இந்தியர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பது குறித்த நாட்டுப்புறக் கதைகள் வழக்கில் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தினர் (WHO) 9. 5. 2014அன்று வெளியிட்ட புள்ளி விபர அறிக்கையில், இந்தியாவில் 59. 7 கோடி மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும், வங்கதேசம், வியட்நாம், பெரு போன்ற மற்ற ஏழை நாடுகள் சுகாதார வசதிகளை மேம்படுத்தியிருக்கையில் இந்தியாவில் மட்டும் இவ்வசதி மேம்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை இராமியா தமது ‘திறந்த வெளிக் கழிப்பறையும் சாதிய ஒடுக்குதலும்’ என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். (2014. 1)

open toilet‘தூய்மை இந்தியா திட்டம்’ அக்டோபர், 2014-இல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ்இந்தியக் கிராமப்புற வீடுகள் அனைத்தையும் கழிவறை வசதி உள்ள வீடுகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசும், நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் கிடைத்திட வகை செய்யும் தமிழ் நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (தாய்) மாநில அரசும் மேற்கொண்டுள்ளன.

நகர்ப்புறங்களுக்கு ரூ. 62,009கோடி ஒதுக்கீடு செய்து தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் நாடெங்கிலும் நகர்ப்புறங்களில் மட்டும் 4. 35 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. (தினமணி, தில்லிப் பதிப்பு- 18. 08. 2015).

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அதிக அளவில் பொதுக்கழிப்பிடங்களைக் கட்டியதில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளதாகத் தில்லி மார்தட்டிக் கொள்கிறது. (தினமணி, தில்லிப் பதிப்பு- 08. 07. 2015). அதே சமயம் பிரதமரின் கனவுத் திட்டமான ‘தூய்மை இந்தியாவை’ பிரபலப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்று அதன் தூதுவர்களிடத்தில் குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்துள்ளதும்(தினமணி- தில்லிப் பதிப்பு, 11, செப்டம்பர், 2015) இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

சென்னை, மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள், குடிசைவாசிகள், தெருவோரவாசிகள், வீடில்லதவர்கள் முதலானோர் ரயில் தண்டவாளங்கள், புதர்மறைவுகள், ஒதுக்குப்புறங்களை கழிப்பிடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். உண்டது ஜீரணித்த பிறகு தினமும் காலையில் ஆண்கள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீருடன் புதர் மறைவிற்குள் ஒதுங்கும்போது அவர்களுக்கு வயிற்றைப் பிசையலாம், நமக்கோ மனதைப் பிசைகிறது. இவர்களில் ஆண்களைவிடப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் ஜீரணிக்க முடியாதவை.

கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் முறையான கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை. போதுமான தண்ணீர் வசதியும் இருப்பதில்லை. கிராமங்களில் கட்டித் தரப்படுகின்ற தனிக்கழிவறைகளாகட்டும், பொதுக்கழிவறைகளாகட்டும் ஒப்புக்காகவும், கணக்குக் காட்டுவதற்காக்கவுமே கட்டித் தரப்படுகின்றனவே ஒழிய தரமானவையாக கட்டித் தரப்படுவதில்லை. அவற்றிலும் முறையான, நிரந்தரமான, போதுமான தண்ணீர் வசதி இருக்காது. கழிப்பறைகளைப் பராமரிக்கத் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் அவற்றைப் பயன்படுத்துவதில் சில தயக்கங்களும், ஒதுக்குதல்களும் நடைபெறுகின்றன. மக்களிடையே கழிப்பறை குறித்த விழிப்புணர்வு இல்லாமையும் இன்னொரு காரணமாகும்.

இதைக் காரணம் காட்டி, தமிழ் நாட்டில் 53 சதவீதம் பேர் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்லை என்று தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. (தினமணி, தில்லிப் பதிப்பு. 19. 11. 2014).

தனிக்கழிப்பறையை அமைக்க அரசு அளிக்கும் உதவித் தொகையை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 12ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதைத் தவறாகப் பயன்படுத்தும் நடைமுறையும் தமிழகத்தில் நிலவுகிறது. சேலம் மாவட்டம் கொளத்தூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராமங்களில் ரூ. 12 ஆயிரத்தில் கழிவறை கட்டும் பணிக்காக ஒப்பந்தகாரரிடம் ரூ. 2000 லஞ்சத்தொகையை கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். (தினகரன், தில்லிப் பதிப்பு. 22. 08. 2015).

