corona testing'மருத்துவனுக்குக் கொடுப்பதை விட வாணியனுக்கு கொடு' என்ற தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி, இதே கருத்தாக்கத்தில் அனைத்து மக்கள் மொழிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. அதாவது போதுமான ஆரோக்கியமான உணவு உண்டால் நோய்கள் வராது என்பதுதான் இதன் பொருள்.

கோவிட்-19 நோய்த் தொற்று எதிர்ப்பாற்றல் உள்ள மனிதர்களுக்கு வராது என்று மருத்துவ உலகம், அனைத்து மருத்துவ முறைகளுமே அங்கீகரித்திருக்கிறது..

எதிர்ப்பாற்றல் வளர அனைத்து மக்களுக்கும் போதுமான, சத்தான, ஆரோக்கியமான உணவும், குடிநீர், சுத்தமான காற்று, மகிழ்ச்சியான உறைவிடம் அவசியம். இவைகள் போதுமான அளவிற்கு இருந்தால் மட்டுமே எதிர்ப்பாற்றல் பெரும்பான்மையான மனிதர்களுக்கு இருக்கும்.

கோவிட்-19 நோய்த் தொற்று சனவரியில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதும் பரவிக் கொண்டு இருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் மோடி தலைமையிலான இந்திய அதிகார வர்க்கம் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைப் படுத்துதல், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு, மத்தியப் பிரதேச காங் ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற பாசிச அஜண்டாக்களை நிறைவேற்ற அரசாங்க நிர்வாகத்தை முடுக்கி முழுக்க தீவிரம் காட்டியது. உலக சந்தை, ஒரே சந்தை, ஒரே நாடு என்று அனைத்து நாடுகளில் இருந்தும், அனைத்து மாநிலத் தலைநகரங்களில் இருந்து இந்த வைரஸ் நோய் விமான பணக்காரப் பயணிகள், அவர்களின் வேலையாட்கள் மூலம் பரவி நிலை கொண்டது.

மார்ச் மாத இறுதியில் விழித்துக் கொண்டது போல நாடகமாடி நான்கு மணி நேரத்தில் செல்லாப்பணம் திட்டம் போல் நாட்டை ஊரடங்கால் மோடி ஆட்சி முடக்கியது.

முதல் இரண்டு ஊரடங்குகளில் பல துன்பங்களுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும் இடையிலும் மக்கள்திரள் முழுமையாக ஒத்துழைப்பு தந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தங்கள் துயரங்களுக்கு இடையிலும் தேவையான சமூக இடைவெளி கடைபிடித்தது. ஆனால் மோடி ஆட்சி ஏழை உழைக்கும் மக்கள் இரு வேலை உணவுக்கும், வாழ்வுக்கும் உத்திரவாதம் அளிக்கத் தவறியது. வரிப் பணம் முழுக்க ஜிஎஸ்டி என்ற பெயரில் வசூலித்து தங்கள் வாயில் போட்டு கொண்ட மத்திய ஒன்றிய அரசு, அந்தந்த மாநில அரசுகள்தான் மக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறிவிட்டது. இதுவரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரிப் பணத்தைத் தராமல் ஏமாற்றுகிறது.

மோடி அரசின் கொடூரம் எங்கு வெளிப்பட்டது எனில், தங்கள் உழைப்பை, வியர்வையை, இரத்தத்தைத் தந்த 40 கோடிகளுக்கு மேலான உழைக்கும் மக்களை நாயாய், பேயாய் இந்தியா முழுக்க அலைய விட்டது. மைய - மாநில அரசுக்குச் சொந்தமான பல ஆயிரம் இரயில்கள், பல இலட்சம் பேருந்துகள், வேன்கள் இருந்தும் அவர்களை பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் கால்நடையாய் நடக்க விட்டது.

நாட்டின் செல்வங்களை உழைத்துப் பெருக்கிய புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தத்தினால், பசியின் கதறலால், குழந்தைகளின் அழுகுரல்களால், முடவர்களின் பெரும் குமறல்களால், கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவ வலிகளால், முதியோரின் - நோயர்களின் துயர பெருமூச்சால் நாடே உறைந்து போனது. தங்க நாற்கர சாலைகளும், பசுமைவழி அதிவிரைவு சாலைகளும், ரயில்வே தண்டவாளங்களும் ஆயிரம் துயரக் கதைகளை தங்களுக்குள் புதைத்து அதிர்ந்து வடுக்களாய் மாறி நிலைத்துள்ளன.

