சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை நினைவூட்ட விரும்புகிறேன். ஒன்று கடந்த மே 14 ம் தேதி நடந்தது. மேட்டூரில் இருந்து தருமபுரி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை முத்துராஜ் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். தொப்பூர் கணவாயைத் தாண்டி கட்டமேடு என்ற பகுதியி்ல் பேருந்து வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காமல் போகவே, ஓட்டுநர் பயணிகளை அவசரமாக இறங்க உத்திரவிட்டார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கும்போதே, பேருந்து பின்னோக்கி நகரத் தொடங்கி, சாலையின் மறுபுறம் உள்ள பாறையில் மோதி கவிழ, ஓட்டுநர் முத்துராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார். தங்களைக் காப்பாற்றிய ஓட்டுநருக்காக பயணிகள் கண்ணீர் சிந்தியது தாங்க முடியாதபடி இருந்தது. விசாரித்தபோதுதான் சம்பவத்தன்று காலை பணிமனையில் பேருந்தை எடுக்கும்போதே பிரேக் கோளாறு குறித்து முத்துராஜ் குறிப்பிட்டதாகவும் அதை அலட்சியப்படுத்திய மேலாளர் கட்டாயப்படுத்தி முத்துராஜை அனுப்பி வைத்ததாகவும் தகவல் தெரிந்தது.

bus 400சம்பவம் இரண்டு. கடந்த 2ம் தேதியன்று தருமபுரியில் இருந்து மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த 21ம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்து ஒன்று வழியில் நின்றுபோக, அந்த வழியாக வந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி தனது சகாக்களோடு பேருந்தை தள்ளி, இயங்க உதவிய செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்தது. இதற்காக அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தனிக்கதை.

சமீப காலமாக அரசுப் பேருந்துகளின் விபத்துகள் குறித்த செய்திகள் மலிந்து போய்விட்டன. கொத்துக் கொத்தாய் மனித உயிர்கள் மடிவதும், போக்குவரத்து ஊழியர்கள் பலர் தற்கொலைக்கு முயல்வதும், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு பலர் தொலைந்து போவதும் தொடர் கதையாகவே மாறி விட்டது.

தினந்தோறும் மொத்தமாக 80 லட்சம் கி.மீ. பயணிக்கும், சுமார் 1,40,000 பேர் பணிபுரியும், நாளொன்றுக்கு 1 கோடிக்கும் மேலான மக்களுக்கு பயன்படும் மக்கள் பயனாளனான அரசுப் போக்குவரத்துக் கழகம் கண்முன்னால் சிதைவது கண்டு உள்ளம் பதைக்கிறது. அரசின் பாராமுகமும், சமூக பிரக்ஞையற்ற, உண்டு கொழுத்த உயரதிகாரிகளின் அலட்சியப் போக்கும் அதிர வைக்கின்றன.

என்னோடு நடைபயிற்சிக்கு வரும் நண்பர் ஒருவர் த.அ.போ.க.வில் சீனியர் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். அவர் சொல்கிறார்... "எந்த பஸ்சும் முறையாக இல்லைங்க, 60% பஸ்சுங்க இயக்க முற்றிலும் தகுதியற்றவைங்க, உயிரைக் கையில் பிடித்தபடிதாங்க ஒவ்வாருநாளும் பேருந்த இயக்க வேண்டியிருக்கு, பழுதான உதிரிபாகங்கள் எப்பவும் காலத்துக்கு வருவதில்லைங்க, ஓட்டுநருங்க முணுமுணுத்தாலோ, பஸ்ச இயக்க மறுத்தாலோ அதிகாரிங்க மிரட்டல் அவங்கள பணிய வெச்சுடுதுங்க" அவர் சொல்வது உண்மை என்பது போலத்தான் சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம் உணர்த்துகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பணிமனையில் ஊழியர் ஒருவர் மேல் அதிகாரியின் நச்சரிப்பு தாளாமல் உடலில் தீவைத்துக் கொண்டு மேலாளரை கட்டிப் பிடிக்கப் பாய்ந்த சம்பவம் அண்மையில் தான் நடந்தது.