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் நடந்த சுடுகாட்டுக் கூரை ஊழல் போல கழிவறை ஊழலும் தொடங்கிவிட்டது என்பதை இது காட்டுகிறது.

ஒருபுறம் திறந்தவெளிக் கழிப்புமுறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர்களுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வலியுறுத்திவருகிறார். இன்னொருபுறம் நம் நாட்டு மக்கள் திறந்தவெளிகளைக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவது தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.

திறந்தவெளிக் கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம் 1993—ல் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. 2002-இல் 16 மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டன. ஆனாலும், இன்னும் திறந்தவெளிக் கழிப்பு முறையும், மனிதக் கழிவை மனிதர் அள்ளும் அவல நிலையும் தொடர்கிறது.

நாடு முழுக்க நடுத்தர மற்றும் சிறு நகரங்களில் உள்ள வீடுகளில் எடுப்புக் கக்கூஸ் முறையில் கழிக்கப்படும் மலத்தையும், நகராட்சித் தெருக்கள் மற்றும் திறந்தவெளி மலக் கழிவுகளையும் தாழ்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களே கூடைகளில் / வாளிகளில் அள்ளித் தலையில் சுமக்கும் அவலம் இன்னும் தொடர்கிறது. தமிழ்நாடு உட்பட எந்த மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மதுரையில் திறந்தவெளிக் கழிப்பறையாக மக்கள் ஆக்கியுள்ள பெருமாள் கோவில் சந்தையை, தினசரி காலை 6 முதல் 9 மணிவரை தனது கைகளால் சுத்தப்படுத்தும் தலித் பெண் மாரியம்மாளைப் பற்றி இளைஞர் அமுதன் எடுத்துள்ள ‘பீ’ என்ற குறும்படம் இதற்கு சரியான ஆவணம். இந்தக் குறும்படத்தைப் பார்க்கும் மனசாட்சியும் கருணையும் உள்ள யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது?.

கோவிலில் மணியடிக்க இயந்திரம் கண்டுபிடித்திருக்கும் நம் தேசத்தார் கையால் மலம் அள்ளும் கொடுமையைக் கண்டும் காணாமல் இருப்பதன் காரணம் புரியவில்ல!. மனிதக் கழிவுகளை அறிவியல் முறையில் அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு முன்னுரிமை அளித்து அவற்றை முனைப்புடன் செயல்படுத்த அரசுக்கு என்ன தயக்கம் என்று விளங்கவில்லை?.

நகரத்தில் வாடகை வீடுகள் வளாகத்திலுள்ள பொதுக் கழிவறையைக் சுத்தம் செய்யும் தலித் பெண் வயிற்றுப்போக்கு காரணமாக ஒருமுறை அந்தப் பொதுக் கழிவரையைப் பயன்படுத்தியதற்காகப்வாடகை வீட்டு எஜமானிகளால் அவமானப்படுத்தப்பட்டதை பாமாவின், ‘எளக்காரம்’ சிறுகதை சித்திரிக்கிறது. கழிவறையைப் பயன்படுத்துவதில் கூட தீண்டாமையா?.

அடைமழைக் காலத்தில் ஆவாரஞ் செடியை மடித்து அதன்மேல் மலம்கழித்துவிட்டு எழும்பியபோது ஏற்பட்ட அசிங்கத்தை ‘ஆள் சீர் கண்டுல்லோ ஆவாரஞ்செடி கூட பீய்ய வாறி அடிக்கி’ என்று திறந்த வெளி மலக்கழிப்பின் கொடுமையை எண்ணி ஒரு பாமரன் புலம்பியதை கி. ராஜநாராயணன் தமது தாத்தா சொன்ன கதைகளில் பதிவு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் தனியார் நிறுவனங்கள், நகராட்சிகள் நிர்வகிக்கும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் மிகுதியாக உள்ளன. தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகளவு திறந்தவெளிக் கழிப்பிடங்கள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் நிஜாமாபாத் நகர நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே திறந்தவெளிக் கழிப்பிடம் உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் 236 திறந்தவெளிக் கழிப்பிடங்கள் உள்ளன என்று பெசவாடா வில்சன் ‘இந்தியா நாறுகிறது’ என்ற தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ( 2008: 7-18)

திறந்தவெளிக் கழிப்பு முறை விசயத்தில் நகரங்களின் அவல நிலையே இப்படியிருக்கையில் கிராமங்களின் அவல நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.

