“தங்கமும் எண்ணெயும் சேர்த்தால் என்ன மதிப்போ, அத்தகைய மதிப்பு, எதிர்காலத்தில் தண்ணீருக்குத் தான். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தண்ணீருக்கு உரிமையாளாராகிவிட வேண்டும். அது நமக்கு நெம்பு கோலாகப் பயன்படும்.’’ - ஜென்ரல் நேபல் சார்லஸ்.

           அமெரிக்கப் பேராரசின் ரகசிய வரலாறு-----என்ற நூலில்—ஜான் பெர்கின்ஸ்.

தமிழகமும், கர்நாடகமும் தண்ணீரை மையப் படுத்தி அரசியல் களத்தை சூடாக்கி வருகின்றன. அதிகாரத்தில் இருந்த, மற்றும் இருக்கின்ற இரு மாநில அரசியலாளர்களும், ஒரு மாபெரும் மோசடியை மறைக்க கூட்டு சேர்ந்துள்ளனர் என்பதனை அறியும் போது தான், மக்களை எவ்வளவு ஏமாளியாக்கப் பார்க்கின்றனர் என்பது புரியும். மக்களின் உணர்வுகள் தூண்டி விடப்படும் இந்த அரசியல் கூத்தில் எந்தச் சத்தமும் இல்லாமல் பன்னாட்டு நீர் வியாபாரிகள், லாபக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனை வெளிக் கொண்டு வருவதே நமது நோக்கம்.

water privatization

1996ல் USAID என்ற அமெரிக்க நிறுவனம் கர்நாடகத்தில், தண்ணீர் பற்றி மக்கள் கருத்து கணிப்பை வெளியிட்டது. USAID க்காக ஒரு NGO நிறுவனம் இந்த பணியைச் செய்திருந்தது. இந்தக் கருத்து கணிப்பு மக்கள் தண்ணீருக்காக பணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.

1996ஆம் ஆண்டில் நடந்தேறிய இந்தக் கருத்துக் கணிப்பு ஏதோ தன்னிச்சையான செயல் அல்ல. இதே ஆண்டில் தான், உலக வர்த்தக அமைப்பின் ‘உலக தண்ணீர் கவுன்சில்’ (world water council) தண்ணீரை வணிகப் பொருளாக மாற்றுவதற்கான WORLD WATER, AVISION என்ற அறிக்கையை வெளியிட்டிருந்தது.

2000ஆம் ஆண்டில் 131 நாடுகளின் ஒப்புதலுடன் ‘தண்ணீர் உரிமை’ என்பதனை ‘தண்ணீர் தேவை’ என்று இந்த கவுன்சில் அறிவித்தது. இது வெறும் சொல் மாற்றம் அல்ல; அடிப்படையையே மாற்றுவதாகும். உரிமை என்றால் அரசு மக்களுக்கு வழங்கவும், பாதுகாக்கவும் கடமைப் பட்டதாகும். மக்கள் உரிமையை அரசிடம் கோரிப்பெற முடியும்.

’தேவை’ என்றால் விற்பனைப் பொருளாகிவிடும். அரசுக்கு கடமையென்று சொல்ல முடியாது. ’தேவை’யை வாங்கியே நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதான். இதனைத் தான் 2000ஆம் ஆண்டில் ‘உலக தண்ணீர் கவுன்சில்’ நிறைவேற்றியது.

2002 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் ‘தண்ணீர் தனியார் மயம்’ என்பதனை தண்ணீர்க் கொள்கையாக அறிவித்தார். இதே நேரத்தில் கர்நாடக அரசும் இதே குரலில் மாநில தண்ணீர்க் கொள்கை என்ற ஒன்றை வெளியிட்டது. இது 2003ல் ஏற்கப்பட்டும் விட்டது. 2003ல் S.M.கிருஷ்ணா முதல்வராக இருந்தார் (2012ல் நடுவண் அரசு தேசிய நீர்க் கொள்கையை வெளியிட்டது. இதில் தண்ணீர் தனியார் மயமாவதை மீண்டும் வலியுறுத்தியது)

2005ல் கர்நாடகம் இங்கிலாந்தின் “தேம்ஸ் வாட்டர்” நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தினை செய்து கொண்டது. இதன்படி பெங்களுருக்கு நீர் வழங்கும் உரிமையை தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்கு கர்நாடகம் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பெங்களுரில் பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அரசு 2006ல் ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றது. மக்கள் பிரச்சனை முடிந்து போனதாகக் கருதி அமைதி அடைந்தனர். அரசும் தனியாரும் இதற்காகவே காத்திருந்தனர்.

