கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

பெரியாரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில தமிழ்த் தேசிய அமைப்புகள் ம.பொ.சி. என்று அறியப்பட்ட ம.பொ.சிவஞானத்தை - “தமிழ்த் தேசியத் தலைவராக” உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில் ம.பொ.சி.யின் தமிழ்த் தேசியம், பார்ப்பனியம் சார்ந்தே நின்றதை ஆதாரங்களுடன் விளக்கி, ஏப்ரல் மாத ‘சிந்தனையாளன்’ இதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம்.      (சென்ற இதழ் தொடர்ச்சி)

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழி - இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் மத நம்பிக்கையும் தனித் தனி. ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த மத நம்பிக்கைகளோடு வாழ முழு உரிமையுடையோர் ஆவர். ஆனால் இங்குள்ள இந்து மத வெறியர்கள் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று ஓலமிடுகிறார்கள். இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட இந்து மதமும் காக்கப்பட வேண்டும் என்று உரத்தக் குரல் எழுப்புகிறார்கள். அருமைத் தலைவர் ம.பொ.சி. அத்வானியின் குரலாகப் பின்காணுமாறு முழங்குகிறார்:

‘என் இந்திய நாட்டு மதம் - இந்து மதம் அழியக் கூடாது. அழிப்பாருண்டானால், உயிர் கொடுத்தும் காக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களைப் போலவே எனக்கும் உண்டு. இந்தியாவின் தேசிய ஒருமைப் பாட்டிற்கு இந்து மதம் பெருமளவுக்குப் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஆகவே இந்து மதம் அழியுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு நலிந்து போகும் என்று நம்புபவர்களில் நான் ஒருவன்’. (இந்திய இலக்கியச் சிற்பிகள், ம.பொ.சிவஞானம் - பெ.சு.மணி. பக்.113)

ம.பொ.சி.யின் இந்துமதப் பற்று சில நேரங்களில் தமிழைத் தாழ்த்தியும், ஆரிய மொழியான சமற்கிருதத்தை உயர்த்தியும் பேசுவதைக் காணும் போது அதிர்ச்சியாக உள்ளது.

•    “ஆலயங்களில் அருச்சனை தமிழில் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கை நமக்கு உடன்பாடே. ஆனால் இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது முற்றிலும் சமயத் தொடர்புடைய பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் வடமொழிக் காழ்ப்புக்கு (வெறுப்புக்கு) இரையாகக் கூடாது.

•    சமற்கிருதம் இந்துக்களின் பொது மொழியாக இருப்பதன் காரணமாக, இம் மொழியில் அருச்சனையை விரும்புவோர்க்கும் தடை சொல்லத் தேவையில்லை. இது இந்து மதத்தவரின் ஒருமைப்பாட்டுக்கும் உதவி புரியும்.” (ம.பொ.சி.யின் நூல்: தமிழும் சமற்கிருதமும்) வழிபாட்டு மொழியாக மட்டுமல்லாமல், சமற் கிருதத்தைப் பிழையறக் கற்ற புரோகிதரைக் கொண்டு தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைப் பார்ப்பனரை வைத்தும் நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் ம.பொ.சி.யின் உள்ளக் கிடக்கையாகும்.

வல்லாண்மை கொண்ட மொழியாக இங்கே இந்தி திணிக்கப்பட்டபோது தமிழகமே கொதித்தெழுந்து போர்க்கோலம் பூண்டது. தம் தள்ளாத வயதிலும் தார் சட்டியைத் தூக்கிக் கொண்டு தந்தை பெரியார் இந்தி எழுத்துகளை அழித்தார். அப்படி அவர் இந்தியை அழித்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் ம.பொ.சி. சென்று மறுபடியும் இந்தி எழுத்துக்கள் அங்கே தோன்றச் செய்தார். (தார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தாரை அழித்தார்)

இந்திக்கும், வடமொழிக்கும் ஆதரவாக ம.பொ.சி. எடுத்த நிலைப்பாடுகள் அவரின் இந்திய - இந்துத்துவ பற்றுக் காரணமாய் வெளிப்பட்டவை. என்றாலும் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்கிற அரசியல் முழக்கத்தை அவர் தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை விடாமல் தூக்கிப் பிடித்தார். ‘ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை’ என்கிற அவரின் அருமையான நூலில் தாய்மொழியின் மேன்மை குறித்த மேலான கருத்துகள் மிக  சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில மோகத்தால் கொண்ட அடிமைப் புத்தியில் இங்குள்ள திராவிடக் கட்சிகள் பல இந்தித் திணிப்பை முன்நிறுத்தித் தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கேடு செய்ததை, ம.பொ.சி. அச்சமின்றி இடித்துரைத்தார்.

