தேவை விருப்பம் ஆனது.... விருப்பம் ஆசை ஆனது.... ஆசை பேராசை ஆனது... பேராசை... பெரிய பெரிய ஆசைகளை கூட்டி வந்தது....ஒரு வீடு இருப்பவனுக்கு ரெண்டு கார் மேல் ஆசை வந்தது.... ரெண்டு கார் வைத்திருப்பவனுக்கு மூன்று பங்களா மேல் ஆசை வந்தது..... மூன்று, ஐந்தாகி, ஐந்து, பத்தாகி... ஒரு கூட்டம் பணத்தோடு சேர்த்து, தாங்கள் மட்டும் வாழ, அதிகாரத்தையும் சம்பாரித்துக் கொண்டது.... கொண்டிருக்கிறது......அதற்கு எதிர் நிலையில் நியூட்டனின் மூன்றாம் விதியாக ஒரு கூட்டம்... காய்ந்த வயிறோடு... முகவரி அற்று.. அடையாளமற்று... உறவுகளற்று... வெறும் உயிர்களாய் இந்த பூமியில் தனக்கென்று ஓர் இடம் இல்லாமல் ஒரு ஆத்மாவைப் போல அலைந்து திரிகிறது....

alyan kurdi"சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்" என்பதே ஜெயித்தவனின் திமிரால் ஆன வாக்கியம் என்றே நினைக்கின்றேன்.. மிருகத்திடமிருந்து... கால சூழல்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொண்டு இந்த பூமியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவரை மரணத்தில் கூட அர்த்தம் இருந்தது.... ஆனால் மனிதனை கண்டு மனிதன் அடங்கி போன காலத்தை சாத்தானின் கையில் அகப்பட்டுக் கொண்ட குழந்தையின் மரணம் என்றே கூற முடியும்..அத்தனை பரிதவிப்பானது அது... அடிமைத்தனத்தின் வலிகள் மிகக் கொடுமையான பரிதாபத்துக்குரியவை... அத்தனை மூர்க்கமான தாக்குதலை.... இந்த அதிகார வர்க்கத்தின் ஆக்கிரமிப்பின் அத்து மீறல் மிகக் கொடூரமான முகத்தோடு பிரயோகிக்கிறது........

ஒரே முறை பிறந்து விட்ட இந்த வாழ்க்கையில் ஒரு வேளை உணவுக்காக இன்னொருவரிடம் கை ஏந்தி நிற்கும் அவல நிலையைக் கண்டும் காணாமல் போக முடியவே முடியாத மிகப் பெரிய மன பாரத்தின் வெளிப்பாடாகவே இந்த வார்த்தைகளை இங்கு கோர்க்கிறேன்...... "எல்லாம், எனக்கும் என்னை சார்ந்தவனுக்கும்.." என்று ஒரு கூட்டம் விஷச் செடிகளை மரணங்களாய் பூமியில் விதை நெல்லைப் போல வீசி அடிக்கிறது..... அதன் கையில் ஆயுதமும் அதை விட மோசமான ஆயுதமாக பணமும் இருக்கிறது.. பண்டமாற்றுக்கு சுலபமான வழியாக கண்டுப் பிடிக்கப்பட்ட பணம் இன்று மிகப் பெரிய சூனிய வெளியை இந்த பூமியில் பரப்பி விட்டிருக்கிறது....விடப் பட்டிருக்கிறது....

