கீற்றில் தேட...

modi 356

 சதா சர்வ காலமும் மக்களை எப்படி முட்டாள்கள் ஆக்குவது என்பதைப் பற்றி மட்டுமே சில பேர் யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எதையாவது செய்து தொடர்ந்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக புதிது, புதிதாக தினுசு, தினுசாக பொய்களை பரப்புகின்றார்கள். முட்டாள் பயல்களை எல்லாம் அதிபுத்திசாலியாகக் காட்டுவது, ஒன்றுக்கும் ஆகாத ஆகாவலிகளை எல்லாம் வீராதி வீரன்களாகவும், சூராதி சூரன்களாகவும் காட்டுவது என அனைத்துத் தில்லாலங்கடி வேலைகளையும் செய்கின்றார்கள். முன்பெல்லாம் அப்படி எதாவது பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டால் அதை வதந்தி என்று சொல்வார்கள். இப்போது இது டிஜிட்டல் உலகமல்லவா... அதனால் அதற்குப் பெயர் கருத்துக்கணிப்பு என்று சொல்கின்றார்கள். எவன் பிழைப்பையாவது கெடுக்க வேண்டும் என்றால், அப்படியே போகிற போக்கில் கொளுத்தி போட்டுவிட்டு போய்விடுவார்கள். அது கொழுந்துவிட்டு எரிந்து ஊர்பூராவும் பற்றிக்கொள்ளும். சில சமயம் ஊர்விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் எல்லாம் பற்றிக் கொண்டு எரியும்.

 இப்படித்தான் சில நாட்களுக்கு முன் எவனோ ஒரு மகராசன் கடல் தீப்பற்றி எரிகின்றது, அதனால் இனி உப்பு கிடைக்காது என எங்கேயோ கொளுத்திப் போட்டுவிட, அது பல மாநிலங்களில் பற்றிக்கொண்டு எரிந்தது. மக்கள் உப்பு வாங்க கடைகளுக்குப் படையெடுத்தார்கள். கடைகளில் உப்பு விலை பலமடங்கு ஏறியது. ஒருவன் கூட யோசிக்கவில்லை. கடல் எப்படி தீப்பற்றி எரியும் என்று? எவனாது எதையாவது கொளுத்திப் போட்டால், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல் ஊர்முழுவதும் தண்டோரா அடித்து விடுவார்கள் நம் மக்கள். பிள்ளையார் பால் குடிக்கின்றார், இயேசு ரத்தக்கண்ணீர் வடிக்கின்றார், பாம்பு புரோட்டா தின்கின்றது என்று எதையாவது பற்ற வைத்துவிட்டு, பதற்றப்படாமல் கம்பி நீட்டிவிடுவார்கள். பிறகு மக்கள் அதை ஊதிப் பெரியதாக்கி சமூகத்தில் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தி விடுவார்கள். இந்திய மக்களின் இந்த கள்ளம் கபடமற்ற நல்ல குணத்தை யார் புரிந்து வைத்திருக்கின்றார்களோ, இல்லையோ அரசியல்வாதிகள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

 முன்பெல்லாம் அடுத்தவன் குடியைக் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் சில நல்ல உள்ளங்களால் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படும். ஆனால் உலகமயம் வதந்தி பரப்புவதைக்கூட ஒரு தொழிலாக மாற்றியுள்ளது. கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் என்று அவர்கள் இதற்கு பெயர் வைத்திருக்கின்றார்கள். அவர்களிடம் சென்று சில கோடிகளைக் கொடுத்து இந்தியாவின் அடுத்த பிரதமர் டிராபிக் ராமசாமிதான் என்று சொல்லும்படி கேட்டால் அவர்கள் உடனே தங்களது படைகளுடன் களத்தில் இறங்குவார்கள். நாடு முழுவதும் சில லட்சம் முதல் சில கோடி பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதாக சொல்வார்கள். கருத்துக் கணிப்பு நடத்த தாங்கள் வாங்கிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊடகங்களில் கொடுத்து இந்தியா முழுவதும் பல லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் என முதலில் பில்டப் கொடுக்க வைப்பார்கள். அடுத்து தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் டிராபிக் ராமசாமி பிரதமராக வர 60 சதவீதம் மக்கள் வாக்களித்து இருப்பதாகவும், விஜயகாந்துக்கு 20 சதவீதமும், வைகோவிற்கு 10 சதவீதமும், அன்புமணிக்கு 5 சதவீதமும், பாரிவேந்தருக்கு 1 சதவீதமும் மக்கள் வாக்களித்து இருப்பதாகவும், தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் அறிவியல் பூர்வமானவை மற்றும் துல்லியமானவை என மக்களை நம்ப வைப்பார்கள். அதை டீவியில் பார்க்கும் மக்கள் டிராபிக் ராமசாமியே பெரும்பாலான மக்கள் விரும்புவதால், அவர் வெற்றி பெறுவதற்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளதால் நாமும் அவருக்கே ஓட்டு போட்டு விடுவோம் என முடிவு செய்து விடுவார்கள்.

 இதுதான் கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் வேலை. ஒரு பொதுக் கருத்தை சமூகத்தில் ஏற்படுத்தி அதன் மூலம் தாங்கள் விரும்பும் காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இப்படித்தான் ஒன்றுமே இல்லாத மோடியை இந்தியாவில் உள்ள கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் ஆகா ஓகோ என பில்டப் செய்து வெற்றி பெற வைத்தன. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அறிவில் மண் அள்ளிப்போட்டு அவர்களை முட்டாள்கள் ஆக்கி தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொண்டார்கள். ஆனால் மக்கள் தாங்கள் செய்த அந்த வரலாற்றுப் பாவத்தை நினைத்து, நினைத்து இன்று அழுதுகொண்டு இருக்கின்றார்கள். ரூம் போட்டு அழுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மோடியோ தனக்கு ஓட்டுபோட்ட மக்களை வீடுகளில் இருந்த தரதரவென்று வீதிக்கு இழுத்து வந்து, வங்கி வாசல்களின் முன்பும், ஏடிஎம் வாசல்களின் முன்பும் நின்று கோவென அழ வைத்திருக்கின்றார்.

