04/09/2015 என்ற தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெரியாரிஸம், கம்யூனிஸம் வீழ்ந்ததா? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் 15-வது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி ‘எந்த மதத்தையும் சாராதவர்கள்’ என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் 400 பேரில் தமிழ்நட்டில் ஒருவர்தான். இது இந்திய மாநிலத்திலேயே ஆறாவது இடம் என்று கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கின்றது பார்ப்பன குமுதம்.

 periyar veeramani kalipoongunranபார்ப்பன குமுதத்தின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் இன்று இந்தியாவிலேயே பார்ப்பன எதிர்ப்புக்குத் தளப்பிரதேசமாக தமிழ்நாடு இருப்பதுவே ஆகும். பார்ப்பனியத்திற்கு ஆதரவான எந்த ஒரு புள்ளி விவரமும் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தத்தான் செய்யும். பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரிய இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் தங்களுடைய வேர்களைத் தமிழகம் முழுவதும் பரப்பியிருக்கும் சூழலில் இந்தப் புள்ளி விவரங்கள் பார்ப்பன குமுதத்திற்கு மட்டும் அல்லாமல் அனைத்து மதவாத சக்திகளுக்கும் மன ஆறுதலைக் கொடுத்திருக்கும் என்று நாம் நிச்சயம் சொல்லலாம்.

 குமுதம் ரிப்போட்டர் கொடுத்த புள்ளி விவரங்கள் சரியா, தவறா என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்க விரும்பவில்லை. ஒரு வேளை அது சரியாகவே இருக்கலாம். ஆனால் இதில் குமுதம் மகிழ்ச்சியடைவதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் நம் கருத்து. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் சுட்டிக்காட்டிய ஒரு முக்கிய விடயம் இப்படி மதமற்றவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப் போகின்றோம் என்று அரசு முன்கூட்டியே சொல்லவில்லை என்பதாகும். அப்படி சொல்லி இருந்தால் மத எதிர்ப்பு கருத்துடைய பல அமைப்புகள் தங்கள் கட்சி அணிகளிடம் இது பற்றி ஒரு சரியான புரிதலை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடத்திருக்கும். இந்த எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கும் என்பதாகும்.

 ஒருவன் மதத்திற்கு ஆதரவாக இருக்கின்றான், கடவுள் நம்பிக்கை உடையவனாக இருக்கின்றான் என்பதனாலேயே சமூகமாற்றம் சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. அப்படி இருப்பவர்கள் மட்டுமே கட்சியில் உறுப்பினர் ஆக முடியும் என்று நாம் சொல்லவும் கூடாது. அப்படி சொல்வது எதைப் போன்றது என்றால் நோயே இல்லாதவர்கள்தான் எங்கள் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று சொல்வது போன்றது. ஆனால் கட்சிக்கு வந்த பின்னால் தங்களை மாற்றிக்கொள்ள அவர்கள் எல்லா வகையிலும் முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விகளையும் தர்க்கப்பூர்வமாக கேட்டு அறிவியல் ரீதியில் விவரங்களை சரிபார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தான் ஒருவன் பகுத்தறிவாதியாக மாற முடியும்.

 பெரும்பான்மை மக்கள் கடவுளையும், மதத்தையும் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று அவர்களை ஒதுக்கித் தள்ளக்கூடாது. நாம் முதலில் புறச்சூழ்நிலையைப் பரிசிலிக்க வேண்டும். அது இடம் கொடுக்காமல் எதுவும் நம்மால் செய்ய முடியாது. ஒருவன் கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் விட்டொழிப்பதற்குச் சமூகத்தில் நிலவும் புறக்காரணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. பசிக்காத ஒருவனின் முன்னால் என்னதான் ருசியான சாப்பாட்டை வைத்தாலும் அதை அவன் பொருட்படுத்த மாட்டான். அதற்காக அவன் சாப்பிடாமல் இருக்கப் போவது கிடையாது. அப்படி இருந்தால் அவன் இறந்துதான் போவான். எனவே புறச்சூழ்நிலை பற்றிய அவனது பார்வையை நாம் மாற்றியமைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு மக்களிடம் கடவுளின் தேவையைப் பற்றியும், மதத்தின் தீமைகளைப் பற்றியும் தொடர்பிரச்சாரம் செய்ய வேண்டும்.

 ஒவ்வொரு சமூக அமைப்பும் சமானிய மக்களால்தான் மாற்றியமைக்கப் பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நிலபிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றியதும் இந்த மக்கள்தான், முதலாளித்துவ சமூக அமைப்பில் இருந்து அதை வீழ்த்திவிட்டு சோசலிச அமைப்பை மாற்றியதும் இந்த மக்கள்தான். எப்போது கருத்து மக்களை பற்றிக்கொள்கின்றதோ அப்போது அது ஒரு பெளதிக சக்தியாக மாறுகின்றது.

