சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் அதிகம் நிபுணத்துவம் இல்லாத ஒருவர், சோசலிசம் குறித்து பேசுவதுப்பற்றி கேள்விகளை எழுப்பலாம். அதற்கு சில காரணங்களும் இருக்கலாம்.

முதலில் இக்கேள்வியை அறிவியல் பார்வை கொண்டு நாம் அணுகி சிந்திக்கலாம்.

பொதுவாக பார்க்கும்போது, வானியல் ஆய்வு முறைகளுக்கும், பொருளாதார அறிவியல் ஆய்வு முறைகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வழிமுறை வேறுபாடுகள் ஏதுமில்லாததுபோல் தோன்றும்.

Albert Einsteinமேற்காண் இருதுறை அறிஞர்களும் அந்தத்துறைகளில் காணப்படும் முக்கிய பிரச்சனைகளையும், நிகழ்வுகளையும் குறித்து ஆய்வு செய்து அவற்றினுள்ளே இயங்கும் பொது விதியினை கண்டறிந்து அதை எல்லோருக்கும் புரியும் வண்ணம் முடிந்தவரை எளிமையான விதிகளாகத் தருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இருப்பினும் இந்தத் துறைகளின் ஆய்வு முறைகளுக்கிடையே சிற்சில வேறுபாடுகள் உண்டு.

பொருளாதாரத்துறையை பொருத்தமட்டில், அந்தத்துறையில் நோக்கி அறியப்பட்ட ஒரு நிகழ்வின் பின்னணியில் இயங்குகின்ற விதி இது தான் என்று அறுதியிட்டுச் சொல்லி விட முடியாது. ஏனெனில் அந்த நிகழ்வினை பாதிக்கும் காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்து முடிவுகளைத் தருவது என்பது, சாதாரண காரியமல்ல. அது மிகக் கடினமான ஒரு பணி.

கூடுதலாக, நன்கு அறியப்பட்ட மனித நாகரிக வரலாற்றின் தொடக்கப் புள்ளியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள அனுபவங்களின் வழி, மனித நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்ட காரணங்கள் யாவும், பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்காற்றின, என கண்டறிவதும் உள்ளபடியே பொருளாதாரத்துறையில் ஒரு சவால்.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், பிறநாடுகளை தோற்கடித்து பெற்ற வெற்றியினையே வரலாறாகக் கொண்டிருக்கின்றது..

வெற்றிபெற்ற நாட்டின் மக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் சலுகைகள் பெற்ற வர்க்கமாக சட்டபூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்களைத் தாங்களே நிலைநாட்டிக்கொண்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் உள்ள விளைநிலங்களின் மீது ஏகபோக உரிமையைப் கைப்பற்றிக் கொள்வதோடு ஆளும் அதிகாரவர்க்கம் தங்களுக்குள் ஓர் அதிகார வரிசைப்பட்டியலை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்ப்பட்ட நாடுகளில் தங்களது மேலாண்மை நிலைநாட்ட தாங்கள் பின்பற்றும் மதத்தினை அந்நாட்டு மக்களிடையே பரப்பும் பொருட்டு ஒரு மதத்தலைமையையும் நியமித்து விடுவார்கள். 

ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கல்வியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த மதகுருமார்கள், சமூகத்தில் வாழும் மக்களுக்கு இடையே பொருளாதர ரீதியிலும், அதிகார ரீதியிலும் வர்க்கப் பிளவுகளை உண்டாக்கி, அதை ஒரு நிரந்தர சமூக நிறுவனமாக மாற்றிவிடுவர்.

இந்த வர்க்கப் பிரிவினையை நியாயப்படுத்தும் வகையில் சில சமூக வாழ்வியல் மதிப்புகளையும் உருவாக்கி, அதன் வழியே அந்தச்சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன்னிச்சையாக கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தையும் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். ஆனால், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றின் வழி நாம் அறிய வருவது என்னவெனில் புகழ்பெற்ற பொருளாதர நிபுணர் தோஸ்டீன் வெபுலன் (Thorstein Veblen) கூறுவதைப்போல இந்த "கொள்ளையடிக்கும் காலகட்டத்தை” (The Predatory Phase) கடக்காமல் வரலாற்றில் மனித வளர்ச்சி என்பது சாத்தியமாகியிருக்காது. 

பொருளியலை பொருத்தவரை, கொள்ளையடிக்கும் அந்த காலக்கட்ட வரலாற்றை உற்றுநோக்கியதன் வழி அறியப்பட்ட முக்கியமான பொருளாதார உண்மைகளும், அதன் வழியே பெறப்பட்ட விதிகளும் வரலாற்றின் வேறொரு பகுதிக்கு பொருந்துவதில்லை.

சோசலிசத்தின் உண்மையான நோக்கம் என்பது “கொல்லையடிக்கும் காலகட்டத்தில்’ இருந்து மனிதச்சமூகத்தை விடுவித்து, அதனினும் உயரிய ஒரு மனிதச் சமூகத்தையும் அதன் வளர்ச்சியையும் சாத்தியப்படுத்துவதுதான் எனினும், பொருளாதார அறிவியலின் தற்போதைய நிலையானது எதிர்கால சோசலிச சமூகத்திற்கு ஒரு சிறிய வெளிச்சத்தை மட்டுமே காட்ட முடியும்.

மேலும், சோசலிசம் என்பது ஒரு உயரிய சமூக நன்னடத்தையை நோக்கிச் செல்கிறது. சோசலிசம் ஓர் அறிவியல் எனில், அவ்வறிவியலானது, முற்றும் முடிந்த அல்லது அதற்கும் குறைவான நடத்தை மாற்றங்களை மனிதச்சிந்தனை மரபில் உடனடியாக உருவாக்கி விட முடியாது எனினும், அதை அடைவதற்கான சில வழிமுறைகளை வழங்கக் கூடும்.

