modi with mukesh ambani2020 - 21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதம் குறுக்கமடைந்த இந்தியப் பொருளாதாரம், இரண்டாம் காலாண்டில் 7.5 சதவீதம் குறுக்கமடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருப்பதால் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை அலுவல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார மீட்சியின் வேகம் "இனிமையான ஆச்சரியம்" அளிப்பதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகிறார். ஆனால் உலகளவில் இந்தியாவின் பொருளாதார மீட்சி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வேகத்திலேயே காணப்படுகிறது.

பெருநிறுவனங்கள் வேலையாட்களையும் ஊதியங்களையும், நிர்வாகச் செலவுகளையும் பெருமளவு குறைத்து லாபத்தை மீட்டுள்ளன. வங்கிகளும் லாபத்தை மீட்கவுள்ளன. இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து புதிய உயர்வை அடைந்துள்ளது.

முதல் காலாண்டில் 74.7 சதவீதம் குறைந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிகர லாபம், இரண்டாம் காலாண்டில் 263 சதவீதமாகப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. நிஃப்டி-50 நிறுவனங்களின் நிகர லாபம் 1,04,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதானி குழுமத்தின் இலாபம் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதானி குழுமம் ஆறு விமான நிலையங்களைக் கைப்பற்றியதுடன் உலகளவிலும் முன்னிலை பெற்றுள்ளது. பொருளாதார மந்தநிலையில், இந்தியா பொருளாதாரத்திலும், ஆற்றல் துறையிலும் வல்லரசாகும் இரட்டை இலக்குகளைத் தொடர  வேண்டும் என்கிறார் முகேஷ் அம்பானி.

சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வருவாய் குறைந்துள்ளதால், தங்களது வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி நுகர்வைக் குறைத்து வருகின்றனர். அதிகரிக்கும் வேலையின்மையும், விலைவாசி உயர்வும்  மக்களின் வேதனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இது போதாது என்று பெட்ரோல், டீசல் விலையும்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தபால் வங்கிகள் கூட மக்களிடம் இரக்கம் காட்டவில்லை. டிசம்பர் 11க்குள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.500 வைத்திருக்க வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளன.

நிதியமைச்சர் மூன்றாவது நிதித் தொகுப்பு (ஆத்மநிர்பர் பாரத் 3.0) அளித்துள்ளதாக அறிவித்தார், அதில் உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்க   ரூ. 1.46 லட்சம் கோடி ஊக்கத் தொகையும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையுடன் கூடிய ஊக்கத் தொகையும், ஏற்றுமதித் துறைக்கு ஊக்கத் தொகையும் ஒதுக்கியுள்ளார்.

மக்களுக்கு எதுவும் இல்லை. பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைமையில் நாடு தழுவிய தொழிலாளர் போராட்டத்தையும், எழுச்சியுடன் தொடரும் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசு சட்டை செய்யவில்லை.

அதன் அக்கறையெல்லாம் பெருமுதலாளிகளின் மீது மட்டும்தான். வரவிருக்கும் குளிர்கால அமர்வில் பெருநிறுவனங்களின் செயல்பாட்டை எளிமைப்படுத்த வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை (எல்.எல்.பி) சட்டத்தில் உள்ள நெறி மீறலுக்கான குற்ற பகுதிகளை நீக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள் முழுமையாகவோ அல்லது சரியாகவோ புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த மேட்டுக்குடியினர் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் விவசாயிகளை அறிவிலிகளாகச் சித்தரிப்பர்!. மன்கிபாத்தில் உரையாட நேரமிருக்கும் பிரதமருக்கு டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையோ, தொழிலாளிகளையோ சந்திக்கத் துணிவு இல்லை.

முதலீட்டாளர்கள் நம்பகத்தன்மையுடன் வருமானத்தை விரும்பினால், இருக்க வேண்டிய இடம் இந்தியா என்று அவர் மக்களின் வருவாய் குறைந்துள்ளதைக் கண்டுகொள்ளவேயில்லை. முதலாளிகளின் நம்பிக்கைக்குரிய பாஜக அரசின் மக்கள் விரோத அரசை மக்கள் போராட்டங்களால் தான் முறியடிக்க வேண்டும்.