 முன் எப்போதும் இல்லாத வகையில் வாழ்வியல் நெருக்கடிகள் கடந்த சில ஆண்டுகளாக மிகத் தீவிரம் அடைந்துள்ளது. அதில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் தமக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான ஆன்மீகத்தில் தீர்வுகளை தேடுகின்றார்கள். இந்திய சமூக அமைப்பு சாதியாலும், மதத்தாலும், பல்வேறு மூட நம்பிக்கையாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பு. இதில் 400 நபர்களில் ஒருவர் மட்டுமே கடவுள் மறுப்பாளராகவோ, மதத்தை விரும்பாதவராகவோ இருப்பது ஒன்றும் ஆச்சரியமான செய்தியல்ல. 400 நபர்களில் ஒருவர் மட்டுமே கடவுள் நம்பிக்கை உடையவர் என்று சொன்னால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

 ரஷ்யப்புரட்சியாக இருந்தாலும் சரி, இல்லை சீனப்புரட்சியாக இருந்தாலும் சரி, தற்போது நடந்த அரபுப்புரட்சியாக இருந்தாலும் சரி இவை எல்லாம் வெறும் நாத்திகர்களாலும், மதநம்பிக்கை அற்றவர்களாலும் மட்டுமே சாதிக்கப்பட்ட ஒன்றல்ல. இனிமேல் இந்த சமூக அமைப்பு நீடித்தால் நம்மால் வாழவே முடியாது என்ற நிலை ஏற்படும் போது மக்கள் தானாகவே புரட்சியை பற்றிக் கொள்கின்றார்கள். கூடங்குளம் போராட்டம், மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான போராட்டம், மது ஒழிப்பு போராட்டம் போன்றவற்றை முன்நின்று நடத்திய மக்கள் யாரும் நாத்திகர்களோ, மத நம்பிக்கையற்றவர்களோ கிடையாது.

 ‘பெரியாரின் கொள்கை தோற்றுவிட்டது என்பது ஊரறிந்த விஷயம்!’ என்று இல.கணேசன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காக்கிடவுசர்கள் மகிழ்ச்சியடைவதால் அவர்களுக்கு சார்பாக எந்த ஒன்றும் தமிழ்நாட்டில் நடந்துவிடப் போவதில்லை. காரணம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய முழுக்க இருக்கும் பார்ப்பனர்களை தவிர்த்த கோடானகோடி இந்திய மக்கள் நாட்டார் வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்கள். அவர்களது கடவுள் ராமனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ அல்ல அது காத்தவராயனாகவோ, கருப்பசாமியாகவோ, முனியப்பனாகவோ, சுடலைமாடனாகவோ , மாரியம்மனாகவோ, இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் இல.கணேசனைப் போல வெண்பொங்கலும், தயிர்சோறும் சாப்பிடுபவர்கள் அல்ல. போராட்ட உணர்வு என்பது அந்தச் சாமானிய மக்களிடம் அவர்களது கடவுள்களைப் போலவே இயல்பாகவே இருக்கின்றது. அதனால் கடவுள் நம்பிக்கையும், மதநம்பிக்கையும் எந்த வகையிலும் இந்த மக்களின் புரட்சிகர உணர்வை மழுங்கடிக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அது மிகக்குறைவான அளவே.

 மதத்துக்கான தேவையும், கடவுளுக்கான தேவையும் சமூகத்தில் நிலவும் வரை அதை மாற்றுவது என்பது கொஞ்சம் இயலாத காரியம்தான். ஆனால் அதை மாற்ற முடியாது என்று புரட்சியாளர்கள் விட்டுவிடுவதில்லை. அவர்கள் தொடர்ச்சியாக மக்களிடம் கருத்தியல் தளத்தில் பிரச்சாரம் செய்கின்றார்கள். மதம் என்பது ஒரு ஒடுக்குமுறைக் கருவி, அது ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை புரிவதற்காவே உருவாக்கப்பட்டது என்பதை மக்களிடம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துகின்றர்கள். தமிழ்நாட்டிலே வடமாநிலங்களைப் போல அதிகமாக மதக்கலவரங்கள் நடக்காமல் இருப்பதற்கு அவர்களின் தொடர் பிரச்சாரமும் ஒரு காரணமாகும்.

 அதனால் பார்ப்பன குமுதமும், இல.கணேசனும் தமிழ்நாட்டில் பெரியாரிய கொள்கை தோற்றுவிட்டது என்று நினைத்து நினைத்து அற்பமகிழ்ச்சி அடைவதைப் பார்த்து நாம் கோபப்பட வேண்டியது இல்லை. முட்டாள்களும், பிற்போக்கு வாதிகளும் அப்படித்தான் இருப்பார்கள். மாறப்போகும் சமூக மாற்றத்திற்கான விதை இந்த சமூக அமைப்பிலேயே கருக்கொண்டு வளர்வதை அவர்களால் எப்போதும் உணர முடியாது. பெரியாரிசமும், கம்யூனிசமும் நிலவுவதற்கான சமூக அடிப்படை இங்கு இருக்கும் வரை அவை இருந்தேதான் தீரும். அதை யாராலும், எப்போதும் வீழ்த்தமுடியாது.

- செ.கார்கி

Pin It