வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல் ஆய்வுத் தந்தை என்று போற்றப்படும் இராபர்ட் புருசுஃபூட் 1863-இல் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த அத்திரம்பாக்கம் என்னும் இடத்தில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தார். சென்னை -பல்லாவரத்தில் பழைய கற்கால கற்கோடரியைக் கண்டார். நம்முடைய பழைமையை நமக்கு உணர்த்திய தொல்லியல் ஆய்வாளர் ராபர்ட் புருசுஃபூட் (22.09.1834 -29.12.1912) ஒரு பிரித்தானியர் ஆவார். அவரை நாம் இனவாதக் கண்கொண்டு பார்ப்பது அறிவுடைமை யாகுமா?

"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூலை எழுதி நாமெல்லாம் ஆரியர் அல்லாத வேறு இனத்தவர் என்பதை நமக்கு உணர்த்தியதோடு தமிழில் இருந்துதான் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்ட மொழிகள் தோன்றின என்னும் உண்மையை நமக்கு உணர்த்திய இராபர்ட் கால்டுவெல் (07.05.1814 - 28.08.1891) ஓர் அயர்லாந்துக்காரர். அவரைத் தமிழர் சார்பினர் அல்லர் என்று ஒதுக்கினால் அது மடமை அன்றோ?

தமிழுக்குப் புதிய அகராதியைத் தந்தவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவரும் 23 நூல்கள் எழுதியவரும் பரமார்த்த குரு கதைகள் மூலம் தமிழ் உரைநடைக்கு வித்திட்டவருமான வீரமாமுனிவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி இத்தாலிக்காரர். அவரை நம் இனத்தவர் அல்லர் என்று சொல்வது இனவெறியைத் தவிர வேறில்லை.

ரிக் வேதத்திலும் உபநிடதங்களிலும் உள்ள தத்துவங்களில் திராவிட ரிக், திராவிட உபநிசத் என்னும் அடிக்குறிப்புகளோடு காணப்படும் கருத்துகள் தமிழரின் மெய்யியல் கருத்துகளேயாகும். இதில் கூறப்படும் திராவிட என்பது தமிழை மட்டுமே குறிக்கும். ஏனெனில் ஆரியர்கள் வந்தேறிகளாக நுழைவதற்கு முந்தைய காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றவில்லை. அதனால் தமிழைக் குறிக்கும் சமசுக்கிருதுச் சொல்லே திராவிடம் என்பது ஆகும். திராவிடம் வேறு தமிழ் வேறு என்று கருதுவது தவறானது.

வச்சிரநந்தி என்பவர் கி.பி.470 -இல் மதுரையில் "திரமிள சங்கம்" என்பதை ஏற்படுத்திச் சமண சமயத்தையும் தமிழையும் வளர்த்தார். அவர் கூறும் திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும். மேலும் சமணம் என்பது தமிழர் மெய்யியலான ஆசீவகத்தில் இருந்து தோன்றியது. இது பொருள்முதல்வாதக் கொள்கையாகும்.

 திராவிட சங்கத்திற்கு "திரமிள சங்கம்" என்று மற்றொரு பெயர் உண்டு. என்பது தமிழையே குறிக்கும்.

திராவிட இனம் என்பது மரபினமாகும். அது ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் பரவி வாழும் பேரினம். அந்தப் பேரினத்திற்குப் பல்வேறு தாய் மொழிகள் உண்டு. அவை மொழிவழித் தேசங்களாக உள்ளன. திராவிடப் பேரினத்தின் அனைத்து மொழிகளும் தமிழிலிருந்து உருவானவையே.

நம்மைப் போன்று ஆரிய இனம், காக்கேசிய இனம் உள்ளிட்ட ஐரோப்பிய இனங்கள் பல தாய்மொழிகளைக் கொண்டவை. அவை இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் எனப்படும். இந்திய மொழிகளில் சில இந்தோ -ஐரோப்பிய வட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. சமஸ்கிருதமும் அதில் ஒன்று. இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் பல்வேறு மொழிவழித் தேசங்கள் உள்ளன.

மரபினத்தில் ஆரியராகவும் சமஸ்கிருதத்தைத் தாய் மொழி என்று சொல்லிக் கொள்ளுபவர்களுமான பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று தமிழ்த் தேசியர்கள் ஏற்பதும் மரபினத்தில் திராவிடரும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரும் "தமிழ்நாடு தமிழருக்கே' என்றும் "தமிழா! இனவுணர்வு கொள்!'' என்றும் முழங்கி வாழ்க்கையையே தமிழர்களுக்காக அர்ப்பணித்த தந்தை பெரியாரைக் கன்னடர் என்று காழ்ப்புணர்ச்சியோடு வெறுத்து ஒதுக்குவது முழுக்க முழுக்க ஆரியத்திற்கே அடிவருடும் செயலாகும்.

நம்மைத் தலைநிமிர வைக்கும் சொல் எந்த மொழியில் இருந்தாலும் அது ஏற்புடையதே. நம் தன்மானத்திற்கு இழுக்கான தலைகுனிய வைக்கும் சொல் நம் தாய் மொழியிலேயே இருந்தாலும் அது ஏற்புடையது அல்ல. தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டு புரியும் எந்நாட்டவர் ஆயினும் எம் மொழியினர் ஆயினும் அவர் நம்மவரே! தமிழுக்கும் தமிழருக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழர் ஆயினும் அவர் அயலவரே!

சாதிவெறியையும் மொழிவெறியையும் வளர்க்கும் தமிழ்த் தேசியம் வலதுசாரி தமிழ்த் தேசியமே! தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் நீட்சியே தமிழ்த் தேசியமாக இருக்க வேண்டும். திராவிடத்தை மறுக்கும் தமிழ்த் தேசியம் ஈடேற வாய்ப்பே இல்லை!

- தங்க.குமரவேல், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்

Pin It