தமிழகக் கிராமங்களிலுள்ள வீடுகளில் ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலான வீடுகளில் தனிக் கழிவறை வசதி இல்லை. ஆண்களும் பெண்களும் திறந்தவெளிப் பொதுக் கழிப்பிடங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, அந்தந்த ஊர்களிலுள்ள குளத்தங்கரைகளும், குளத்தின் உள்வட்டப் பகுதிகளும், கிராமத்தைச் சுற்றியுள்ள வெளிவட்டப் பகுதிகளும், ஓடைகளும் தான் ஊர் மக்கள் அனைவரின் திறந்தவெளிப் பொதுக் கழிப்பிடங்களாகும். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களின் நிலை இதுதான்.

 பல்வேறு இன மக்கள் அதிகம் வசிக்கும் தமிழகக் கிராமங்களில்திறந்த வெளிகளில் மலம் கழிப்பதில் கூட சாதிப் பாகுபாடு காட்டப்படுகிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் ஊரின் கீழ்புறம் ஒரு ஓரத்தில், எல்லோரும் கொல்லைக்கிருக்கிற பீமந்தையோரம், சுடுகாட்டுக்குப் போற பாதையோரம்தான் இருக்கின்றன. தமிழகத்தில்எந்தக் கிராமத்திலும் துப்புரவுப் பணியாளர்களின் குடியிருப்புக்கள் ஊரின் மையப் பகுதியில் இருபதாகத் தெரியவில்லை .

தமிழகத்திலுள்ளஒட்டுமொத்த கிராமங்களில்வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தமிழக அரசு விதிமுறைகள் மற்றும் ஆணைகளின்படி இதுவரை கட்டிக்கொடுக்கப்பட்ட பொதுக்கழிவறைகள் மற்றும் சுகாதார வளாகங்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில்தான் உள்ளன. அவைகளும் அனைத்து வசதிகளுடன் தரமானவையாக இல்லை என்பது கண்கூடு.

கிராம மக்களுக்கெனத் தனியான பொதுக்கழிவறைகள் மற்றும் சுகாதார வளாகங்கள் மிகுதியாக இல்லாததால், பள்ளி, கல்லூரி செல்லும் வளரிளம்(Teenage) மாணவிகள், பெண்கள், கர்ப்பிணிகள், மூதாட்டிகள் என அனைவரும் அதிகாலையில் எழுந்து, கும்மிருட்டில், ஆண்கள் நடமாட்டத்திற்கு முன்பே ஊரைச் சுற்றியுள்ள ஓடைகளுக்குச் சென்றும், முட்செடிப் புதர் மறைவுகளுக்குள் சென்றும், வீடுகளை விட்டு நீண்ட தூரம் நடந்து சென்றும் காலைக்கடன்களை (சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ) முடிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. கிராமத்துப் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய அவமானம் இது.

காலைக் கடன்களை முடிக்கவே நீண்ட தூரம் அலைவதால் கிராம மக்களின் நேரம் வீணாகிறது. குறித்த நேரத்தில் மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லமுடிவதில்லை. பெண்கள் சரியான நேரத்திற்குக் கூலி மற்றும் இதர அன்றாட வேலைகளுக்குச் செல்லமுடிவதில்லை.

இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும், காற்றடிக் காலங்களிலும் திறந்தவெளிக் கழிப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் மாணவிகள்,பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர், நோயாளிகள் என எல்லோரும் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். திறந்தவெளிக் கழிப்பிடங்களாலும், அவற்றைப் பயன்படுத்துவதாலும்,மக்களுக்கு அடிக்கடி தொற்று நோய்களும் பரவுகின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலையும் உருவாகிறது. பாம்பு, தேள் முதலான உயிர்க்கொல்லிகளின் அச்சுறுத்தலும் உள்ளது. இரவு நேரங்களில் திறந்தவெளிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் நிலவுகிறது.

திறந்தவெளிப் பொதுக்கழிப்பிட மலக் கழிவுகளால் இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும், காற்றடிக் காலங்களிலும் துர்நாற்றம் சகிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தினமும் துர்நாற்றம் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் அடிக்கடி தொற்று நோய்களும், தோல்நோய்களும் பரவுகின்றன. இதனால், குழந்தைகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் என எல்லோரும் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சுகாதாரச் சீர்கேடும் உண்டாகிறது.