ஆனால் இத்தகைய உயரிய சமூக நன்னடத்தைகள், உயர்ந்த விழுமியங்களை தங்கள் வாழ்வியல் முறையாக கொண்டவர்களின் மனதில் கருக்கொண்டுவிடுகிறது. ஒருவேளை இந்த உயர் நன்னடத்தையைக் கோரும் சிந்தனையானது, அது பிறக்கும்போதே இறவாமல் காக்கப்படமேயானால், அதன் உயிரோட்டமிக்கத் தேவையானது, சமூகத்தில் வாழும் பல்வேறு அங்கத்தினரால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரிமாற்றப்படும்.

அத்தகையோர், ஓர் உயர்நெறி சமூகத்தை மெதுவாக வளர்த்தெடுப்பதில், தங்களை அறியாமலேயே பங்காற்றுவர். இந்த காரணங்களுக்காக, அறிவியலையும், அறிவியல் முறைமைகளையும் சமூகம் மற்றும் மனிதர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பொருத்திப்பார்க்கும்போது மனித நடத்தையில் மாற்றத்தை உண்டு பண்ணும் அறிவியல் முறைமைகளுக்கு (சோசலிசம்) அதீத முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தும்போது எழும் முரண்பாடுகளினால், அந்த முறைமையையே கேள்விக்குள்ளாக்கபடுவதிலிருந்து நாம் அதனை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

சமுதாய அமைப்பை பாதிக்கும் எந்தக்கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் உரிமை அத்துறை நிபுணர்களுக்கு மட்டுமே உரியது என்று நாம் கருதிக்கொள்ளக்கூடாது.

மனித சமூகம் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. அவ்வாறு கடந்து செல்லும்போதே, சமூகத்தின் நிலைப்புத்தன்மையை அது கொஞ்சம் கொஞ்சமாக நொறுக்கிக்கொண்டே செல்கின்றது, என்று எச்சரிக்கும் சமூகச் சிந்தனையாளர்களின் எண்ணிலடங்கா குரல்கள் அவ்வப்போது உறுதியுடன் எழுகின்றன.

இது போன்றுதொரு எச்சரிப்பு குரல்கள் ஓங்கி ஒலிக்கும் ஒரு சூழ்நிலையை, தனிநபர்கள் அவர்களுக்கே உரிய சிறப்புத்தன்மையுடன் எதிர்க்கொள்வார்கள். அவர்களது யதார்த்த குணாதிசயங்களுக்கும், உலகத்தைப் பற்றிய அவர்களது சொந்தப் பார்வைக்கும் ஏற்ப அதன் மீதும் ஆர்வம் காட்டமாக இருப்பார்கள்; சில சமயம் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ எதிர்க்கவும் செய்வார்கள்.

இது தொடர்பான எனது அனுபவம் ஒன்றை இங்கே பகிர்வதன் மூலம் மேற்சொன்ன கருத்தை விளக்க முடியும் என்று நினைக்கின்றேன். நல்லறிவும், என் மீது மிகுந்த பற்றுதலும் கொண்டிருந்த ஒரு நண்பரோடு, அடுத்து வரப்போகும் மற்றொரு போரின் அச்சுறுத்தலைப்பற்றி அண்மையில் நான் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.

போர்க்குறித்த என்னுடைய சுயக்கருத்தின்படி, வரவிற்கும் உலகப்போரினால் மனித குலத்தின் இருப்பே மிகுந்த ஆபத்தான ஒரு நிலைக்குச் சென்றுவிடும்போல் உள்ளது. இவ்வழிவு நிலையிலிருந்து மனிதக்குலத்தை காக்கும் திறன் உலகளவில் ஏற்படுத்தப்படும் ஓர் அதிகார அமைப்பிற்கு மட்டுமே இருக்கின்றது” என்பதாக நான் அவரிடம் கூறினேன்.

அமைதியாக கேட்டுக்கொட்டிருந்த என் தோழர், மிகச் சாதரணமாக "மனிதச் சமூகம் ஒன்றையொன்று போட்டிப்போட்டுக்கொண்டு வளர்ச்சி நோக்கிச் செல்கின்றது; நீ ஏன் அதை தடுக்க விரும்புகிறாய்?" என்று பதில் சொன்னார். அவரது பதில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்புவரை, இவ்வளவு கொடிய ஒரு வாதத்தை இவ்வளவு மென்மையாக யாரும் சொன்னதில்லை, என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

பொது மனித சமூகத்தின் தற்காலப் போக்கு எதுவாயினும் அதைப்பற்றி கவலைப்படாது, அவற்றின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், அவற்றிலிருந்து விலகி, அவற்றிற்கான எளியத் தீர்வுகளாக தன்னைதானே அற்பமாக சமாதனப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்களும், சிறந்த ஒரு பொது மனிதச்சமூகத்தை கட்டமைக்கத் தேவையான நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களின் வாக்குமூலம் தான் இது.

வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட வெறுமையும் வலிமிக்க தனிமையையும் அனுபவிப்பவர்கள், சமூகத்தொடர்புகளில் இருந்து முற்றிலும் தன்னைத் துண்டித்துக் கொள்வதன் வெளிப்பாடு தான் இவை. ஆனால், எளிய மனிதர்களின் இத்தகைய கொடிய வாக்குமூலங்களின் விளைவால் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் போரினாலும் அதிகார அடக்கும்றைகளினாலும் தொடர்ந்து துன்புறுத்துப்படுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணமாக அமைவது எது ? இவற்றிலிருந்து விடுபடும் மார்க்கம் ஏதேனும் உண்டா?

இத்தகைய கேள்விகளை எவரும் எளிமையாக கேட்டுவிடலாம். ஆனால் இக்கேள்விகளுக்கு, உலகில் உள்ள பெரும்பாலான மக்களும் ஏற்றுக்கொள்ளும்படியான, இச்சிக்கல்களுக்கு நிச்சயம் ஒரு பொருத்தமான தீர்வு உண்டு என அவர்கள் எண்ணும்படி, அத்தகைய தீர்வுகளை நோக்கி மக்களை நகர்த்த, அவர்களுக்கு குறைந்தபட்ச நம்பிக்கை அளிக்கும்படியான பதில்களை தறுவது தான் கடினம். 

நமது சிந்தனை உணர்ச்சிகளும், கடின முயற்சிகளும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருப்பது உண்மையே.