2008ல் கர்நாடகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் மூன்று நகரங்களான பெல்காம், ஹுப்ளி-தார்வாட், குல்பர்காவில் மெதுவாக தனியாரும், அரசும் கடையைத் துவக்கினர்கள். முதலில் 10 வார்டுகளுக்கு மட்டும் 24 மணி நேரம் தண்ணீர் வழங்கும் திட்டம் என்று சொல்லப்பட்டது. இதற்காக எல்லா இணைப்புகளிலும் உள்ள குழாய்களை HDPE குழாய்களாக மாற்றுவது, மீட்டர் பொருத்துவது என்றும் சொல்லப்பட்டது. தண்ணீர் வீணாவதைத் தடுப்பதற்காக இதனைச் செய்வதாக அரசு சொல்லியது.

நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது நகராட்சியின் பொறுப்பாகும்; நீரினை சுத்திகரிப்பதும் நகரட்சியின் வேலையாகும். சுத்திகரிக்கப்பட்ட நீரினை மேல்நிலைத் தொட்டிக்கு கொண்டு செல்வதும் நகரட்சியின் பொறுப்பாகும். தண்ணீர் வழங்குவது மட்டுமே தனியாரின் வேலையாகும்; அதாவது, குழாயை மூடுவதும், திறப்பதும் மட்டும் தான் தனியாரின் வேலை.

HDPE குழாய் மாற்றுவது, மீட்டர் பொருத்துவது எல்லாம் நகராட்சித் தொழிலாளர்களே செய்தனர். பணப்பட்டியல் கூட நகராட்சியே செய்தது. இந்தப் பணிக்காக 181.2 கோடியை அரசு தனியாருக்குத் தந்தது. இந்தத் திட்டம் உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று நிறைவேற்றப்படும் JnNURM (ஜவகர்லால் நேஷனல் அர்பன் ரிஃபர்ம் மாடுல்) திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டது. உலக வங்கியின் கட்டளை அப்படியே நிறைவேற்றப் பட்டது.

இதில் அரசு கையாண்ட யுக்தி மிகவும் கவனிக்கத்தக்கதாகும். நகராட்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்து அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நகராட்சி நிர்வாகம் மாநில அரசின் கையில் வந்துவிடுகிறது. இந்த நேரத்தில், அதாவது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் அரசு அதிகாரிகளே தனியாருடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லுகிறார்கள். மூன்று நகராட்சிகளிலும் இந்த ஒரே நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

10 வார்டுகள் என்பது பின்னர் எல்லா வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதிலும் ஓர் யுக்தி உண்டு. 24 மணி நேர தண்ணீர்க்கு முதலில் மாதத்திற்கு 30 ரூபாய் மட்டுமே என்று சொல்லப்பட்டது. அனைத்து மக்களும் தங்களுக்கும் விரிவுபடுத்த கேட்டனர். விரிவுபடுத்தப்பட்டவுடன் அடுத்த ஆறு மாதத்தில் தண்ணீர் கட்டணம் ’1000 லிட்டருக்கு 8 ரூபாய்---குறைந்த பட்சமாக 6000 லிட்டருக்கு கட்டணம்’ என்றாகியது. அத்துடன் நிலைக் கட்டணமாக ரூபாய் 30 சேர்க்கப்பட்டது. அடுத்து சர்சார்ஜ் சேர்க்கப்பட்டு கழிவுநீர் கையாளும் கட்டணம் என்று உயர்ந்தது. மாதத்திற்கு 6000 லிட்டர் என்பது ஐவர் கொண்ட குடும்பத்தில் நபர் ஒருவருக்கு இரு குடம் நீர், குடிக்க சமைக்க, குளிக்க, துவைக்க கழுவ எல்லா பயன்பாடுகளுக்கும் என்று கணக்கிட வேண்டும்.

