நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (6)

ஆசிரியர்: பிரபாத் பட்நாயக்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொருளியல் பேராசிரியரான பிரபாத் பட்நாயக் இந்தியாவின் தலைசிறந்த மார்க்சியப் பொருளியல் அறிஞர். கேரள மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவராக 2006 ஜூன் முதல் 2011 மே வரை பணியாற்றியவர். உலக நிதி அமைப்புக்கான சீர்திருத்த நடவடிக்கைகளைப் பரிந்துரைத்த ஐக்கிய நாடுகள் சபையின் (யு. என்) உயர்-சக்தி பணிக் குழுவின் நான்கு உறுப்பினர்களில் ஒருவர். பொருளியல் அறிஞர் உத்சா பட்நாயக் அவர்களின் துணைவர்.

தலைப்பு: தீவிரவாதத் தேசியத்தின் அடிப்படை

prabhat patnaikமேற்கத்திய உலகின் கலந்துரையாடல்களில் “தேசியவாதம்” என்ற சொல் பெரும்பாலும் ஒரேதன்மை கொண்ட ஓர் ஒற்றைமயக் கருத்தாக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தேசியவாதம் என்றாலே ஒரு குறுகிய மனப்பான்மையாக, சர்வ தேசியத்திலிருந்து தவறாகப் பின்னோக்கிச் செல்வதாகக் கருதும் போக்கும் காணப்படுகிறது. ஐரோப்பாவின் தேசியவாதம், காலனி எதிர்ப்பு தேசியத்திற்கு மாறானது. காலனியாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு அடிப்படையான ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் என்பது அவர்களை ஒடுக்கிய ஐரோப்பியர்களின் தேசியவாதத்திலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்: காந்தியின் தேசியவாதம் அல்லது ஹோ-சி-மினின் தேசியவாதம் சர்ச்சிலின் தேசியவாதத்திலிருந்து வேறுபட்டது.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வெஸ்ட்பாலியாவில் முன்ஸ்டர், ஓஸ்னெபெர்க் நகரங்களில் கையெழுத்திடப்பட்ட வெஸ்ட்ஃபாலியன் அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேசியம் என்ற கருத்தாக்கம் உருவானது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு நீண்ட போர்கள் (ஐரோப்பாவின் மத அடிப்படையிலான 30 ஆண்டுப் போரும், ஸ்பெயினுக்கும் டச்சுக்கும் இடையேயான 80 ஆண்டுப் போரும்) 1648இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

வெஸ்ட்பாலிய அமைதி உடன்படிக்கையின் அடிப்படையில் ஐரோப்பாவில் வளர்ந்த “தேசியவாதம்” என்ற கருத்தாக்கம், நாடுபிடிக்கும் தன்மை கொண்ட அகண்ட தேசியவாதமாகும். இந்த அகண்ட தேசியம் அனைத்து மக்களையும் உள்ளிணைத்ததாக இல்லை, தேசம் தனக்குள் ஒரு எதிரியைக் கொண்டிருந்தது. தேசத்தின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை எதிரியாகக் கருதும் நிலை இருந்தது. வட ஐரோப்பாவில் கத்தோலிக்க மதத்தினரும், தென் ஐரோப்பாவில் புரட்டஸ்டண்ட் மதத்தவரும் எதிரியாகக் கருதப்பட்டனர். ஒவ்வொரு ஐரோப்பிய "தேசமும்" வெளிநாட்டு பிராந்தியங்களுக்காக மற்ற ஐரோப்பிய "நாடுகளுடன்" போட்டியிடும் ஏகாதிபத்திய தேசியமாக இருந்தது. இவ்வகையில் ”தேசத்தின்" நலன்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன் இனங்காணப்படவில்லை. தேசத்தை மக்களுக்கு மேலே உயர்த்தி வைப்பதன் மூலம் தேசத்திற்காக மக்கள் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. வெஸ்ட்பாலியன் ஒப்பந்தத்தின் பின் முதல் காலனியாக அயர்லாந்து உருவானது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் வளர்ந்து வரும் முதலாளித்துவமும் மார்க்ஸ் குறிப்பிடும் "மூலதனத்தின் ஆதித் திரட்டலில்" மும்முரமாக ஈடுபட்ட சகாப்தத்தில் இந்த தேசியவாதம் உருவானது. இவ்வாறு ஏகாதிபத்திய அடிப்படையில் வணிக முதலாளித்துவத்தின் வளர்ச்சிநிலையிலே தேசியவாதம் என்ற கருத்தாக்கம் உருவானது.

