மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து பெண்சாமியார் பிரக்யாசிங் தாக்கூரை விடுதலை செய்ய எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றது.என்.ஐ.ஏ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அவினாஷ் ரசல், சாத்விக்கு எதிராக விசாரணை நடத்துவதற்குப் போதிய ஆதாரமில்லை என்று ஏற்கெனவே என்.ஐ.ஏ சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டதால் சாத்வியை விடுவிக்க தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என தெரிவித்துள்ளார். பிரக்யாசிங் தாக்கூர் இந்த வழக்கில் இருந்து நிச்சயம் தப்புவிக்கப்படுவார் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். இந்த வழக்கு 2011 இல் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டதில் இருந்தே இந்து பயங்கரவாதிகளுக்குச் சாதகமாக வழக்கை முடிக்கும் நோக்கத்துடனேயே விசாரணை நடத்தப்பட்டது. பிரக்யாசிங் தாக்கூருக்கு எதிராக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு போலீசார் கண்டுபிடித்த அனைத்து ஆதாரங்களும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டன. என்.ஐ.ஏவின் ஒரே நோக்கம் இந்துபயங்கரவாதிகள் அனைவரையும் வழக்கில் இருந்து காப்பாற்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு யோக்கியமான அமைப்பு என்று காட்டுவதாகவே இருந்தது.

  இந்த ஒரு வழக்கில் மட்டும் பிரக்யாசிங் தாக்கூர் குற்றவாளி அல்ல மொத்தம் ஐந்து குண்டுவெடிப்புகளில் இவருக்குத் தொடர்பிருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 இல் நடந்த சம்ஜெளத்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு,  அதே ஆண்டு மே மாதம் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு, அக்டோபர் மாதம் ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்க்காவில் நடந்த குண்டுவெடிப்பு, 2006 செப்டம்பர் மற்றும் 2008 மகாராஷ்டிராவில் மாலேகானில் நடந்த இரு குண்டுவெடிப்பு வழக்கு என மொத்தம் ஐந்து வழக்குகளில் இந்தப் பிரக்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியருக்குத் தொடர்பிருக்கின்றது. இந்த ஐந்து குண்டுவெடிப்புகளிலும் சேர்த்து மொத்தம் 119 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த ஐந்து குண்டுவெடிப்புகளையும் நடத்த சதி செய்தவர்களில் முக்கியமானவர்கள் அசீமானந்த், சுனில் ஜோஷி மற்றும் பிரக்யாசிங் தாக்கூர் ஆவார்கள். கடந்த மார்ச் மாதம் அசீமானந்த் ஆஜ்மீர் தர்க்க குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதி மன்றம் விடுவித்தது நமக்குத் தெரியும். இப்பொழுது பிரக்யாசிங் தாக்கூரும் விடுதலை ஆகப்போகின்றார். சுனில் ஜோஷி ஏற்கெனவே மர்மமான முறையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். இன்னும் இருக்கும் முக்கிய குற்றவாளியான புரோகித்தும் விரைவில் விடுதலையாவார் என நாம் நம்பலாம்.ஏனெனில் என்.ஐ.ஏ இவனுக்கு எதிராகவும் விசாரணை நடத்த எந்த ஆதாரமும் இல்லை என ஏற்கெனவே நீதி மன்றத்தில் தெரிவித்து இருக்கின்றது.

   மோடி அரசு பதவியேற்றதில் இருந்து அரசு அமைப்புகள் அனைத்தும் காவி மயமாக்கப்பட்டுவருகின்றது. அரசு அமைப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்குப் பணிந்துபோக வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றார்கள். அப்படி இல்லாத அதிகாரிகள் திட்டமிட்டு மாற்றப்பட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் சாகாவில் இருந்து வந்த ஆட்களால் நிரப்பப்படுகின்றார்கள். இந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கூட பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மென்மையான போக்கை கடைபிடிக்குமாறு என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் கூறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரோஹித் சாலியன் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ பிஜேபி அரசு பொறுப்பேற்ற பின் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதைத் தவிர்த்து எப்படியாவது அவர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் தான் செயல்பட்டது.

