'தமிழ் தேசம் காலத்தின் கட்டாயம்' கருத்தரங்கில் (26.07.2015) முன்வைக்கும் அறிக்கை

தமிழகத்தில் தமிழ்த் தேசியம் குறித்தான பல்வேறு கருத்துக்கள் இன்று முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுக்கு எதிரி திராவிடம் என்றும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது “வந்தேறிகளான தெலுங்கர்களின்” சூழ்ச்சி என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

இந்திய சமூக அமைப்பு பற்றியோ, பார்ப்பனியத்தின் தனிச்சிறப்பான ஒடுக்குமுறைக் கட்டமைப்பாக இருக்கிற இந்திய தேசியம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள பார்ப்பனிய முதலாளித்துவ ஏகாதிபத்தியம் பற்றியோ இந்த முகாமினர் வாய்திறப்பதில்லை. பார்ப்பனியத்தின் தேசிய ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை என்ற இரண்டு கூறுகளை அடையாளம் காட்டியவர் பெரியார். இவ்வாறு தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றிய பெரியாரை கன்னடர் என்றும், தமிழர்களை கெடுக்க வந்த சூழ்ச்சிக்காரர் என்றும் அவதூறு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் இன்றைய தேக்க நிலைக்குக் காரணம் தமிழகம் டெல்லி ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதேயாகும். தமிழகத்தின் வளங்களை வல்லாதிக்கர்களான பார்ப்பன, பனியா முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் சூறையாடி வருகின்றனர். ஆனால் டெல்லியின் எடுபிடிகளாக இருந்துகொண்டு அவர்களுக்கு கங்காணி வேலை செய்யும் திமுக, அதிமுகவையே முதன்மையான எதிரிகள் என்று சித்தரிக்கின்றனர். திமுக, அதிமுகவும் ‘திராவிட கோட்பாட்டைப் பின்பற்றுவதே’ இதற்குக் காரணம் என்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பார்ப்பன, பனியா முதலாளிகளையும், சாதிய நில பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தையும் பாதுகாக்கின்றனர்.

எல்லா மாநிலக் கட்சிகளும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருந்து அந்தந்த தேசிய இன மக்களின் வளர்ச்சியைத் தடுத்து வருகின்றன. (எ.கா. அகாலிதளம், தேசிய மாநாடு, அசாம் கனபரிசத், தெலுங்குதேசம், ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா இன்னும்....) உண்மையில் இந்திய சமூக அமைப்பு பார்ப்பனியத்தின் அடிப்படை கொண்டதாக உள்ளது. ஆளும் வர்க்கங்களான தரகுமுதலாளி வர்க்கமும், சாதிய நில உடமை வர்க்கமும் பார்ப்பனியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. இவர்களின் சுரண்டலுக்காகவே இந்திய தேசியம் என்ற பெயரில் இங்கு தேசிய இனஒடுக்குமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேசிய இனங்களின் அரசுரிமை மறுக்கப்பட்டு அவைகள் பொருளியல் வகையில் ஒட்டச் சுரண்டப்பட்டு வருகிறது.

இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமைகள் என்ன? இங்கு தேசிய விடுதலை, சாதிய விடுதலை, வர்க்க விடுதலை என்ற மூன்று பெரும் விடுதலைகளையும் எவ்வாறு அடைய முடியும்? மக்களின் எதிரிகள் யார், நண்பர்கள் யார் இதுகுறித்து சில குறிப்புகள் மட்டும் இந்த அறிக்கையில் முன்வைக்கின்றேன்.

தேசங்கள் என்பதே முதலாளியக் காலகட்டத்தில் உருவானதாகும். முதலாளியம் தோன்றுவதற்கு முன் நிலப்பிரபுத்துவ காலத்தில் உலகில் எங்குமே தேசங்கள் உருவாகவில்லை. தேசிய இனங்களாக இருந்த சமூக அமைப்பில் பல்வேறு மன்னர்களின் கீழ் ஆட்சிகள் நடைபெற்று வந்தது. நிலப்பிரபுத்துவ வீழ்ச்சியில் உருவான முதலாளியத்தின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு ஓர் இறையாண்மை கொண்ட தேசிய அரசு வரலாற்றின் தேவையாக மாறியது. சந்தையின் ஒருங்கிணைப்பிற்கும், உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு பொது மொழியின் அவசியம் தவிர்க்க முடியாததாக மாறியது. இந்த நிலைமைகளில் தான் மேற்கு ஐரோப்பாவில் தொழில் புரட்சியின் தொடர்ச்சியாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு முடிவு கட்டி முதலாளித்துவ உற்பத்திமுறை வந்தது. அது தேசிய இயக்கங்களையும் அதன் தொடர்ச்சியாக தேசிய அரசுகளையும் உருவாக்கியது. முதலாளியக்கால கட்டத்தின் தவிர்க்க முடியாத விதியாக தேசிய அரசுகள் அமைந்தன.

இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இந்திய துணைக் கண்டத்தைக் கைப்பற்றி தனது சுரண்டலை இங்கு கட்டமைத்தது. தொடக்க முதலே ஏகாதிபத்திய வாதிகள் சாதிய நில உடமை வர்க்கங்களுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டனர். பிரிட்டனின் மூலதன வரவால் இந்தியாவில் பல தொழில்கள் தொடங்கப்பட்டு விரிவடைந்தது. இந்த வளர்ச்சிப் போக்கில் ஆதிக்க சாதிய நில பிரபுக்காளாகவும், வட்டி வணிகப் பிரிவினரும் புதிய தொழில்துறையில் இறங்கி முதலாளிகளாக மாறினர். (டாடா, பிர்லா, சிங்கானியா, பஜாஜ்..............) இவர்கள் இயல்பாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்திலிருந்து வந்த உயர்சாதியிலிருந்து வந்தவர்கள். இந்தியாவின் பரந்த சந்தையை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டனர். இதற்காக இந்திய சமூக முழுமையையும் பிணைந்திருந்த பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தி மொழியை மேலாதிக்க மொழியாகக் கொண்ட இந்திய தேசியம் என்ற கருத்தியலை வளர்த்தெடுத்தனர். இந்தியாவிலிருந்த தேசிய இனங்கள் தேசிய அரசுகளாக மாறும் வளர்ச்சிப்போக்கை தடுத்து நிறுத்தினர்.