இந்த முதலாளித்துவத் தேசியவாதத்தின் பண்புகள் காலப்போக்கில் மாறாமல் இருந்தாலும் கூட அதை நீடிக்க வைத்த வர்க்கங்களின் உள்ளடக்கம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் வளர்ந்த ஐரோப்பிய சக்திகளிடையே ஏகாதிபத்திய உடைமைகளுக்கான (அல்லது லெனின் குறிப்பிடுவது போல் “உலகை மறுபங்கீடு செய்வதற்கான”) கடும் போட்டியை ஏற்படுத்திய நிதி மூலதனங்கள் இத்தகைய அகண்ட தேசியவாதத்தையே ஊக்குவித்தன”. ருடால்ப் ஹில்ஃபெர்டிங் "தேசியவாதக் கருத்தை போற்றுவதை" நிதி மூலதனத்தின் சித்தாந்தமாக அடையாளம் காண்கிறார்.

பதினேழாம் நூற்றாண்டில் ஸ்பானிய தங்கம் ஐரோப்பாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் முதலாளித்துவம் தொடங்கியதாக மார்க்சிய எதிர்ப்பாளராகிய கீனஸ் குறிப்பிடுகிறார். இது இலத்தீன் அமெரிக்காவில் ஸ்பானியர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம். இதை மூலதனத்தின் ஆதித் திரட்டலுக்கு எடுத்துக்காட்டாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். வணிகமுதலாளித்துவம் கொள்ளையை நியாயப்படுத்தியது. உலகெங்கிலும் காலனிகளைப் பிடிக்கப் போட்டி ஏற்பட்டது. இந்த தீவிரமான ஏகாதிபத்தியப் போட்டி இறுதியில் முதல் உலகப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தது. யுத்தத்திற்கு ஆதரவு திரட்ட தேசத்தைக் காப்பதற்கான போர்க் குரல் எழுப்பப்பட்டது. "தேசியவாதம்" யுத்த முயற்சிகளுக்கான கூக்குரலாக பயன்படுத்தப்பட்டது.

அப்பொழுது இடதுசாரிகள் முன்வைத்த கருத்து உங்கள் தோட்டாக்களை உங்கள் உள்நாட்டு அமைப்பிற்கு எதிராகத் திருப்புங்கள் என்பதே. அகண்ட "தேசியவாதம்" என்ற கருத்தாக்கத்திற்கு எதிரான பெருத்த முதல் அடியாக போல்சுவிக் புரட்சி அமைந்தது; போல்சுவிக் புரட்சிக்குப் பின் ஒரு புதிய தேசியவாதம் தோன்றியது. ஆனால் ஐரோப்பாவின் பிற இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் தோல்வி, அதற்குப் பின்னர் ஏற்பட்ட பெரும் மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை இந்த அகண்ட "தேசியவாதத்தை" வலுப்படுத்தவும் பல நேரங்களில் பாசிசம் பயங்கர வடிவெடுக்கவும் காரணமாக அமைந்தன. பாசிசத்தின் தோல்வியால், ஐரோப்பாவில் அத்தகைய "தேசியவாதத்திலிருந்து" ஒரு பொதுவான பின்வாங்கல் ஏற்பட்டது (ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம் அதன் ஒரு அறிகுறியாக இருந்தது), சமீபத்தில் ஐரோப்பிய இடதுசாரிகளுக்குள் மிகுந்த கவலையை ஏற்படுத்தும் வகையில் அகண்ட தேசியவாதம் மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலகின் பெரும்பகுதியில் உருவாகிய தேசியவாதமும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் இத்தகைய அகண்ட தேசியவாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வலிமையான ஏகாதிபத்திய சக்தியை எதிர்கொண்டதால் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளிணைத்தது. ஆகவே, எந்தவொரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவரோ அல்லது இனக்குழுவினரோ தேசத்திற்குள் "உள் எதிரி" என்று கருதப்படவில்லை, இருப்பினும் ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்த மக்களிடையே இன மற்றும் வகுப்புவாத பிரிவினைகளை ஊக்குவிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தன. இரண்டாவதாக, இந்தத் தேசியவாதம் அதன் பெரும் சக்திவாய்ந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, அது "தேசிய நலனை" மக்களின் நலன்களுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன் இனங்கண்டது.

