கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஒரு மனிதனின் குண இயல்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் சகவாசம் வைத்திருக்கும் நண்பர்களை வைத்தே சொல்லிவிடுவார்கள், அவன் யோக்கியனா இல்லையா என்று. சில பேர் தவிர்க்க இயலாமல் நட்புக்காக சில மோசமான நடத்தை உள்ள நண்பர்களுடன் நட்பைத் தொடர்ந்து பராமரிப்பார்கள். இருந்தும் தன்னளவில் நேர்மையையும், நாணயத்தையும் காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இன்னும் சில பேரோ தன்னைச் சுற்றி உள்ள அனைவரும் மிகத் தீவிரமான குற்றக்கும்பலாய் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். அவர்களும் இயல்பிலேயே நேர்மையற்றவர்களாய், மோசடிப் பேர்வழிகளாய் இருப்பார்கள். அது போன்ற நபர்களுக்குத்தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள பொறுக்கிகள், ரெளடிகளின் துணை எப்பொழுதும் தேவைப்படும். அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் நாம் உரசிப் பார்க்க வேண்டும் என்றால் அவரைச் சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தை நாம் பரிசீலனை செய்தாலே போதும்.

modi with nirav modi

யார் எல்லாம் மோடியின் நட்பு வட்டாரத்தில் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால் அமித்ஷா, ராஜ்நாத்சிங், அம்பானி, அதானி, மல்லையா, லலித் மோடி, இப்போது நாட்டைவிட்டு ஓடிப் போன நீரவ் மோடி என இந்தியாவில் உள்ள முக்கியமான கார்ப்ரேட்டுகளும், காவியிஸ்ட்களும் தான் மோடியின் உற்ற நண்பர்களாய் இருந்து வருகின்றார்கள். மோடி ஏன் இவர்களை எல்லாம் தன்னுடைய நண்பர்களாய் வைத்திருக்கின்றார் என்றால், மோடியும் தன்னளவில் ஒரு கார்ப்ரேட் கைக்கூலியாயும், காவியிஸ்ட்டாகவும் இருப்பதால்தான். மோடியின் ஆடம்பரக் கூட்டங்களுக்கும், தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலான பார்ப்பன பாசிசத்தை ஏற்றுக்கொண்ட இந்தியாவை உருவாக்கவும் இவர்கள் மோடிக்கு உதவுவார்கள். பதிலுக்கு மோடி அவர்களுக்கு உதவுவார். அது எந்த மாதிரியான உதவியாக இருந்தாலும் கண்டிப்பாக மோடி செய்வார். போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றாலும் சரி, குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றாலும் சரி, நாட்டின் வளங்களை எல்லாம் அழித்து உங்களது கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொள்ள விரும்பினாலும் சரி, இல்லை நாட்டுமக்களின் பணத்தை எல்லாம் உங்களுடைய சொந்தப் பணமாக நினைத்து சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டு ஓடிவிட விரும்பினாலும் சரி, என்ன வேண்டுமோ அதைத் தைரியமாக மோடியிடம் கேட்க முடியும். அதைச் செய்து கொடுப்பதை தன்னுடைய பிறவிப் பயனாய் கருதி, சிரமேற்கொண்டு மோடி அதைச் செய்து முடிப்பார்.

ஆனால் இது எல்லாம் பொதுமக்களின் பார்வையில் இருந்து மோடியின் செல்வாக்கில்லாமல் நாட்டின் சட்டதிட்டங்கள்படி நேர்மையாகவும், நீதிப்படியும் நடப்பதுபோலவே கட்டியமைக்கப்படும். அவர்கள் நினைத்தால் உங்களை சட்டப்படியே தூக்கிலும் போட முடியும், அவர்களின் நியாயப்படியே சுட்டுக் கொல்லவும் முடியும். அவர்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இப்போதும் அப்படித்தான். நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11300 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக சிபிஐ சொல்கின்றது. சிபிஐ வழக்குப் பதிவதற்கு ஆறு நாட்களுக்கு முன் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் மோடியுடன் நீரவ் மோடி எடுத்துக் கொண்ட குருப்போட்டோ தற்போது வெளியாகி சந்தி சிரித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் அதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

2011 ஆம் ஆண்டில் இருந்தே இந்த மோசடிகள் நடந்துள்ளதால் இதற்குக் காங்கிரஸ்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் இவர்களால் பேச முடிகின்றது. 'காங்கிரஸ் ஆட்சியிலேயே விபச்சாரம் தொடங்கிவிட்டது, எங்கள் ஆட்சியில் அது எய்ட்ஸாகப் பரிணாமம் அடைந்து விட்டது அவ்வளவுதான். ஆனால் மோடிக்கு உண்மையில் அவர் ஓர் எய்ட்ஸ் நோயாளி என்று தெரியாது. தெரிந்திருந்தால் கட்டிப்பிடித்து கைகுலுக்கி இருக்க மாட்டார், மோடி ஒரு மகா உத்தமர்' என்ற தொனியில்தான் பேசிவருகின்றார்கள்.

