alyan kurdi

 ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோளாக கொண்டிருப்பது தான் பிறந்த மண்ணிலேயே இறந்துபோக வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த ஆசை அத்தனை சுலபத்தில் அத்தனை பேருக்கும் வாய்ப்பது கிடையாது. வாழ்க்கையில் பிழைத்துக் கிடப்பதற்காக பஞ்சம் பிழைப்பதற்கு ஊர்விட்டு ஊர்போய், மாநிலம்விட்டு மாநிலம்போய், நாடுவிட்டு நாடுபோகும் துயரம் என்பது, சொல்லில் சொல்லித் தீராதது. அதுவும் சொந்த நாட்டில் இருந்து மத அடிப்படைவாதிகளின் வன்முறையாலும், சொந்தநாட்டு மக்களை வறுமையில் தள்ளி அவர்களை பட்டினி போட்டுச் சாகடிக்க நினைக்கும் முதலாளித்துவ அடிவருடி ஆட்சியாளர்களாலும் சொந்த நாட்டையே தூக்கியெறிந்துவிட்டு வேறொரு நாடுதேடி ஓடும் அகதிகளின் வாழ்வு என்பது இந்த மனித வாழ்க்கையின் கொடுந்துயரமாகும்.

 மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு என்பது பிரிக்க முடியாத ஒன்றாகும். அதைப் பிரிக்க நினைக்கும் போது அது பெரும் போராட்டமாக கிளர்ந்தெழுகின்றது. ஆனால் போராட்டம் அனைத்துச் சக்திகளையும் ஆலிங்கனம் செய்து கொள்வது கிடையாது. சிலர் போராடி தாங்கள் இழந்த நிலத்தை மீட்க நினைக்கின்றார்கள். முடியவில்லையா, சாவதற்கும் சம்மதமாக இருக்கின்றார்கள். ஆனால் பலர் தங்களின் உயிரையாவது காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று எண்ணி தான் பிறந்த மண்ணையே பிரியத் துணிகின்றார்கள். ஏதிலிகளாக ஏதோ ஒரு நாட்டில் தஞ்சம் அடையப் புறப்படுகின்றார்கள்.

 அப்படிப் புறப்பட்டுப் போனவர்களின் கதை என்பது நிலம், நீர், காற்று என அனைத்திலும் துயரம் நிறைந்த பாடலாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. கடந்த புதன்கிழமையன்று (02/09/2015) அதிகாலையில் துருக்கியின் போத்ரும் தீபகற்பத்தில் இருந்து கிரேக்கத்தின் கோஸ் தீவிற்குத் தன் சொந்த மண்ணை விட்டுவிட்டு ஏதிலிகளாய் 12 பேர் கடல்வழியாக படகில் பயணம் செய்தனர். அந்த பன்னிரெண்டு பேரில் மூன்று வயதே நிரம்பிய அல்யனின் குடும்பமும் ஒன்று. அல்யனின் சொந்த நாடு சிரியா ஆகும். அவரின் தந்தை அப்துல்லா குர்தி ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலைவெறி அட்டூழியத்திற்குப் பயந்து கடந்த ஆண்டு தான் துருக்கிக்குச் சென்றுள்ளார். அங்கும் நிலைமை சரியில்லாததால் தான் அவர் கனடா அரசிடம் தஞ்சம் கேட்டிருக்கின்றார். ஆனால் உலகத்திற்கு ஜனநாயகம் போதிக்கும் கனடா அரசு அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

 எனவே கள்ளப்படகு மூலம் அவர் கிரேக்கத்திற்குச் செல்ல முடிவெடுத்திருக்கின்றார். ஆனால் படகு விபத்துக்குள்ளானதில் அல்யனின் அப்பா அப்துல்லா குர்தியைத் தவிர அனைவரும் கடலில் மூழ்கி உயிரை விட்டனர். இதில் கரை ஒதுங்கிய அந்த மூன்று வயது சிறுவன் அல்யனின் சடலம் நம்மையும் ஒரு நிமிடம் சடலமாக்கி விடுகின்றது. உயிர்பிழைத்த அவனது தந்தை அப்துல்லா குர்தி தன் மகனுடன் சேர்த்து தன்னையும் புதைத்துவிடவேண்டும் என்று கதறுவது நம் ஒவ்வொருவரின் காதுகளையும் கிழித்து ரணப்படுத்துகின்றது.