பிறந்த மண்ணை விட்டு, பிறந்த வீட்டை விட்டு, ஒரு மனிதன் நாடில்லாமல் அலைவதைப் போல ஒரு துயரம் இந்த வாழ்வில்.. இந்த பூமியில்.. இந்த மானுட குலத்தில் வேறொன்று இருக்கவே முடியாது என்றே நினைக்கின்றேன்...... அரசாங்க சண்டைகள்..... பொருளாதார சண்டைகள்...... யார் பெரியவன் என்ற முட்டாள் தனத்தின் சண்டைகள்...தனி மனித தன் முனைப்பு சண்டைகள்...எண்ணைக்கான சண்டைகள்... நீர் வளத்துக்கான சண்டைகள்.... நிலத்துக்கான சண்டைகள்.... காடும் அதன் வளத்துக்குமான சண்டைகள்..... கோட்பாட்டு சண்டைகள்...சாத்திர கோத்திர சண்டைகள்... கடவுள் சண்டைகள்.. சாதி சண்டைகள்... இப்படி.... காரணம் கற்பிக்கப்பட்ட சண்டைகளுக்காக, ஒன்றுமே அறியாத மனிதர்கள்.. உறவுகள் விட்டு.. மரணம் தொட்டு... மிச்சம் கிடக்கும் உயிரைக் காக்க அகதியாக ஏதாவது ஒரு படகில்.. ஒரு கப்பலில்...இருக்கின்ற பணம் நகை எல்லாம் கொடுத்து...சில போது மானத்தைக் கூட கொடுத்து... அல்லது அவர்களாலேயே எடுத்து.... வெறும் ஆதிமனிதனாக (அவனுக்கு கூட காடு இருந்தது..... இவனுக்கு அதுவும் இல்லை.... தீவிரவாதி என்று ஒன்று, துப்பாக்கி நீட்டும்..... அல்லது துப்பாக்கியை நீட்டும்...) எங்கு போகிறோம் என்றே தெரியாமல் ஆடு மாடுகள் போல.. அடைக்கப்பட்டு... கடல் கடப்பது என்பது ரத்தம் வழியும் கருப்பு பக்கங்கள்...

அகதி என்ற ஒற்றை சொல்லுக்குள் அடங்கிக் கிடப்பது ஒரு மொழி அல்ல.. ஒரு வாழ்வல்ல.. அது ஒரு ரத்த சரித்திரம்... அதிகார வர்க்கத்தின் ஆணைக்கு அடிபணியாத கூட்டத்தின் மீது ஏவப்பட்ட ஏதேச்சதிகாரம்... மனிதனை மனிதன் அடக்க எந்த சாத்திரத்தில் இடம் இருக்கிறது.... கேள்வி கேட்டவனெல்லாம் மண்ணுக்குள் அடங்கி போய் விட.. பதிலே தெரியாதவன்தான் இங்கு ஆட்சி செய்கிறான்...காசுக்கு எதையும் செய்யும்... இடைத் தரகர்கள்... எல்லா காலத்திலும்... காலத்துக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொண்டு வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.....அவர்களின் வஞ்சம் நஞ்சுகளின் மொத்தம்..... அது மூன்று வெளிக்காசுகளுக்கு கூட காட்டிக் கொடுக்கும்.....

இந்த உலகம் பொது... இந்த பிறப்பு பொது.. ஏன் இங்கு இத்தனை பிரிவு... எது பிரித்தது.. மனிதனை மனிதன் வெறுக்க நியாயமான ஒரு காரணம் கூட இல்லையே இந்த பரந்த பூமியில்.. பகிர்ந்து உண்ணத் தானே இந்த விளைச்சல்.. பகிர்ந்து குடிக்கத்தானே இந்த நதி.. பகிர்ந்து கொண்டாடத்தானே இந்த மழையும் மலையும்... இருப்பவன் தரவில்லை என்றால் இல்லாதவன் எடுத்துக் கொள்ள முயலுவது இயற்கை தானே...?