இப்பொழுது ஒரு கேள்வி எழுப்பப்படலாம்:, ஏன் இந்தியா போன்ற நாடுகளில், சுதந்திரத்திற்கு முன்பே கணிசமாக வளர்ந்திருந்த ஏகபோக மூலதனம், ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டதைப் போல ஒரு அகண்ட தேசியவாதத்தை ஊக்குவிக்கவில்லை? ஏன் அது வேறுபட்ட தேசியவாதத்தின் கருத்தோடு சென்றது?

இதன் பதில் இரு கூறுகளைக் கொண்டுள்ளாது: முதலாவதாக, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் ஏகபோக மூலதனம் கூட காலனியாதிக்க ஆட்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் போல இங்கு தேசிய முதலாளி வர்க்கம் நேரடியாக ஆட்சி செய்யும் அதிகாரத்தைப் பெற முடியாமல் தவித்தது; அதனால்தான் இங்குள்ள தேசிய முதலாளிகள் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் சேர வேண்டியிருந்தது. இரண்டாவதாக, காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் பல வர்க்கப் போராட்டமாக இருந்தது, அதன் மீது ஏகபோக முதலாளித்துவம் ஒரு முன்னணி நிலையில் இருந்தபோதும், பிரத்தியேக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது திட்டமிடப்பட்ட பார்வைக்கு ஏற்ப ஒரு "தேசத்தை" உருவாக்குவது என்பது புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளுக்கு ஒரு புதுமையான மற்றும் கடினமான பணியாகும். இந்தியாவில் இந்தப் பார்வை 1931 இல் கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டது, அதில் சுதந்திர இந்தியா எப்படி இருக்கும் என்பதற்கான கருத்துச் சித்திரம் முதல் முறையாக பெறப்பட்டது. அனைவருக்கும் வாக்குரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், இலவச அடிப்படை கட்டாயக் கல்வி, மரண தண்டனை நீக்கம் (இதற்கு முன்னரே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்). ஆனைத்து மதங்களையும் ஒரே மாதிரி கருதும் மதச்சார்பற்ற அரசு ஆகிய அடிப்படை ஜனநாயகக் கூறுகளை அது கொண்டிருந்தது.

ஒரு துருவத்தில் செல்வத்தையும் மறு துருவத்தில் வறுமையையும் உருவாக்கும் முதலாளித்துவத்தின் போக்கினால், இவற்றை முழுமையாக செயல்படுத்தமுடியாது எனக் கருதப்பட்டாலும் முதலாளித்துவத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால், ஒரு கலப்பு பொருளியலின் பரந்த கட்டமைப்பிற்குள், பொதுத்துறைகளுக்கு " முன்னுரிமை அளிக்கும் போது அது பயனுள்ளதாகவே இருக்கும் என சுதந்திரத்தின் போது நாட்டின் தலைமையால் உணரப்பட்டது. அதன்படி, சுதந்திரத்திற்குப் பிறகு பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான ஆட்சிமுறை பொருளியலில் உருவாக்கப்பட்டது, அதே சமயம், அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வாக்குரிமையின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிர்வாக அதிகாரங்களைப் பெற்று அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதிபடுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டது. பொருளியலில் வெளிப்படையான தோல்விகள் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்தை அடிக்கடி மீறும் வகையில் அரசின் பல நடவடிக்கைகள் கேள்விக்குரியதாக இருந்தபோதிலும், இந்த நாட்டின் அடிப்படைக் கருத்தியல் கட்டமைப்பான மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சமூகநீதி மிக நீண்ட காலமாக நிராகரிக்கப்படாமல் நீடித்து வந்தது.

