இலக்கியங்கள் பண்டைய தமிழரின் வாழ்வியலை எடுத்துக் கூறும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். வறுமையில் வாடும் கலைஞனின் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தி அவர்களின் துன்பத்தைப் போக்கும் வகையில் ஆறுதலாகவும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் வழிகாட்டுதலாய் அமைவன ஆற்றுப்படைப் பாடல்கள் ஆகும். இவ்வாற்றுப்படை நூல்கள் வழி பண்டைய தமிழர்தம் வாழ்வை எடுத்துக்காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

ஆற்றுப்படை இலக்கியம்:-

தொல்காப்பியர் கூற்றின்படி ஆற்றுப்படை என்பது வறுமைச் சூழலில் உள்ள கலைஞர்களான கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோரை வளம் பெற்ற மற்றொரு கலைஞர் தான் பெற்றது போன்றே வளமும் வாழ்வும் பெறும் வகையில் வள்ளல் ஒருவரிடம் செல்வதற்குத் துணை புரிவதே ஆகும். ‘ஆறுதல் படுத்தல்’ என்ற பொருள் கொள்ளுமாறும் ‘ஆற்றுப்படை’ என்ற சொல் அமைவதைக் காணலாம்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”(தொல்,புறம்-36)

பத்துப்பாட்டும் ஆற்றுப்படையும்

பத்துப்பாட்டில் சரிபாதி ஆற்றுப்படை நூல்களாகும். அவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) என்பன ஆகும். இவை கருத்திலும் அடியளவு எண்ணிக்கையிலும் சிறந்தும் மிகுந்தும் காணப்படுகின்றன. இவற்றில் 248 அடிகள் (பொருநராற்றுப்படை) குறைந்ததாகவும், 583 அடிகள் (மலைபடுகடாம்) மிகுந்ததாகவும் உள்ளது. இவ்வாற்றுப்படை நூல்கள் தமிழர் வாழ்வியலை அழகுற எடுத்தியம்புகின்றன.

ஆற்றுப்படையும் தமிழ்ச் சமூகமும்

திருமுருகாற்றுப்படை

உலக வாழ்வு துன்பத்தின் இருப்பிடம் ஆகும். அத்துன்பத்திலிருந்து மீள அனைவரும் துடிப்பது இயல்பாகும். மனிதனின் இந்த இயல்பை நன்கு உணர்ந்து அதற்கு ஆறதலாகவும், தேறுதலாகவும் முருகனின் அருளாற்றலைப் பாடலாக அமைத்து மக்களை அவ்வழிக்கு மாற்றுவதாய் அமைகின்றது. திருமுருகாற்றுப்படை.திருமுருகாற்றுப்படையில் முருகனின் பெருமைகளே சிறப்பிடம் பெருகின்றது.

உலகம் உவப்ப வலனேர்பு திரி தரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கடன் டாங்கு(1-2)

முருகனின் அருளாற்றலைக் கூறும் புலவர் பணிவோர்க்கு அருளாளனாகவும், மற்றவர்களுக்கு கூற்றுவனாகவும் அமைவான் என்கிறார்.

“உறுநர்த் தாங்கிய மதனுடைய நோன்றாள்
செறுநர்த் தேய்ந்த செல்லுறழ் தடக்கை”(4-5)

மேலும் முருகனின் மறப்பண்பைக் கடுமை தோன்றக் கூறி மக்களை ஆற்றுப்படுத்துவதினை பல இடங்களில் காணலாம்.