தனியார் பேருந்துகள் ஆண்டொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு லாபமீட்டும்போது அரசுப் பேருந்துகளில் உள்ள 8 மண்டலங்களையும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு நட்டமடைவதாக குறிப்பிடுவது ஆச்சர்யமே. ஜெயா ஆட்சியில் எப்போதுமில்லாத அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டும் கூட கி.மீ ஒன்றுக்கு 7 பைசா வீதம் நட்டம் எனப் புலம்புவது யாரை ஏமாற்றும் செயல்? எல்.எஸ்.எஸ், எக்ஸ்பிரஸ், பாயின்ட் டூ பாய்ன்ட் என விதவிதமான பேருந்துகளும், தாறுமாறான கட்டணங்களும் வந்தும் கூட நட்டக் கணக்கு மட்டும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. 2012ம் ஆண்டு 750 கோடியாக இருந்த நட்டக் கணக்கு 2013ல் 850 கோடியாகவும், 2014ல் 1000 கோடி எனவும் உயர்ந்து நம்மை தலைசுற்ற வைக்கிறது. கடந்த 2014 ஏப்ரல்வரை 3860 கோடியாக இருந்த அரசுப் போக்குவரத்தின் மொத்தக் கடன் தொகை நடப்பாண்டில் 5000 கோடியையும் தாண்டிவிட்டது.

8 மண்டலங்களுக்கு உட்டபட்ட 19 உட்கோட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான பணிமனை நிலங்களையும் வங்கிகளில் அடகு வைத்து வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தவிக்கும் போக்குவரத்துக் கழகம், நிலங்களின் மதிப்பைக் கூட்டி மேலும் மேலும் கடன் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. விபத்துக்களில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்திரவுபடி நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஜப்தியில் உள்ளன.

2012-2013 ஆம் ஆண்டு கணக்குப்படி இயக்கப்பட்ட பேருந்துகள் 21,607ன் மொத்த வருமானம் 8 ஆயிரத்து 53 கோடியாகும். இதில் பஸ் கட்டணம் மூலம் 7 ஆயிரத்து 254 கோடியும், ஒப்பந்த ஊர்தி மூலம் 6 கோடியே 95 லட்ச ரூபாயும் அடங்கும். அதே ஆண்டு செலவுத் தொகை ரூ.11 ஆயிரத்து 328 கோடியாம். இதில் டீசல் வகையில் 3 ஆயிரத்து 22 கோடியும், ஊழியர்களின் சம்பளத்துக்கு 3ஆயிரத்து 153 கோடியும் அடக்கம். இதுதவிர கடனுக்கான வட்டி என 461 கோடியும், டோல்கேட் கட்டணமாக ரூ.90 கோடியும் இந்தக் கணக்கில் அடங்காதவை. மேலும் புள்ளி விவரத்தில் பிற கட்டணங்கள் என்ற வகையில் 197 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. அந்த "பிற கட்டணங்கள்" என்ன என்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

உலகமயமாக்கல் உழைக்கின்ற மக்களை திசையெங்கும் சிதறடித்திருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வெய்தும் அற்ப நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இத்தகு மக்களின் இடம் பெயர்வதற்கான ஒரே வாய்ப்பு ஏழைகளின் தோழனான அரசுப் பேருந்துகள் மட்டும்தான்.

இத்தகு மகத்துவம் வாய்ந்த இந்தத் துறையைத்தான் தனியாரிடம் தாரைவார்க்க துடிக்கின்றன திராவிடக் கட்சிகளின் அரசுகள். இன்றைக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் இதே கருணாநிதி தலைமையிலான அரசுதான் போக்குவரத்துக் கழகங்களின் கேன்டீன்களையும், பேருந்துகளின் புற வடிவமைத்தலையும் (பாடி கட்டுதல்) தனியாருக்கு தாரை வார்த்தது. எப்போதும் தனியார் மயத்தின் பிரதான விசுவாசியான ஜெயலலிதா 40% பேருந்துகளின் வழித்தடத்தையும், இதர பணிகளையும் தனியாரிடம் தந்துவிட துடியாய் துடிக்கிறார். அதற்கென இரண்டு முதுநிலை மேலாளர்கள், நிதி சட்டம் ஆகியவற்றின் செயலர்கள் என 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