மத்தியப்பிரதேசத்திலுள்ள கிராமமொன்றிற்கு புதிதாகத் திருமணமாகிப்போன பெண் கணவர் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியில் காலைக்கடன்களைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவமானமாக உணர்ந்த அப்பெண் திருமண வாழ்க்கையே வேண்டாமென்று தாய் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

புகுந்த வீட்டில் கழிவறை இல்லாததை அறிந்த புதுமணப்பெண் தனது தாலியை விற்றுக் கழிவறை கட்டிக்கொண்டதும், கழிவறைக் கோப்பையை சீதனமாகப் புகுத்த வீட்டிற்குக் கொண்டு சென்ற மணப்பெண் குறித்தும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை, தனிக்கழிவறை குறித்த விழிப்புணர்வைக் காட்டுகின்றது. எனினும், உத்திரப் பிரதேசம், பதான் (Badaun) என்ற கிராமத்தில் 27. 05. 2014அன்று இரவில் திறந்த வெளியில் மலம் கழிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதொடு அல்லாமல் கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இன்றைய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலையாகும்?.

இந்த அவலம் காலங்காலமாக நடைமுறையில் உள்ளது. பல தலைமுறைகளாக இந்தக் கஷ்டமான, அசிங்கமான, அறுவெறுக்கத்தக்க, வெட்கக்கேடான, பாதுகாப்பில்லாத சூழலில்தான் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காலங்காலமாக, ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்ளாத நிலையில், வேறு வழி இல்லாததால் இதுவே கிராம மக்களுக்குப் பழகி விட்டது, நிரந்தரமுமாகிவிட்டது. விளைவு கிராமத்துப் பெண்கள் பாதுகாப்பின்மையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சுதந்திர இந்தியாவில், கிராம மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை?.

இந்திய நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்திய கிராம மக்கள் தங்களின் கிராமங்களைச் சுற்றியுள்ள வெளிவட்டப் பகுதிகளையே திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்தும் அவல நிலை இன்னும் தொடர்கிறது. மழைக் காலங்களில் மலக்கழிவு நாற்றத்தினைத் தாங்க முடியாமல் கிராம மக்கள் திணறு கின்றனர். குறிப்பாக அடைமழைக் காலங்களில், கிராமப் பெண்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.

நாடு சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளாகியும் கிராம மக்கள் தங்களுக்கான கழிப்பிடங்களைப் பெறவில்லை என்பது, வெட்கமும், வேதனையும் படவேண்டிய விஷயமாகும். மேட்டுக்குடியினர் மட்டுமே பயன்படக் கூடிய பல திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அனைவருக்குமான சுகாதாரமான கழிப்பிடங்கள் திட்டத்தை அமல்ப்படுத்துவதில் என்ன தயக்கம்?. கழிப்பிடத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மாற்றுத் திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுகிறதா? என்றும் தெரியவில்லை? இதன் உள்நோக்கம் என்னவென்று விளங்கவில்லை.

நமது நாட்டின் இன்றைய மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 62 கோடிப்பேர், திறந்தவெளிகளையே கழிப்பிடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று ஜெயபாஸ்கரன் தமது ‘காட்டு வெளியினிலே’ என்ற கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். (ஜெயபாஸ்கரன்:2014:1)

ஐ.நா அவையில் நிரந்தர இடம் கோரும் இந்திய அரசு, தனது சொந்த நாட்டுக் கிராமக் குடிமக்களுக்குத் தனிக் கழிவறை வசதி இல்லை என்பதைக் கண்டுகொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. வல்லரசு நாடாக ஆசைப்படுவதில் கூடுதல் முனைப்பு காட்டும் நம் தேசம், நகரங்களிலும், கிராமங்களிலும் மக்களுக்கு சுகாதாரமாக, பாதுகாப்பாக மலம் கழிக்கும் வசதியை ஏற்படுத்தித்தர முடியாதது குறித்து ஏன் சிந்திக்கவில்லை? இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கால தாமதம் என்பதும் விளங்கவில்லை.

மங்கள்யான், சந்திராயன் வாயிலாக விண்வெளி ஆய்வில் சாதனைகள் படைத்துவரும் இந்தியா, தனது சொந்த நாட்டு மக்களில் 62 கோடிப் பேர் திறந்தவெளிகளைக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை. காலங்காலமாக் கிராம மக்கள் மட்டும் ஏன் இந்த அசிங்கமான சூழ்நிலையில் வாழ வேண்டும் ?.