மேற்கண்ட கேள்விகளுக்கு, ஓர் கணித-அறிவியல் சூத்திரத்தைக்கொண்டு விடையளிப்பது போல் எளிமையாக சொல்லி விட முடியாது. வேறு சில எளிமையான முறைகளும் இல்லை என்பதையும் நான் நன்கு உணர்ந்தே இருக்கிறேன். இருப்பினும் நான் முடிந்த அளவிற்கு எளிமையாக விளக்க முயற்சி செய்கின்றேன்.

மனிதர்கள் ஒரே நேரத்தில் ஒரு தனித்த உயிராகவும், அதே சமயத்தில் ஒரு சமூகப் பிரதிநிதியாகவும் வாழக்கூடியவன். ஓர் தனித்த உயிரியாக தன்னுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும் தனக்கு மிக நெருக்கமானவர்களின் நலனை பாதுகாத்துக் கொள்வதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளிலும் அவன் ஈடுபடுகின்றான். அதன்வழி தன்னுடைய சுய விருப்பங்களையும், தன்னுள் இயங்கும் உள்ளார்ந்த ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் முடிகின்றது. 

ஒரு சமூக உயிரியாக, தான் சார்ந்திருக்கும் சமூக உறுப்பினர்களின் நன்மதிப்பையும் அவர்களின் அங்கீகாரத்தையும் பெற முயற்சிக்கின்றான். தன்னுடைய மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம், அவர்களது துன்பத்தில் பங்கெடுப்பதன் மூலம், அவர்களது வாழ்க்கை நிலையை உயர்த்த தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலம் தன்னை ஒரு சமூக பிரதிநிதியாக நிறுவ முயற்சிக்கின்றான்.

முரண்பட்ட இந்த இருமை தன்மைகளே, மனிதர்களின் தனிச்சிறப்புமிக்க பண்புகள். மேலும் இவை ஒரு திட்டவட்டமான முறையில் ஒன்றினையும்போது, அது ஒரு மனிதனை தன்னிறைவு நோக்கியும், அதே சமயத்தில் சமூகத்திற்கு நன்மைக்கு பங்களிக்கும் ஒரு நல்ல சமூகப் பிரதிநிதியாகவும் அமைய வழிவகுக்கின்றது.

ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்ற இந்த இரு இயக்குவிசைகள், வழிவழியாக ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது. மனிதர்களைப் பொருத்தமட்டில் இது முற்றிலும் சாத்தியமான ஒரு நிலைநிறுத்தப்பட்ட முக்கிய மரபுப் பண்பாகும்.

ஆயினும் ஒரு தனி மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சியை பெரும்பாலும் அவர்கள் வளர்ந்து வருகின்ற காலங்களில், அவர்களைச் சூழ்ந்திருக்கும் உலகினை அவரளவில் எப்படி புரிந்து கொள்கிறார்கள், அவர்கள் வளரும் காலத்தில் அவரைச்சுற்றி இருக்கும் சமூகத்தின் அமைப்பு, அதன் மரபார்ந்த தன்மை, சில குறிப்பிட்ட வகை சமூக மற்றும் தனிமனித ஒழுக்க நடத்தைப் பற்றிய அவர்களின் சுய மதிப்பீடு, போன்றவை தான் தீர்மானிக்கின்றன.

கருத்தியல் ரீதியில் ‘சமூகம்’ என்பதன் பொருள், தனித்த மனிதர்களும், அவர்களது சமகாலத்தில் வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது மூதாதையர்கள் அவர்களுக்கு இடையேயான நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளின் ஒட்டுமொத்த பயனே சமூகம் என்பது.

தனி மனிதனானவன், பிறருடைய துணையின்றி தனித்தே சிந்திக்கவும், செயல்படவும், லட்சியங்களை நோக்கி கடுமையாக முயற்சிக்கவும், அதற்கான வேலைகளில் ஈடுபடவும் முடியும். ஆயினும், அவன் உடலும், அறிவும், உணர்ச்சிகளும் பெருமளவில் சமூகத்தைச் சார்ந்தே இருக்கின்றன. எனவே, சமூகத்தின் கட்டமைப்பைத் தாண்டி ஒருவனால் எதையும் சிந்திக்கவோ, புரிந்து கொள்ளவோ இயலாது. தனிமனிதன் எந்த தனித்த அறிவும் சிந்தனையும் சமூகத்தின் உள்ளடக்கமே.

இன்று, ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் உணவு, உடை, உறையுள், கருவிகள், மொழிகள், சிந்தனை முறைகள், சிந்திப்பதற்கான தரவுகள், உழைப்பின் வழியே தனது வாழ்வை நடத்திக்கொள்வதற்கான வாய்ப்பு இவை யாவுமே, மனிதச்சமூகம் இன்றும் இதற்கு முன்பும் எத்தனையோ பல லட்சம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட செயல்களின் வழிப் பெறப்பட்ட அனுபவங்களின் கொடைப்பயன்கள். இவை யாவும் ‘சமூகம்’ என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அடங்கிவிடுகின்றது.

எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தை நம்பியே வாழ்கிறான் என்ற இயலுண்மைக்கு இதுவே சான்றாதாரம். இந்த இயற்கை உண்மையை, நம்மை போல சமூகமாக இணைந்து வாழும் தேனிக்களின் சமூக வாழ்க்கையின் அளவில் பொய்யென்று காட்ட முடியாது. 

ஆயினும் தேனிக்களின் சமூக வாழ்க்கை முறையினோடோ அல்லது எறும்புகளின் சமூக வாழ்க்கை முறையினோடோ, மனிதர்களின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது தான். அவைகளின் சமூக அமைப்புப் பண்புகளான மரபார்ந்த உள்ளுணர்வு, சமூக அமைப்பு முறையை பேணுதல், போன்றவை காலாகாலத்திற்கும் இறுக்கமானவை; மாற்றத்திற்கு உட்படாதவை. ஆனால், மனிதர்களைப் பொருத்தமட்டில் இத்தகைய சமூக அமைப்புப் பண்புகள் காலத்திற்கு காலம் எளிதில் மாறக்கூடியவை.