•    பதினைந்தாண்டு காலக்கட்டத்திற்குள் ஆங்கிலத் தின் இடத்தை இந்தி அடையாதபடி தமிழராகிய நாம் தடை போட்டோம் என்பது உண்மைதான். ஆனால், நமது தடையையும் தகர்த்துக் கொண்டு இந்தி மொழி ஆங்கிலத்தின் இடத்தைப் பிடிப் பதிலே முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. (ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை, பக்.27)

•    உண்மை என்னவென்றால், தமிழக அளவில் ஆட்சி மொழியாக - பல்கலைக்கழகங்களில் பாட மொழியாக - நீதிமன்றங்களில் நிர்வாக மொழியாக இனியும் ஆங்கிலமே நீடிக்குமானால் எதிர்காலத்தில் ஆங்கிலத்தை விரட்டி இந்தி மொழி அந்த இடங்களில் அழுத்தமாக அமர்ந்து விடுவது சாத்தியமாகும். அதற்காகவேனும் உடனடியாகத் தமிழக அளவில் அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழை அமர்த்தியாக வேண்டும். (மேற்படி நூல், பக்.29)

•    ஆங்கில மொழியானது உலகத்தைப் பார்க்கும் சாளரமாக இருப்பதைக்கூட நான் வரவேற்பேன். உலகம் என்பது ஒரு திசை மட்டுந்தானா? எட்டுத் திசையையும் நான் பார்க்க வேண்டுமானால் ஆங்கில மொழிச் சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே சன்னல் இருப்பது வழக்கமில்லையே!

இப்படியாய் மூன்றாம் வகுப்பைக்கூட மூன்று மாதம் மட்டுமே படித்த ம.பொ.சி. ஒரு மாபெரும் அறிஞராகத் தாய்மொழியின் தேவைபற்றிச் சிந்தித்திருப்பது வியப்பைத் தருகிறது. திராவிட இயக்கத் தலைவர்கள் பெரும்பாலோர் ‘இந்தி எப்போதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்!’ என்கிற சிந்தனைக்கு ஆட்பட்டுப் போனது  தமிழர்க்கு தேர்ந்த பெருங்கேடே ஆகும்.

(ஆங்கில எதிர்ப்புப் பற்றிய கட்டுரையில் மேலே கூறப்பட்டுள்ள கருத்துகள் - கட்டுரை யாளரின் கருத்துகளே. - ஆர்)

வடவெல்லைப் போராட்டம்

தமிழகத்தின் வடவெலலைப் பகுதியில் அமைந்த திருத்தணி உள்ளிட்ட ஊர்களைத் தமிழ்நாட்டோடு இணைத்ததில் ம.பொ.சி. ஆற்றிய பங்கு ஈடிணை யற்றதாகும். தமிழறிஞர் மங்கலங்கிழாரும் விநாயகம் உள்ளிட்ட மற்றவர்களும் இப்போராட்டத்தில் ம.பொ.சி.யுடன் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள் பல நடத்தி வெற்றி கண்டனர். தெலுங்கர்களின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுத் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, தப்பிச் செல்லாமல் காத்ததிலும் ம.பொ.சி.யின் பங்கு மாட்சிமை மிக்கது.

தென் தமிழ்நாட்டில் கேரளத்திற்கு இரையானது போக எஞ்சியிருந்த சில பகுதிகளை மீட்டுத் தமிழ்நாட்டோடு இணைத்ததில் நேசமணி உள்ளிட்ட பெருமக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதில் ம.பொ.சி.யின் பங்கு அளவானதே!

இன்றுள்ள எல்லாக் கேடுபாடுகளுக்கும் பெருமளவில் காரணமாய் இருப்பது இந்திய தேசியம் தான். இந்தியத் தேசியம் என்பது இந்தப் பாசிச - பார்ப்பனிய பயங்கரவாதத்தின் மீது கால்கொண்டு நிற்கிறது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தேசிய இனங்கள் யாவும் தமக்குள் முரண்பட்டு முட்டி மோதிக் கொள்வது தில்லியி லுள்ள ஓநாய்களுக்குத் தித்திப்பான செய்திதான்.

இந்தியா ஓர் ஒற்றைத் தேசமல்ல என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர் பெரியார். ஒடுக்குண்ட உழைப்புச் சாதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழு வதும் போராடியவர் பெரியார். மானிட இனத்தையே சாதியின் பேரால் வெட்டிக் கூறுபோட்ட மாபெரும் கொடுமையை எதிர்த்துச் சமரசமின்றி போர்த் தொடுத்த தன்மான வேங்கையவர். வரலாறு நெடுகிலும் பார்ப்பன பயங்கரவாதம் நிகழ்த்திய படுகொலைகள் எண்ணற்றவை. சூத்திரச் சாதி மக்களின் (சூத்திரச் சாதி என்பது தாழ்த்தப்பட் டோரையும் உள்ளடக்கியதே) துயர்நீக்கிப் பாடுபடுவதையே தன் இறுதி இலக்காகக் கொண்டு பெரியார் செயல்பட்டார். இந்தப் பணியில் ஆரியக் கொடும் பார்ப்பனர்களில் அளவிறந்த கொடுமை களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரியாரின் ‘தமிழ்நாட்டு விடுதலை’ என்பதைப் பார்ப்பனியம் ஒழித்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்றே கொள்ளலாம்.