இருந்தாலும் நாட்டுமக்கள் மத்தியில் நீரவ் மோடியுடன் நரேந்திர மோடிக்கு கள்ளத் தொடர்பு இருக்குமோ என வலுவான சந்தேகங்கள் எழுந்துவிட்டதால் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 5100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதன் மூலம் மோடி அரசு யோக்கியர்களுக்காக யோக்கியர்களால் நடத்தப்படும் ஒரு நல் அரசு என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோடி அரசில் சிபிஐ, என்ஐஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, என எல்லாமே மோடிக்குப் புனிதர் பட்டம் கொடுப்பதற்காகவே அல்லும் பகலும் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாத ரகசியமல்ல.

எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நீரவ் மோடி நாட்டைவிட்டு ஓடிப் போகவில்லை. அவர் இந்தியாவில் மோடியின் துணையுடன் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழச் சென்றுள்ளார். நம் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் இவர்கள் ஒரு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை வாழவே வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றார்கள். 2017 ஆம் ஆண்டு மட்டும் 7000 மிகப்பெரிய பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கின்றார்கள். 2016 ஆண்டு 6000 பேரும், 2015 ஆம் ஆண்டு 4000 பேரும் வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழச் சென்றுவிட்டார்கள். மோடி போன்ற கார்ப்ரேட் கைக்கூலிகளை கையில் போட்டுக் கொண்டு இந்திய மக்களை ஒட்டச்சுரண்டி கொள்ளையடிப்பதும், பிறகு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வெளிநாடுகளுக்கு வெட்டுக்கிளிகள் போன்று பறந்து ஓடிவிடுவதும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஒரு நிகழ்ச்சிப்போக்குதான். இதைச் செய்து கொடுப்பதுதான் தரகனைவிட மோசமான குணம் படைத்தவர்களின் வேலை.

சாமானிய மக்கள் கடன் கேட்டால் அவர்களை நாயைவிடக் கேவலமாக நடத்தும் வங்கிகள், பணக்காரர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்று மக்களின் பணத்தை வாரிவாரிக் கொடுப்பதும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிசனாக எடுத்துக்கொண்டு, பணம் கொடுக்கவில்லை என்றால் வாராக்கடன் என்று கணக்குக் காட்டி அதைத் தள்ளுபடி செய்வதையும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு தொழிலாகவே செய்து வருகின்றன. அரசியல்வாதிகளும் வங்கி அதிகாரிகளும் மிகப்பெரிய அயோக்கியர்கள் என்பதற்கும், வாராக்கடன் என்று அரசு அறிவித்திருக்கும் ஏறக்குறைய 8.5 லட்சம் கோடியில் இவர்களும் கணிசமான தொகையை திருடித் தின்றவர்கள் என்பதற்கும் சாட்சி, கடன் பெற்று திருப்பி கொடுக்காதவர்கள் பெயர்களை பகிரங்கமாக இந்திய மக்களுக்கு இந்த யோக்கியர்கள் தெரிவிக்காததே ஆகும். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் அதில் மோடியின் நண்பர்கள் மட்டுமே 90 சதவீதத்திற்கு மேல் இருப்பார்கள் என நாம் நம்பலாம்.

மோடியின் ஆட்சி, ஏழைகளே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிம் 73 சதவீத பணம் குவிந்திருப்பதாகவும், 67 கோடி ஏழை இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே உயர்ந்திருப்பதாகவும் சமீபத்தில் ஆக்ஸ்பார்ம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் இந்தியாவில் உள்ள கடைசி ஏழைவரையும் முற்றிலுமாக துடைத்து அழிக்கப்படுவார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.

இந்தியாவில் இதுவரை நடந்த அனைத்து ஆட்சிகளுமே கார்ப்ரேட் நலன் காக்க நடந்த ஆட்சிகள் தான். ஆனால் அவர்கள் ஒருபோதும் அதை வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தியது கிடையாது. ஆனால் மோடியின் ஆட்சியோ அப்பட்டமாக, பட்டவர்த்தனமாக தன்னைப் பெருமுதலாளிகளின் கைக்கூலி என பிரகடனப்படுத்திக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவரால் அம்பானியின் விளம்பர மாடலாக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடிகின்றது. பார்ப்பன பாசிசமும், முதலாளித்துவ பாசிசமும் அப்பட்டமாக அம்மணமாக கைகோர்த்து நம்முன் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அது நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது என சவால் விடுகின்றது. என்ன செய்யப் போகின்றோம்? யாரோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போகின்றோம்? ஏழைகளை அழித்தொழிக்கும் பொறுக்கிகளோடா? இல்லை ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பேதத்தை ஒழிக்கும் பொதுவுடமைக்காரர்களோடா?

- செ.கார்கி