"சூர் முதல் தடித்த சுடரிலை நெடுவேல்" (46) என்றும்,

“பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீது தீர் நியமத்து” (69-70)

என்றுரைத்து இறைவனாகிய முருகன் அறத்தின் நாயகன். அறம் திறம்பினால் அவன் மறக்கள வீரனாக மாறிவிடுவான் என்பதை வலியுறுத்துகின்றார். முருகனின் முகங்களின் வேறுபட்ட தொழிப் பண்புகளை விளக்கும் பொழுது,

“ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகி
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்”(93-94) எனவும்,

"செறுநர்த் தேய்த்து செல்சம முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்”(99-100)

எனக் கூறுவதன் மூலம் முருகத் தத்துவத்தை விளக்குவதுடன் புலவர் மக்களை முருக வணக்கத்தில் ஈடுபடச் செய்கிறார். முருகனின் சிறப்புகளைக்கூறி மக்கள் அதனைப் பின்பற்றி பயணடைய வேண்டும் என்பது நோக்கம். எனவே

“இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர்ச் சோலை மலைகிழ வோனே”(316-317)

என்று அருவியின் செயலோடு ஆற்றுப்படை முடிகின்றது. உலக வாழ்வில் துன்பப்டும் மக்களுக்கு நல்வழியாய் ஓரளவு மன ஆறுதலாய் அமைகின்றது இவ்வாற்றுப்படை.

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை புலவர் முடத்தாமக் கண்ணியார். சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் கொடை, படை, நாடு ஆகியவற்றின் சிறப்புகளை ஒரு பொருநன் மற்றொரு பொருநனிடம் விளக்குவதாய் அமைகின்றது. பொருநர் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி இருக்காமல் நாடு நகரங்களுக்குச் சென்று தங்கள் கலைத் திறனைக் காட்டும் வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். ஆகையினால் திறமைக்குப் பரிசாக பொன்னும் பொருளும் மன்னன் கொடுப்பதை காண இயலும் .உணவும் உடையும் பெரும் பொருநன் உறையுள் பெறவில்லை.அது அவர்களுக்குத் தேவையுமில்லை. இதனை உணர்ந்த புலவர் அவற்றைத் திறம்படக் கூறியிருப்பது புலவரின் திறனை வெளிப்படுத்துகிறது.

தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளம் அகமும்,புறமும் ஆகும். வீரத்தின் அடிப்படை புறமாகும் இதனை இருபெரும் வேந்தரை வெண்ணிக் களத்தில் வென்றதைக் கூறுவதன் மூலம் கரிகாலனின் வீரத்தை உணரும் வரலாற்றுக் களஞ்சியமாக அமைகின்றது. கரிகாலன் கொடுத்த கறியை வாய்க்குள்ளேயே வலமும் இடமுமாக மாற்றி ஆற வைத்து உண்டனர். கொல்லையை உழும் கொழு உழுது உழுது தேய்ந்ததைப் போல கரிகாலன் அருகிலிருந்து உபசரித்த இறைச்சியை மென்று பல்லும் மழுங்கிப் போயின என்கிறார் புலவர். இதனை

“கொல்லை உழுகொழு ஏய்ப்ப, பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி”(117-118)

பொருநர் கையில் இருந்த யாழின் இசையில் ஆறலைக் கள்வரும் மயங்கி தமது தொழிலை விட்டு அருளுடையவராக மாறினர் என்பதை

“ஆறலைக் கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை”(21-22)

என யாழிசைக்கு தீயோரையும், நல்லோராக மாற்றும் ஆற்றல் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. விருந்தினரை எதிர் கொள்ளும் பொழுதும் விடை கொடுத்து அனுப்பும் பொழுதும் அவருடன் சேர்ந்து ஏழடி நடந்து விருந்தினரைச் சிறப்பித்து அனுப்புவது சங்ககால தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுவழிப் பழக்கமாகும். இதனை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று”(குறள் 83)

என்ற குறளுக்கு ஏற்ப விருந்தோம்பல் பண்பின் வேரைப் பொருநராற்றுப்படை காட்டுகிறது.

“ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே”(247-248)

நாடு நன்கு விளைந்தால் நாடிக் கொடுக்கும் மன்னன் கலைஞர்களுக்கு கொடுத்து ஆதரிப்பான். கரிகாலனின் கொடையுள்ளம் வெற்றி சிறப்பு, காவிரியின் நீர்வளம், வயல் வளம், யாழின் சிறப்பு போன்றவையும். வசதியற்ற கலைஞர்களை வாழவைக்க வேண்டிய கடமை மன்னருக்கு உண்டு என்பதையும் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். அக்கால வாழ்வும் வழக்கமும் ஆற்றுப்படையின் நோக்கமாக அமைகின்றது.