இந்த சிறப்பியல்பான நிலைமையின் காரணமாக தவிர்க்க முடியாமல் ஒரு கூட்டணி உருவானது. ஏகாதிபத்திய மூலதனத்துடன் சமரசம், சாதிய நில உடமையுடன் சமரசம் என்ற பிற்போக்குத் தன்மை கொண்ட தரகு முதலாளி வர்க்கம் இங்கு உருவானது. இந்த மூன்று ஒடுக்குமுறை வர்க்கங்களுக்கும் பார்ப்பனியம் சேவை செய்வதாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு சேவை செய்வதே இந்திய தேசியத்தின் அடிப்படையாகும். இதுவே இந்தியாவின் சிறப்பியல்பான நிலைமைகளில் உருவான தேசிய ஒடுக்குமுறை கட்டமைப்பாகும்.

இந்திய தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் இந்த புதிய ஆளும் வர்க்கம் அனைத்து தேசிய இனங்களின் அரசுரிமையை பறித்துவிட்டது. தேசிய இனங்களை இறையாண்மை கொண்ட தேசங்களாக வளரவிடாமல் தடுக்கிறது. சாதிய சமூக அமைப்பை பாதுகாத்து வருகிறது.

ஓவ்வொரு தேசிய இனத்திலும் சுதந்திரமான விரிவான, விரைவான தற்சார்பு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து மேலிருந்து திணிக்கும் உற்பத்தி முறையால் சமூக வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது. இந்த சுரண்டலை நிலைநிறுத்திக் கொள்ள தேசிய இனங்களை அரசியல் வகையில் அடக்கி, ஒடுக்கி உள்ளது.

தமிழ்த் தேசிய இனம் இந்த இந்திய ஆளும் வர்க்கத்தின் வரம்பற்ற சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை அந்நிய மூலதன ஆதிக்கம் தடுத்து நிறுத்துகிறது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டு எழும் உழைக்கும் மக்களை சாதியத்தால் பிரித்து கூறு போட்டு மோத விடுகின்றனர். இதற்கு பார்ப்பனிய சக்திகள் இந்துத்துவ அமைப்புகள் மூலமும் ஆதிக்க சாதி அமைப்புகள் மூலமும் திட்டமிட்டு வேலை செய்கின்றனர். அறிவுத்துறை, ஆட்சித்துறை அனைத்தும் பார்ப்பனிய மயப்படுத்தப்படுகிறது.

தமிழ்த் தேச மக்களின் வாழ்வையும் வளர்ச்சியையும் பறிக்கின்றவர்கள்; இந்திய ஆளும் வர்க்கங்களான பார்ப்பன சக்திகளும் உயர்சாதி தரகு முதலாளிகளும், சாதிய நிலபிரபுத்துவ வர்க்கங்களும் தான்.

இதிலிருந்து விடுபட வேண்டுமானால் மக்களில் பெரும்பகுதியாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்துப்பட்ட மக்கள் உழைக்கும் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். இந்த உழைக்கும் தமிழ்மக்கள் இந்திய ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்படும் பிற வர்க்கங்களையும் (நடுத்தர வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கம்) இணைத்துக் கொண்டு இறையாண்மை கொண்ட தமிழ்தேசிய அரசை நிறுவ வேண்டும்.

இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க தோன்றிய பொது உடமை இயக்கமும், பார்ப்பனிய எதிர்ப்பையே இலக்காகக் கொண்ட பெரியாரிய இயக்கமும், தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட அம்பேத்கரிய இயக்கங்களும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவை முழு வெற்றி பெறமுடியவில்லை. இந்திய சமூக அமைப்பை பற்றி மேலும் மேலும் ஆய்வு செய்த மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் தேசிய விடுதலை, சாதிய விடுதலை, வர்க்க விடுதலை இவற்றின் மையக்கண்ணியாக இருப்பது தேசிய விடுதலைப் புரட்சிதான் என்பதை வளர்ச்சிப் போக்கில் நிறுவியுள்ளன. இதை வரலாற்று வழியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும் புரிந்து கொள்வது தமிழ்த் தேசியர்களின் கடமையாகும்.

குருதி தூய்மைப் பேசுவோர் உழைக்கும் தமிழ்மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர். சமூக இயங்கியல் வளர்ச்சிப்போக்கை மறுக்கின்றனர். பார்ப்பனியத்தின் அடிப்படைக் கூறுகளான தேசிய ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறையை அடையாளப்படுத்தி பெரும்பணியாற்றிய பெரியாரை தமிழ் சமூக விரோதியாக அடையாளப்படுத்த துடிக்கின்றனர். சாரமாக இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணிதிரண்டு வரும் தமிழ்த் தேசிய மக்களை இனவெறிக்கு ஆளாக்குகின்றனர். இந்த பாசிச இனவெறிப் போக்கை முறியடித்து புரட்சிகர தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்போம்.

தமிழ்த் தேசியம் குறித்தான விரிவான புரிதலைப் பெற இந்தக் கருத்தரங்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். நமது கலந்தாய்வுகளை எதிர்காலத்தில் விரிவாக நடத்தி முன்னேறுவோம்.

- கி.வே.பொன்னையன்

Pin It