நினைவுத்திறன், தான் கற்றுக்கொண்ட அறிவுகளுக்கு இடையேயும், தகவல்களுக்கு இடையேயும் புதிய புதியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் திறன், மொழிவழிப்பட்ட தகவல் தொடர்புதிறன்கள் போன்றவை, மனிதர்களின் இயல்பான உயிரியல் தேவைகளை பூர்த்திச் செய்துகொள்வதற்கான இயல்பூக்க தூண்டலுக்கும் அப்பால் நின்று மனிதர்களின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் சிறப்புப் பண்புகள்.

மனிதர்களின் இந்த தனிச்சிறப்புப் பண்புகளில் ஏற்படும் தொடர் வளர்ச்சியின் வெளிப்பாடுகளினால் தான், மரபுகளில், சமூக நிறுவனங்களில், இலக்கியங்களில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில், கலை வளர்ச்சியில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

மேற்கண்ட விளக்கங்கள், மனிதன் தனக்குத்தானே ஒரு ஆக்கச் சக்தியாக செயல்பட முடியும் எனக் காட்டுக்கின்றது. அதற்கு விழிப்புணர்வுமிக்க சிந்தனைகளும், எழுந்துநிற்கும் கட்டாயத் தேவைகளுமே அதில் முக்கியப்பங்காற்றுகிறது, என்று நாம் கருத முடியும்.

மரபுவழிப்பட்ட நடத்தைகள், மாற்றத்திற்கு உட்படாத உயிரியல் கட்டுமான அமைப்புகள், உயிரியல் தூண்டல்கள் போன்றவை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனிச்சிறப்பு வாய்ந்தவைகளாக அமைகின்றன. அவை பிறப்பின் வழியே பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

அத்துடன், சமூகத்தோடு தொடர்பு கொள்ளும்போதும் ஏனைய செல்வாக்கு மிக்க காரணிகளின் தாக்கத்திற்கு ஆட்படும்போதும் தனிமனிதர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளை அவர்களுக்கே உரியவழியில் வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் பெற்ற அந்தப் பண்பாட்டுக்கூறுகள் காலப்போக்கில் மாற்றத்திற்கு உட்படுகின்றன. அம்மாற்றம் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையே இருக்கவேண்டிய உறவினை தீர்மானிக்கும் முக்கிய ஆற்றலாகவும் உருப்பெருகிறது.

இதுவரை அறியப்பட்ட பண்பாடுகளிலேயே பண்பாட்டு படிநிலை வளர்ச்சியில் காலத்தால் மிகவும் முற்பட்ட நாட்களில் வாழ்ந்த மனிதர்களின் சமூக நடத்தை பண்புகளுக்கும், இன்றைய மனிதர்களின் சமூக நடத்தைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என, நவீன மானுடவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

அந்தந்த காலகட்டங்களில் பெருவழக்கில் இருந்த பண்பாட்டு வடிவங்களும் அமைப்புகளும், இத்தகைய மாற்றங்களை நிகழ்த்துவதில் வலிமைமிக்க காரணிகளாக விளங்கியிருக்கின்றன.

மனிதர்களின் உயிரியல் அமைப்பைப் பொருத்து, அவர்தம் வாழ்க்கைமுறையை ஆனமட்டும் தன்னிறைவு மிக்கதாக மாற்ற, சமூக அமைப்பையும், பண்பாட்டு மனப்பான்மையையும் நாம் எந்த அளவிற்கு மாற்றியமைக்க முடியும் என நம்மை நாமே கேட்டுக்கொள்வோமெனில், அதற்கு பதிலாக கிடைக்கும் ஓர் உண்மையில் நாம் நீடித்த உறுதியோடு இருந்தாக வேண்டும். அது என்னவெனில், சமூக வாழ்வியலுக்கான சில நிபந்தனைகளை நாம் மாற்ற முடியாது என்பதைத்தான். இந்த உண்மை தான் பொது மனிதச்சமூகத்தை உயர்த்த பாடுபடுபவர்களின் நம்பிக்கைக்கு அடித்தளமாக இருக்கின்றது.

முன்னரே குறிப்பிட்டதைப்போல், மனிதனின் உயிரியல் பண்புகளை, இயல்புகளை எக்காரணத்தைக் கொண்டும் நாம் மாற்ற முடியாது. மேலும் கடந்த சில நூற்றாண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நிலைகள் எந்த மாதிரியான நிபந்தனைகளை உருவாக்கியிருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அம்மக்களின் வாழ்க்கைப்பாடுகளுக்கு வேண்டிய அடிப்படையான பொருட்களின் பெருக்கமும் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை. அதற்கு ஏற்ப வேலைப்பிரிவினைகளைக் கொண்ட விரிந்த தொழிலாளர் பட்டாளங்களும், மையப்படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனங்களை உள்ளடக்கிய பொருள் உற்பத்தி முறைகளும் முற்றிலும் தவிர்க்க இயலாதவை.

வரலாற்றுக் காலத்தைப் பின்னோக்கி பார்க்கும்போது, சில தனிமனிதர்களோ அல்லது மிகச்சிறிய ஒரு முதலாளி வர்க்கமோ பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும் தன் கையில் வைத்துக்கொண்டதன் மூலம் எக்காலமும் பொருட்தேவைகளில் தன்னிறைவுப்பெற்ற, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றது என்பது, ஐயத்திற்கு இடமின்றி புலனாகின்றது.

உலக அளவில் பரந்து விரிந்துள்ள உள்ள மனிதச் சமுதாயம், அவர்களது தேசித்திலோ, மாநிலத்திலோ, வட்டாரத்திலோ, ஒருங்கிணைந்து வாழும் சமூகங்களாக தங்களை கட்டமைத்துக்கொள்வதற்கான அடிப்படையான நோக்கம், உற்பத்தியை பெருக்குவதும், அதனை நுகர்வதும் தான். சமூகமாக இணைந்திருப்பதன் வேறு பல நோக்கங்களை கருத்தில் கொள்ளாது நுகர்வை மட்டும் முன்னிறுத்துவது என்பது, ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால், அதுவே உண்மை.

இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளை எட்டுவதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றி சுருக்கமாக இங்கு குறிப்பிடுகின்றேன்.