இருப்பினும் கூட அய்ந்து ஊரடங்குகளுக்குப் பிறகும் கூட மத்திய - மாநில அரசுகளால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடிவில்லை. சென்னை, டில்லி, பம்பாய், பெங்களுர், அமதாபாத் போன்ற பெருநகரங்களில் மோடி ஆட்சியால் பெருமையாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட டிஜிட்டல் நகரங்களில் நோய் அதிவேகமாக நாளும் பரவி வருகின்றது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் இத்தகைய கட்டமைப்புகள் இல்லை என்பதே உண்மை. அதற்கான போதுமான திட்டமிடல்கள் மத்திய - மாநில அரசுகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகளிடம் கிடையாது. இதற்குக் காரணம் பெரு முதலாளிய - கார்ப்ப்ரேட் - சாதிப் படிநிலை திட்டமிடலான அமைப்பு முறைதான்!

இன்று ஆறாம் முறையாக சென்னை பெருநகரத்தில், அதாவது நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் இருந்துதான் இந்த தொற்றுநோய்ப் பரவலை புரிந்து கொள்ள முயல வேண்டும்.

கொரோனா ஒரு கார்ப்பரேட் வைரஸ்

அமீபா, வைரஸ், கிருமிகள், நுண்ணுயிர்கள் அனைத்தும் மனிதன் தோன்றுவதற்கு முன் பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. இவைகளின் பரிணாம வளர்ச்சியில்தான் தாவரங்கள், உயிரிகள் அனைத்தும் பரிணாம வளர்ச்சி அடைந்தன என்கிறது உயிரி அறிவியல்! இந்த அண்ட சராசரத்தில் பூமி மட்டுமே இன்று மனிதனுக்கும், அனைத்து உயிரிகளும் வாழும் தகுதியுடைய உயிர்கோளமாக இருக்கின்றது. பல கோடி மைல்களுக்கு அப்பால் இப்படி கிரகங்கள் இருக்கலாம் என்கிறது வானியல் அறிவியல் என்பது வேறு விசயம். கையில் உள்ளதை விட்டு விட்டு பறப்பதற்கு மனிதர்களை பேராசைப்பட வைக்கிறது கார்ப்பரேட் உலகு. நாளைக்கு கிடைக்கும் பலாப்பழத்தை விட இன்றைக்கு கையில் உள்ள களாக்காய்தான் மிக முக்கியம் என்பதை சிந்தனையில் இருந்து வெட்டி எடுக்க கார்ப்பரேட் நுகர்வு வெறி முயல்கிறது.

வைரஸ் நோய்கள் வரலாற்றில் பல முறை மனித குலத்தைத் தாக்கி உள்ளன. அதை எதிர்கொண்டு மனித குலம் வெற்றிகரமாக மீண்டும் வந்து இருக்கிறது. அதனால், வைரஸ் நோயைக் கண்டு மனிதர்களை பயபீதி அடைய கார்ப்பரேட் உலகம், கார்ப்பரேட் ஊடகங்கள் ஏன் முயல்கின்றன என்ற கேள்வியை எழுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும்.

400 ஆண்டுகளாக முதலாளித்துவ சமூகமும், முதலாளிய நகரமயமாக்கலும் இயற்கையை அழிப்பதன் மூலமும், உழைக்கும் மக்களின் உபரியை கபளிகரம் செய்வதன் மூலமும் பெரும் இலாபம் ஈட்டின. பின்பு அது ஏகாதிபத்தியமாக, கார்ப்பரேட் பகாசூர கம்பெனி தொடர்சங்கிலி இணைப்பாக மாறியது. இந்த கார்ப்பரேட் பேராசை வெறிக்கு உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் போதாமல், கடந்த ஒரு நூற்றாண்டில் இயற்கையை, அதன் பல வளமைகளை, அதன் இருப்பிடமான உயிர்க்கோளத்தை பெரும் சிதைவுக்கு உள்ளாக்கியது. காடுகள் சிதைக்கப்பட்டன, பல உயிரினங்கள் அழிக்கப்பட்டன. பேரழிவு போர்க் கருவி, உயிர்கொல்லி ஆய்வுகள் உயிர் சூழலியலை விஷமாக்கி அழித்தன.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. புதிய வைரஸ் நோய்கள், புவி வெப்பமாதல், பெரும் சூறாவளிகள், பூகம்பங்கள், பெருமழை என்று புதிய புதிய வழிகளில் இயற்கை எதிர்வினை செய்தது. அதில் ஒன்றுதான் கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 ஆகும். அனைத்து அறிவியல் ஆய்வுகளும், சமீபத்திய இந்திய உச்ச நீதி மன்றமே இதை வெளிப்படையாக அறிவித்து உள்ளது. அதனால் இந்த வைரஸ் நோயை கோவிட்-19 என்பதற்கு மாறாக கார்ப்பரேட் வைரஸ் என்று அழைப்பதுதான் உண்மையில் பொருத்தமாக இருக்கும்.

