தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (Liberation Tigers of Thamil Ezham) இந்தியாவில் இன்றளவும் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருந்து வருகிறது. வி. புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த தலைவர் கற்றறிந்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்து நடைபெற்று வருகிறது.vaiko thirumurugan and ponnaiyanஇரண்டு வாய்தாக்கள் முடிந்து எதிர்வரும் 24/02/2026 செவ்வாய்க்கிழமை அன்று விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது என்ன?

இலங்கையை ஆண்டு வரும் சிங்களப் பேரினவாத அரசால் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழீழ மக்களைப் பாதுகாத்து தமிழீழ மக்ளுக்கென்று ஒரு அரசை நிறுவ பிரபாகரன் அவர்கள் தலைமையில் 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உருவான ஒரு விடுதலை இயக்கமே தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமாகும்.

ஆனால் இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கங்களின் பாதுகாவலனான RAW என்ற உளவு அமைப்பும் உலகெங்கும் உள்ள நிதி மூலதன சக்திகளும், (வல்லரசு நாடுகள்) இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு வி.பு இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம்- Terrorist organisation என்று சித்தரித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டம்

இலங்கையின் மிக அருகில் உள்ள தாய் தமிழ் நாட்டிலும் தமிழ் தேசிய விடுதலை உணர்ச்சியை உருவாக்கி விடும் என்று ரா- RAW (Reasearch and Analysis Wing) உளவு நிறுவனம் இந்திய ஆளும் வர்க்கங்களைத் தொடக்க முதலே எச்சரித்து வருகிறது.

ரா உளவு நிறுவனத்தின் திட்டமிட்ட சதி வேலைகளால் தமிழீழத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு விடுதலைப் போராளிகள் குழுக்கள் சிதைத்து சீரழிக்கப்பட்டன.

இந்திய ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் நலனை மிகத் துல்லியமாக புரிந்து கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் மதியுரைஞர் (ஆலோசகர்) ஆண்டன் பாலசிங்கம் அவர்களும் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் தொடக்கம் முதற் கொண்டே ரா உளவு நிறுவனத்தின் சதி வலைகளில் சிக்காமல் இயக்கத்தை பாதுகாத்து வளர்த்து வந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தமிழ் அறிஞர் பெருமக்களின் துணையோடு தமது இயக்கத்தை வளர்க்கும் செயல் திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்தினர்.

இந்திய தேசிய அரசியல் கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு நல்கி வந்தனர்.

தமிழீழ விடுதலை ஆதரவு அரசியல் களம் தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டது. 1965 மொழிப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாபெரும் தமிழ் தேசிய எழுச்சியாகவே அது வெளிப்பட்டது. விடுதலைப் போராளிகளுக்கு மிகப்பெரிய பின் நிலமாக தாய் தமிழகம் மாறிவிட்டது.

இது பார்ப்பனிய இந்திய தேசிய ஆளும் வர்க்கத்தின் டெல்லி ஏகாதிபத்திய கனவிற்கு பேரிடியாக மாறியது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய எம் ஜி இராமச்சந்திரன் அவர்கள் ஆண்டன் பா.ல.சிங்கம் அவர்களையும் பிரபாகரன் அவர்களையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார். வி.பு.இ ன் பொருளாதாரத் தேவையைக் கேட்டறிந்து மிகப் பெரும் தொகையை கொடையாக தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் வழங்கினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய ஆதரவு சக்திகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்ய முன்வந்தனர். நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைக்கான குரலை ஐயா வைகோ அவர்கள் தொடர்ந்து முழங்கினார்.

தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் உருவாகி வளர்ந்த தமிழ் தேசிய எழுச்சியை அழித்தொழிப்பதற்காக இந்தியாவின் பிரதமராக இருந்த இராஜீவ் காந்தி அவர்களை சர்வதேச சதிக் கும்பலோடு இணைந்து இந்திய ஆளும்வர்க்கம் கொலை செய்தது.

இந்த மாபெரும் கொலைப்ழியை விடுதலை புலிக.ளின இயக்கத்தின் மீது ரா உளவு நிறுவனம் திட்டமிட்டு சுமத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தையும், தமிழீழத்தையும் இணைத்து தமிழ்ப் பேரரசை உருவாக்கவே விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படுகிறது என்று பொய் குற்றச்சாட்டை வைத்து விடுதலைப் புலிகளை இயக்கத்தை இந்தியாவில் தடை செய்தனர்.

