Amitabh Bachchan and Narendra Modi

பனாமா லீக்ஸ் கசிய விட்டுள்ள  2.6 டெரா பயிட்டுகள் அளவுள்ள 11.5 மில்லியன் தகவல்களைப் பார்த்து உலகமே கொஞ்சம் ஆடிப் போய்தான் உள்ளது. குறிப்பாக கண்முன்னால் தெரியும் சில திருடர்களை மட்டுமே பார்த்து அவர்களை ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் தவித்துக் கொண்டிருந்த சாமானிய மக்கள், கண்ணுக்குத் தெரியாமல் பதுங்கியுள்ள பல லட்சக்கணக்கான திருடர்களைப் பார்த்து விக்கித்து நிற்கின்றார்கள். முதலாளித்துவத்தின் ஈவு இரக்கமற்ற பணத்தாசையைப் பார்த்து வறுமையை மட்டுமே வாழ்க்கையாக வரித்துக்கொண்ட இந்தியாவில் உள்ள 79 கோடிக்கும் மேற்பட்ட அந்த மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

 பனாமா நாட்டில் இருந்து செயல்பட்டுவரும் மொஸாக் பொன்செகா என்ற ஒரு லெட்டர்பேட் நிறுவனத்தில் இருந்தே இந்தத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம்வரை வழங்கிவந்த அனைத்து சேவைகள் பற்றிய தகவல்களும் திருடப்பட்டு உலகின் பார்வைக்குக் கசிய விடப்பட்டுள்ளன. வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International consortium of investigative journalism)  என்ற அமைப்பே இந்தத் தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடும் இதில் கலந்து கொண்டுள்ளது.

  உலக அளவில் 140 அரசியல் தலைவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 500 திருடர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அதில் சில முக்கியமான திருடர்கள் மற்றும் திருடிகளின் பெயர்கள் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. அதில் ஒரு பிரபல திருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் முன்னாள் உலக அழகி ‘நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய’ ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் ஆவர்கள்.  மேலும் டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கெளதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டார் சமீர் கெலாத், அப்போலா டயர் புரோமோட்டார் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா  போன்ற பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் தான் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் முகமாக உலக அரங்கில் அறியப்படுபவர்கள்.

     ஒரே ஒரு மொஸாக் பொன்செகா என்ற லெட்டர்பேட் கம்பெனியில் மட்டும் இத்தனை திருடர்கள் ஒளிந்து கொண்டுள்ளார்கள்  என்றால் இன்னும் இதுபோல உலகில் உள்ள 79க்கும் மேற்பட்ட வரியில்லா சொர்க்கங்களில் எல்லாம் இன்னும் எத்தனை கோடி திருடர்கள் ஒளிந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

  சினிமா, ரியல் எஸ்டேட், கனிம வளக்கொள்ளை, ஊழல் என பல வழிகளில் ஈட்டப்படும் பெரும் அளவிலான பணத்தில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் இந்தியா இரட்டை வரிதவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடுகளில் பெரும் அளவில் கள்ளத்தனமாக முதலீடு செய்யப்படுகின்றது. இந்தப் பணமே கறுப்புப் பணம் என அழைக்கப்படுகின்றது. இந்தக் கறுப்புப் பணமானது அப்படியே அங்கு தூங்குவது கிடையாது. அது மீண்டும் அந்நிய மூலதனம் என்ற பெயரில் திரும்ப இந்தியாவிற்குள்ளேயே வருகின்றது. இந்திய பங்குச் சந்தையை ஆக்கிரமித்திருக்கும் நிதி மூலதனத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை இதுபோன்று வழிகளில் வந்தவைதான்.

  நீங்கள் நினைக்கலாம் - எப்படி  இந்திய அரசுக்குத்  தெரியாமல் இவ்வளவு பணம் பங்குச் சந்தைக்குள் வரமுடியும் என்று. அது உண்மைதான். அனைத்துக் கள்ளப்பணமும் இந்திய அரசுக்குத் தெரிந்தே வருகின்றது. கறுப்புப்பணத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என வாய்ச்சவடால் அடிக்கும் இந்த அயோக்கியர்கள் தான் அந்தக் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவும் வழிசெய்து கொடுத்திருக்கின்றார்கள். ‘பார்ட்டிசிபேட்டரி நோட்’ என்ற ஒரு வழியை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். இந்த பார்ட்டிசிபேட்டரி நோட்’ டை பயன்படுத்தி முதலீடு செய்பவர்கள் செபியில் தன்னுடைய அடையாளத்தை வெளியிடாமலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். ஆளும் வர்க்கத்தின் இந்த வேசித்தனமான வழியைப் பயன்படுத்தியே பெரும் அளவிலான கறுப்புப் பணம் மீண்டும் இந்தியாவில் வெள்ளையாக மாற்றப்படுகின்றது.