இவை அனைத்தும் இப்போது மாறி விட்டன. இப்போது ஊக்குவிக்கப்படும்"தேசியவாதம்" என்பது அகண்ட ஐரோப்பிய வகை தேசியவாதத்தைப் போன்றது. இது முஸ்லிம்களையும், ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்ட அறிவுஜீவிகளையும் "எதிரிகளாய்" அடையாளப்படுத்துகிறது. இது "மக்களுக்கு மேலான ஒரு தேசம்" என்ற கற்பனாவாதத்தை முன்வைக்கிறது. "தேசிய நலன்" மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளியல் முன்னேற்றம் சார்ந்ததாகக் கருதப்படவில்லை. இது மேலாதிக்கத்தினால் நாட்டின் பிராந்தியங்களில் உள்-காலனியாதிக்கத்தை ஏற்படுத்தி அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நமது கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் இந்திய ஒன்றியத்திற்குள் பல்வேறு பகுதிகள் அவற்றின் தனித்தன்மையுடன் நீடிக்க இணைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 371ஆம் பிரிவுகள் வெறும் நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் ஒருதலைப்பட்சமாக நிராகரிக்கப்பட்டன.

இப்போழுது ஒரு கேள்வி எழுகிறது: "தேசியவாதம்" என்ற ஒரு கருத்தாக்கத்திலிருந்து அதற்கு முற்றிலும் எதிரான இன்னொரு கருத்தாக்கத்திற்கு இந்தியா எவ்வாறு நகர்ந்தது, இந்த இயக்கத்தின் செயல்முறை மற்றும் அதன் வர்க்க அடிப்படை என்ன?

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறிப்பாக 1991 க்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளியல் "தாராளமயம்" இந்த மாற்றத்தின் முதல் படியாக அமைந்தது. ஒரு புதிய தாராளமய ஆட்சிக்கு மாறுவது என்பது பொருளியல் கொள்கைகளில் மட்டும் மாற்றத்தைக் குறிக்கவில்லை. இது நாட்டில் வர்க்க உள்ளமைவில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இது இந்தியாவை சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்திற்குட்படுத்தியது.

1970 களில் இருந்து, மூலதனப் பாய்வுகளின் உலகமயமாக்கத்தால், உலகம் தனித்தனிக் கோளங்களாக ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டின் நிதி மூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பிரிக்கப்படுவதற்குப் பதிலாக, சர்வதேச நிதி மூலதனம் என்ற ஒரு புதிய நிறுவனத்தின் கட்டுப்பாடற்ற இயக்கத்திற்கு வழிவகுத்தது. அரசு ஒரு தேசிய அரசாக இருந்ததால், எந்தவொரு நாடும் நாடு கடந்த மூலதன பாய்ச்சல்கலுக்கு திறந்திருப்பதால் , இந்த சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும் என்ற கட்டுப்படுத்தப்படுகிறது அவ்வாறு செயல்படாவிட்டால் நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியேறி நிதி நெருக்கடியை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே தேசிய அரசுகளின் பிரதான கவலையாக மாறியுள்ளது.

இதன் பொருள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்துடன் தொடர்புடைய அனைத்து வர்க்கங்களின் நலன்களையும் பாதுகாப்பதாக முன்னர் கூறிய அரசு, முதலாளித்துவம் வளர்ந்தபோதும் இந்தக்கூற்று ஒட்டுமொத்தமாக நியாயப்படுத்தப்படாமல் இல்லை, இப்போது முழுக்க முழுக்க சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த உள்நாட்டு முதலாளித்துவத்தின் (விவசாயத்திலிருந்து பன்முகப்படுத்தப்படுவதன் மூலம் கிராமப்புறத்தில் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்த பணக்கார நிலவுடைமையாளர்களையும் சேர்த்து) நலன்களுக்காகவே செயல்படுகிறது.