 இந்தியா முழுவதும் உள்ள சாமானிய மக்கள் மோடிக்கு எதிராக கடுங்கோபத்தில் இருக்கின்றார்கள். நிச்சயம் மோடி இந்தச் சூழ்நிலையில் தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் படுதோல்வி அடைவது நிச்சயம். மக்களின் இந்த மனநிலையை தங்களது வானரங்கள் மூலம் நன்கு அறிந்து கொண்ட மோடி தனது வழக்கமான தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் சி வோட்டர் என்ற பிராடு கருத்துக் கணிப்பு நிறுவனம் மூலமும், இன்னொரு பக்கம் தானும் சேர்ந்து ஒரு உலக மகா மோசடி நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றார். மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை சரியான நடவடிக்கை என 80-86 சதவீத மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களாம். இதில் நகரங்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் 86 சதவீதமும், நடுத்தர நகரங்களில் 80.6 சதவீதமும் ஆதரிக்கின்றார்களாம். இது மட்டும் அல்லாமல் வயதுவாரியாக மோடியை எவ்வளவு பேர் ஆதரிக்கின்றார்கள் என்பதையும் இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. அதில் 25-45, 45-60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83.3 சதவீதம் பேர் மோடியை ஆதரிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் 80 சதவீதம் பேர் ஆதரிப்பது போல காட்டியுள்ளார்கள். இன்னொரு பக்கம் மோடி இதற்கென்றே ஒரு செயலியை உருவாக்கி, அதில் மக்களிடம் கருத்து கேட்டிருந்தார். அதில் மோடியை 90 சதவீதம் பேர் ஆதரிக்கின்றார்களாம். ஆக மொத்தம் மோடியை இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆதரிப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கின்றார்கள்.

 மோடிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பை நடத்திய சி வோட்டர் நிறுவனம் ஏற்கெனவே ஒரு கோல்மால் நிறுவனம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. 2014 ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற டி.வி நிறுவனம் நாட்டில் உள்ள முக்கியமான 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ‘ஆபரேஷன் பிரைம் மினிஸ்டர்’ என்ற ஸ்டிங்கை மேற்கொண்டது. இதில் பணம் வாங்கிக் கொண்டு எப்படி போலியான கருத்துக் கணிப்புகளைக் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் வெளியிடுகின்றன என்பதை அம்பலப்படுத்தி இருந்தது. நியூஸ் எக்ஸ்பிரசின் இந்த ஸ்டிங்கில் மாட்டிய 11 கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் சி வோட்டர் நிறுவனமும் ஒன்று. இதனால் இந்தியா டுடே நிறுவனம் சி வோட்டர் மூலம் தான் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. அப்படிப்பட்ட கீழ்த்தரமான நிறுவனம் தான், இன்று மோடி அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு 80 சதவீத மக்கள் மோடியை ஆதரிப்பதாக புருடா விட்டிருக்கின்றது. மோடியோ இன்னும் ஒரு படி மேலே போய் தன்னை 90 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாக வாய் கூசாமல் பொய் பேசுகின்றார்.

120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் வெறும் 30 லட்சம் பேர் மட்டுமே கலந்துகொண்டு கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள். அதில் 90 சதவீதம் பேர் மோடியை ஆதரித்து இருக்கின்றார்கள் என்றால் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற அனைவரும் நிச்சயமாக சங்பரிவாரத்தின் ஆட்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. புராணங்களை வைத்து மக்களை முட்டாள்கள் ஆக்கியது போய் இப்போது நவீன தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். மோடியின் எண்ணம், சொல், செயல், சிந்தனை என அனைத்திலும் மோசடி மட்டுமே நிறைந்து இருக்கின்றது. 90 சதவீத மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சொல்லும் மோடி, பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் திராணியற்று ஒரு கோழையைப் போல ஓடி ஒளிகின்றார். இது ஒன்றே போதும், மோடியின் வீரம் எத்தகையது என்பதை நிரூபிக்க.

 பாசிஸ்ட்டுகள் இப்படித்தான் தங்களுக்கு எதிரான மக்களின் பொதுக்கருத்தை மாற்ற திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவார்கள் என்பதை வரலாற்றில் நாம் பலமுறை பார்த்திருக்கின்றோம். தனக்கு எதிரான மக்களின் கோபத்தை திசை திருப்பவே மோடி இது போன்ற அபத்த நடகங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார். அப்படி ஒரு நிலைமை மோடிக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதைத்தான் மோடியியின் இந்த செயல்பாடுகள் காட்டுகின்றன. ஆனால் மோடி என்னதான் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பினாலும், அதை நம்பும் மனநிலையில் மக்கள் இன்று இல்லை என்பதுதான் உண்மை. கோடிக்கணக்கான இந்திய மக்களின் ஆத்திரத்தையும், கோபத்தையும் கேலிசெய்யும் மோடியின் இது போன்ற செயல்கள் அவருக்கு நிச்சயம் எதிராகத்தான் போய் முடியும் என்பதை கூடிய விரைவில் அவர் பார்க்கத்தான் போகின்றார்.

- செ.கார்கி