அரசு என்னவோ பொருளாதாரத்தை ஊக்குவிக்க நிதித் தொகுப்புகளை தாரளமாக அள்ளித் தெளித்தது போல், முன்னாள் தலைமை வங்கி ஆளுநர் பிமல் ஜலான் நிதித் தொகுப்பு போதும், இதற்கு மேல் கொடுத்தால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து விடும் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய ஆலோசனைகளைச் செயல்படுத்தினால் இந்தியப் பொருளாதாரம் மீட்சியடையாமல் மேலும் குறுக்கமடையவே செய்யும்.

அதிக வேலைவாய்ப்புகளை அளித்துவரும் கட்டுமானத் துறையானது சிமெண்ட் விலையுயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை அதிகரிக்கச் செய்யவே சிமெண்ட் உற்பத்தியைக் குறைந்த அளவில் செய்கிறார்கள். 

சிமெண்ட் விலையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்குமாறு இந்தியக் கட்டுமானச் சங்கத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதுவதும் குப்பைத் தொட்டிக்குக் கடிதம்  எழுதுவதும்  ஒன்றுதான்.

இந்தியாவின் முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவது தொடர்பாக ஆலோசனை சேவைகளை பெற உலக வங்கியுடன் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிபாம்) இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

சாலைகள், நிலம், கட்டிடங்கள் துறைமுகங்கள், ரயில்வே, ரயில் நிலையங்கள், குழாய்வழிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான கோபுரங்கள் போன்ற தொலைத் தொடர்புச் சொத்துக்கள், துறைமுகச் சொத்துக்கள் என அனைத்துமே விற்பதற்காக அடையாளமிடப்பட்டுள்ளன. ஒரு குண்டூசியையும் விட மாட்டார்கள் போலிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை-மதிப்பை அதிகரித்து விற்று விட வேண்டும் என்பதே பொதுச் சொத்து மேலாண்மைத் துறைச் செயலாளர் துஹின் காந்தா பாண்டேயின் கவலை. மத்திய அரசு  பொதுத்துறை நிறுவனங்களை அதிக ஈவுத் தொகையைச் செலுத்துமாறு கொடுமைப்படுத்தி வருகிறது.

அரசுப் பங்குகளை ஏல நடவடிக்கையின் மூலம் விற்பது குறித்த அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அரசுப் பங்குகளின் விற்பனை துரிதப்படுத்தப்படும் என்றும் சீர்திருத்தங்களும், விறுவிறுப்பான வேகத்தில் தொடரப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதேசி சுதேசி எனக் கூவும் பாஜக அரசின் வங்கித் தலைமை லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் வங்கியுடன் இணைக்கவுள்ளது.

தலைமை வங்கியின் செயற்குழு நிதித்துறையையும், நிதி அதிகாரங்களையும் முற்றிலுமாகப் பெருமுதலாளிகளிடம் தாரை வார்ப்பது போல், தனியார் பெருநிறுவனங்களையும், வணிக நிறுவனங்களையும், வங்கிகளைத்  தொடங்க அனுமதிக்குமாறு ஆபத்தான ஆலோசனை வழங்கியுள்ளது. ரகுராம் ராஜன் மற்றும் விரல் ஆச்சார்யா ஆகியோர் இந்த நடவடிக்கையை "பேரழிவு" என்று எச்சரித்துள்ளனர்.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வங்கிச் சேவை தொடங்கவும், 3 ஆண்டு அனுபவமுடைய கட்டண வங்கிகளை வங்கிகளாகச் செயல்பட அனுமதி அளிக்குமாறும் இதே செயற்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் வங்கிக் கட்டுப்பாட்டாளர்களின் உரிமப் பங்குகளை 15 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகையில் அதை 26% ஆக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

நிதித் துறையில் அடுத்த கட்ட தாராளமய நடவடிக்கைகளாக நான்கு முக்கியச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தலைமை வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். அவையாவன

1. நிதிச் சந்தைகளை தாராளமயமாக்கம் செய்தல் மற்றும் சந்தை ஒழுங்குமுறைகளை எளிதாக்குதல் 2. நிதிச் சந்தைகளை சர்வதேச மயமாக்குதல், 3. “வாங்கும் பக்கத்தில்” பயனர் பாதுகாத்தல் 4) மீட்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்தல்.