உடலை கூட விற்க வைத்து விடும் பசிக்கு வயிறு எம்மாத்திரம்....அது சுலபமாக ஏமாந்து விடும்...... அது ஏங்கிப் பார்க்கும்.. கெஞ்சிப் பார்க்கும்.. முடியாத தூரத்தில் அமிழ்ந்து அமிலம் கொட்டி.. மாயக் கைகளின் வாய்க்குள் குவிந்து மண்ணோடு மண்ணாக மக்கி செத்துப் போகும்.. எத்தனை உயிர்களைக் கொன்று புதைத்து விட்டது, பசியும், வறட்சியும்... அப்படி ஒன்றும் இந்த உலகம் தானியங்கள் இல்லாத... வாழத் தகுதி அல்லாத மண்ணாக இன்னும் ஆகவில்லை.. ஒரு பக்கம் அதிகப்படியான உணவுகள் தேக்கப் படுகின்றன...... ஒரு பக்கம் ஒன்றுமே இல்லாமல் வெறும் மண்ணால் ரொட்டி சுட்டு தின்ன வேண்டியிருக்கிறது..... இருக்கோ இல்லையோ தெரியாத கடவுளுக்கு படைக்கும் சோற்றில் ஒரு பிடி, பசிக்கு சாகும் குழந்தைக்கு தரலாமே...?உலகத் தலைவர்கள் எல்லாரும் சேர்ந்துதானே சட்ட திட்டங்கள் கொண்டு வந்தார்கள்...கை குலுக்கும் அளவுக்கு ஏன் மனதை குலுக்கிக் கொள்ள தயங்குகிறார்கள்...மனிதனுக்கு உபயோகமில்லாத சட்டம் இருந்தால் என்ன... உடைந்தால் என்ன...ஓர் ஏழையின் உயிரைக் காக்க முடியாத மருத்துவம் களங்கத்தின் பிடியில் நிற்கிறது.... விளிம்பு நிலை மனிதனுக்கும் சேர்த்துதான் இந்த காற்று வீசுகிறது...வெறும் இரண்டு நாள் பயணம்தான் அமெரிக்கவுக்கு... என்றுதான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்.... அது, உயிர் போய் விடும் மிகப் பெரிய ஆபத்தான, நிலையில்லாத, மாதக் கணக்கான, வருடக் கணக்கான பயணம் என்பதை நாடு இல்லாமல் தவிக்கும் ஒரு மனிதன் புகலிடம் தேடி பயணிப்பதை அறிகையில்தான் புரிந்து கொள்ள முடிந்தது...

எத்தனையோ நாள் ருசி இல்லை என்று சாப்பாட்டை வேண்டாம் என்று மறுத்திருக்கிறேன்... இது இருந்தால்தான் சாப்ட பிடிக்கும் என்று வெட்கமே இல்லாமல் வாதாடியிருக்கிறேன்.... எல்லாம் உடைத்து சுக்கு நூறாக்கி போட்டது, ஒரு பசித்த வயிறின் ஈனக் குரல்......... சச்சின் நூறாவது நூறு அடிக்கவில்லை என்று மனம் கஷ்டப்பட்டது ஒரு காலம்... எங்கள் நாடுதான் ஜெயிக்க வேண்டும் என்று வீராப்பு காட்டி முறைத்துக் கொண்டு திரிந்தது ஒரு காலம்...ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று கடந்து போனது ஒரு காலம்...ஆனால்... ஒரு திருப்பு முனைப் புள்ளியில் சக மனிதன் பற்றிய அக்கறையை, ஒரு வயதோ.... ஒரு காலமோ.. ஒரு புத்தகமோ.. ஒரு திரைப் படமோ.... செருப்பால் அடித்து சொல்லி விடுகிறது.....அது ஆத்மாவின் உன்னத தேடலை மிகுந்த வலியோடு மனதுக்குள் விதைக்கிறது...அது வலிமையோடு....வருத்தத்தோடு சுய பரிசோதனை செய்யத் தூண்டுகிறது....பேருந்தில் இருவர் உட்காரும் இருக்கையில் ஒருவர் காலை, சற்று அகற்றி வைத்துக் கொண்டு பயணிப்பது கூட சக மனிதனுக்கு செய்யும் மிகப் பெரிய வன்முறை என்று நிதானமாக யோசிக்க வைக்கிறது....