 பிரக்யாசிங் தாக்கூர் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்தவர் என்பதற்கு ஒரு சான்று  அவர் தன் சகோதரி, உதவியாளர் நீரா சிங் ஆகியோருடன், பிப்ரவரி 19 2007 அன்று டிவியில் சம்ஜெளத்தா ரயிலில் விபத்துச் செய்தி அறிவிக்கப்படும் போது காத்திருந்து பார்த்தார் என்று நீராவின் வாக்கு மூலத்தில் சொல்லப்பட்டது. அப்போது விபத்தில் இறந்து போனவர்களின் காட்சிகள் காட்டப்படும் போது நீரா அதை சகிக்க முடியாமல் அழுதுள்ளார் அவரிடம் பிரக்யாசிங் தாக்கூர் “ அழவேண்டாம் இறந்ததெல்லாம் முஸ்லிம்கள்தான்” என்று சொல்லியிருக்கின்றார். அதற்கு நீரா அதில் ஹிந்துக்களும் செத்திருப்பதாக சொல்கின்றார் அதற்குப் பிரக்யாசிங் தாக்கூர் “ புழுக்கள் அரைபடும் போது கொஞ்சம் தானியமும் சேர்த்து வீணாகும்” என்று நீராவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கின்றார். அதற்குப் பின்னால் சம்ஜெளத்தா ரயிலில் வெற்றிகரமாக குண்டுவைக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக நீராவுக்குப் பிரக்யாசிங் தாக்கூர் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்துள்ளார் (நன்றி:கேரவான் இதழ்)

 இப்படிப்பட்ட கொடிய சிந்தனைகொண்ட ஒரு கொலைவெறிபிடித்த காவி பயங்கரவாதியைத்தான் இன்று மோடியின் கூலிப்படையான என்.ஐ.ஏ காப்பாற்றியுள்ளது. இந்துக்கள் பெரும்பாண்மையாக உள்ள நாட்டில் முஸ்லிம்கள் மட்டும்தான் தீவிரவாதியாக இருக்க முடியும். இந்த நாட்டை முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சங்பரிவாரத்தைச் சேர்ந்த யாருமே எப்போதும் கொலைகாரர்களாக இருக்கவே முடியாது. அப்படி செய்தாலும் அது தேசத்தின் நலனின் பார்ப்பட்டு செய்யப்பட்ட சமூக சேவையாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அவர்களைக் காப்பாற்றுவதுதான் ஒரு நேர்மையான இந்து அரசின் நோக்கம். அதைத்தான் தற்போது மோடி அரசு செய்துகொண்டிருக்கின்றது.

 குண்டுவெடிப்புக்குப் பயன்பட்ட ஸ்கூட்டர் பிரக்யாசிங் தாக்கூர் உடையதுதான் என மும்பை பயங்கரவாத தடுப்புப் பரிவு கண்டுபிடித்ததை எல்லாம் ஒரு சாட்சியாக என்.ஐ.ஏ  எடுத்துக்கொள்ளாது. ஏனெனின் அந்த ஸ்கூட்டரை ராமச்சந்திர கல்சங்கரா தான் பயன்படுத்திவந்தார். அப்படி என்றால் அவரை ஏன் என்.ஐ.ஏ கைது செய்து விசாரிக்கவில்லை? அவர்தான் தலைமறைவாக உள்ளாரே!  எப்போது அவரை கண்டுபிடிப்பார்கள்? அது மோடிக்கும் என்.ஐ.ஏக்கும் மட்டுமே தெரியும். அதையும் மீறி யாராவது அவனை உயிரோடு இருக்கின்றான இல்லையா என  கண்டுபிடிக்க முயற்சித்து இந்து பயங்கரவாதிகளை வழக்கில் மீண்டும் சிக்கவைக்க முயற்சித்தால் ஹேமந்த் கர்காரே போல மர்மமான முறையில் கொல்லப்படுவார்கள். ஏனெனில் புழுக்கள் அரைபடும் போது கொஞ்சம் தானியமும் சேர்த்து வீணாகி போகலாம்! அது இந்து தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

