மக்களின் சாதி, மத உணர்வுகளையும் சாதி மத அடிப்படையில் மக்களுக்கு இயல்பாகவே இருந்து வரும் வேறுபாடுகளையும் பயன்படுத்தி வெறுப்பு அரசியல் செய்வதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கையாகும் .மக்கள் பல்வேறு சாதிகளாகப் பிளவுபட்டிருந்தாலும் வரலாற்று வழியில் சமுதாய உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் தற்போது இணைந்து வளர்ந்து வருகிறார்கள்.

மக்களுக்கிடையில் வரலாற்று வழியில் ஏற்பட்டுள்ள இந்த வேறுபாடுகளை, முரண்பாடுகளாக மாற்றி வெறுப்பு அரசியலை வளர்த்து ரத்தம் சிந்தும் கலவரங்களாக மாற்றுவது தான் பாஜகவின் அரசியல் வியூகம்.

கீழ் பவானி கால்வாய்ச் சீரமைப்பு பணிகளில் விவசாயிகளிடையே இரு வேறு கருத்துகள் இருந்தன ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு சீரமைப்பு வேலைகள் செய்வதில் ஓர் இணக்கம் ஏற்பட்டது.

கீழ்பவானி விவசாயிகளிடையே இருந்த இந்த முரண்பாட்டை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்ட வழியில் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதை நிர்வாக வழியில் செயல்படுத்துவதற்கு அமைச்சர் முத்துசாமி அவர்கள் நிர்வாக ரீதியான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதித்துத் தவறான பயனாளிகளைப் பாஜக முறைப்படுத்தியிருக்க வேண்டும். மாறாகத் தவறான பயனாளிகளைத் தூண்டி விட்டுத் தங்கள் பக்கம் திரட்டிக் கொள்ளும் ஒரு கேடுகெட்ட அரசியலைப் பாரதிய ஜனதா கட்சியின் விவசாயப் பிரிவுத் தலைவர் ஜி கே நாகராஜன் மூலம் வேகமாகத் தொடங்கி செய்து வந்தார்கள். தங்களுக்குள்ள கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு ஒரு பதட்ட அரசியலைச் சில மாதங்கள் செய்து கீழ் பவானி, பவானி மறுசீரமைப்பு வேலைகளைச் சீர்குலைத்தார்கள்.

சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி வேலைகள் நடைபெறுவதற்கு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களோடு விவசாய சங்கத் தலைவர்களை வைத்துக் கலந்து பேசினார். ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்த நேரடியாகவே களத்துக்கு விவசாய சங்கத் தலைவர்களோடு பயணித்து வந்தார். நீர்வளத் துறை அமைச்சரின் நேரடி வழிகாட்டலில் சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் எடுத்திருக்கும் இந்த அரிய முயற்சியை முறியடிக்க பாரதிய ஜனதா கட்சி தனது சதித்திட்டத்தை அரச்சலூரில் அரங்கேற்றியது. அரச்சலூரில் பெரும் கலவரச் சூழலை தமிழரசன், பூபதி போன்ற நபர்கள் மூலம் உருவாக்கினர்.

கீழ்பவானி பிரச்சனை தற்போது சற்று ஓய்ந்த நிலையில் புதிதாகக் கலவரத்தை உருவாக்கக் கத்தக்கொடிகாட்டில் கிறிஸ்தவ வழிபாடு நடத்தி வரும் நாடார் சமூகத்தைச் சார்ந்த ஏழை விவசாயத் தொழிலாளி அர்ச்சுனன் என்பவர் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கிப் பதட்ட சூழல் உருவாக வித்திட்டனர்.

 அர்ஜூுனன் குடும்பத்தினர் மீது இந்து முன்னணி நடத்திய கொடூர வன்முறைத் தாக்குதலைத் தமிழ்நாட்டின் அனைத்து சனநாயக சக்திகளும் கண்டித்தனர். தமிழக அரசும் தன் பிரதிநிதியை அனுப்பி வைத்துமுறையாக வழக்குப் போட்டு நடவடிக்கையும் எடுத்துவிட்டது.

இந்நிலையில் சரவணன் என்கிற ஜோசப்பை சென்னையிலிருந்து சென்னிமலைக்கு அனுப்பி "சென்னிமலையைக் கல்வாரி மலையாக மாற்றுவோம்" என்றும் "இந்துக் கோயில்களை எல்லாம் அகற்றுவோம்" என்றும் பேச வைத்தார்கள்.