உன் பசி என் பசி தாண்டி உலகப் பசி என்று ஒன்று உண்டு....அதன் தீவிரத்தை, அதி தீவிரமாக யோசிக்க வைத்தது ஒரு படம்....சினிமாக்கள் வெறும் பொழுது போக்கல்ல என்பதை மீண்டும் மீண்டும் நான் உணர்ந்து கொண்டிருக்கும் தருணங்களை நான் ஒவ்வொரு முறையும் என்னை சரி செய்து கொள்ளவே உபயோகித்துக் கொள்கிறேன்....செய்தபடியேதான் கடக்கிறேன்...இன்று பார்த்த "Beautiful Country" என்ற படம்.... வெறும் படமல்ல... கூனி குறுகி... அடி மட்டத்திலேயே வாழ்ந்து விட்ட ஒரு மனிதனின் கதை.. அவன் அவனைச் சுற்றி இருக்கும் முள் வேலியை அகற்ற போராடும் இறுக்கத்தின் பிடியில் இருப்பவன்...அவனின் சுதந்திர தாகத்தின் வடுக்கள், புழுக்கள் நெளியும் கோபங்களின் கொப்புளங்கள்......வெறும் நெகிழ்வுகளாலும்..... உறவுகளாலும் மட்டுமே இந்த வாழ்க்கை பின்னப்படுவதில்லை.... அதற்குள் எதிர்பாராத முடிச்சுக்களை தெரிந்தும் தெரியாமலும் போட்டுக் கொண்டே போய் விடுகிறது காலம்.. காலத்தின் கைகள் பெரும்பாலும். துப்பாக்கி கொண்ட அதிகார வர்க்கத்திடமே இருக்கிறது.. அல்லது பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணுக்குள் புதைத்து வைக்கும் முட்டாள்களிடமே இருக்கிறது....

உலகத்தில் ஒரு வயிறு கூட பசியோடு இருக்கக் கூடாது..... ஓர் உயிர் கூட துப்பாக்கி முனையில் நிற்க கூடாது..ஆயுதங்கள் பசி போக்கதானே தவிர பசியான வயிறுகள் படைக்க அல்ல..மேற் சொன்ன படத்தில் தாகத்தில், நெரிசலில்.. அம்மாவைப் பிரிந்த துயரத்தில் செத்துப் போகும் குழந்தையின் மரணத்தை போல மிகப் பெரிய கேள்வி இந்த மானுடத்துக்கு வேறு ஒன்றும் இல்லை....... தனிமனித பேராசையின் விளைவுக்கு பலியான, போபாலின் மண்ணில் புதைத்து கிடக்கும் கண்ணில்லா முகம் கொண்ட குழந்தை.....பொருளாதார அதிகாரத்தின் மிருக வேட்டைக்கு பலியான வியட்நாமில், நிர்வாணமாய் ஓடி வரும் சிறுமி.... பத்தும் செய்த பசியின் கீறலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல்,மரணத்திற்காக காத்து மயங்கிக் கிடங்கும்... ஆப்ரிகா குழந்தை...உயிர் காத்துக் கொள்ள அகதியாய் பயணித்த தவிப்புகளின் சாட்சியாய், கரை ஒதுங்கிய சிரியா குழந்தையின் மரணம்...வெறும் புகைப்படங்களோ.. தகவல் பரிமாற்றங்களோ...ஏதோ ஓர் ஊரில் நிகழ்ந்த தொடர்பற்ற கொலைகளோ அல்ல... அது மனித இனத்தின் மிகப் பெரிய துயரம்... அது மானுட அத்து மீறலின் சாட்சியங்கள்..... அதிகாரத் தோட்டாக்களின் வலிமை.....உறவுச் சிக்கல்களை கொண்ட நகருதலின் கதவுகள் அடைபட்டே கிடக்கும் உயிர்களுக்குள் பூட்டுக்கள் இல்லாத சாவிகளால் மனம் அலை பாய்கிறது.. மனதின் தீரா நடையில் பசியும் சேர்ந்து கொள்ளும் மாயக் கலைகளின் மௌனமாக சில போது அழுகையும் சிரிப்பும்... ஒன்றுக்கொன்று முகம் திருப்பிக் கொண்டு கிடக்கின்றன.. குழந்தைகளின் மரணம் போல... மனித உயிர்களின் அதிக பட்ச உச்சம்.. வெறும் அழுகை மட்டும்தான்..அதுகூட இறுகி, கனத்து, வெறுத்து போக செய்வதில்..... இந்த வாழ்க்கையின் திசை தன்னைத் தானே அடித்துக் கொல்லப்பட்ட ஒரு சிலுவைக் கொலையாகவே நிரூபணம் ஆகிறது....

ஓட்டைக் கூட நினைத்தது ஒன்றும், போட்டது ஒன்றுமாய், மாற்றிப் போட்டு விட்டு சிரிக்கும் மனிதர்களுக்கும் இந்த பூமி சொந்தம் தானே...?

- கவிஜி

Pin It