அமெரிக்கா - சீன ஏகாதிபத்தியங்களின் கூட்டு உயிரியல் ஆய்வுகள் நடைபெறும் இடமான சீனாவில் யுனான் பிரதேசத்தில் இந்த கார்ப்பரேட் கோவிட்-19 வைரஸ் உருவானது. மிக இயல்பாக அந்தப் பகுதி மட்டும் முடக்கப்பட்டு இருக்க முடியும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் சீனாவுக்கும், பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கும் உண்டு. உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தராள மயமக்கல், உலக வர்த்தக அமைப்பு (WTO) இணைந்த ஏகாதிபத்திய பேராசை, கார்ப்பரேட் உலக சந்தை தான் இந்த கோவிட்-19 யை விமானங்கள் மூலம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. அதுவும் பெரும் பணக்காரர்களும், அவர்களின் பணியாட்களும் இந்த வைரஸ் நோயை சுமந்து சென்று பரப்பியவர்கள். இவர்கள்தான் இந்த வைரஸ் நோயை சுமந்து விமானங்களின் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கடத்தினர். இதைத் தடுக்க மார்ச் மாதம் இறுதி வரை மோடி அரசோ, மாநில அரசுகளோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தொடர் சங்கிலியாக இவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கும், பின் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கும் பரவியது.

வேறுவழி இன்றி தொடர்ந்து மூன்று மாதங்கள் ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப் படுத்தின. இந்த பேரிடரிம் ஒன்றிய அரசு தனது குடிமக்களின் தேவைகளை முற்றிலும் புறக்கணித்தது. மாநில ஆட்சிகள்தான் செய்ய வேண்டும் என்று இந்துத்துவக் கும்பல்கள் அறிக்கைகள் விட்டன. மாநில அரசுகளின் வரி முழுவதையும் பிடுங்கிக் கொண்டு நோய்த் தொற்றைப் போக்கும் மக்கள்நலப் பணிகள், மருத்துவப் பணிகளில் மெத்தனத்தை, செயலின்மையை வெளிப்படுத்தியது. பழியை மட்டும் மாநில அரசுகள் மேல் தூக்கிப் போட்டது.

இந்த ஊரடங்கின் பொழுது ஆட்சியாளர்களும், அரசு நிர்வாக இயந்திரமும் செயல்பட்ட முறைகள் பற்றி நிறைய கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்துள்ளதை நண்பர்கள் பொறுமையாக வாசிக்க வேண்டும். கீற்று தளம் உட்பட பல இணைய தளங்களில் ஆய்வு கட்டுரைகள் புள்ளிவிவரங்களுடன் கொட்டிக் கிடக்கின்றன. இந்த ஊரடங்கு கால ஓய்வு நேரங்களை இந்த வாசிப்புகள், காணொளிகளுக்குப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் அறைகூவலாகும்.

முக்கியமாக இந்த நோய்ப் பரவலின் ஆரம்பத்தில் பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட ஒரு விசயத்தை இப்பொழுது அரசுகளும், ஊடகங்களும் இல்லாமல் செய்து விட்டன. அதுதான் கோவிட்-19 உருவான காரணம்... நோயை உலகமாக்கல், நோய் தாராளமாக்கல், நோய் நிலைத்துப் பெருகுவதற்கு காரணியாக இருந்த முதலாளித்துவ அதாவது ஏகாதிபத்திய சமூக அமைப்பு முறை என்பதுதான்.

இந்த நோய்க்கு அதிக சாவுகள் நிகழ்ந்தது அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டில்தான்... பூலோக சொர்க்கம் என்று தன்னைத் தானே வர்ணித்துக் கொண்ட அழுகும் ஏகாதிபத்திய பொருளியல் கட்டமைப்புக்கு அமெரிக்க ஏழைகள், அதிலும் கருப்பின ஏழைகள்தான் பலியாயினர். பொது சுகாதார – அரசு சுகாதார கட்டமைப்புகள் அற்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவக் காப்பீடு முறைமை, தனியார் மருத்துவமனைகளால் இவர்கள் பாதிக்கப்பட்டு பலியானர் என்பதைத் தான் அமெரிக்க மக்கள்திரள் போராட்ட முழக்கங்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற முக்கிய ஏகாதிபத்திய நாடுகளில் கோவிட்-19 சாவுகள் அடுத்த அடுத்த முன்னிலை வரிசைகளில் ஏறியும் இறங்கியும் இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பொது சுகாதார கட்டமைப்பை அழித்து தனியார் மருத்துவமனைகள், முதலாளிய மருத்துவ காப்பீடு முறைகளை ஊக்குவிக்கும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் இந்த வரிசையில் முந்திக் கொள்ளத் துடிக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்!!