அந்தத்தீர்வுகள், தனிமனிதன் சமூகத்தோடு கொள்ள வேண்டிய உறவைப்பற்றி விளக்குவதில் அமைந்திருக்கின்றது. சமூகத்திற்கும் தனிமனிதனுக்கு இருக்க உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு தனி மனிதர்களும் தன்னை, ஒரு சமூக உறுப்பினராக உணர்வதைக் காட்டிலும் தனது தனிமை இருப்பையே, தன்னை ஒரு தனித்த உயிரியாகவே அதிகம் உணர்கிறார்கள்.

பொதுவாக மனிதர்கள் சமூகத்தைச் சார்ந்திருப்பதை இயல்பாகவே ஒரு பாதுகாப்பு உணர்வாகவோ நேர்மறையாகவோ உணர்வதில்லை. மாறாக அத்தகைய சமூகச்சார்பை தனது இயல்பான உரிமைகளுக்கும், பொருளாதாராத்திற்கும் உள்ள அச்சுறுத்தலாகவே உணர்கிறார்கள். 

பொதுச்சமூகத்திற்குள் ஒருவரை கட்டிறுக்கி, இயங்க வைக்கும் சமூக இயக்கு விசைகள் இயல்பாகவே பலவீனமாக இருக்கும் ஒரு சமூகத்தில் யாரெனும் சிலர் அதிகாரமிக்கவர்களாக, சமூகத்தின் நிலை எத்தனை பரிதாபாமக இருப்பினும், அதேச்சமூகத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அவர்கள் மட்டும் தன்னலத்தோடும் தற்பெருமைகளோடும் வளர்வது தொடர்ந்து அதிகரிக்குமேயானால், அது அந்தச் சமூகத்தின் பலவீனத்தை தொடர்ந்து படுமோசமாக்கும்.

சமூக இயக்கு ஆற்றல்களின் தொடர் பலவீனப்போக்கு, அந்தச்சமூகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும், அவர்கள் அந்தச்சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பாதிப்பை உண்டாக்கும்.

சமூகத்தை ஆட்டிப்படைக்க நினைப்பவர்கள் அவர்களை அறியாமேலேயே அந்தச்சிறைக்குள் சிக்கிக்கொள்வார்கள். அத்தகையோர், பாதுகாப்பின்மை, தனிமை, ஆடம்பரம், மற்றும் சூதுவாது குரோத மனப்பான்மையை பெற்றிருப்பதுடன், மகிழ்ச்சியான வாழ்வும் வாழமாட்டார்கள். மனிதர்கள் தங்கள் வாழ்வியலுக்கான உண்மையான விளக்கத்தை சமூக வளர்ச்சியில் தன்னை ஈடுப்படுத்திக்கொள்ளும்போது தான் உணர முடியும்.

இன்று நடைமுறையில் இருக்கும் முதலாளித்துவச் சமூகத்தின் பெரும் ஏற்றுத்தாழ்வுமிக்க பொருளாதார நிலையானது, சமூகத்தில் கொடுந்தீவினைகளின் உண்மையான மூலதனங்கள், என்று நான் சொல்வேன்.

மூலதனத்தையும், உபரி உற்பத்திகளையும் செய்யும் பாட்டாளி வர்க்க உற்பத்தியாளர்கள், தாங்கள் ஈடுபட்ட கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க முடியாமல் தடுக்கப் படுகிறார்கள். அவ்வாறு தடுக்கும் பொருட்டு முதலாளித்துவம் கடும் முயற்சிகளை முடிவிலாமல் எடுத்துக் கொண்டிருப்பதை நம் கண்முன்னே பார்க்கின்றோம். தொழிலாளர்கள் இதை மனமுவந்து ஏற்பதில்லை. ஆனால், காலங்காலமாக நாம் ஏற்படுத்திக்கொண்ட சமூக ஒப்பந்த விதிகளுக்கு விசுவாசத்தோடு கீழ்படிவதன் மூலம் அந்த நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.

இந்தப்பார்வையின் அடிப்படையில், உற்பத்தி என்றால் என்ன என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகிறது.

பொதுச்சமூகத்திற்கு தேவையான அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களையும், முதலாளித்துவ வளர்ச்சிக்கு வித்திடும் மூலதனப்பொருட்களையும், உபரி உற்பத்தியையும் நம்மால் உற்பத்தி செய்யும் திறனுக்கேற்ப சமூக உற்பத்திச் செய்கின்றோம். ஆனால் அந்தச் சமூக உற்பத்திகளில் மிகப்பெரும்பாலனவை தனிநபர்களுக்குச் சொந்தமானவைகளாகிவிடுகின்றன.

இனிவரும் உரையாடல்களில், தாங்கள் உற்பத்திச் செய்த பொருட்களின் மீது தனக்கென ஒரு பங்குரிமை கோராதவர்களை, ‘உழைப்பாளிகள்’ என்று எளிமையாக, நான் அழைக்கப்போகிறேன். இந்தச்சொல் ஒரு வழக்கமான பயன்பாட்டுச்சொல் இல்லை என்பதையும் நான் அறிவேன்.

மூலதனத்திற்கு சொந்தக்காரர்களான முதலாளிகள், உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளிகளின் மொத்த உற்பத்தி ஆற்றல்களையும், உழைப்பையும் விலைகொடுத்து வாங்கும் சக்தி உடையவர்களாக உள்ளனர்.

மூலதனம் அல்லது மூலமுதல் என்பது, உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளிகள் அந்த மூலதனத்தைக்கொண்டு உற்பத்திச்செய்யும் புதிய உற்பத்திப்பொருட்களையும், உபரியையும் குறிக்கின்றது. ஏற்கனவே உள்ள மூலதனத்தைக்கொண்டு உற்பத்திச்செய்யப்பட்ட புதியப்பொருட்களும் உபரிகளும் முதலாளிகளுக்கே உரியவனாகிவிடுகின்றன.

உபரியை உற்பத்திச் செய்யும் இந்த செயல்முறையில், உழைப்பாளிகள் உற்பத்தி செய்தவைகளுக்கும், அவைகளை உற்பத்திச் செய்ய உழைப்பாளிகள் இழந்தவைகளுக்குமான உறவைப்பற்றி இங்கு ஆராய வேண்டியது மிக மிக இன்றியமையதாது. இரண்டும் அதன் உண்மையான மதிப்பில் கணக்கிடப்பட வேண்டும்.