அதனால் இப்போது முதலாளித்துவத்தின் பிரிவினை தீவிரமாகியுள்ளது. சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒருங்கிணைந்த முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்கள் ஒரு பக்கத்தில் உள்ளனர்: கோடிக்கணக்கான விவசாயிகள், சிறுஉற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மறுபக்கத்தில் உள்ளனர். இப்போது அனைத்து வர்க்கங்களின் நலன்களையும் பாதுகாப்பதாக அரசின் கொள்கையை வகுக்கிறோம் என்ற பாசாங்கு இல்லை. (நாட்டின் வள ஆக்கத்தில் பல்வேறு காரணிகள் பங்கேற்பதாகக் கூறும் நிலையில், முதலாளிகளை மட்டும் வளம் ஆக்குபவர்களாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்தக் கருத்தை இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் யாரும் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள் என்பது இந்த மாற்றத்தின் அறிகுறியாகும்). 1930களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காலனியெதிர்ப்பு போராட்டத்தில் இணைந்தனர், சுதந்திரத்திற்குப் பின் விவசாயிகள் ஓரளவிற்குப் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் தற்போது அரசு சிறு உற்பத்தித் துறைக்குத் தந்த ஆதரவையும், பாதுகாப்பையும் திரும்பப் பெற்றதால், பெருநிறுவனங்களால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பழைய "தேசத்தில்" முறிவு ஏற்பட்டது.

இந்த "முறிவின்" பொருளியல் விளைவுகள் வெளிப்படையானவை. விவசாயிகளின் தற்கொலைகள் (இருபத்தைந்து ஆண்டுகளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவை); கிராமப்புறங்கள் பெருந்துன்பத்திற்குள்ளாகியுள்ளன; கைவினைஞர்கள், மீனவர்கள், பாரம்பரியத் தொழில் முனைவோர் மற்றும் சிறு முதலாளிகளைக் கூட பாதிக்கும் சிறு உற்பத்தித் துறையின் நெருக்கடி; புதிய தாராளமய ஆட்சியின் கீழ் ‘ஜிடிபி’மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு அதிகரித்த போதும் வேலைவாய்ப்பு உருவாக்கும் விகிதம் முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது வெகுவாகக் குறைந்ததால் கிராமப்புறங்களிலிருந்து வேலை தேடி நகரங்களுக்கு செல்லும் உழைக்கும் மக்களின் இடப்பெயர்வு, அதே நேரத்தில் மேம்பட்ட முதலாளித்துவ நாடுகள் சேவைத் துறை வேலைகளை இங்கே ஏற்றுமதி செய்வதால் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பிரிவினர் பலனடைந்துள்ளனர்.

புதிய தாராளமயம் பெருமளவிலான மக்களை வறுமைக்குத் தள்ளியுள்ளது: கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,200 கலோரிகளைப் பெற முடியாத வறுமைக் கோட்டில் உள்ள மக்களின் சதவீதம் 1993-4 மற்றும் 2011-2 க்கு இடையில் 58%இலிருந்து 68% ஆக உயர்ந்துள்ளது ; நகர்ப்புறத்தில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,100 கலோரிகளைப் பெறமுடியாத வறுமைக்கோட்டில் உள்ள நகர்ப்புற மக்களின் சதவீதம் இதே காலகட்டத்தில் 57%ளிருந்து 65% ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், முதல் 1 சதவீதத்தினரின் மொத்த வருமானம் 2013-14 ஆம் ஆண்டில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது, 1922 ஆம் ஆண்டிலிருந்து வருமான வரித் தரவுகளின் மூலம் செய்யப்பட்ட இந்தக் கணக்கீடுகளின் படி; மொத்த செல்வத்தில் அவர்களின் பங்கு, 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 58 சதவீதமாகியது. செல்வத்தையும், வருமானத்தையும் முதல் 1 சதவீதத்தினரின் கைகளில் குவிக்கும் அதே வேளையில், புதிய தாராளமய ஆட்சி நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவின் நிலைமைகளை மேம்படுத்தியுள்ளது.