சென்னை போன்ற பெருநகரங்களின் திட்டமிடப்படாத சடை சடையான தொங்குசதைகளான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் இலாப வேட்டை, பேராசைதான்... மையப்படுத்தப்பட்ட சமூக வாழ்வுக்கு மாற்றாக பரவலான, பன்முக சமூகக் கட்டமைப்பை தமிழ்நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். இல்லாவிடில் வள்ளலாரால் தருமிகு சென்னை என்ற சென்னை பயந்து ஓடும் பாழ் நகரமாகத்தான் மாறும்.

இறுதியாக…

முதலாளித்துவ சமூக முறை ஏற்றத் தாழ்வான கட்டமைப்பை உருவாக்கியது. கார்ப்பரேட் முதலாளியம் அதை இன்னும் தீவிரமாக்கி இலாப வெறி கொண்டு சுற்றுப்புற சூழலை, பல்வேறு உயிரினங்களை அழித்துக் கொண்டு வருகின்றது. உயிரின உணவுச் சங்கிலித் தொடர்ச்சி அழிப்பு, சூழலியல் அழிவின் தொடர்ச்சிதான் விதவிதமான நோய்கள், புதிய வைரஸ்கள் தோற்றுவாய் அல்லது மிகையான பரவலுக்குக் காரணம். எனவே பொது சுகாதார மருத்துவக் கட்டமைப்பை வளர்ப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவசியம். அதைச் செய்ய வேண்டி அரசை வலியுறுத்த வேண்டும். அதை விட மனிதர்களுக்கு எதிர்ப்பாற்றல் வளர சத்தான சுகாதாரமான உணவு, குடிநீர், காற்று, உறைவிட அவசியத்தை உரக்கப் பேச வேண்டிய நேரம் இதுவாகத் தானே இருக்க முடியும்?

ஆனால், நமது விவாதங்கள் 'கொரோனாவிற்கு தடுப்பு மருத்துகள், குணமாக்கும் மருத்துகள் இல்லை. அதை உடனே தீர்க்க செல்வத்தை, பெரும் மூலதனத்தை செலவிட வேண்டும்' என்று திசை திரும்புவது சரியானதல்ல. ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், தூய்மையான மாசற்ற காற்று, போதுமான அறைகள் கொண்ட உறைவிடம் - மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்க எடப்பாடி ஆட்சியை, மோடி ஆட்சியை நோக்கி கேள்வி எழுப்புவதில் தவறுகிறோம்.

அலோபதி தனியார் மருத்துவக் கட்டமைப்பை வளர்ப்பது, அலோபதி ஆராய்ச்சிகளுக்கு மட்டும் மக்கள் வரிப்பணம் செலவழிப்பதில் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தின் கவனம் குவிக்கப்படுகிறது. சித்தா, ஹோமியோபதி, யூனானி, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் உட்பட அனைத்து மருத்துவ முறைகளையும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் சிறப்பான கூறுகளை வளர்த்தெடுக்க ஆராய்ச்சிகள் செய்ய அரசுகள் பெரும்பணத்தை செலவிட வேண்டும்.

மருத்துவக் கட்டமைப்பை வளர்ப்பது என்பது தனியார் மருத்துவமனை கொள்ளையைத்தான் உந்தித் தள்ளுகிறது. மாறாக ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பு, இயற்கையோடு இயைந்த மனித வாழ்வுக்கும், மகிழ்ச்சியான மனித வாழ்வாடு இணைந்த இயற்கைக்கும் அதாவது முதலாளியத்துக்கு மாறான சோசலிச கட்டமைப்புக்காக விவாதங்களை முன்னெடுப்பதுதான் அவசியமானது. கோவிட்-19 நோய்த் தொற்று, பரவல், மரணங்கள் புள்ளிவிவரங்கள் அதைத் தான் நமக்கு உணர்த்துகின்றன.

மருத்துவனுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடு என்ற பழமொழியின் அர்த்தத்தை சரியாக உணர்ந்து, அதைப் பரப்புவோம்!!

- கி.நடராசன்

Pin It