 கடற்கரை மண்ணில் முகம் புதைந்து காணப்படும் அல்யனின் சடலம் உள்ள புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகு எங்கே தன்னுடைய ஜனநாயக வேடம் கலைந்துவிடுமோ என்று அஞ்சி கனடா அரசு தற்போது அப்துல்லா குர்தி அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் மானமுள்ள அந்த மனிதர் அதைப் பொருட்படுத்த வில்லை.

 உலகில் தன்னை பெரிய ஜனநாயக நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் பல நாடுகள் இது போன்ற அகதிகள் விஷயத்தில் மிகவும் கீழ்த்தரமாகவே நடந்து கொள்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்றவை அகதிகளை மனிதப்பிறவிகளாகவே பார்ப்பது கிடையாது. இத்தனைக்கும் இந்த நாடுகள் எல்லாம் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கின்றன.

 இந்த ஆண்டில் மட்டும் இது போன்ற ஆபத்தான கடல்பயணங்களின் போது விபத்து ஏற்பட்டு 2440 பேர் இறந்துள்ளனர். இப்படி அகதிகளாக செல்பவர்களில் பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மர், சூடான், திபத், இலங்கை, போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

 இப்படி அகதிகளாக செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மட்டும் 350000 அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டிருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவிக்கின்றது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியைத் தவிர மற்ற நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்வதில் ஐ.நா ஒப்பந்தத்தை மீறியே செயல்படுகின்றன.

  ஒரு பக்கம் ஜெர்மனிக்கு செல்ல அனுமதி கிடைத்தாலும், அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளை ஹங்கேரி அரசு புடபெஸ்டிலுள்ள ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றது. மேலும் மனிதாபிமானமே இல்லாமல் அவர்கள் அனைவரையும் அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்ப போவதாகவும் ஹங்கேரி அரசு அறிவித்திருக்கின்றது. இதனிடையே குடியேறிகளை ஐரோப்பிய நாடுகள் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஜெர்மன் ஆட்சித் தலைவர் ஏங்கலா மேர்க்கல் தெரிவித்திருக்கின்றார்.

 அகதிகளை ஒரு பெரும் சுமையாகவே அனைத்து நாடுகளும் கருதுகின்றன. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பெரும் நிறுவனங்களுக்குப் பல லட்சக்கணக்கான கோடிகளை மானியமாக தருகின்றன. மூலதனம் உலகமயம் ஆன பின்பு ஒவ்வொரு ஏழை நாடுகளையும் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே வல்லரசு நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. மூன்றாம் உலக நாட்டு மக்களின் ரத்தத்தைக் குடித்து தங்களை வளப்படுத்திக்கொண்ட இந்த நாடுகள், அந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டில் அகதிகளாய் அடைக்கலம் கேட்கும் போது அவர்களை நாய்களைப்போல ஓடஓட விரட்டி அடிக்கின்றன.

 இன்று உலகில் பல பின்தங்கிய நாடுகளில் மத அடிப்படைவாதம் தலைவிரித்து ஆடுவதற்கும், இனக்கலவரங்கள் நடைபெறுவதற்கும், பல அரசுகள் திவால் ஆனதற்கும் இந்த ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே காரணம் ஆகும். பின் தங்கிய நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்புச் சக்தியை மனதார விரும்பும் இந்த வல்லூறு நாடுகள் அந்த உழைப்புச் சக்தியை மலிவான கூலிக்கு விற்கும் அந்த ஏதுமற்ற பாட்டாளி மக்களை விரும்புவது கிடையாது. இதுதான் முதலாளித்துவ நாகரிகம், இதற்குப் பெயர்தான் முதலாளிவர்க்க மனிதாபிமானம். அது அமெரிக்காவின் ஜனநாயகமாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவின் சமூக ஜனநாயகமாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் ஏழை நாடுகளில் உள்ள மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதில் எந்த வித்தியாசத்தையும் தமக்குள் கடைபிடிப்பதில்லை.

   அன்று பாட்டாளிகளுக்கு நாடில்லை என்று சொன்னார் அந்தச் சர்வதேசியவாதி மார்க்ஸ். இன்றும் பாட்டாளிகளுக்கு நாடில்லை என்று  சொல்லி அடித்து விரட்டுகின்றது சர்வதேச முதலாளித்துவம். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் கூர் நோக்கோடு உணர்ந்து கொண்டோமானால் ஏதிலிகள் என்றும் அகதிகள் என்றும் தன்னுடைய சக மனிதனை வித்தியாசப்படுத்தி பார்க்கும் அந்தக் கொடும்சிந்தனையில் இருந்து நாம் விடுபடலாம்.

- செ.கார்கி

Pin It