புதிய தாராளமயம் ஆட்சியில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு கருத்தியல் முட்டுக்கொடுப்பு தேவைப்படுகிறது. இது பழைய உள்ளிணைக்கும் "தேசியவாதத்தின்" அடிப்படையில் தொடர்ந்து இயங்க முடியாது. முன்னர் வளர்ச்சியும், வளமும், மேலிருந்து கீழாக அனைத்து வகுப்புகளுக்கும் பரவுவதாக நம்பவைக்கப்பட்டது. இதுவும் நம்பகத்தன்மையை இழந்தபோது, ஜிடிபி’யை-மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கு எந்தவொரு தடையும் வரக்கூடாது என்பதற்காக ‘ஜிடிபி’ மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்வால் மட்டுமே பின்தங்கிய பிரிவினருக்கு ஆதரவாக வளங்களை மறுபங்கீடு செய்யும் சாத்தியப்பாட்டைப் பிற்காலத்தில் உருவாக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. புதிய-தாராளமயப் பொருளியலில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் முதலாளிகளின் முதலீடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற பெரும்பான்மையினரின் நலனை காவுகொடுத்து, முதலாளிகளின் நலன்களை மட்டுமே அரசு ஊக்குவித்தது. இந்த ஆட்சியின் கீழ் "தேசம்" என்ற பழைய கருத்து முறிந்துவிட்டதால், புதிய தாராளமய ஆட்சிக்கான ஒரு கருத்தியல் முட்டுக்கொடுப்பாக இந்த ‘ஜிடிபி’ மாய்மாலம் இடைக்காலப் பங்கு வகித்தது.

ஆனால் இது நீண்ட காலம் நீடிக்க முடியாது. எவ்வாறாயினும், உழைக்கும் மக்களுக்கு வளர்ச்சியை மறுபங்கீடு செய்யாமலே ஜிடிபி-மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தொடர்ந்தால், அனைவருக்கும் அது நன்மையையே விளைவிக்கும் என்ற கட்டுக்கதை அம்பலமாகி விடும். மேலும் புதிய-தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் உலகப் பொருளியல் பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளுக்கும் இது பரவியதால், உழைக்கும் மக்கள் மீது இன்னும் பெரிய சுமைகளைச் சுமத்துகிறது. புதிய தாராளமய முதலாளித்துவத்தின் ஆட்சியில் இருந்து வெளியேறுமாறு உழைக்கும் மக்கள் கோருவதைத் தடுக்க இந்தப் புதிய சூழ்நிலையில் ஒரு வலுவான கருத்தியல் முட்டுக் கொடுப்பு தேவைப்படுகிறது. இங்குதான் அகண்ட தேசியவாதத்தை ஏற்றுக்கொள்வது பயனுடையதாக உள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்காத இந்துத்துவப் படைகள் நீண்ட காலமாக அகண்ட "இந்து தேசியவாதத்தின்" ஆதரவாளர்களாக இருந்துவருகிறார்கள். அவர்களது உறுப்பினர்கள் சிலர் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்ய சதித்திட்டம் போட்டவர்கள் (இதை ஒரு சாதனையாக அவர்களின் தற்போதைய ஆதரவாளர்கள் வெட்கமின்றிக் கொண்டாடுகிறார்கள்). ஆளும்-கார்ப்பரேட் வர்க்கம் இப்போது இந்துத்துவ சக்திகளுடன் ஒரு கூட்டணியில் இணைந்து இந்த அகண்ட"தேசியவாதத்தை"ப் பரப்புகிறது.

இன்றைய "தீவிர-தேசியவாதத்திற்கான" ஆதரவு ஆளும்-கார்ப்பரேட் வர்க்கத்திடமிருந்தே வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு தலித்துகள் மற்றும் "பிற பின்தங்கிய வர்க்கங்கள்" சமூக மற்றும் பொருளியல் ரீதியாக சமத்துவம் பெறும் கருத்தை எப்போதுமே பணக்கார நிலவுடைமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். புதிய தாராளமய ஆட்சியால் பலனடைந்த நடுத்தர வர்க்கங்களின் மேல் பிரிவு அதிலிருந்து வெளியேறுவதற்கான எந்தவொரு நகர்வையும் கண்டு அஞ்சுகிறது.