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை.க்கு ஆதரவாக செயல்பட்ட தலைவர்கள் மீதும் இயக்கங்கள் மீதும் தடா, NSA ,124 போன்ற அடக்குமுறை கருப்புச் சட்டங்கள் ஏவப்பட்டது.

தமிழ் நாட்டில் பல தலைவர்களும் இயக்க முன்னோடிகளும் கொடும் சிறையில் பூட்டப்பட்டனர்.

2002 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலகெங்கும் மிகச் சிறப்பாக இயங்கி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிளை அமைப்புகள் அமெரிக்காவின் நேரடி தலையீட்டால் அந்தந்த நாடுகளில் தடை செய்யப்பட்டன.

குறிப்பாக இலண்டனில் இயங்கி வந்த வி.பு இயக்கத்தின் தலைமையகம் முடக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை போடப்பட்டதால் ஐயா நெடுமாறன், பேராசிரியர் சுப வீரபாண்டியன், திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் கு.இராமகிருஷ்ணன் கொளத்தூர் மணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அமைச்சர்களின் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றவர்கள் 'தடா' சட்டங்கள் மூலம் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் தேசிய விடுதலைப் பாவலரான போராளி ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் 'தடா' சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

வி.பு இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளில் முதன்மையான இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் மீது 'பொடா' சட்டம் ஏவப்பட்டது.

மதிப்பிற்குரிய வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, மதுரை பூமிநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 18 மாத காலம் கொடும் சிறையில் பூட்டப்பட்டனர். மதிமுக அங்கம் வகித்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு டெல்லியில் ஆண்ட போதும் தமிழ்நாட்டில் ஆண்ட அண்ணா திமுக அரசு மதிமுக தலைவர்களை பொடா சிறையில் பூட்டியது.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல்வேறு புரட்சிகர மார்க்சிய-லெனினிய இயக்கங்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாகத் தோழர் கார்முகில் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு மார்சிய லெனினியக் கட்சியின் வெகுமக்கள் அமைப்பான புரட்சிகர இளைஞர் முன்னணி கடும் தாக்குதலுக்கு உள்ளானது.

புரட்சிகர இளைஞர் முன்னணியின் நூற்றுக்கணக்கான தோழர்கள் மீது 124 ஏ என்னும் வெள்ளையன் கால தேச துரோக வழக்கு பதியப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகமெங்கும் இடைவிடாது இயக்கங்கள் மேற்கொண்டது புரட்சிகர இளைஞர் முன்னணி. தோழர் பொ.வே. இராமானுஜம் மாற்றுத்திறனாளியாய் படுக்கை நோயாளியாக இருந்த மதுரை தோழர் தானு உட்பட்டவர்கள் NSA சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் கட்டுரையாளர் (கி.வே.பொன்னையன்) மீது 10க்கு மேற்பட்ட தேச துரோக வழக்குகள் (124-A) பதியப்பட்டு தொடர்ந்து சிறைச் சாலையில் பூட்டப்பட்டார். இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை விசாரிப்பதற்காக செயல்பட்ட தீர்ப்பாயம் என்னும் அமைப்பில் தடையை நீக்கக் கோரி ஐயா வைகோ அவர்கள் முன்நின்று வாதிட்டு வந்தார்கள்.

அதுபோல் தோழர் கொளத்தூர் மணி, ஐயா நெடுமாறன் போன்றவர்களும் அதற்கான முன்னெடுப்புகளை செய்து வந்தனர்.