   2000 முதல் 2011 வரை இப்படி இந்தியாவிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் 41.80 சதவீத முதலீடுகள் மொரீஷியஸ் தீவுகளில் இருந்து வந்துள்ளன. இந்திய மொரீஷியஸ் நாட்டுடன் இரட்டை வரிதவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சிங்கப்பூரில் இருந்து 9.17 சதவீத அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் லட்சணம்.

  ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில்  இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்காமல் விடமாட்டேன் என்று சபதம் போட்ட மானங்கெட்ட மன்மோகன் சிங் ஆட்சியாக இருக்கட்டும், இப்போது இருக்கும் ‘கடவுள் கொடுத்த பரிசு’ மோடியின் ஆட்சியாக இருக்கட்டும், இவர்களால் ஒன்றும் புடுங்க முடியாமல் இருப்பதற்குக் காரணமே அந்தப் பணம் பெரும்பாலும் அங்கு இல்லை என்பதுதான். அந்தப் பணம் தான் அந்நிய மூலதனம் என்ற பெயரில் இந்திய பங்குச் சந்தையை இப்போது ஆக்கிரமித்து இருக்கின்றது. இந்தியப் பொருளாதாரமே கறுப்புப் பணத்தில் தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது.

  இங்கே இருக்கும் பணக்கார பன்றிகள் மட்டும் தான் கறுப்புப் பணத்தை பதுக்குகின்றார்கள். அதற்காக சுவிஸ், மொரிஷியஸ் உள்ளிட்ட 79 வரியில்லா சொர்க்கங்களில் கணக்கு வைத்திருக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. இந்திய உளவு அமைப்பான ரா, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ போன்றவையும் சுவிஸ் போன்ற நாடுகளில் கணக்கு வைத்திருக்கின்றன. இவர்களின் இரகசிய நடவடிக்கைகளுக்கு இந்த வங்கிகளின் மூலமே பணப்பரிவர்த்தனை செய்யப்படுகின்றது. நிலைமை இப்படி இருக்கும் போது இந்திய ஆளும்வர்க்கம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாய் சொல்லும் பொய்யை இனியும் நீங்கள் நம்பினீர்கள் என்றால் உங்களை விட அறிவிலி வேறு யாரும் இருக்க முடியாது.

  அதனால் பனாமா லீக்ஸ் தகவலைப் பார்த்து நாம் பெரிய அளவில் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. ஏனெனில் இந்தத் தகவல்கள் நம்மைப் போன்ற அன்னக்காவடிகளுக்கே அதிர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் பனாமா, சுவிஸ், மொரீஷியஸ், கோமன் தீவுகள், டெலேவர் போன்ற இடங்களில் உள்ள லெட்டர் பேட் நிறுவனங்கள் நடத்தும் டம்மி கம்பெனிகளில்  கோடிக் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்து, அதை திரும்ப அந்நிய முதலீடு என்ற பெயரில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து, திரும்பவும் பல லட்சக்கணக்கான கோடிகள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கும் இந்திய ஆளும் வர்க்கம் இது போன்ற துக்கடா செய்திகளைப் பார்த்து ஒருபோதும் அதிர்ச்சியடையப் போவதில்லை. காரணம் இது எல்லாம் இந்திய நிதிமூலதன சூதாடிகளின் மூலதன விரிவாக்கத்தின் தவிர்க்க முடியாத காரணிகள்.  இது இல்லை என்றால் அவர்கள் இல்லை; அவர்கள் இல்லை என்றால் மன்மோகன் சிங்கும் இல்லை; மோடியும் இல்லை.

 அருண் ஜெட்லி பனாமா பட்டியலில் உள்ள யாரும் தப்ப முடியாது என கொக்கரிக்கின்றார். ஆட்சிக்கு வந்த புதிதில் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது என இதே மாடுலேசனில் தான் அன்றும் சொன்னார். ஆனால் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலைக்கூட வெளியிடத் துப்பில்லாத கோழைகள்தான் தாங்கள் என்பதை அவர்கள் நிரூபித்தார்கள். எனவே இவர்களின் யோக்கியதை என்ன என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வரியில்லா சொர்க்கங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் வெளியாகும் பட்சத்தில்  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின், எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் போன்றவர்கள் மாட்டியது போல இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மாட்டுவார்கள் அதில் மோடி கூட இருக்கலாம். அதே போல அமிர்தாப்பச்சனும், ஐஸ்வர்யாராயும் மாட்டியதுபோல ரஜினி, கமல், விஜய் என பல பேர்வழிகள் மாட்டலாம். அந்த நல்ல நாளுக்காக நாம் காத்திருப்போம். அதுவரை கண்முன்னால் நமக்குத் தெரியாமல் நல்லவன் போல வேடமிட்டு நம்மை ஏமாற்றி வரும் அந்த அயோக்கியர்களை எல்லாம் நல்லவர்களாகவே கருதுவோம்!.

- செ.கார்கி

Pin It