modi at world hindi conference

 இந்தியப் பொருளாதாரமே திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாட செய்தியாகி விட்டது. வெங்காய விலையும், பருப்பு விலையும் அதனைச் சாமானிய மக்களின் உணவுப்பட்டியலில் இருந்தே விரட்டிவிட்டன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் படாத மோடி அரசு தன்னுடைய பார்ப்பனிய சித்தாந்தத்தை வலுப்படுத்தும் வேலையையே மும்முரமாக செய்துகொண்டு இருக்கின்றது.

 போபாலில் நடந்த இந்தி மாநாட்டை துவக்கிவைத்து மோடி பேசிய பேச்சுக்கள் அவரை இந்திய நாட்டுக்குப் பிரதமர் என்பதை விட இந்தி நாட்டுக்குப் பிரதமர் என்பதைத் தெளிவாக காட்டிவிட்டன. இந்தியாவில் ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 22 மொழிகள் அரசியல் சட்டத்தின் விதிகள் 344(1), 355 ஆகியவற்றின் படி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியைத் தவிர மற்ற மொழிகளைப் பேசும் கோடானகோடி இந்திய மக்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒரு இந்திய நாட்டின் பிரதமர் செயல்படுகின்றார் என்றால் அவர் எப்படிப்பட்ட பிற்போக்கான சிந்தனைப்போக்கு உடைய பிரதமராக இருப்பார்.

 இந்தியா என்பது எப்போதும் ஒரு ஒன்றுபட்ட தேசமாக இருக்க முடியாது, அப்படி இருக்கவும் விடமட்டோம் என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தியா போன்ற பல்வேறு தேசிய இன மக்கள் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளுடன் வாழும் ஒரு நாட்டில் அவர்களின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்தொழிக்கும் பார்ப்பனிய சதியே இந்த இந்தி மாநாடு.

 மாநாட்டில் பேசிய மோடி வழக்கம் போல தன்னுடைய வரலாற்று அறிவை வெளிப்படுத்தும் பல அறிய கருத்துக்களைப் பேசினார். ”சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய திலகர், ராஜாஜி போன்றவர்களின் தாய் மொழி இந்தி இல்லை, ஆனால் அவர்கள் இந்தி மொழியை ஓர் இயக்கமாக கொண்டுபோய் மக்களிடம் சேர்த்தார்கள், அவர்களிடம் தொலைநோக்குப்பார்வை இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர்”. என்று சொல்கின்றார் மோடி. இந்த மூன்று பேரில் திலகரும், ராஜாஜியும் அப்பட்டமான இந்துமதவெறி பார்ப்பன பாசிஸ்டுகள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதில் 1937-ல் ராஜாஜி முதலமைச்சர் ஆனவுடன் இந்தியைத் தமிழ்மக்கள் மீது திணித்ததும், பிறகு பெரியார் அவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்திற்குப் பயந்து ராஜாஜி கட்டாய இந்தி திணிப்பை விலக்கிக் கொண்டதும் மீண்டும் அதே ராஜாஜி 1957-ல் ‘ஒரு போதும் இந்தி வேண்டாம்’ என்று அந்தர்பல்டி அடித்ததும் வரலாறு. ஆனால் மோடி போன்ற வரலாற்றுப் புரட்டர்கள் இதைப் பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது.

 இந்த மாநாட்டில் மோடி பேசிய ஒவ்வொரு பேச்சும் மோடியை மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த ஆர்.எஸ்.எஸ் காவிப்பட்டாளத்தின் மதவெறியையும், இந்தி வெறியையும் அம்பலப்படுத்துவதாகவே இருந்தது. குறிப்பாக சொல்லப்போனால் வரும் காலங்களில் ஆங்கிலம், சீன மொழி, இந்திமொழி போன்ற மொழிகள்தான் டிஜிட்டல் உலகில் செல்வாக்குடன் விளங்கும் என்று மோடி பிதற்றியதைச் சொல்லலாம். ஆனால் மோடி இந்த மாநாட்டில் ஒரு உண்மையை அவரையே அறியாமல் சொல்லிவிட்டார் அது என்னவென்றால் குஜராத்துக்கு எருமை மாடுகள் வாங்க வந்த வியாபாரிகளுக்கு டீ விற்றுதான் தான் இந்தி கற்றுக்கொண்டேன் என்று சொன்னது. எவ்வளவு பெரிய அரிய உண்மை பார்த்தீர்களா!

 மோடி போன்ற அறிவிலிகளாலேயே எருமைமாடு மேய்ப்பவர்களிடம் பேசி இந்தியைக் கற்றுக்கொள்ள முடியும் என்றால் ‘இந்தி பேசும்’ மாநிலங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த எங்கள் சகோதரர்களிடம் இருந்து தேவைப்பட்டால், அதற்கான அவசியம் இருந்தால் எங்களாலும் இந்தியைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியும். பிறகு எதற்காக பள்ளிகளிலும், மற்ற அரசு அலுவலகங்களிலும் இந்தியைக் கட்டாயமாக திணிக்க வேண்டும்.