முதலில் லிட்டர் கணக்கில் இல்லாததால் புழங்கிய மக்கள் இப்பொழுது பயன்பாட்டு நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டார்கள். 30 ரூபாயாக இருந்த கட்டணம் இன்று குறைந்த கட்டணமே 275 ரூபாயாக மாறிப் போய்விட்டது. மக்கள் போராட ஆரம்பித்தனர். இப்பொழுது நிலைமை வேறு விதமாக மாறிப் போய்விட்டது. நகராட்சியின் மொத்த நீரில் 29 சதத்தை மட்டும்தான் 70 சத மக்கள் பயன்படுத்துகின்றனர். எஞ்சிய 30 சத மக்கள் 70 சத நீரை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு கட்டணம் பிரச்சனையல்ல. தனியாருக்கு 70 வருவாய் உறுதியாகிவிடும். அரசு மற்றொரு வேலையையும் செய்தது. அதுதான் இந்தத் திட்டம் வரும் முன்பாக இருந்த பொதுக் குழாய்கள், போர் பம்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியும் விட்டது. தனியாரை விட்டால் வேறு கதியில்லை என்றாகிவிட்டது

water privatization 330நீரின் மீதான மனிதனின் உரிமை என்பது அவன் கொண்டுள்ள பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

2008ல் கர்நாடக அரசு நகராட்சி சட்டத்தில் ஒரு திருத்தத்தையும் செய்தது. இதன்படி நகராட்சிப் பணிகளை தனியாருக்கு வழங்கவும் அந்த செலவினத்தை நகராட்சியே ஏற்பதும் என்பதாகும். 2008ல் அரசு, அரசு நிறுவனமான KUIDC (karnataka urban infrastructural development corporation), விவோலியா என்ற தனியார் தண்ணீர் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தினை செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் பெங்களுரைச் சுற்றியுள்ள ஏழு நகராட்சி மற்றும் ஒரு தாலுகா ஊராட்சியை ஒன்று சேர்த்த பெரிய பெங்களுரு என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. விரிவாக்கப்பட்ட பெங்களுரில் 1.பையட்டராயபுரா, 2.பொம்மனஹள்ளி, 3.தசர ஹள்ளி, 4.கெங்கெரி, 5.கே.ஆர்.புரம், 6. மகாதேவபுர, 7.ராஜராஜேஸ்வரிநகர, 8.யேலஹ்ங்க உள்ளடக்கிய 1200 சதுர கி.மீ.பரப்பாகும். இந்தப் பகுதி BBMP( brahath Bangalore mahanagar palike) என்ற அழைக்கப்படுகிறது. இங்கு 24*7 மணி நேர தண்ணீர் வழங்கும் திட்டம் என்றும் வருவாய் இல்லாத நீர், ஒழுகும் நீர் குறைப்பு என்றும் சொல்லப்பட்டது. 24*7மணி என்பது 8 மணி நேரம் என்று பொருள்படும் என்பதும் ஒப்பந்த சாரமாம்.

