுப் பல கோடிகளைச் சுருட்டினர். மெல்ல மெல்ல இந்த நோய் மட்டைப்பந்து விளையாட்டை நடத்தும் பல அணிகளுக்கும் பரவியது. இந்தியாவின் பெரும் முதலாளிகளும், சரத்பவார், அருண் ஜெட்லி போன்ற  அரசியல் கட்சித் தலைவர்களும் வெளிநாட்டிற்குத் தப்பியோடிய லலித் மோடி, மல்லையா போன்றோரும் மட்டைப் பந்து அணிகளோடு தொடர்புடையவர்கள். ஒவ்வொரு மாநில அளவிலும் ஒரு மட்டைப்பந்து அமைப்பை உருவாக்கி ஆட்டக் காரர்களை ஏலமெடுக்கும் தரகு வணிகம் இன்றும் தொடர்கிறது. மிகவும் அருவருக்கத்தக்க கேவலமான முறையில் மட்டைப்பந்து விளையாட்டு சூதாட்டம் ஊழல் மோசடி பெண்களின் ஆபாச நடனத்தோடு நடைபெற்று வருகிறது. இந்த மோசடிகளுக்கு எதிராகச் சில பொது நல ஆர்வலர்கள்  உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர். 2014இல் மூன்று நீதிபதிகள் அடங்கிய  ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் ஒரு குழு அமைத்துப் பல்வித மட்டைப்பந்து ஊழல்களை ஆய்ந்து அறிக்கை அளிக்கும்படி வேண்டியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா சிமென்ட் நிறுவனத் தலைவர் சீனிவாசன் அவரது மருமகன் குருநாத் ஆகியோர் மீது சூதாட்டத்தில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பலமுறை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இந்த மட்டைப் பந்து குழுமங்கள் பல்வேறு வழக்குகளைப் போட்டுத் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. உச்ச நீதிமன்றம் உறுதியாக இருந்த காரணத்தினால் மட்டைப் பந்து வாரியம் எவ்வாறு செயல்பட வேண்டும் எவ்வாறு தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்கான சட்ட நடைமுறை விதிகளை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. இதை ஏற்க மாட்டோம் என்று கூறி  மீண்டும் உச்ச நீதிமன்றத்தில்  சீராய்வு மனுவினை மட்டைப்பந்து குழுமங்கள் அரசியல்வாதிகளின் துணையோடு தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று கோரின. ஆனால் உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் அல்லது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தது. இத்தகைய ஊழல்களும் மோசடிகளும் சூழந்த மட்டைப்பந்து சூதாட்டத்தை மக்களின் அடிப்படைப் பிரச்சினை களை எல்லாம் மறைத்து, மட்டைப் பந்து ஆட்டக்காரர்களின் செய்திகளையும் மட்டைப்பந்து குழுமங்கள் நடத்தும் எல்லாவித அநீதிகளையும் மறந்து அல்லது மறைத்து ஒளி அச்சு ஊடகங்கள் இன்றும் வெளியிட மறுக்கின்றன. மாறாக இந்த ஊழல் சக்திகளுக்குத் தேவையற்ற விளம்பரங்களை அளிக்கின்றன. இவ்வாறாக ஊழலின் பரிமாணம் விளையாட்டில் தொடங்கி சவப்பெட்டிவரை எனத் தொடர்ந்து கொண்டே உள்ளது.

- தொடரும்