சிறுபாணாற்றுப்படை:-

நல்லிய கோடனின் அறவாழ்வு மறவாழ்வு ஆகியவற்றைச் சிறப்பித்து 269 அடிகளில் பரிசில் பெற்றுத் திரும்பும் பாணன் ஒருவன் மற்றொரு பாணனிடம் ஆற்றுப்படுத்துவதாய் அமைகின்றது இவ்வாற்றுப்படை

“இன்குரல் சீறியாழ் இடவயின் தழிஇ”(35)

முதன் முதலில் பாடினியின் எழில் நலமும் பாணனின் இசைத்திறனும் விரிவாகக் கூறியிருப்பது கேட்போரைக் கவரும் வகையில் உள்ளது.

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூர் எவ்வமொரு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருத்த முதவாய் இரவல (38-40)

என்று பாணனை அழைப்பது இரக்க உணர்வினை அழகுடன் எடுத்துரைக்கின்றது.

மேலும் தமிழரின் புகழ்மிக்க வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய நகரங்களிலிருந்து ஆட்சிசெய்யும் முடியுடை வேந்தரின் நிலையைக் கூறுவதோடு அல்லாமல் கொடையில் சிறந்த பேகன், பாரி, காரி முதலிய ஏழு வள்ளல்களின் வாழ்க்கையையும் நினைவு கூர்ந்து அனைவரும் அன்று இல்லை ஆயினும் கவலைப்படவேண்டியது இல்லை. ஏனெனில்

“எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்”(113-115)

வள்ளல்கள் எழுவருக்கும் ஈடாகும் கொடைச் சிறப்பை உடையவள் நல்லிய கோடன் எனும்போது இவனது மனம் எத்தகையது என்பதை அறியலாம். உதவி பெறுவதற்கும் தகுதி வேண்டும் என்பதைப் புலவர்கள் மறக்கவில்லை. கலைத்திறன் மட்டும் இருந்தால் போதாது அணுகும் முறையில் அன்பும் பண்பும் இருக்க வேண்டும். இதனை

“இவணயந் திருத்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ள மொடு செல்குவிர் ஆயின்”(144-145)

உணர்த்தி மிகுபொருள் பெற்று வாழ்வீர் என பாணரை கூறுகின்றார். பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு கூறுகிறது இவ்வாற்றுப்படை மக்களுக்கு எந்த குறையும் இல்லை, மக்கள் அருள் பண்புடன் இருக்க மண்னன் மகிழ்வுடன் வாழ்கிறான்.

வீரமும் கொடையும் மன்னனின் பண்புகளை வெளிப்படுத்துவதாய் அமைகின்றது.

“விறல் வேல் மன்னர் மன்னயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின் “(247-248)

என்பதில் ஈகையின் சிறப்பை அறியலாம்.

பெரும்பாணற்றுப்படை:-

பேரியாழைக் கொண்டு இசையெழுப்பும் பாணனது யாழின் வருணனை, பாணன் வறுமை, உப்பு வணிகர் செல்லும் வழி, எயிற்றியர் குடிசை, பாலை நிலக் கானவர், எயினர் மற்றும் ஐவகை நில மக்களின் வாழ்வியல் போன்றவை பெரும்பாணற்றுப்படையில் கூறுப்பட்டுள்ளது.

“அகலிரு விசும்பிற்பாயிருள் பருகி
பல் கான் றெழுதரு பல் கதிர்ப் பருகி” (1-2)

என்பதில் பாணர்களின் இருள்மயமாகிய வறுமை வாழ்வைத் தன் கொடைக் கரங்களால் போக்கும் கதிரவனாகிய இளந்திரையன் என்று கருதும் அளவிற்கு கூறுவது நோக்கத்தக்கது.