நாம் மேலே போகும் முன் விவோலியா நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ’சூயஸ்’ என்ற பிரஞ்சு நிறுவனத்தின் துணை நிறுவனமே விவோலியா. சூயஸ் உலகில் 130 நாடுகளில் தண்ணீர் வியாபாரத்தில் இறங்கியுள்ள, உலகின் முதல் இடத்தில் உள்ள தண்ணீர் நிறுவனமாகும். 2002ல் டெல்லி நகருக்கு மூரட் நகரிலிருந்து 3 மீட்டர் குழாய் மூலம் தினம் 6300 மில்லியன் லிட்டர் எனக் கொண்டு வரப்படும் நீரை வினியோகிக்கும் நிறுவனம். திட்டமெல்லாம் கர்நாடகத்தின் மேலே சொன்ன மூன்று நகரத்தினைப் போன்றதே (கொண்டு வருவது, சுத்திகரிப்பது, தொட்டிகளுக்கு கொண்டு செல்வது டெல்லி ஜல் போர்டு). மூரட் நகருக்கு டெஹ்ரி அணையிலிருந்து கால்வாய் மூலம் விவசாயத்திற்கு வரும் நீர் தான் டெல்லிக்கு வருகிறது. சோனியா விஹாரில் சுத்திகரிக்கப்படும் இந்த நீர் கொண்டு வரப்பட்டபொழுது உ.பி விவசாயிகள் பெரிய போராட்டத்தில் இறங்கினார்கள். டெஹ்ரி அணை உலக வங்கியின் கடன் பெற்று கட்டப்பட்டது. டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நகரம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஷீலாதீக்ஷித் விவோலியாவுடன் செய்த ஒப்பந்தம் தான் பின்னர் அவர் மோசமான தோல்வியை சந்திக்க காரணமாகவும் அமைந்தது. இது தான் சூயஸின் விவோலியா. டெல்லியில் இது ஒண்ரியோ டெக்ரிமாண்ட் என்று பெயர் கொண்டது

BBMP திட்டத்திற்கு USAID கர்நாடக ரிஃப்ர்ம் புரொஜெக்ட் எனப் பெயரிட்டு 447.06 கோடி செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினம் 1200 மில்லியன் நீர் கொண்டு வரப்படுகிறது. ஆண்டுக்கு 13 TMC தண்ணீருக்கு சமம். குழாய்களை சுத்தம் செய்கிறேன் என்று 339 மில்லியன் லிட்டரைத் திறந்து விட்டது விவோலிய. பெங்களுரைச் சுற்றி மூன்று பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கும் நீர் வழங்கப்படுகிறது.

2006ல் வெற்றி பெற்று விட்டதாக எண்ணிய மக்கள் அமைப்புகள் இன்று விழித்துக் கொண்டன. தண்ணீர் உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பை (people campaign. For right to water) மாநில அளவில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பு ஒரு பெரிய வெற்றியை மைசூர் நகரில் பெற்றிருக்கின்றனர். மைசூரின் கதை வேறுவிதமானது.

மைசூரில் தண்ணீர் வினியோகத்தை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வாணி விலாஸ் வாட்டர் ஒர்க்ஸ் என்ற அரசுத்துறை நிறுவனம் தான் வழங்கிவந்தது. 2008 சட்டத் திருத்தத்திற்குப் பிறகு மேலே விவரித்த குழாய் அமைப்பு, மீட்டர் பொருத்துவது என்ற வேலைக்காக JUSCO (Jamshedpur utilities service company) என்ற டாடா நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒப்பந்தத் தொகை 150 கோடியாகும். மைசூர் கிருஷ்ணராஜா சாகர் அணையிலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஐந்தாண்டுகளில் 18 சத வேலையே முடிந்துள்ளது. ஆனால் டாடா நிறுவனம் 295 கோடி வசூலித்துவிட்டது. ஜாம்ஷெட்பூரில் டாடா நிறுவனம் தொழிலாளர் காலனிக்கு தண்ணீர் வழங்கி வருகிறது. மைசூர் நகராட்சி உறுப்பினர்களை எல்லாம் தனி விமானத்தில் ஜாம்ஷெட்பூருக்கு அழைத்துச் சென்று காட்டியது. ஆனால் ஒப்பந்தப்படி வேலையை மட்டும் முடிக்கவும் இல்லை; ஒப்பந்த அளவுக்கு மேல் பணமும் பெற்றுவிட்டது. 01/04/2014வுடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தவுடன் மைசூர் மாநகராட்சி தண்ணீர் வழங்கும் பொறுப்பைத் தானே ஏற்பது என்ற தீர்மானத்தை 15/05/2015 ல் இயற்றியிருக்கிறது. ஆனால் மாநில அரசு இந்தப் பணியை கர்நாடக வாட்டர் அண்டு டிரைனேஜ் போர்டுக்குத் தர 2/6/2015ல் முடிவெடுத்துள்ளது. எப்படியானலும் அரசு நிறுவனமே பொறுப்பேற்பதை நாம் மக்களின் வெற்றியகத் தான் பார்க்க வேண்டும்.