அரசியல் களத்தில் பெரியாரின் பார்ப்பன - பனியா ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு இராசாசி மிகப் பெரும் அறைகூவலாய் நின்றார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு என்று பேசிய ம.பொ.சி. காலமெல்லாம் இராசாசியின் மெய் காவலர் போல் பின்தொடர்ந்தார். பெரியாரின் ஆரியப் பார்ப்பன இந்துத்துவா எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறுப்புக் குரல் எழுப்ப மனுவின் மைந்தர்கள் ம.பொ.சி.யைக் கறிவேப்பிலைக் கொத்தைப் போல் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ம.பொ.சி. தனது வாழ்க்கை வரலாற்று நூலில் இராசாசியின் அடியாளாக இருந்ததைப் பற்றிப் பெருமையோடு பின்வருமாறு எழுதுகிறார்.

“என் தலைமையை எதிர்ப்பவர்கள் என்னைவிட அதிகமாகக் கிராமணியாரையே தாக்குகிறார்கள். அதற்குக் காரணமுண்டு. கிராமணியார் வீர அபிமன்யு போன்றவர். என்னால் உடைக்க முடியாத எதிரிகளின் வியூகத்தை உடைத்து அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார். அதனால் என்னை எதிர்ப் பவர்கள் அவர் மீது அதிகம் ஆத்திரப்படுகிறார்கள்”. (ம.பொ.சி. எனது போராட்டம், பகுதி 1, பக்கம் 382)

திராவிடக் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்திய ம.பொ.சி. திராவிடக் கட்சிகள் ஆண்ட போதுதான் பதவிகள் பெற்றார். அண்ணா காலத்தில் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே வெற்றிப் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ‘சென்னை மாநிலம்’ ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் பெற்ற விழா நாளில், அந்த விழாவிற்குத் தலைமை தாங்கும் தகுதியையும் பெருமையையும் அண்ணா ம.பொ. சி.க்கு வழங்கினார். கலைஞர் காலத்தில் மேலவைத் துணைத் தலைவராயும் எம்.ஜி.ஆர். காலத்தில் அதன் தலைவராயும் ம.பொ.சி. விளங்கினார்.

ஈழ மக்களின் துயர்களைப் பற்றி தனியே நூல் எழுதிய ம.பொ.சி. இராசிவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப் படையின் செயல்களை ஆதரித்துக் கூட்டங்களில் பேசினார். இறுதியில் தன் அரசியல் வாழ்வை மீண்டும் காங்கிரசில் சேர்ந்து கரைத்துக் கொண்டார்.

“தமிழரசுக் கழகம் எந்தெந்தக் கொள்கை களுக்காகத் தோன்றியதோ, அவை ஆட்சிக்குப் போகாமலே காங்கிரசுக் கட்சியைப் பயன்படுத்தி நிறைவேற்றி விட்டதால், காந்தியடிகள் போதனைப் படி அது தேவைப்படவில்லை. காங்கிரசோடு கலந்துவிட்டது” என்று சொல்லித் தன் கட்சியையும் காங்கிரசில் கரைத்து விட்டார்.

ம.பொ.சி.யின் புகழுக்கு மாவிளக்கு ஏற்ற நாட்டில் சில நவீன சீடர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். சிலம்புச் செல்வரின் வரலாற்றுப் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் அவரின் புகழ் பாடும் அதே நேரத்தில் பெரியாரைக் குப்புறக் கவிழ்த்து முதுகில் குத்தும் வேலையையும் செய்கிறார்கள்.

1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று முதன்முதலில் குரலெழுப்பியவர் தந்தை பெரியார் தான்.

சாவு தன்னை ஆரத்தழுவ வரும் இறுதிக் காலத்திலும் பெரியார் நிகழ்த்திய இறுதிப் பேருரையில் (19.12.1973) தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும் என்றே முழங்கினார்.

ஆனால் தமிழகத்தைச் சுதந்திர நாடாக்க வேண்டும் என்ற நோக்கோடு 1946 இல் தமிழரசுக் கழகம் கண்ட ம.பொ.சி. தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் காங்கிரசில் போய்க் கரைந்தார். காலங்கள் மாறலாம். கடந்த கால வரலாறு கூடவா மாறிப் போகும்?