வண்ண விளக்குகளிலும், விருட்டென்ற வேகத்திலும் மதி மயங்கிய எனது நடுத்தர வர்க்கத்து நண்பன் ஒருவன், கரும்புகை கக்கியபடி போகும் அரசுப் பேருந்துகள் மீது வசைமாறிப் பொழிந்து, தனியார் பேருந்துகளுக்கு வரவேற்புக் கம்பளம் விரிக்கிறான். என்ன செய்வது? அவனது பி்ள்ளை இலவச பஸ்பாசில் பள்ளிக்குப் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. கொல்லும் குளிரில் அதிகாலை காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மார்கெட் போகவேண்டிய கட்டாயம் இல்லை. பாதி ராத்திரியானாலும் பத்தே பேருடன் பயணிக்க வேண்டிய தேவை இல்லை. முகவரியே தெரியாத ஏதோ ஒரு மூலையி்ல் இருக்கும் குக்கிராமத்தில், உறவினரின் இறப்புக்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை. ஆக அரசுப் பேருந்துகளின் தேவை தெரியாத எவரும் அதன் அவசியத்தை அவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்ளப் போதில்லை. போதிய வருமானம் இல்லாத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதை நிறுத்திவிட்ட தனியார் பேருந்துகளின் அனேக கதைகள் இங்கே இருக்கின்றன.

அந்நிய நிறுவனங்களுக்கு சலுகைகள் எனும் பெயரில் கோடிகோடியாய் கொட்டிக்கொடுக்கும் தமிழக அரசு மக்களின் அத்தியாவசியத் தேவையான பேருந்துகளின் விஷயத்தில் பாராமுகமாய் இருப்பது ஏன்? சமீபத்தில் பெப்பே காட்டிவிட்டு ஓடிப்போய்விட்ட நோக்யா கம்பெனியின் கதை நாம் அறிந்ததே. நோக்யாவுக்கு வாட் வரியையும், மத்திய விற்பனை வரியையும் தமிழக அரசே கட்டிக் கொண்டிருந்த அந்த சூழலில்தான் அரசுப் பேருந்துக் கழகம் 100 கோடிரூபாய் அளவுக்கு டோல்கேட் கட்டணத்தை கட்டிக் கொண்டிருந்தது.

எழுத்தளவிலான சேமநலக் கோட்பாட்டுக்கும் ஆப்புவந்துவிட்ட நிலையில், தனியார்மய மாயையில் எல்லா அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்க அலையும் பேய்களின் கூப்பாட்டில் தேசம் சீரழிகிறது.

போக்குவரத்துத் துறையில் தனியாரின் ஆதிக்கத்தை முழுமையாக துடைத்தழிப்பதும், அரசே எல்லா பேருந்துகளையும் எடுத்து இயக்குவதும், ஊழல் பெருச்சாளிகளான உயர்அதிகாரிகளின் பிடியில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை விடுவித்து அவற்றை ஊழலின்றி நிர்வகிக்க தொழிலாளர் நிர்வாகக் குழுக்களை அமைப்பதும், உடனடியாக அரசுப் பேருந்து கழகத்திற்கு தேவையான நிதியை வழங்குவதும் மட்டுமே அழிவில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றும்.

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதியில் இருந்து கடன்பெற்று த.அ.போ.க.வால் வாங்கப்பட்ட 260 புதிய பேருந்துகள் சுமார் 5 மாதங்களுக்கும் மேலாய் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு 12.25% என்ற வட்டி வீதத்தில் இதுவரை 2.10 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. முதலில் ஜெ.வுக்காக காத்திருந்த பேருந்துகள் இப்போது நல்ல நாளுக்காக காத்திருக்கின்றன. மக்களோ பழுதான பேருந்தின் நிழலில் அடுத்த பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சும்மாவா பாடினான் "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று...

- பாவெல் இன்பன்

Pin It