மத்திய அரசின் தூய்மை இந்தியாதிட்டம் நடைமுறையில் உள்ள சூழ்நிலையில்,  திறந்த வெளிகளைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் முறையை விரைந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ள நிலையில்,திறந்தவெளியில் மலம் கழிக்கும் இழிவான நிலை மேலும் தொடரக் கூடாது.

திறந்தவெளிக் கழிப்பு முறையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தனிக்கழிப்பறையை அமைக்க அரசு அளிக்கும் உதவித்தொகையை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 12ஆயிரமாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் உயர்த்தியுள்ள நிலையில் (தினமணி -  தில்லிப் பதிப்பு, 07. 11. 2014)

பல்வேறு அறிவியல் வசதிகள் வந்துவிட்ட இக்காலத்தில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறை இன்னும் தொடர்கிறது. இது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். இந்திய கிராமங்கள் அனைத்தும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணப்படவேண்டும்.

சமீபத்தில், திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிக்கத் தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதாரத் தூதுவராக நியமிக்கத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. (தினகரன், தில்லிப்பதிப்பு,13. 9. 2015).

பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்து ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பின்பற்றும் பட்சத்தில் நிச்சயம் தமிழகம் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாறும்.

சுத்தம், சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளில் இந்திய கிராமங்கள் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியா தன்னிறைவு பெற்றதாக ஆகும். குறிப்பாக, நகரம்-கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல்நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியும், சுகாதாரமும் சம விகிதாச்சாரத்தில் அளிக்கப்பட வேண்டும். அனைத்து வகைகளிலும், நகர வளர்ச்சிக்கு இணையாகக்கிராம வளர்ச்சியும் அமைய வேண்டும். அடிப்படை வசதிகள் விஷயத்தில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே நிலவும் வேறுபாடு களையப்பட வேண்டும். இந்த விவகாரம் ஒரு அரசியல் செயல் திட்டமாக்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் கிராமப் பகுதிகளில் ஆண்களுக்கான பிரத்தியேகமாக ஆண்கள் சுகாதார வளாகங்கள் கட்டப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். (தினகரன், தில்லிப் பதிப்பு, 28. 11. 2012)

2022-ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் கொள்கைப் பிரகடனம் செய்தார். (தினமணி, தில்லிப் பதிப்பு-19 . 9. 2012).

2019-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கழிப்பறை, வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இலட்சியமாகும். (தினமணி- தில்லிப்பதிப்பு, 19. 11. 2014).

பிரதமர் மோடியின் லட்சியத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. உலகின் எந்தத் தலைவரும் மக்களுக்கான கழிப்பறை வசதிகள் குறித்து இவ்வளவு தீவிரமாக யோசித்ததில்லை என்று உலகப் பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ் பாராட்டியிருக்கிறார்.

அந்த அடிப்படையில், தலைமுறை தலைமுறைகளாகத் தமிழகத்திலுள்ள கிராம மக்கள் அனுபவித்துவரும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் இழிநிலையைப் போக்கும் வகையிலும், மக்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும், தன்மானமுள்ள மனிதர்களாகவும் வாழ்வதற்கு ஏதுவாகவும் சில தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன:

  • அதாவது, தமிழகக் கிராமங்களிலுள்ள ஒட்டுமொத்த ஊர்ப் பொதுமக்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது என அந்தந்த மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
  • ஊரின் குளத்தங்கரைகளையும், குளத்தின் உள்வட்டப் பகுதிகளையும் ஊர்ப் பொது மக்கள் பொதுக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதற்கு உடனடியாகத் தடை விதிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

மாற்று ஏற்பாடாக,

  • கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தனிக்கழிவறை அமைக்க அரசு அறிவுறுத்துவதோடு இடவசதி உள்ள வீடுகள் அனைத்திலும் அரசு செலவில் தண்ணீர் வசதியுடன் கூடிய தரமான கழிப்பறைகளைஅமைத்துத் தருதல் வேண்டும். தண்ணீர் வசதியுடன் கூடிய நவீனக் கழிப்பறைகள் கொண்ட வீடுகள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • கிராமங்கள் தோறும் மக்கள்தொகைக்கேற்ப பொதுக்கழிவறைகளுடன் கூடிய சுகாதார வளாகங்களை (Toilet Complex) அமைத்துத்தர அரசு முன்வர வேண்டும். அவற்றை ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் பராமரிக்க வகை செய்ய வேண்டும்.