உள்ளூர் போலீஸ் சரவணன் (எ) ஜோசப் கும்பலுக்கு அனுமதி கொடுக்கவில்லை. சென்னையிலிருந்து சரவணன் அனுமதிபெற்று வந்ததாகக் காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

 சரவணன் என்கிற ஜோசப் தனக்கு அடையாளம் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லாத சென்னிமலையில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளைத் தன் படத்தோடு ஒட்டி இருந்தார்.

 இதிலிருந்து இந்த நபர் ஆர்எஸ்எஸ் இன் கைக்கூலியாக வந்திருக்கிறார் என்பதை அப்பொழுதே பலரும் சந்தேகத்தினர். (சரவணன் என்கிற ஜோசப் இந்து முன்னணி முக்கியத் தலைவர்களோடு இணைந்து எடுத்த நிழல் படங்களும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது)

சரவணன் கும்பலின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுகளை எடுத்துக்கொண்டு, சென்னிமலை கோயிலைக் கைப்பற்ற கிறித்தவர்கள் வந்து விட்டார்கள் "வாருங்கள், வாருங்கள்" என்று கூறி அக்டோபர் -13ஆம் நாள் பதட்டப்பட்ட மக்களின் ஒரு பெரும் கூட்டத்தை இந்து முன்னணி பதாகையின் கீழ்த் திரட்டி விட்டார்கள்.

ஆனால் இது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அரசியல் என்பதைப் புரிந்து கொண்ட முருக பக்தர்கள் அமைப்பு உடனடியாக இந்த ஏமாற்று வேலையைக் கண்டித்து மறுநாளே விரிவான அறிக்கையை வெளியிட்டு அம்பலப்படுத்தியது

சென்னிமலைப் பிரச்சனையில் மட்டுமல்ல மொத்த சமூகத்தில் சனாதன சக்திகள் செய்து வரும் அனைத்து வேலைகளையும் புரட்சிகர சனநாயக சக்திகளோடு இணைந்து எதிர்த்துப் போராடிவரும் என்னை இலக்காக்கி என்னை முடக்குவதற்கான வெளிப்படையான முயற்சிகளில் இறங்கினார்கள்.

 இந்து முன்னணி கும்பலின் சதி வேலையைப் புரிந்து கொண்டு குறிப்பிட்ட பிரிவினருக்கு உண்மையான விளக்கத்தை நான் கொடுத்தவுடன் அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்கள்.

 சென்னிமலையில் உருவாக்கப்பட்ட பதட்ட நிலையைப் போக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டல்படி மாண்புமிகு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உள்ளூர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் புடைசூழ சென்னி மலைக் கோயிலுக்கு வருகை தந்து சென்னிமலைக் கோயிலை மட்டுமல்ல, ஆறுபடை வீடுகளில் உள்ள அனைத்துக் கோயில்களையும் மேம்பாடு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரும் தொகையை எடுத்துச் சொன்னார்கள்.

 சென்னிமலைக் கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கமாகத் தெரிவித்தார்கள். தமிழக அரசு அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கும். அனைத்து வழிபாடு செய்கின்றவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சென்னிமலையை இழிவுபடுத்திப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்பதனைச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்கள். இந்து அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் தெளிவான விளக்கங்கள் இந்து முன்னணி பரப்பியிருந்த பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து விட்டது.

தங்களது பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டு விடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த இந்து முன்னணிக் கும்பல் ஒன்று சென்னிமலைக் கோயிலுக்கு நுழைந்தது. அங்கு அமைச்சர்களின் வருகையோடு கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த என் மீது குறி வைத்துத் தாக்குவதற்கு முயற்சி செய்து அதற்கான வேலையில் திட்டமிட்டு ஈடுபட்டது. என் மீதான தாக்குதலுக்கு அவர்கள் என்னை நெருங்கிய போது என்னோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்கள் இந்து முன்னணிக் கும்பலைத் தடுத்து நிறுத்தி என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

 மாண்புமிகு அமைச்சர்களின் வருகையின் போது சென்னிமலை கோயிலில் வன்முறையில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியை சார்ந்த சதீஷ்குமார் என்பவர் மீதும் கத்தக்கொடி காட்டு வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள சின்னசாமி என்பவர் மீதும் சென்னிமலைக் காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் முறையாக புகார் செய்துள்ளோம்.

- கி.வே.பொன்னையன்

Pin It