"உ.வே.சாமிநாதய்யர் மட்டும் இல்லை என்றால் தமிழ் இலக்கியங்கள் எதுவுமே நமக்குக் கிடைக்காமல் அழிந்து போயிருக்கும். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியக் கருவூலங்களை எல்லாம், அவர் அச்சில் பதிப்பித்துக் கொடுத்ததால் தான், இன்று நம்மால் தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்க முடிகிறது; பாதுகாத்து வைக்க முடிகிறது." என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வேறுபாடு தெரியாத வகையில் பலரும் பேசுகின்றனர். அவ்வளவு பெரிய தொண்டு செய்தவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவது இல்லை என்று சிலர் கோபாவேசமாக உறுமவும் செய்கின்றனர்.

ஆறுமுக நாவலர்இவை எல்லாம் சரியா? நிச்சயமாக இல்லை. உ.வே.சாமிநாதய்யர் பிறப்பதற்கு முன்னாலேயே பல பழந்தமிழ் இலக்கியங்கள் பத்தகங்களாக அச்சு வடிவில் பதிப்பிக்கப்பட்டு விட்டன.

8.12.1822 அன்று பிறந்து 5.12.1879 அன்று மறைந்த, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் 1849ஆம் ஆண்டில், சென்னையில், சூளாமணி நிகண்டுரையை அச்சில் பதிப்பித்தார். (உ.வே.சா. 19.2.1855இல் தான் பிறந்தார்.) அதன் பின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படை, திருவாசகம், திருக்கோவையார், சிவஞான போதம், பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், வாக்குண்டாம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் புத்தக வடிவில் அச்சில் பதிப்பித்து இருக்கிறார். இவை யாவும் உ.வே.சா. அச்சுத் தொழிலைப் பற்றிச் சிந்திக்கும் முன்னரே பதிக்கப்பட்டவை.


12.9.1832 அன்று பிறந்து 1.1.1901 அன்று மறைந்த யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை, நீதிநெறி விளக்கம் எனும் நூலை 1859ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். மேலும் தொல்காப்பியம் பொருளகராதி, வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட பத்து தமிழ் இலக்கிய நூல்களை அச்சில் பதிப்பித்தார். இவையும் சென்னையில் தான் பதிப்பிக்கப்பட்டன.

அதுவும் தொல்காப்பியப் பொருளகராதி நூலின் சுவடிகளைத் தொகுக்க அவர் மிகுந்த சிரமங்களைப் பட்டிருக்கிறார்.

18.1.1854 அன்று பிறந்து 23.3.1922 அன்று மறைந்த, இலங்கை, சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் 1886இல் தொடங்கி 1911 வரையில் யாப்பருங்கலக்காரிகை, ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, உள்ளிட்ட பதினான்கு நூல்களை அச்சில் பதிப்பித்து உள்ளார்.

இவர்களுள் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் பதிப்பித்த காலங்களில், சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சில் கொண்டு வரும் பணி ஒரு தொழிலாக / வணிகமாக வளர்ந்து இருக்கவில்லை. அவர்கள் இதை ஈக உணர்வு கொண்ட தொண்டாகவே செய்தனர்.

குமாரசுவாமிப் புலவர்தமிழ் இலக்கியங்களை அச்சு வடிவில் கொண்டு வந்த பின் அப்பணி ஆதாயம் அளிக்கும் தொழிலாக / வணிகமாகப் பரிணமித்தது. இந்நிலையில் தான் உ.வே.சாமிநாதய்யர் அச்சுத் துறையில் புகுந்தார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டார். உண்மையே. அதற்கு ஈடான பொருளாயதப் பயனையும் அடைந்தார். பழந்தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளை அரும்பாடு பட்டுச் சேர்த்தார். அதற்கான கைம்மாறும் கிடைக்கவே செய்தது. அதாவது அவர் ஒரு வெற்றிகரமான பதிப்பு வணிகராக இருந்திருக்கிறார்.

ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தமிழ் இலக்கியங்களை அச்சில் பதிப்பித்தல் எனும் புத்தம் புதிய முயற்சியில் இறங்கி, எவ்விதக் கைம்மாறும் எதிர்பார்க்காமல் தொண்டு புரிந்தனர். இப்பணிக்கான பாதையை அமைத்தது மட்டும் அன்றி நன்றாகச் செப்பனிட்டு எளிமையாகவும் ஆக்கி வைத்தனர்.

ஆனால் நமது கல்வி முறையும், ஊடகங்களும், ஏதோ உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காப்பாற்றித் தந்தவர் என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றன.

உண்மையில் ஓலைச் சுவடியில் இருந்து, தமிழ் இலக்கியக் கருவூலங்களை, அச்சு வடிவில் கொண்டு வரும் பணியைத் தொடங்கி வைத்ததும், அதற்கான பாதையை அமைத்தது மட்டும் அன்றிச் செப்பனிட்டு எளிமையாக்கி வைத்ததும் ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரம் பிள்ளையுமே ஆவர். உ.வே.சாமிநாதய்யர் அந்த எளிமையாக்கப்பட்ட வழியில் சென்று பல நூல்களைப் பதிப்பித்தார். உ.வே.சா. அவ்வாறு செய்திராவிட்டால் வேறு யாராவது அதைச் செய்து இருப்பார்களே ஒழிய, அப்படியே அழிய விடப்பட்டு இருக்காது. ஏனெனில் அன்றைய தேவையும் (need) கேட்பும் (demand) அவ்வாறு உருவாகி இருந்தன.

ஆனால் ஆறுமுக நாவலரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் இத்தொண்டைச் செய்திராவிட்டால், இன்று நமக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.

ஆகவே உ.வே.சாமிநாதய்யர் தான் தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றித் தந்தார் எனும் கருத்துருவம் ஒரு அப்பட்டமான மாயையே ஒழிய அதில் இம்மி அளவும் உண்மை இல்லை. பார்ப்பனர்கள் ஒரு சிறிய செயலைச் செய்தாலும் ஆகா! ஓகோ! என்று புகழ்வதும், மற்றவர்கள் அரிய பெரிய செயல்களைச் செய்தாலும் அவற்றை மறைப்பதும், மறைக்கவியலா இடங்களில் சிறுமைப்படுத்துவதும் பார்ப்பனர்களின் பொதுநிலையே.

மேலும், செய்த தொண்டின் அளவிற்குப் பெயரும் புகழும் அவருக்குக் கிடைப்பது இல்லை என்று இம்மி அளவும் நாணம் இன்றிப் பரப்புரை செய்கிறார்கள். ஆனால் அவர் செய்த பணிக்கு அதிக பட்சமாக எவ்வளவு பெயரும் புகழும் அடையலாமோ அதைவிடப் பல நூறு மடங்குகள் அடைந்து இருக்கிறார். உண்மையில் ஆறுமுக நாவரும், சி.வை.தாமோதரம் பிள்ளையும் தான் அவர்களுக்கு உரிய புகழில் இம்மி அளவும் பெறவில்லை என்பது மட்டும் அல்ல; அடியோடு மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

- இராமியா

Pin It