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு நிதி நிறுவனத்துக்கான வெளிநாட்டு முதலீட்டு வரம்புகளை தற்போதுள்ள 300 மில்லியன் டாலர்களிலிருந்து 600 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையையும் பொருட்படுத்தாது பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தாராளமயச் சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்தியுள்ளது.

பணவீக்கம்:

நுகர்வோர் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறைப் பண வீக்கம் அக்டோபர் மாதத்தில் 7.61%  உயர்ந்தும் சென்ற மாதத்தை விட 1.28% அதிகரித்தும் உள்ளது. உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு 11.07%.  இது சென்ற மாதத்தை விட 2.48% அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 22.51% அதிகரித்துள்ளது.

பருப்பு விலை 18.34% அதிகரித்துள்ளது. முட்டை விலை 15.17% அதிகரித்துள்ளது. எண்ணெய், கொழுப்பு விலை 15.17% அதிகரித்துள்ளது. மீன், மாமிசம் ஆகியவற்றின் விலை 18.70% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பணவீக்கம் 8.04% ஆக உள்ளது. தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான சில்லறைப் பணவீக்கம் அக்டோபரில் 5.91% ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் (2020-21) இந்தியப் பொருளாதாரம்:

2020-21 நிதியாண்டின் (இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த மதிப்புக் கூட்டலின் அளவு 7 சதவீதம் வீழ்ந்துள்ளது. வேளாண்மை சார்ந்த துறைகள் 3.4 சதவீதமும், செய்பொருளாக்கத் துறை 0.6 சதவீதமும், மின்சாரத் துறை 4.4 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

சுரங்கத் துறை 9.1 சதவீதமும், கட்டுமானத் துறை 8.6 சதவீதமும், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பானது 15.6 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன. நிதி, வீட்டு மனை, சேவைத் துறை 8.1 சதவீதமும், பொது மேலாண்மைப் பாதுகாப்பு 12.2 சதவீதமும் சரிவடைந்துள்ளன.

சென்ற நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தனியார் நுகர்வு செலவினம் 4.1 சதவீதம் குறைந்துள்ளது. அரசு நுகர்வுச் செலவினம் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. மொத்த மூலதன உருவாக்கம் 0.34 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது

2011-12 ஏப்ரல்-செப்டம்பர் அரையாண்டில்:

2020-21ல் (ஏப்ரல்-செப்டம்பர்) வரையிலான அரையாண்டுக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.7 சதவீதம் குறுக்கமடைந்துள்ளது. வேளாண்மை சார்ந்த துறைகள் 3.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. மற்ற அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

சுரங்கத் துறை 17.2 சதவீதமும், செய்பொருளாக்கத் துறை 19.4 சதவீதமும், மின்சாரத் துறை 1.4 சதவீதமும் சரிவடைந்துள்ளன. கட்டுமானத் துறை 30.2 சதவீதமும், வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு 31.5 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன. நிதி, வீட்டு மனை, சேவை 6.8 சதவீதமும், பொது மேலாண்மை, பாதுகாப்பு 11.3 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.

சென்ற நிதியாண்டின் முதல் அரையாண்டுடன்  ஒப்பிடும் போது இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில், தனியார் நுகர்வுச் செலவினம் 3.7 சதவீதம் குறைந்துள்ளது. அரசு நுகர்வுச் செலவினம் 13.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. மொத்த மூலதன உருவாக்கம் 15 சதவீதம்  குறைந்துள்ளது.