போலித்தனமான அந்தத் தீர்ப்பாயம் தமிழீழ ஆதரவு சக்திகள் வைத்த எந்த வாதங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் இந்திய அரசும் ரா- RAW உளவு நிறுவனத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சரி என்று தீர்ப்பளித்து விட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐயா வைகோ அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்குத் தான் கடந்த இரண்டு வாரங்களாக விசாரணைக்கு வந்து கொண்டுளளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டுள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் நிதி திரட்டல் ,தேர்தல் ஆயத்த வேலைகள் என முழுமையாக ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கற்றறிந்த வழக்கறிஞர் ஐயா வைகோ அவர்கள் கட்சிப் பணிகளையும் சோர்வின்றி கவனித்துக் கொண்டு பன்னாட்டு முக்கியத்துவம் -International Important வாய்ந்த இந்த வழக்கை தன் வழக்கை தானே வாதிடுவது (Party in Person) என்ற அடிப்படையில் இந்த வழக்கிற்காக இரவும் ,பகலும் பல்வேறு சர்வதேச ஆவணங்களை படித்து கற்றறிந்த வழக்கறிஞர் குழுவோடு பல்வேறு கலந்தாய்வுகளை நடத்தி வருகிறார்.

ஐ.நா அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஆவணங்களை எல்லாம் தேடி எடுத்து படி எடுத்து ஆவணப்படுத்தி வழக்குக்கிற்காக தயார் செய்து வருகிறார். ஓயாமல் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் குழாமோடு வந்து செல்கின்றார்.

இந்த வழக்கு குறித்து தற்போது பல கருத்துக்கள் முன் வருகின்றன.

1) விடுதலைப்புலிகள் இயக்கமே செயல்பாட்டில் இல்லையே தடை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன ?

2) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டால் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் அந்த இயக்கம் எழுந்து விடும்.

3) வைகோ அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக இதை செய்கின்றார்

என்றவாறு பல கருத்துக்கள் பொதுவெளியில் உலா வருகின்றன.

40 ஆண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முழு முதல் ஆதரவாளர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் நானும் (கி.வே.பொன்னையன்) மற்றும் தொடர்ந்து தமிழீழ நாட்டிற்குச் சென்று அங்கு நேரடியாக இயக்கத்தோடு பேசி விடுதலை போராட்டக் களத்தையே நேரில் கண்டு அந்நிகழ்வுகள் பற்றி தமிழ்நாட்டில் எழுத்துக்களாகவும் திரைக்காவியங்களாகவும் வடித்து உலகெங்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலை நோக்கத்தை உலகுக்கு பறைசாற்றி வரும் மூத்த திரைக் கலைஞர், எழுத்தாளர் புகழேந்தி தங்கராசு அவர்களும், முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின் ஏற்பட்ட நிலைமைகளை தமிழ்நாட்டிலும் சர்வதேச (பன்னாட்டு)அரங்கிலும் குறிப்பாக ஐநா அவையிலும் ஆவணப்படுத்தி ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை நிறுவிவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது வழக்கின் மனுதாரரான ஐயா வைகோ அவர்கள் உயர் நீதிமன்ற பதிவாளர் அவர்களிடம் பெற்ற சிறப்பு அனுமதியின் மூலம் விசாரணையில் பார்வையாளர்களாக பங்கேற்று வருகிறோம்.

1) கி.வே.பொன்னையன்

2) திருமுருகன் காந்தி

3) புகழேந்தி தங்கராசு

ஆகிய மூவரும் தொடர்ந்தும் பங்கேற்க உள்ளோம்.

தமிழ் தேசிய அமைப்புகளின் கடமை என்பது பொதுவெளியில் நிலவும் தவறான கருத்துக்களை முறியடித்து தமிழீழ தேசிய இனத்திற்கு ஒரு தனி அரசை அமைப்பதற்கான "தமிழீழ தேசிய விடுதலை இயக்கமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்" என்ற கருத்தியலை தமிழகத்திலும், பன்னாட்டு அரங்கிலும் உருவாக்க வேண்டியதாகும்.

அதற்கு மாறாக "ஆமைக்கறியும், பூனைக்கறியும், மீன் ஊறுகாயும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிர.பாகரன் எனக்கு பட்டியல் வைத்துக் கொண்டு போட்டார், நானும் (சீமான்) கிலோ கணக்கில் தின்றேன்" என்று பேசிப் பேசியே முனியாண்டி விலாஸ் ஆக தேசிய விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தக் கூடாது.

இந்த "ஆமைக்கறி முனியாண்டி விலாஸ் கூட்டத்தின்" நோக்கம்:

1) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாபெரும் போராட்ட விழுமியங்களை கொச்சைப்படுத்துவது தான்.

2) தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை கற்றறிந்து தாய் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களும், உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் இளைஞர்களும் இறையாண்மை கொண்ட தேசிய அரசுகளை அமைப்பதற்கான போராட்டத்திற்கான உணர்வை பெற்று விடக் கூடாது என்பதுதான்.

3) பாசிச பார்ப்பனிய நாக்பூர் கும்பலின் இந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றுவது தான்.

நிதி மூலதன ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக உலகெங்கும் எழுச்சி பெறும் தேசிய இனங்களின் எழுச்சியை முடக்குவதுதான்.

இந்த சதித்திட்டத்தை "ஆமைக்கறி சீமான்" வெற்றிகரமாகவே தற்காலிகமாக நிறைவேற்றி விட்டார்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்து இயங்கி வந்த ஐயா வைகோ, ஐயா நெடுமாறன், தோழர்கள் கோவை கு.இராமகிருஷ்ணன் கொளத்தூர் மணி போன்றவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு இணைந்து நின்று தமிழீழ விடுதலைப் போர்க்களத்திற்கு சென்று செய்த வேலைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

கோவையில் இயங்கிய விடுதலைப் புலிகளுக்கான ஆயுத தொழிற்சாலைகளும், கொளத்தூரில் நடைபெற்ற விடுதலை புலிகள் படை பயிற்சி முகாம்களும், ஐயா நெடுமாறன் அவர்கள் செய்த எண்ணற்ற நேரடி களப்பணிகளும், கலிங்கப்பட்டி வீட்டையே காயம் பட்ட விடுதலைப் போராளிகளுக்கான மருத்துவமனையாக மாற்றி தனது தாய், தம்பி உள்ளிட்ட குடும்பத்தினர் மூலமே பாதுகாத்து பராமரித்த மாமனிதர் வைகோ அவர்களின் அளப்பரிய களப்பணிகளும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

இந்திய அமைதிப்படையின் சுற்றி வளைப்பை முறியடித்து தமிழீழ விடுதலைப் போர்க்களத்திற்குச் சென்று தலைவர் பிரபாகரனோடு வைகோ அவர்கள் தங்கியிருந்து செய்த களவேலைகளும், அமைதிப்படையின் தாக்குதலில் பாதுகாப்பு போராளிகள் பலியாகி வைகோவின் உயிர் மீண்ட வரலாறுகளும் ஆமைக்கறி சீமானின் வாய்ச்சவடாலால் மூடி மறைக்கப்பட்டு விட்டது!

இந்தப் பின்னடைவுகளின் காரணமாக இந்தியாவில் /தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் மீதுள்ள தடையைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கூட தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தமிழீழத் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரையே எழுத முடியாது!

அந்த இயக்கத்தின் அடையாளப்படுத்தப்பட்ட தலைவர்களின் படங்களை பதிவு செய்ய முடியாது!

அப்படிப் பதிவு செய்தால் சமூக வலைதள கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படுகிறது!

நவம்பர் 27 மாவீரர் நாள் கூட்டத்தையே தியாகிகளுக்கு சுடரேந்தும் கூட்டம் என்று பெயர் மாற்றித்தான் தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டிய மிக மோசமான அடக்குமுறை இன்றளவும் உள்ளது!

தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தலைமை பங்காற்றி வருகிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்கவே முடியாது.

நக்சல்பாரி இயக்கத்தின் வழிவந்த சில மார்க்சிய லெனினிய குழுக்களும் தமிழ் தேசிய விடுதலை கருத்துகளை ஏற்று தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை உரிமைக்காக குரல் கொடுத்துப் போராடி வருகின்றன.

இந்தியாவை ஆண்டு வரும் பார்ப்பனிய சனாதன ஆளும் கும்பல் தேசிய இனங்களின் இறையாண்மை உரிமையை நசுக்கி அழிப்பதற்கு பாராளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டங்களைப் போட்டு வருகின்றது.

பார்ப்பனிய ஒற்றைத் துருவ அரசு என்னும் பாசிச மையப்படுத்தப்படும் நிலைக்கு பன்முகப்படுத்தப்பட்ட இந்திய சமூகம் தள்ளப்பட்டு வருகிறது!.

அரசியல் சட்டம் வழங்கிய கூட்டாட்சி, மாநிலங்களுக்கான உரிமைகள் என்பது எல்லாம் தொகுதி மறு வரையறை என்ற பெயரில் பறிக்கப்பட உள்ளது.

