modi mark zuckerberg

ஏழைகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர் பணக்காரர்களிடம் மட்டும் கைகுலுக்குவதும் பல் இளிப்பதும் அவர்கள் முன்னால் முதுகு வளைந்து வணக்கம் சொல்லுவதும் எவ்வளவு அருவருப்பானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மரியாதை இந்தக் கோமாளி பிரதமரால் எவ்வளவு நகைப்புக்குள்ளாக்கப்படுகிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றி குறித்து தம்பட்டம் அடிக்கும் நமது உள்ளூர் பத்திரிக்கைகள் மோடி செல்கின்ற நாடுகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவது குறித்து ஓரமாக எழுதிவிட்டு தனது ஜனநாயகக் கடமையை முடித்து கொள்கின்றன.

உலகத் தலைவர்கள் எல்லாம் கலந்து கொள்ளும் ஐ.நா பொது சபை மாநாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இதுவரை இருந்த இந்தியப் பிரதமர்கள் ஓரளவுக்காவது சரியாகப் பயன்படுத்தினர். ஆனால் பிரதமர் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு நபரை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தால் என்ன நடக்கும்? நமது வரிப் பணத்தில்.... கூத்து... குத்தாட்டம்...மட்டும்தான்.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை திட்டமிடுவதற்கும் அதில் மோடியை இந்தியாவின் விடிவெள்ளியாக சூப்பர் ஹீரோவாக காட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளை உள்ளடக்கிய சர்வதேச வடிவமைப்பு நிறுவனங்கள் திறமையாக செயல்பட்டு வருகின்றன. மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்பே அங்கு செல்லும் இந்தக் குழு அங்குள்ள மக்களைத் திரட்டி மோடி வரும் இடங்களில் ஆர்ப்பரிப்பதற்கு ஏற்பாடு செய்கின்றன. எல்லாம் மோடியின் அப்பன் வீட்டு சொத்தில் அல்ல.... நமது வரிப் பணத்தில்.... மிகக் கீழ்த்தரமான இந்த விளம்பர யுக்தியை பயன்படுத்திதான் மோடி தனது ரசிகர் பட்டாளங்களுடன் கூத்தும் கும்மாளமும் அடிக்கிறார். மோடி நடத்தும் இந்த சில்லறைத்தனமான செயல்பாடுகளை நகைத்து சர்வதேசப் பத்திரிக்கையாளர்கள் பிரபலப் பத்திரிக்கைகளில் கட்டுரை வெளியிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் இரண்டாம்தர அரசியல்வாதிகளைப் போன்று பேசுகிறார். இந்தியாவின் மானத்தை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்கிறார். இந்த முறை சோனியா காந்தியின் ஊழல் குறித்து கலிபோர்னியாவில் பேசுகிறார். எவ்வளவு ஈனத்தனமான அரசியல். இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் செய்யாத செயல். ஆதிக்க சக்திகளின் எடுபிடியைப் போன்று செயல்படும் மோடி சிலிக்கான் வேலியில் ஒவ்வொரு கம்பெனி சி.இ.ஓக்களின் முன்னால் பல் இளித்ததைப் பார்க்கும்போது அனைத்து இந்தியனுக்கும் அருவருப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். சான் ஜோஸ் நகரில் இவரது சகாக்கள் ஏற்பாடு செய்திருந்த குத்தாட்ட நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவுக்காக நான் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டேன் என்று கூறியதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக அடிமை வேலை பார்க்கும் அவாள்களின் ஆர்ப்பரிப்பு இருக்கிறதே... யப்பப்பா.......

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க்கின் முன்னால் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் கூனிக் குறுகி தனது அடிமைத்தனத்தைக் காட்டியதையும் அவரிடம் போய் அம்மா செண்டிமெண்ட் பேசியதும் மிகப் பிரமாதம். அமெரிக்காவின் முதலாளிகளிடம் "முதலீட்டாளர்களின் சொர்க்கமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே எனது லட்சியம்" எனக் கூவி கூவி இந்தியாவை விற்பனை செய்து சாதனை புரிந்ததிலும் அபாரமாக மோடி சாதித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். 27 கோடி மக்கள் இன்னும் கல்வி அறிவு பெறாத ஒரு நாட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் என்ன நடந்து விடப் போகிறது? இந்தியாவின் அகக் கட்டமைப்பு மிகவும் சீரழிந்துள்ள தருணத்தில் ஏழை இந்தியர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் சந்திக்க இந்தக் கோமாளிப் பிரதமருக்கு நேரம் இல்லை.

இந்திய மக்களின் தனியுரிமையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தெளிவான வரைவுகள் கூட கூறப்படாத வேளையில் அந்தப் பெயரை மட்டும் வைத்து எதற்காக இத்தகைய தம்பட்டம்? மோடியின் இத்தகைய போக்கு அவர்களின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கு கூட அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சான் ஜோஸ் நகரில் மிகப் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து சர்வதேசப் பத்திரிகைகளிலும் பரப்பரப்பாக வெளிவந்த இந்த செய்தி இந்திய ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படவில்லை.

மோடியை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் மார்க்கிற்கு கிருமி நாசினி மருந்துகளை ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர். ரத்தக்கறையுடன் இருக்கும் மோடியுடன் கைகுலுக்கிய பின்பு பயன்படும் என அவர்கள் மார்க்கிற்கு தெரிவித்துள்ளனர்.

மோடி மூலம் ஆதிக்க சக்திகள் கட்டமைக்கும் இந்த போலியான பிம்பம் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. மோடி திட்டங்களின் பயனாளிகள் ஆதிக்க சக்திகளும் பெரும் முதலாளிகளும் தான். பாமர இந்தியனுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்திய மண்ணை ஏகாதிபத்திய நாடுகளுக்கும் பெரும் பெரும் முதலாளிகளுக்கும் கூட்டி கொடுக்கும் வேலையைத்தான் பிரதமர் ஆன இத்தனை நாளில் மோடி சிறப்பாக செய்திருக்கிறார்.

இந்திய மக்களின் வறுமையைப் போக்க இந்த பிரச்சாரக்கிடம் எந்த திட்டமும் இல்லை.....அவாள்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எத்தனை எத்தனை திட்டங்கள்... நாம் இதைப் பார்த்து பல் இளித்துக் கொண்டே இருக்க வேண்டும்... வித்தை காட்டுபவர்களை ரசிப்பதில் இந்தியனுக்கு ஈடு உலகில் வேறு யாரும் இல்லை....... அதை மோடியும் ஆர்.எஸ்.எஸும் சரியாகப் புரிந்து கொண்டு நமது வரிப் பணத்தில் நமக்கே ஆப்பு அடிக்கிறார்கள்.... நாம் இன்னும் மோடியை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

- ஷாகுல் ஹமீது

Pin It