செப்டம்பரில் உற்பத்தி நிலை:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி முதன்மைத் துறைகளின் உற்பத்தி 0.2 சதவீதம் சரிந்துள்ளது.

சுரங்கத் துறை 1.4 சதவீதமும்,  மின்சாரத் துறை 4.9 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன. செய்பொருளாக்கத் துறை 0.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 4.1 சதவீதமும், கட்டுமானப் பொருட்களின்  உற்பத்தி 0.7 சதவீதமும்,  நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 2.8 சதவீதமும் அதிகரித்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 3.3 சதவீதமும், முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 1.4 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

அக்டோபரில் தொழில்துறை வளர்ச்சி:

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு (அடிப்படை: 2011-12 = 100) அக்டோபரில் 2.5 சதவீதம் சரிந்துள்ளது.  நிலக்கரி உற்பத்தி 11.6 சதவீதமும், உரங்களின் உற்பத்தி 6.3 சதவீதமும் அதிகரித்துள்ளன.

மின்சார உற்பத்தி 10.5 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 2.8 சதவீதமும் அதிகரித்துள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தி 6.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 8.6 சதவீதமும் குறைந்துள்ளன. பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 17.0 சதவீதமும், எஃகு உற்பத்தி 2.7 சதவீதமும் குறைந்துள்ளன.

அமெரிக்க மத்திய வங்கியின் அள்ளித் தெளிக்கும் பணக் கொள்கையால் அதிகரித்துள்ள டாலர் பணப் புழக்கத்தின்  பருக்கைகள், இந்தியப் பங்கு சந்தைகளில் 60,000 கோடிக்கும் மேலாக அந்நிய முதலீடுகளாகச் சிந்தப்பட்டும் தலைமை வங்கியின் வெளிச்சந்தை நடவடிக்கைகளால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீட்டாளர்களைச் சார்ந்து மன்றாடி ஊசலாடுகிறது ரூபாயின் மதிப்பு. இந்தியாவில் அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் சேவைத் துறையிலேயே செய்யப்படுவதால் இவற்றின் மூலம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் திறன் மேம்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்நிய நிதி முதலீடுகளால் இந்திய மக்களுக்கு இழப்பே ஏற்படுகிறது. பாஜக அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தால் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியே கண்டுள்ளது.

தற்போதைய  நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் அனுராக் தாக்கூர் அவக்கேடான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தைச் சீர்திருத்துவதற்கான நீதிபதி லோதாவின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் தடையாக இருந்ததால் 2017ல் கிரிக்கெட் வாரியத்திலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்படவில்லை என்பதோடு அவர்தான் தற்போதைய  நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சராக இருக்கிறார் என்றால், நிதியமைச்சகம் யாருக்காக எப்படிச் செயல்படும் என்று எண்ணிப் பாருங்கள்.

இந்தியாவில் விளையாட்டுகளுக்குப் பந்தயம் கட்டுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இவர் தெரிவித்துள்ளார். இந்தியர்களிடையே பந்தயம், சூதாட்டத்தில்  ஈடுபடுவதற்கு ‘இயல்பான உள்ளுணர்வு’ இருப்பதாகவும் உலகின் பல நாடுகளில் இருப்பது போல் இந்தியாவிலும் விளையாட்டுக்குப் பந்தயம் கட்டுவது சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் வருவாய் திரட்டலாம் என்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினரான நிலேஷ் ஷா கூறியுள்ளார்.

இந்தியர்களிடையே கள்ளப் பணம் அச்சடிக்க இயல்பான உள்ளுணர்வு இருப்பதாகக் கூறி கள்ளப் பணத்தைச் சட்டப்பூர்வமாக்க முடியுமா? சமூகக் குற்றங்களைச் சட்டமாக்கி விட்டால் நியாயமாகி விடுமா? அரசு வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவது போல் சொத்து வரியையும், வாரிசுரிமை வரியையும் கொண்டுவர வேண்டும். பெருநிறுவனங்கள் மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் வரி முறைகேடு காரணமாக இந்தியா ஆண்டுக்கு 75,000 கோடி வரி வருவாயை இழப்பதாகச் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டுப் பந்தயச் சூதாட்டத்தின் மூலம் வருவாயை அதிகரிக்கலாம் என ஆலோசனை அளிக்கிறார்கள். எப்பேர்பட்ட நிதியமைச்சரையும், பொருளாதார ஆலோசனைக் குழுவையும் இந்தியா பெற்றுள்ளது!