 “எனது தாய் மொழி குஜராத்தி என்றாலும், எனக்கு இந்தி தெரியாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்து வியப்படைகின்றேன்” என்கின்றார் மோடி. இதில் வியப்படைவதற்கு என்ன இருக்கின்றது. ஒரு மோசமான இந்தி வெறி பிடித்த பிரதமரிடம் இருந்து இந்திய மக்கள் தப்பித்து இருப்பார்கள், அவ்வளவு தான்.

 மேலும் இந்தியை ஐ.நா வில் 7- வது அலுவல் மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ஆகும் செலவு 270 கோடியை இந்திய அரசே ஏற்கும் என்றும், பணம் ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கின்றார். அனைத்து மக்களையும் தன்னுடைய சொந்த மக்களாக நினைக்க மறுக்கும் பார்ப்பனியம், அனைத்து மக்களின் வரிப்பணத்தை மட்டும் தன்னுடைய வீட்டுப் பணமாக எப்படி நினைக்கின்றது என்று பாருங்கள். இந்தியாவில் உள்ள மற்ற மொழிகள் அனைத்திற்கும் இந்தியிலேயே ஒப்பாரி பாடி இறுதி ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

 இன்று இந்தியாவிலேயே இந்தியை கடுமையாக எதிர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே இருக்கின்றது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இந்தியை மூன்றாவது மொழியாகவாவது ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இருமொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கின்றது. இங்கு தனியார் நடத்தும் ஆங்கில வழிப்பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளைத் தவிர மற்ற அரசு பள்ளிகள் அனைத்திலும் தமிழ் மற்றும் ஆங்கிலமே நடைமுறையில் உள்ளது. அதனால்தான் இல.கணேசன், இராம கோபாலன், எச்.ராஜா போன்ற பார்ப்பன கிரிமினல்கள் தொடர்ந்து தமிழ்மொழிக்கு எதிராகவும் இந்திக்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 ‘இந்திக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும்’ என்று இல.கணேசன் கொக்கரிப்பதற்கும், ’உலகமக்களுடன் தமிழர்கள் இணக்கமாக வாழமுடியாத சூழ்நிலையைத் தமிழக திராவிட கட்சிகள் உருவாக்கிவிட்டன’ என்று எச்.ராஜா மிரட்டுவதற்கும், ‘தமிழக பள்ளிகளில் இந்தி கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஜனநாயக விரோதமானது’ என்று இராம.கோபலான் சீற்றமடைவதற்கும் உண்மையான பொருள் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவாக இருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அது எப்போதும் இந்து, இந்தி, இந்தியா என்ற பார்ப்பனிய கருத்தியலை ஏற்றுக்கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கவேண்டும் என நிர்பந்திப்பதுமே ஆகும்.

 ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில மக்கள் இந்த இந்தி மாயைக்கு ஆட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பணியை எப்போதும் சிறப்பாகவே செய்துவந்திருக்கின்றன. இந்தி படித்தால் வேலை கிடைக்கும், இந்தி படித்தால் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம் என்ற போலியான எண்ண ஓட்டத்தில் பலர் வாழ்கின்றனர். இன்று இந்த உண்மையை தெரிந்து கொள்ள அந்த மாநிலத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. உங்களது கைபேசியில் நீங்கள் இந்தியால் முன்னேறிய மாநிலத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும், இந்தியால் வாழ்ந்த மாநிலங்களை விட இந்தியால் கெட்ட மாநிலங்களே அதிகம் என்று.

 நாம் இந்தியை ஆதரிப்பது என்பது பார்ப்பனியத்தை ஆதரிப்பது என்பதாகவே பொருள். முதலில் இந்தி என்றார்கள், அப்புறம் சமஸ்கிருதம் என்றார்கள், யோகா என்றார்கள். இப்போது கலாச்சார மாசுக்களில் இருந்து நாட்டை காப்பாற்ற ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்போகின்றோம் என்கின்றார்கள், அடுத்து மனுதர்ம சாஸ்த்திரத்தைப் பாடமாக வைத்தாலும் வைப்பார்கள் போல் இருக்கின்றது. நாம் நம்முடைய மொழியையும், நம்முடைய மண்சார்ந்த பண்பாடுகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அனைத்தையும் எதிர்த்துத்தான் ஆகவேண்டும். இல்லை என்றால் கடைசி வரையிலும் பார்ப்பனனுக்கும், பார்ப்பனியத்துக்கும் அடிமையாக இருந்து சாகவேண்டியதுதான். சமீபத்தில் படித்த புத்தரின் சிந்தனை ஒன்று என் நினைவுக்கு வருகின்றது. “உண்மையை உண்மைதான் எனத் தெரிந்துகொள்; உண்மைக்குப் புறம்பானது உண்மையல்ல என்பதையும் தெரிந்துகொள்.”

- செ.கார்கி

Pin It