  இந்துபயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்புகளும் நன்குதிட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை. அவை அசீமானந்த், பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, புரோகித் என வெவ்வேறு நபர்கள் செய்திருந்தாலும் இவர்கள் அனைவரையும் வழிநடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பே ஆகும். அனைத்துக் குண்டுவெடிப்புகளும் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்குத் தெரிந்தே அவர்களின் வழிகாட்டுதல்படிதான் நடந்துள்ளன. இதை அசீமானந்த் கேரவான் இதழுக்கு அளித்த பேட்டியில் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். அரசு அமைப்புகளைத் திட்டமிட்டுக் காவியமயமாக்கி தங்களின் அனைத்துக் காரியங்களையும் எவ்வித தடங்கலும் இன்றி தங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து நிரூபித்துவருகின்றது. உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைத்து ஆதாரங்களும் அப்பட்டமாக இருந்தாலும் உங்களிடம் அந்த ஆதாரங்கள் அனைத்தும் பொய் என்று அவர்களால் சொல்ல முடியும். அவை எல்லாம் இந்துமத எதிர்ப்பாளர்களால் திட்டமிட்டு புனையப்பட்டவை என்று அனைவரையும் நம்பவைக்கவும் முடியும். அப்படித்தான் மோடிக்கு எதிராக குஜராத் கலவர வழக்கில் அனைத்து ஆதாரங்களையும் நீதி மன்றம் ஏற்கமறுத்து அவரை விடுதலை செய்தது. அதே போலதான் கொலைவழக்கில் இருந்து அமித்ஷாவையும் விடுதலை செய்தது.

 நமக்கு எழும் கேள்விகள் எல்லாம்  அனைத்து வழக்குகளில் இருந்தும் காவிபயங்கரவாதிகள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டால் அந்தக் குற்றங்களை எல்லாம் செய்தது உண்மையில் யார்? என்பதுதான். சம்ஜெளத்தா விரைவு ரயிலிலும், ஆஜ்மீர் தர்க்காவிலும், மெக்கா மசூதியிலும், மாலேகானிலும் குண்டுவைத்தது யார்? வேற்றுகிரக வாசிகளா? அரசு அமைப்புகள் எந்த அளவிற்குக் காவிமயமாக்கப்படிருக்கின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். இனி அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பிடிக்காத தங்களது சித்தாந்ததை ஏற்றுக்கொள்ளாத யாரை வேண்டும் என்றாலும் கொல்லலாம். அது குண்டுவைத்தோ துப்பாக்கியால் சுட்டோ, கத்தியால் குத்தியோ இல்லை கட்டையால் அடித்தோ எப்படி வேண்டும் என்றாலும் கொல்லலாம். உங்களை காப்பாற்ற மோடி இருக்கின்றார். அவரின் கூலிப்படையான காவல்துறை, நீதி மன்றம், சிபிஐ, என்.ஐ.ஏ என அனைத்தும் இருக்கின்றது. நீங்கள் விருப்பப்பட்டால் லைவ் டெலிகாஸ்ட்டில் கூட கொலை செய்யலாம். யாரும் உங்கள் மீது வழக்குக்கூட பதிவு செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இது இந்துக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி. மனுதர்மத்தின் படி நடத்தப்படும் ஆட்சி. பாரத தேசத்தை மீலேச்சர்களிடம் இருந்தும் பஞ்சம பாதகர்களிடம் இருந்தும் காப்பாற்ற இங்கே சங்பரிவாரத்துக்கு முழு அத்தாரிட்டியை மனு கொடுத்திருக்கின்றான். மோடியின் ஆட்சியை நாம் மோடியின் ஆட்சியாக பார்க்கக்கூடாது அது மனுவின் ஆட்சி. அதனால் அது இப்படித்தான் இருக்கும். வேறு வகையில் சிந்திக்க மனுவுக்கும் தெரியாது அவரது அரசியல் வாரிசான மோடிக்கும் தெரியாது.

- செ.கார்கி

Pin It