மொத்தத்தில் பாஜக அரசு நாட்டின் அனைத்து வளங்களையும் இந்தியப் பெருமுதலாளிகளிடமும், அந்நியப் பெருமுதலாளிகளிடமும் சூதாட விடும் இடைத்தரகராகத்தான் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றமும், நிதியமைச்சகமும் தலைமை வங்கியும், செபியும், பங்குச் சந்தைகளும் சூதாட்டரங்கங்களாகத்தான் செயல்படுகின்றன என்பதையே இவையெல்லாம் சந்தேகமில்லாமல்  உறுதிப்படுத்துகின்றன.

பங்குச் சந்தை என்பது சில நெறியற்ற நெறிகளைக் கொண்ட சூதாட்டம்தான் அது சட்டப்பூர்வமாக இயங்கும் போது ஏன் பந்தயச் சூதாட்டத்தை மட்டும் தடுக்க வேண்டும் எனக் கேட்டால் அதிலும் ஒரு தர்க்கம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு நியாயமான சமூகத்தில் பங்குச் சந்தையையும் சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும்.

கியூபா போன்ற நாடுகளில் பங்குச் சந்தைகள் இல்லை. தனியார் முதலாளிகள் மூலதனம் திரட்டுவதற்கான ஒரு சட்டபூர்வமான அமைப்பாகத்தான் பங்குச் சந்தை செயல்படுகிறது. இதில் முதலீடு செய்பவர்கள் யாரும் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று முதலீடு செய்வதில்லை.

சந்தை ஏற்ற, இறக்கங்களுக்கிடைப்பட்ட வேறுபாட்டில் லாபம் ஈட்டலாம் (arbitrage) என்றே முதலீடு செய்கிறார்கள். ‘தேசப்பற்று’ என்று கருதுவதற்கு இதில் ஒன்றுமில்லை. எல்லாத் தரப்பு முதலீட்டாளர்களும் உண்மையில் அமெரிக்க மத்திய வங்கியின் மீதுதான் ‘தேசப்பற்று’ கொண்டுள்ளனர்.

பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் சில்லறை முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஈவுத் தொகை வழங்க வேண்டும் என்று ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டங்கள் எதுவும் இல்லை. அதனால்தான் நிறுவனங்களால் அதிக லாபம் ஈட்ட முடிகிறது.

பங்குச் சந்தைகளில் புரளும் மொத்த மூலதனத்தில் பெருமுதலாளிகளின் சொந்தப் பணம் என்பது மிகக் குறைவான பகுதியே. அவர்கள் ஊரார் பணத்தைத் திரட்டியும், தொழிலாளர்களின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டியும் பெருலாபம் பெறுகிறார்கள்.

கூகுள், ஃபேஸ் புக் போன்ற முற்றுரிமை பெற்ற பெருநிறுவனங்கள் சில்லறை முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய ஈவுத் தொகையைப் பணமாக அளிக்காமல் பங்குகளாக்கும் உத்தியைக் கடைபிடிப்பதாலேயே தங்கள் நிறுவனங்களை இந்த அளவுக்கு உலகெங்கும் விரிவாக்கம் செய்ய முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மக்கள்நல அரசு பங்குச் சந்தைகளைத் தடை செய்ய வேண்டும், அரசு நிறுவனங்களுக்கான மூலதனத் திரட்டலானது அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு அமைப்பு முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். அதுவே தனிநபர்களிடம் செல்வம் குவிவதையும், சமூகத்தின் பொருளாதாரச் சமமின்மையையும் தடுக்கும்.

- சமந்தா

Pin It