மேலும் 16 சிறு நகரங்களில் தண்ணீர் வழங்குவதை விவோலியாவுக்குத் தருவதென அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். இங்கு ஆசியன் டெவலப்மெண்ட் வங்கி நிதி வழங்குகிறது. கொள்ளெகால், மாகடி, ஹளியாலா, நஞ்சன்கூடு, பீஜப்புர், சித்ரதுர்கா போன்ற இடங்களிலும் விவோலியா கடை விரிக்கப் போகிறது. கொள்ளெகால் நகரில் பெரிய எதிர்ப்பையும் சந்தித்தும் வருகிறது.

ஏதோ கர்நாடகத்தில் மட்டும்தான் நடக்கிறது, தமிழகம் தங்கமாக தண்ணீரை மக்களுக்காக பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணி ஏமாந்துபோக வேண்டாம். தண்ணீர் ஒப்பந்தங்களில் 2002ம் ஆண்டும், 2008ம் ஆண்டும் முக்கியமானவை. 2002ல் இன்றைய முதல்வர் திருப்பூர் நகருக்கு தனியார் தண்ணீர் விற்கும் திட்டத்தை 20/06/2002 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கோவை அன்னபூர்னாவின் பூனம் பீவாரெஜ் நிறுவனம் கின்லே நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் வீதம் பவானி ஆற்று நீரை ஆண்டுக்கு வெறும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்கிறது. கின்லே லிட்டர் நீரை 20 ரூபாய்க்கு விற்கிறது. பெருந்துறையில் பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க 2008ம் ஆண்டில் மாநில அரசு அனுமதி வழங்கியது. திருப்பூரில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டு விட்டதால் மகெந்தரா நிறுவனம் தண்ணீரை அனல் மின்நிலையங்களுக்கு விற்கப் போகிறது. தனியார் நிறுவனம் போல அரசே தண்ணீர் வியாபாரத்தில் இறங்கி விட்டது. 20 ரூபாய்க்குப் பதிலாக 10 ரூபாய்க்கு கிடைப்பதாக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள் என்று அரசு மக்களை திசை திருப்புகிறது.

தமிழகத்தில் நம் முன்னோர்கள் உண்டாக்கிய 39,202 நீர்நிலைகளில் 5,000க்கு மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இவற்றில் பல நீர் நிலைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டிடம் கட்டி கல்வி வியாபாரம் நடத்துகின்றன.

இரு மாநிலங்களுக்கிடையில் தண்ணீர்ப் பிரச்சனையை அரசுகள், தங்கள் மக்களுக்காகப் பாடுபடுவதுபோல் காட்டிக்கொள்கின்றன. உண்மையில் பன்னாட்டு தண்ணீர் வியாபாரிகளுக்காகவே இவைகள் கண்ணீர் வடிக்கின்றன. நடுவண் அரசும் இதில் தலையிடாத காரணம் தண்ணீர் வியாபாரிகள் மீதான அக்கறையன்றி வேறல்ல. வங்கதேசத்துடனான நீர்ப் பங்கிட்டை தீர்க்கத் துடிக்கும் நடுவண் அரசு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையில் பொறுப்பினை அரசியல் லாபங்களுக்காக தட்டிக் கழிக்கிறது. பல வகையிலும் நடுவண் அரசைச் சார்ந்துள்ள மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்றா என்ன? GST, ELECTRICITY போன்ற பொதுப்பட்டியலில் உள்ள பிரச்சனைகளில் மாநிலங்களை தன் வழிக்கு கொண்டு வரும் நடுவண் அரசு ஏன் தண்ணீர்ப் பிரச்சனையில் அக்கறை காட்டுவதில்லை?

தண்ணீரைப் பணமாகப் பார்த்தால் யார்தான் மற்றவர்களுக்கு தண்ணீர் தருவார்கள்?

மாநில அரசுகள் தனியாருக்குத்தான் இலவசமாகத் தருவார்களே தவிர மக்களுக்கல்ல.

- சா.காந்தி

Pin It