இவ்வாற்றுப்படையில் முல்லை, மருதம், நெய்தல், பாலை நில மக்களின் வாழ்வும், அந்தணர்களின் இல்ல அமைப்பம் கூறியுள்ளமை பண்டைய சமூக அமைப்பை எடுத்துக் காட்டுகின்றது.

• முல்லை நில கோவலர் - வரகு வைக்கோலால் வேயப்பட்ட குடில்
• மருதநில வேளாளர் - வைக்கோலால் வேயப்பட்ட அழகிய குடில்
• நெய்தல்நில வலைஞர் - தருப்பைப் புல்லால் வேயப்பட்ட குடில்
• பாலைநில எயினர் - ஈந்தின் இலையாலும் ஊகம் புல்லாலும் வேயப்பட்ட குடில்
• அந்தணர் குடியிருப்பு - வாழ்முள் வேலி பந்தல் சாணத்தால் மெழுகப்பட்ட தரை

மேலும் வீட்டு அமைப்பைப் போலவே உணவு முறைகளையும் கூறியுள்ளார் புலவர். இதன் மூலம் மக்களிள் வாழ்வியலை அறியலாம்.

மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

கூத்தரின் வாழ்வியலை எடுத்துக் கூறும் நூல் ஆகும்.கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதாய் 583 அடிகளில் அமைகின்றது மலைபடுகடாம் மன்னன் நன்னன் பகை வென்று புலவரை அணைக்கும் பிண்பினன்.புகழ்வோரை வரவேற்று பரிசில் வழங்கும் இயல்புடையவன் ஈகை பண்பற்றோர் இறந்ததும் மறக்கப்படுவர். புகழடைந்து நிலைப்போர் எல்லாம் வறியவர்க்கு ஈந்து அவர்களின் வாழ்வை வளமாக்கியவரே என்ற கருத்தினை

“இலமென மலர்ந்த கைய ராகித்
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்” (552-553) என்ற வரிகள் உணர்த்துகிறது.

சங்க கால கலைஞர்கள் இசைக்கலையில் சிறந்து விளங்கினர் என்தபற்கு கூத்தாற்றுப்படையில் பேரியாழின் சிறப்பு இசைக்கருவிகள், முறுக்கிய நரம்புகள், வரகின் கதிர் போன்ற துளைகள், பத்தல், யானைக்கொம்பிலான யாப்பு உந்தி கோடு வணர் எனும் பலவிதமான உறுப்புகளைக் கொண்டிருந்ததை அறிவதன் மூலம் உணரலாம்.

ஆற்றுப்படை இலக்கியங்கள் வழியே அன்றைய சமுதாய நிலை, சமய நிலை, இயக்கியச் சிந்தனை, புலவர் திறன், வரலாற்று உண்மைகளை அறிய முடிகின்றது. ஈகையும் தமிழர் தம் வாழ்வியலும் கொடைச்சிறப்பும். உதவுவதில் ஏற்படுகின்ற மன நிறைவும் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை ஆற்றுப்படை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

இன்று புதிதாக தோன்றியுள்ள இலக்கிய வகைமைகளில் ஒன்று பயண இலக்கியம் ஆகும். ஓர் இடத்தின் தன்மை, செல்லும் வழியின் நிலை வழியில் உள்ள ஊர்கள் மக்களின் வாழ்க்கை நிலை உணவுமுறை விருந்தோம்பல் பண்பு முதலிய செய்திகள் பயண இலக்கியத்தில் இடம்பெறல் வேண்டும். இத்தகைய குறிப்புகள் அனைத்தும் ஆற்றுப்படை இலக்கியங்கள் முன்பே பதிவு செய்திருப்பதை அறிவதன் மூலம் பயண இலக்கியத்தின் முன்னோடியாக ஆற்றுப்படை நூல்கள் திகழ்கின்றன என்பதை உணரலாம்.

- ப.மணிகண்டன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை-28

Pin It