 

திறந்தவெளிக் கழிப்பு முறையை ஒழிக்க மாற்று யோசனைகள்

  • ஊரகப் பகுதிகளில் தனிக்கழிப்பறையைப் பயன்படுத்துமாறு மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
  • தனிக்கழிவறைகள், பொதுக்கழிவறைகள் மற்றும் சுகாதார வளாகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் எடுத்துரைக்க வேண்டும்.
  • ஊராட்சி நிர்வாகம் மூலமாகத்திறந்தவெளிக் கழிப்பு முறையை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும். நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்திட வேண்டும்.
  • எய்ட்ஸ் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, சிக்குன் குனியா விழிப்புணர்வு போன்று கழிப்பறைப் பயன்பாட்டுப் பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக்க அரசு முன்வர வேண்டும்.
  • வண்ணத் தொலைக்காட்சிகளும், கணிப்பொறிகளும், கைபேசிகளும் பயன்படுத்தத் தெரிந்துள்ள கிராம மக்களுக்கு கழிப்பறையின் அவசியத்தையும், பயன்பாட்டு விதத்தையும் கற்பிக்க வேண்டும்.
  • வீடுகளில் கழிப்பறையின் அவசியம் மற்றும் பயன்பாட்டை 8-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்களால்உருவாகும் சுகாதாரக் கேட்டினைப் பள்ளி மாணவ, மாணவியருக்குக் காலை, மாலை இறைவணக்கத்தின் போது விளக்க வகை செய்யலாம்
  • பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மாணவ, மாணவியர் கண்டிப்பாகப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும், பள்ளிகளில் பிளாஸ்டிக் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தமாட்டோம் என்பதுபோல திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • கிராமங்கள் மற்றும் நகரங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் விபரம் மாணவர்கள் மூலம் கண்டறிந்து தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
  • தற்காலத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்படி சாண எரிவாயு அடுப்புகளில் மனிதக்கழிவுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று நவீனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
  • கிராமங்கள் தோறும் ஊர்ப் பொது/புறம்போக்கு இடங்களில் பொதுக்கழிவறைகளுடன் கூடிய சுகாதார வளாகங்களை (Toilet Complex) அரசாங்கச் செலவில்அமைத்துத்தர அரசு முன்வர வேண்டும்.
  • மாநகராட்சிகள், மட்டுமல்லாமல் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் ஆகியவற்றிலும் பாதாள சாக்கடைகள் உருவாக்க வேண்டும்.
  • தமிழகம் முழுவதும் திறந்தவெளிக் கழிப்பிடமில்லா ஊராட்சிகளை, நகராட்சிகளை ஏற்படுத்த உறுதிபூண வேண்டும்.

தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு 2 வீதம் மொத்தம் 770 ஆண்கள் சுகாதார வளாகங்கள் கட்ட தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. (தினகரன், தில்லிப்பதிப்பு, 28. 11. 2012). மேலும்,

  • ஹரியாணா மாநிலத்தில் மொத்தமுள்ள 6,700 கிராமப் பஞ்சாயத்துக்களில் 1700 பஞ்சாயத்துக்கள் சுத்தமானவையாக உருவெடுத்துள்ளன (தினமணி- தில்லிப்பதிப்பு, 19. 09. 2012),என்பதும்,
  • அடுத்த கல்வியாண்டிற்குள் பள்ளிகளில் முழுமையாகக் கழிப்பறைகளைக் கட்டி முடிக்கும்படியும் கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்க முடியாது எனக் கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டிருப்பதும் (தினமணி- தில்லிப்பதிப்பு, 19. 11. 2014)
  • நிர்மல் பாரத் அபியான் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளிலும் கழிவறை கட்ட வேண்டும் என்றும், அது வருங்கால சந்ததிக்குத் தகுந்த ஆரோக்கியத்தையும், குறிப்பாகப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு கிராமமாகச் சென்று அங்குள்ளவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்திரப் பிரதேசத்திலுள்ள நொய்டா மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருப்பதும், மாவட்டக் கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் நொய்டாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் நேரில் சென்று முகாம் நடத்தி சுகாதார விழிப்புணர்வு பற்றிய தகவல்களை விளக்கியுள்ளதும் (தினகரன், தில்லிப்பதிப்பு, 18. 12. 2012)
  • ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் அதிக அளவில் பொதுக்கழிப்பிடங்களைக் கட்டியதில் நாட்டிலேயே தில்லி முதலிடம் பிடித்துள்ளதும் (தில்லிப் பதிப்பு, 08. 07. 2015)

இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம், நிர்மல்பாரத் அபியான் திட்டம், ஊரகக் கட்டமைப்புத் திட்டம், ஊராட்சி ஒன்றியப் பொதுநிதிப் பணிகள், தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) முதலான திட்டங்களில் உரிய/ பொருத்தமான திட்டங்களின் மூலம் மேற்குறித்த கழிப்பறை வசதி மற்றும் சுகாதார வசதிகளை அமைத்துத் தருதல் அவசியம்.

உட்கொண்ட உணவு செரிமானமான பிறகு கழிப்பது என்பது இயற்கையானது. அதைத் தவிர்க்கவோ தள்ளிப் போடவோ முடியாது, கூடாது. எனவே, கிராம மக்கள் சாப்பிட்டுச் செரிமானமானவற்றைக் கௌரவமாகக் கழிப்பதற்கான கழிவறை வசதிகள் செய்துதர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 இயற்கை உபாதைகளைக் கழிப்பதில் கிராம மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் அவமானங்கள் மற்றும் இன்னல்களைக் களைந்து அவர்கள் கௌரவத்துடன் வாழமத்திய மாநில அரசுகள் இன்னும் தாமதிக்காமல் சுணக்கமின்றி விரைந்து ஆவன செய்யவேண்டும். திறந்த வெளிக் கழிப்புமுறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:

“திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத ஊர்

திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத ஊராட்சி

திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத ஊராட்சி ஒன்றியம்

திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத வட்டம்

திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத மாவட்டம்

திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத தமிழகம்

திறந்த வெளிக் கழிப்புமுறை இல்லாத இந்தியா”

அமைந்திட மத்திய,மாநில அரசுகளும், ஒவ்வொரு தனிநபரும் சிந்திக்க வேண்டும். செயல்பட வேண்டும்.

சான்றாதாரங்கள்

  • இராமியா. 2014. ‘திறந்தவெளிக் கழிப்பறையும் சாதிய ஒடுக்குதலும்’ (கட்டுரை), கீற்று, தாய்ப் பிரிவு- சமூகம்-இலக்கியம்.
  • சம்பத். பி. 2008. விடியலை நோக்கி அருந்ததியர், சென்னை: பாரதி புத்தகாலயம்.
  • பன்னீர் செல்வம்; வெ. 2008,அருந்ததியர் யார்?- ஒரு வரலாற்றுப் பார்வை, கோயம்புத்தூர்: வாகை பதிப்பகம்.
  • பாமா. 2002. ‘எளக்காரம்’, விழி. பா. இதயவேந்தன் (தொ. ஆ. ) தலித் சிறுகதைகள் தொகுப்பிலுள்ள சிறுகதை. சென்னை: காவ்யா.
  • பெசவாடா வில்சன். 2008. ‘இந்தியா நாறுகிறது’, இழிவை நோக்கி இன்னுமொரு போர் நூலிலுள்ள கட்டுரை, கோவை: ஆதித் தமிழர் பேரவை.
  • முத்துகிருஷ்ணன். அ . 2008. மலத்தில் தோய்ந்த மானுடம், சென்னை: உயிர்மை பதிப்பகம்.
  • ராஜ நாராயணன்,கி. 1984:தத்தா சொன்ன கதைகள், சிவகங்கை: அன்னம்(பி) லிட்.
  • ஆதித் தமிழர் பேரவை 26. 12. 2004அன்று கோவையில் நடத்திய ‘தூய்மைத் தொழிலாளர் மறுவாழ்வு மாநாட்டுத் ‘ தீர்மானங்கள்.
  • இழிதொழில் ஒழிப்பு(மலம் அள்ளுதல், துப்புரவுப் பணி ) மறுவாழ்வு மாற்றுப் பணிகள் மாதிரித் திட்டம், 2014,ஆதித் தமிழர் பேரவை.
  • ஜெயபாஸ்கரன். 2014:காட்டுவெளியினிலே (தனிக்கட்டுரை), தினமணி நாளிதழ், 19. 11. 2014
  • The Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993 (No. 46 of 1993)

- முனைவர் ச. சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி(தில்லிப் பல்கலைக்கழகம் ), புது தில்லி- 21

Pin It