உழைப்பாளிகளுக்கு கொடுக்கக்கூடிய கூலி என்பது, அவர்கள் செய்த உற்பத்திப்பொருட்களின் உண்மையான மதிப்பின் அடிப்படையில் அல்லாமல், அவர்கள் உயிர் பிழைத்து இருப்பதற்கான குறைந்தபட்ச தேவையின் அடிப்படையில் வழங்குவது தான் இதுநாள் வரையில் வழக்கில் உள்ள ‘தொழிலாளர்களின் மதிப்பற்றக் கூலி ஒப்பந்தந்ததின்’ நடைமுறை.

முதலாளித்துவத்திற்கு தேவையான உற்பத்தி சக்தியை, வேலைக்கு போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு தொடர்புபடுத்தும் வகையில் இந்த ’தொழிலாளர்களின் மட்டுமதிப்பற்ற கூலி ஒப்பந்தந்தம்’ அமைந்துள்ளது. அதாவது வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு, உழைப்பாளிகளுக்கு இடையே போட்டியை உருவாக்கிவிட்டால், பின்பு அவர்கள் தங்களது குறைந்தபட்ச தேவையை பூர்த்திச்செய்துகொள்வதற்காக எத்தகைய கூலி ஒப்பந்தத்திற்கும் இணங்குவார்கள் என்ற முதலாளித்துவச் சூத்திரத்தை நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

உழைப்பாளிகளுக்கான கூலி, அவர்கள் செய்த உற்பத்திப்பொருட்களின் உண்மையான மதிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும் என்பது, கோட்பாட்டு அளவில்கூட நிர்ணயிக்கவில்லை என்பதைத்தான் நாம் இங்கு முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாளித்துவவாதிகளுக்கு இடையே நிலவும் போட்டிகள், தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், அதைத்தொடர்ந்து அதிகரித்துவரும் பல்வேறு வேலைப்பிரிவினைகள்; அது குறைந்த செலவில் அளவுகடந்த உற்பத்தியை ஊக்குவிக்கின்றது. இவை தான் தனியார் மூலதனங்கள் ஒரு சில முதலாளிகளின் கைகளிலேயே தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான காரணங்கள்.

மேற்கண்ட செயல்முறைகளின் வளர்ச்சியானது, அதன் முடிவில் தனிச்சொத்து மூலதனங்களை அதிகரிக்கச்செய்யும் ஓர் எந்திர செயல்முறையாக அமையும். அதன் விளைவு, சமூகத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி மிகச்சிறிய எண்ணிக்கையில் அமைந்த ஒரு வல்லாதிக்க அதிகார குழுவிடம், சென்று சேர்வதற்கு வழிகாட்டும். சமூகத்தை கட்டுக்குள் வைக்கும் சர்வாதிகாரம் ஒரு சிறியக்குழுவிடம் சென்று சேர்வதை, மக்களாட்சி முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அரசியல் சமூகத்தால் கூட புரிந்துகொள்ளவோ, சோதித்துப்பார்த்துக்கொள்ளவோ முடியாமல் போய்விடும்.

சட்டமியற்றும் அதிகாரம் படைத்த நிறுவனங்களுக்கு (பாராளுமன்றம் அல்லது நாடாளுமன்றம்) தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளுக்கு முதலாளித்துவம் பெருந்தொகையை செலவு செய்கின்றது. அரசியல் கட்சிகள் முதலாளித்துவவாதிகளின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளன என்பது இன்றைய யதார்த்தம். இந்த முதலாளித்துவம் சட்டமியற்றும் அதிகாரக்குழுக்களிடமிருந்து, குடிமக்களை, வாக்காளர்களை தங்களின் சொந்த லாபத்திற்காக எல்லா வகையிலும் பிரித்து வைக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றது.

சட்டமன்றங்களில் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய மக்களாட்சி உறுப்பினர்கள், நலிவடைந்த, பிந்தங்கிய மக்களின் நலன்களையும், அதிகாரங்களையும் பற்றி குறைந்தபட்ச அளவில் கூட பேசுவதில்லை, என்பதே மக்களாட்சியின் யதார்த்த நடைமுறை.

உலகப் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் உலகப்பெரும் பணக்கார தனியுடைமை கார்ப்பரேட்டுகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்யும் ஊடகங்களான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், ரேடியோ, கல்வி என அனைத்தையும் நேரடியாகவோ, மறைமாகவோ கட்டுப்படுத்தும் ஆற்றலுடையவர்களாக இருக்கிறார்கள்.

தனித்த ஓர் குடிமகன், தான் கண்ட உண்மையான, மதிப்புமிக்க ஓர் அரசியல் பார்வையை முன் வைத்து வெளிப்படையான அரசியல் முடிவுகளுக்கு வருவதும், தனக்கு இருக்கக்கூடிய அரசியல் உரிமைகளை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது என்பது, தற்போதைய முதலாளித்துவச் சமூகத்தில் மிகக் கடினமான முயற்சிகளைக் கோரி நிற்பது; மேலும் அது அவ்வளவு எளிய காரியமுமில்லை.

தற்போதைய உலக நடைமுறைய, மூலதனங்கள் அனைத்தும் தனியுடைமையாகக் கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவச் சமூகத்தை பொருளியல் அடிப்படையில் உற்றுநோக்கும்போது, அவற்றிற்கு 2 முக்கியமானப் பண்புகள் உள்ளதை உற்றுநோக்கி அறிய முடிகின்றது.

1. உற்பத்திகள் முழுவதும் தனியார்ச் சொத்துக்களாகிவிட்டன. அவ்வாறு உற்பத்திச்செய்யப்பட்டப் பொருட்களை, முதலாளித்துவம் தங்களுக்கு பொருத்தமாக, லாபம் ஈட்டும் வகையில் சந்தைப்படுத்தி விற்றுத் தீர்க்கின்றனர்.

2. மூலதனத்தையும், உபரியையும் தோற்றுவிக்க பயன்படும் தொழிலாளர்களின் உழைப்பு என்பது முழுக்கவும் மதிப்பற்ற ஒன்றாகி விடுவது.