இந்த "தீவிர-தேசியவாதம்" என்பது என்னவென்றால், நாட்டின் தகுநிலையை ஒரு வல்லரசாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதும், ‘ஜிடிபி’-மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதனுடன் இணைப்பதும் ஆகும். வேறுவிதமாகக் கூறினால் ‘ஜிடிபி’-மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இப்போது அனைவருக்கும் நலன் பயக்கும் என்ற அடிப்படையில் வாதிடப்படவில்லை; இது இந்தியாவை வல்லரசாக்கும் என்ற அடிப்படையில் வாதிடப்படுகிறது. ‘ஜிடிபி’மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்து போனால், இது மக்களின் தியாகங்களைக் கோருவதற்கும் முக்கியக் காரணியாகிறது: இதற்கு உதாரணங்களாக “தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம்” (முதலாளிகளின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கானது), மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எளிதாக்கக் கோருதல் (நிலத்தரகின் கூறுகளைக் கொண்டுள்ளது). மாநிலங்களுக்குப் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கும் உரிமை தராத போதும் மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையிலிருந்து பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கத் திட்டம். (தற்போதைய 15ஆவது நிதி ஆணையத்தின் ஒரு திட்டம்).

அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் இந்தத் "தீவிர தேசியவாதத்தை"த் தூண்டுவதன் மூலம் நியாயப்படுத்தப்படுகிறது. மனித உரிமை மீறல் குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் நாட்டின் "எதிரிகளால்" முன்வைக்கப்படலாம் என்பதால், இதுபோன்ற விமர்சனங்களையே அடக்க வேண்டும். திறந்த விவாதம் இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை "தலையிட" முடியும் என்பதால் ஜம்மு-காஷ்மீரில் அடக்குமுறை செய்யும் போது, அத்தகைய விவாதம் அனுமதிக்கப்படக் கூடாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு சர்வாதிகார நடவடிக்கையையும் அது எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், விமர்சிப்பது, என்பது ஒரு தேசிய விரோதச் செயலாகக் கருதப்படும்; அதேபோல், "செல்வத்தை உருவாக்குபவர்கள்" (முதலாளிகள்) என்று அழைக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு எதிர்ப்பும், வளர்ச்சியின் செயல்பாட்டில் ஒரு தடையாக மாறும், அதனால் "தேசிய நலனின்" அடிப்படையில் நாடு ஒரு வல்லரசாக உருவாக இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்,

இந்து ராஷ்டிராவை நிறுவ ஆர்வமாக உள்ள இந்துத்துவ சக்திகளின் நலன்கள்; நவீனத்துவம், ஜனநாயகம், சமத்துவம் நோக்கிய இந்தியாவின் நெடும்பயணத்திற்கு எதிரான எதிர்ப் புரட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

உழைக்கும் மக்களை ஒடுக்க விரும்பும் கார்ப்பரேட்-ஆளும் வர்க்கமும், இந்துத்துவ சக்திகளும் ஒன்று சேர்ந்துள்ளன. கார்ப்பரேட்-இந்துத்துவக் கூட்டணியை வலுப்படுத்துவதற்கும், ஒரு சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான கருத்தியல் வெடிபொருட்களை வழங்குவதற்கும் "தீவிர-தேசியவாதம்" வழிவகை செய்கிறது. இந்த இந்துத்துவ-கார்ப்பரேட் கூட்டணியின் காரணமாகவே, தேர்தல் பத்திரத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக பாஜக இருந்து வருகிறது. ஊடக ஆய்வுகள் மையத்தின் கருத்துப்படி, 2019 தேர்தல்களில் ரூ. 27,000 கோடியை அது செலவழிக்க முடிந்தது என்ற உண்மையை, அத்தகைய கூட்டணியின் அடிப்படையில் மட்டுமே விளக்க முடியும், இது ஏராளமான கார்ப்பரேட் பணத்தை பாஜகவின் கருவூலத்திற்கு வழங்கியது. அப்போது பாஜக அரசாங்கம் இரண்டாவது முறையாக மீண்டும் பதவிக்கு வரும் என்பது தெளிவாகத் தெரிந்த போது பங்குச் சந்தை ஒரு பெரிய எழுச்சியைக் கண்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்றைய “தீவிர தேசியவாதம்” இந்தியத் தேசியத்தின் தோற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம் என்பதற்கு வேறுபட்டு; அதற்கு நேர்மாறாக இருந்த போதும் அதன் பிரபலத்தைப் பயன்படுத்த முற்படுகிறது. சர்வாதிகாரப் போக்குடைய ”தீவிர தேசியவாதமானது” ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றை ஆதரிக்கும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது.