உலகத்தின் மூத்த குடியான தமிழ் குடியின் வரலாற்றை நிறுவி எழுந்து நிற்கும் கீழடியின் ஆய்வறிக்கை முடக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியை பாதுகாத்து முன்னெடுத்து வரும் மதிப்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் மாநில உரிமைகளை மீட்பதற்கான ஆய்வுக் குழுவை அமைத்து அதன் அறிக்கையையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்கிற தேசிய இன இறையாண்மை உரிமை முழக்கம் தமிழக சட்டமன்றத்தில் சட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உருவாகி உள்ள இந்த எழுச்சியை காஷ்மீரத்தில் செயல்பட்டு வரும் காஷ்மீர் தேசிய இன அரசியல இயக்கங்களும் வரவேற்றுப் போற்றுகின்றன.

மராட்டியத்தில் மராட்டிய தேசிய உணர்வு கொண்ட சிவசேனாவின் மூத்த தலைவர் உத்தம் தாக்கரே அவர்கள் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தான் "இந்திய" கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரல் நீண்ட நெடிய காலமாக தமிழ்நாட்டில் ஒலித்து வருகிறது. தமிழீழ அரசை நிறுவி உலகத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு முதல் தமிழ் தேசிய அரசை செயல்படுத்தி காட்டியவர்கள் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். ஒரு அரசிற்கான அனைத்து கட்டமைப்புகளோடும், அரசியல் முறைமைகளோடும், சட்ட வரையறைகளோடும், செயல்பட்டது தான் விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தமிழீழ அரசு!

அவ்வாறு முகிழ்த்து வந்த தமிழீழ தேசிய இனக் குடியரசை உலகம் முழுவதும் உள்ள இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகள் ஒன்றிணைந்து அழித்துள்ளனர். ஆனால் 40 ஆண்டுகளாக வி.பு இயக்கம் உருவாக்கி உள்ள தமிழ் தேசிய இன இறையாண்மைக்கான உரிமை முழக்கத்தை அடக்க முடியவில்லை!

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முடிவுற்றதற்கு பிறகு பிறந்து வளர்ந்த யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இன்றைய தமிழீழ மாணவர்கள். தமிழீழ தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கான உரிமைக்குரலை அன்மைக்காலமாக முழங்கி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழீழ மக்கள் தமிழீழ தேசிய உணர்வை நவம்பர் மாவீரர் நாள் மூலமாக பாதுகாத்து  ன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை உரிமைக்கான புத்தெழுச்சி உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில் தமிழீழ தேசிய அரசை அமைத்து செயல்பட்ட ஒரு இயக்கம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருப்பது அந்த இயக்கத்தின் மாபெரும் வரலாற்றை பேசுவதற்கும் எழுதுவதற்கும், கலை இலக்கிய வடிவங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கும் பெரும் தடையாக உள்ளது.

நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ,ஐநா அவையிலும் விடுத.லை புலிகள் முன்வைத்த தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமை முழக்கத்தை ஓயாமல் ஒலித்து வரும் வைகோ அவர்கள். உயர் நீதிமன்றத்தில் நேர் நின்று தன் வழக்கை தானே வாதிடுவது என்பது பெடல் கேஸ்ட்ரோ அவர்கள் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்று வாதிட்டதைப் போல, பகத்சிங் நீதிமன்றத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முழங்கியதைப் போல, ஆந்திர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் நாகிரெட்டி அவர்கள் தேச துரோக குற்றச்சாட்டு வழக்கில் "நான் அல்ல தேச துரோகி! இந்தியாவை ஆளும் ஆளும் வர்க்கமே தேசத்துரோகிகள்!" என்று வாதிட்டதைப் போல வரலாற்றின் பக்கங்களில் பதியப்போகும் ஒரு நிகழ்வாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு தமிழ் தேசிய இன உரிமைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழ் தேசிய இன உரிமை மீட்புக் களத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு ஜனநாயக சக்திகளும், தமிழ் தேசிய உணர்வாளர்களும், மக்கள் உரிமைப் போராளிகளும் துணை நிற்க வேண்டும் என தோழமையோடு வேண்டுகிறோம்.

- கி.வே.பொன்னையன், தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.