மேற்சொல்லப்பட்ட அந்த இரண்டு பண்புகளும், முழுமையான முதலாளித்துவச் சமூகத்தில் நிலவக்கூடியப் பண்புகள். எனவே, நடப்பில் இருப்பது ஒரு முழுமையான முதலாளித்துவச் சமூகத்திற்கு சற்றும் குறைந்ததல்ல, என்பதற்கு வேறு விளக்கங்களே தேவையில்லை.

இந்த முதலாளித்துச் சமூகத்தில், தொழிலாளர்களின் நிலை என்னவாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்று பார்க்கும்போது, குறிப்பாக, பாட்டாளி வர்க்கம் நடத்திய, இன்னல்கள் மிகுந்த, நீண்ட பல அரசியல் போராட்டங்களுக்கு பிறகு, உற்பத்திப்பொருட்களில் தனக்கு எந்தப்பங்கும் கோராத ஒப்பந்தக்கூலிமுறையில் (free labor contract) குறைந்தபட்ச பாதுகாப்பை, முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சிலத் தொழிற்பிரினவர் மட்டும் வென்றெடுத்துள்ளனர்.

ஆனால், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலைகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஒரு முழுமையான முதலாளித்துவச் சமூகத்திற்கும், தற்போதைய சமூகப் பொருளாதாரநிலைக்கும் இடையே பெரிய வேறுபாடுகளே காணப்படவில்லை. 

முதலாளித்துவத்தில், உற்பத்தி என்பது லாப நோக்கைக் கொண்டது; அது சமூகத்தின் அத்திவாசியத் தேவைகளை நிறைவுச் செய்வதற்கான நோக்கங்களை கொண்டதல்ல. முதலாளித்துவச் சமூகத்தில் வேலைச்செய்யும் திறனும் தகுதியும் உடைய யாவருக்கும் நிலையான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வேலையில்லாத் திண்டாத்திலே உழன்றுக் கொண்டிருக்கின்றார்கள். முதலாளித்துவம் நிலவும் ”வேலையில்லாக் கூலிகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பட்டாளம்” உலகின் எல்லாப் பகுதியிலும் காணப்படுகின்றது.

தற்போது, பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையும் பறிபோகிவிடுமோ என்ற பயம் தொழிலாளர் மத்தியில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றது. வேலையில்லாதவர்களும், மிகக்குறைந்த ஊதியத்திற்கு உழைப்பவர்களும், சந்தைப் பொருளாதாரத்திற்கு பங்காற்றுவதில்லை.

அதாவது, முதலாளித்துவச் சந்தையில் விற்கும் பொருளை வாங்கும் சக்தியற்றவர்களாகவும் அல்லது மிகக்குறைந்த சக்தி உடையவர்களாகவும் பெரும்பாலன மக்கள் உள்ளனர். இதன் விளைவு, பொருளாதார உற்பத்தி முடக்கத்தில் போய் முடிவடைந்து உலக அளவில் பல பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும்; அதற்கான சான்றாதாரங்களை நாம் அண்மை கால வரலாற்றில் பார்க்கின்றோம்!

வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, வேலைச்சுமையை குறைக்கின்றது என்பதைக் காட்டிலும், அது வேலையின்மையை இன்னும் அதிகப்படுத்துகின்றது, என்பதே உண்மை.

லாபத்தை அதிகப்படுத்துவதில் உண்டாகும் போட்டி, ஒரு கார்ப்பரேட் முதலாளியை இன்னொரு கார்ப்பரேட் முதலாளியோடு கூட்டுச்சேர்த்து விடுகின்றது. இந்த முதலாளித்துவப் பங்காளிக்கூட்டு, மூலதனங்களை திரட்டி குவிப்பதிலும், அதனை பயன்படுத்திக் கொள்வதிலும் வரைமுறையற்றப்போக்கை கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது. இதுவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் தான் கொண்டு போய் நிறுத்தும்.

கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடைபெறும் வரன்முறையற்ற தொழிற்போட்டிகள், ஒரு தொழிலாளர் கூட்டத்தின் மாபெரும் உழைப்பை பாழாக்குவதற்கு வழிவகுக்கும். உழைப்பு மதிப்பற்று போகும்போது, தனிமனிதர்களுக்கு இருக்கும் சமூக உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நலிந்துபோகும்.

தனிமனிதர்களின் சமூக உணர்ச்சி குன்றிப்போவதும், சுருங்கிப்போவதும் தான், முதலாளித்துவத்தின் மாபெரும் கேடு.

நம்முடைய கல்வி முழுமையும் இந்தச் சமூக கேட்டிற்கு ஆளாகியுள்ளது. கல்வியின் வழியாக சமூகப்பண்புகளும், சமூக அக்கறையும் வளர்த்து எடுப்பதற்கு பதிலாக, தனிமனித சுயலாபமே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இயல்புக்கு மீறிய, போட்டி மனப்பான்மையை மாணவர்கள் மனதில் ஆழத் திணிப்பதன் வழி, எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டுமெனில், கல்வி வெற்றிகளை முழுவதும் தனதாக்கிக் கொள்வதே ஒரே வழி என்றும், அதுவே போற்றதலுக்குரியச் செயல் என்றும் இன்றைய கல்விமுறை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கின்றது.

இந்தப் பேரழிவுகளிலிருந்து உலக மனிதச்சமுதாயத்தை காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது, என நான் நம்புகின்றேன்.

சோசலிசப் பொருளாதாரத்தை மேலும் விரிவுப்பத்துவதும், அதனை கல்வியோடு இணைப்பதும் தான் அதற்குரிய ஒரே வழி. பொதுவுடைமைப் பொருளாதாரத்தோடு இணைந்த கல்வி தான் தனிமனித வளர்ச்சியை இலக்காகக் கொள்ளாது, சமூக அக்கறையை சமூக மேம்பாட்டை உயர்த்தும் கல்வியாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

அத்தகையப் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது தனிமனிதனின் சொத்தாக அமையாது, பொதுச்சமூகத்தின் சொத்தாக அமையும். அவ்வாறு பெருக்கப்பட்ட பொதுவுடைமை உற்பத்திப்பொருட்கள், நன்கு திட்டமிடப்பட்ட பயன்பாட்டிற்கு உட்படுவது, ஒரு வழக்கமாக மாறிவிடும்.

அவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு பொருளாதாரத்தில், சமூகத்தின் தேவைக்கு தக்கவாறு உற்பத்திச் செய்யப்படும். லாப நோக்க தவிர்க்கப்படுவதால், அளவுக்கு அதிகமான மூலதனமும், உழைப்பும், உபரி உற்பத்தியில் வீணாவதை தடுத்து நிறுத்த முடியும்.

வேலை செய்யும் திறனுடைய அனைவரும் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவதால் வேலைப்பகிர்வு ஏற்படுவதன் மூலம் இத்திட்டம் நிறைவேற்றிக் கொள்ளப்படும். சமூகத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரின் வாழ்வியல் தேவைகளையும் பூர்த்திச் செய்வதை இதன்வழி உறுதிப்படுத்த முடியும்.

இந்த திட்டமிடப்பட்ட பொருளாதார உற்பத்திமுறையில், தனிமனிதர்களுக்கு வழங்கப்படும் கல்வியானது, அவர்களது உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதற்கும், மேம்படுத்துவதற்கும் மட்டுமல்லாது, சமூகத்தில் அவருக்கு அடுத்த வரப்போகும் சந்ததியினரின் மீதான பொறுப்புணர்வையும் அவர்களுக்குள்ளே உண்டாக்கும். நடப்பில் இருக்கும் தற்காலச் சமூகத்தின் அவலங்களை நீக்கி, அந்த இடத்தில் வளமான எதிர்காலத்தைப் படைக்கும் வெற்றிகரமான ஒரு சமூகத்தை படைக்கும் கருவியாகச் செயல்படும் கல்வியின் தன்மை இதுவேயாகும்.

பொதுச்சமூகத்தை மையப்படுத்திய, திட்டமிடப்பட்ட இந்தப் பொருளாதாராமே, சோசலிசம் ஆகிவிடாது, என்பதனையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்சொன்னபடி அமையும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் என்பது, அடிப்படை வாழ்வியல் தேவைகளுக்காகவே, காலந்தோறும் மூலதன முதலாளிகளுக்கு உழைப்பை விற்றுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தனிமனிதர்களின் அடிமைத்தனத்தை நீக்குவதோடு தான், இந்தத் திட்டமிடப்பட்ட பொருளாதரம் தொடர்புடையது.

எனில் சோசலிச சமூகத்தை படைக்க வேண்டுமெனில், அதற்கு, நடப்பில் இருக்கும் சில அருஞ்சிக்கலான சமூக – அரசியல் சிக்கல்களுக்கு தீர்வுவுகள் காணப்பட வேண்டும். அதன் வழியே தான் சோசலிச சமூகத்தை வெற்றிகரமாக கட்டமைக்க முடியும்.

அரசியலையும், பொருளாதார உற்பத்தி ஆற்றல்களையும் தொலைநோக்குப்பார்வையோடு மையப்படுத்த வேண்டும். அதிகாரவர்க்கம், மையப்படுத்தப்பட்ட இந்த அரசியல் பொருளாதாரத்தை முழுமையாக தங்களுடைய அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வருவதிலிருந்து தடுப்படுவதற்குரிய ஏற்பாடுகளை அதில் செய்து வைக்க வேண்டும்.

அவ்வாறு அமையும் ஒரு சோசலிச சமூகத்தில் எழும் அரசியல் - பொருளாதாரச் சிக்கல்களை, அதன் உண்மையானப் பொருளில் ஆராயாமல், அதிகாரத்தில் இருப்போர் சோசலிசத்திலிருந்து துரதிஸ்ட வசமாகப் பெற்றுக்கொள்ளும் மட்டுமீறிய தற்பெருமை தன்னம்பிக்கையோடு, பிரச்சனைகளை எளிமையாகப் புரிந்துகொள்வதிலிருந்தும், கையாளுவதிலிருந்தும் பாதுக்காக்கப்பட வேண்டும்.

சோசலிச சமூகத்தில் தனிமனித உரிமைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சோசலிச சமூகத்தில் அதிகார வர்க்கத்தின் ஆற்றலுக்கு இணையான, அதனை தேவையெனில் அதிகாரத்தை எதிர்த்து நெறிப்படுத்தும் ஆற்றல் படைத்த ஜனநாயக எதிர்சக்திகள் மக்களிடம் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.

சோசலிச பொதுவுடைமைச் சமூகத்தின் நோக்கங்களையும், அது எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களையும் குறித்த தெளிவான பார்வையும் சிந்தனையும், முதலாளித்துவச் சமூகத்திலிருந்து விடுபட்டு, சோசலிச சமூக மாற்றத்திற்கு தயாராக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனையாகவும், உரையாடல்களாகவும் இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலைகளில், சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி மேலே கூறப்பட்டுள்ளவைகள் குறித்த விரிவான விவாதங்கள் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதில் வலியப் பெருந்தடைகள் பல இருப்பினும், அந்தத் தடைகளையெல்லாம் கடந்து தற்போது இவ்விவாதங்கள் வெளிவந்திருக்கின்றன. சோசலிசத்தைப் பற்றி சுதந்திரமாக சிந்திக்கவும் விவாதிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த இதழின் தொடக்கமே, அத்தகைய விவாதங்களை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கியமான பொதுமேடையாகவும், பொதுச்சேவையாகவும் அமையும் என நான் கருதுகின்றேன்.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தமிழில்: ப.பிரபாகரன்

(மே 1, 2009, Monthly Review இதழில் மறுவெளியீடு செய்யப்பட்டது.)

1949, மே மாதத்தில் ‘Monthly Review’ எனும் இதழ் துவங்கப்பட்டு, வெளிவந்த முதல் இதழில் இக்கட்டுரை இடம்பெற்றிருந்தது. பிறகு 1998 ஆம் ஆண்டும் மே இதழிலும், இதே கட்டுரை மீண்டும் ஒருமுறை வெளியிடப்பட்டது.

Pin It