மத்திய அரசின் மையத்துவப் போக்கு 1991க்குப் பிறகு நவீன தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதிகரித்தது. வளங்கள் மட்டும் மையப்படுத்தப்படவில்லை, முடிவெடுக்கும் அதிகாரமும் மையப்படுத்தப்பட்டது. நடுவண் அரசு மாநிலங்களுக்குத் தரும் உதவித்தொகைகளுக்கான வட்டியை அதிகப்படுத்தியது. 1991இலிருந்து மாநிலங்களிடமிருந்து அதிக வருவாய் பெறப்பட்டது. அதன் வளர்ச்சி விகிதத்தை விட வட்டி விகிதத்தை அதிகரித்து கடன் வலையில் மாநிலங்களைச் சிக்க வைத்தது. கடன் நிவாரணம் வேண்டுமென்றால் புதிய தாராளமயக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநிலங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டன. நிதிப் பற்றாக்குறையை நிதிமூலதனம் வெறுத்ததால் ஒவ்வொரு மாநிலமும் நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. சமூக நலத்திட்டங்களுக்காக எந்தச் சட்டமும் உருவாக்கப்படவில்லை. ஆனால் நிதிப்பற்றாக்குறைக்கு மட்டும் சட்டம் உருவாக்க வலியுறுத்தப்பட்டது. மக்களை மையப்படுத்தும் திட்டங்களுக்கு மாநிலங்களே நிதி ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மத்திய அரசு மாநில அரசுகளின் ஊதியத் தொகையை நிர்ணயித்தது. ”தீவிர தேசியவாதம்" என்பது மாநிலங்களின் உரிமைகளைத் துடைப்பதற்கான, அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான ஒரு கருவியாகும். மாநில மக்களுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிளவுபடுத்தி ஒவ்வொரு பகுதியையும் யூனியன் பிரதேசமாக மாற்றியது இதற்கு ஒரு சிறந்தஎடுத்துக்காட்டு. இது நம் அரசியலமைப்புக் கொள்கையின் மதச்சார்பற்ற தன்மையைத் தகர்த்தெறிவதற்கான ஒரு வழிமுறையாகும் (இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்த மசோதா).

இந்தத் தீவிர தேசியவாதத்தை வெல்வதற்கு நாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்ப வேண்டும்; ஆனால் வெறுமனே திரும்பிச் செல்ல முடியாது, கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், அதில் புதிய அம்சங்களாக அடிப்படை அரசியல் உரிமைகளையும், பொருளியல் உரிமைகளையும் இணைக்க வேண்டும். எல்லாப் பொருளியல் உரிமைகளும், அரசுக் கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகளில் (DPSP = Directive Principles of State Policy) வருவதால் அவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை என்ற நிலை உள்ளது. தற்பொழுது உலகளாவிய அடிப்படை ஊதியம் சிலரால் பரிந்துரைக்கப்படுகிறது. அது அரசுக் கருணையின் அடிப்படையில் மக்களுக்கு வழங்குவதாக அமைவதால் அடிப்படையில் அது ஒரு தவறான கருத்தாக்கம். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 10% (15-16 இலட்சம் கோடி) ஒதுக்கினால் போதும் அதன் மூலம் அனைவருக்கும் உணவுரிமை, கல்வியுரிமை, வேலை மற்றும் மருத்துவசேவை பெறுவதற்கான உரிமை, ஓய்வூதிய உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய முடியும். நாட்டின் 57% செல்வத்தைக் கொண்டுள்ள முதல் ஒரு சதவீதத்தினரிடமிருந்து 2% செல்வ வரியை விதிப்பதன் மூலம் இதற்கான நிதியைப் பெறமுடியும். இந்தியாவின் சமூகப் புரட்சியை மீண்டும் தொடங்குவதற்கு கராச்சி காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

- சமந்தா

Pin It