தமிழகத்தில் வெள்ளபாதிப்பின் போது அரசு இயந்திரம் ஒன்று இல்லை என்பது போன்ற நிலை ஏற்பட்டதற்கும், அரசின் செயலற்ற தன்மைக்கும் எதிராக கருத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசனை அவதூறான நடையில் கண்டித்துள்ள தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் மழை வெள்ளம் குறித்த எந்த உரிய எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதிப்பிலிருந்து மக்கள் மீள தடுப்பு நடவடிக்கை எதுவும் உரிய முறையில் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. பெரும் பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்ட பின் மக்களை காக்கவும் மறுவாழ்வு செய்யவும் முழு அரசு இயந்திரமும் செயல்படுத்தப்படவில்லை.
மக்கள் தங்களின் அற உணர்வின் உந்துதலில் தாங்களாகவே எழுந்து களப்பணி புரிந்து வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்டுள்ளனர். அரசு திரம்பட பணிபுரிய வேண்டிய தருணத்தில் வெற்று அரசியல் மற்றும் சுய தம்பட்ட விளம்பரம் தேட முனைந்து சேவை என்பதன் பொருளை கொச்சைப்படுத்தி விட்டது. மக்கள் திரட்டி வரும் நிவாரணப் பொருள்களில் கூட ஜெயலலிதாவின் போட்டோ ஒட்டும் நிலையில் இந்த குரூரம் சனநாயக பண்புகளுக்கும் மனித நேய உணர்வுகளுக்கும் எதிரானது என்பதை பலரும் கண்டித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் கடும் வெள்ள சேதத்திற்கு ஆளாகி இருந்த போதும் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் நிவாரணத்திலிருந்து பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருந்தனர். சுமார் முப்பத்தி ஏழாயிரம் குடும்பங்கள் நூற்றி நாற்பது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். உள்ளீடான கிராம மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். இதுவரை முகாம் மக்களுக்கு மட்டும் அரசு பாய் மற்றும் உணவு மட்டுமே கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் செயலின்மையை நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கேள்வி வெறும் தனி மனிதரான கமல்ஹாசனின் கேள்வி மட்டுமல்ல தமிழகத்தில் பொது சமூகமும் அதன் மக்களும் நினைத்த அல்லது கேட்க எண்ணிய கேள்வியே! ஆனால் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கமல்ஹாசன் என்ற தனி மனிதனின் வாயை அடைக்க மிரட்டும் தொனியில் கண்டித்துள்ளது, ஜெயலலிதாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழக மக்களும் அடிமைகளைப் போல இருக்க வேண்டும் என்று மிரட்டும் தொனி சார்ந்தது. கருத்தை ஆக்கப்பூர்வமான செயலுக்கு வாய்ப்பாக கருதி செயல்படாது, ஆணவப்போக்கால் மிரட்டுவது கருத்துரிமையை பறிக்கும் செயல் என்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கின்றது. தமிழக ஆளும் அரசு அதன் செயலின்மை குறித்து எழும் கேள்விகளுக்கு பொறுப்பான பதில் கூற கடமைப்பட்டது என்றும் ஆண்டான் அடிமை மனப்பான்மையோடு கருத்தாளர்களை இழிவுபடுத்த அதற்கு உரிமை இல்லை எனவும் மக்கள் சிவில் உரிமைகழகம் தமிழ்நாடு மற்றும் புதுவை அமைப்பு வெளிப்படுத்துகின்றது.
- பேரா.சரஸ்வதி, மாநிலத் தலைவர் & ச.பாலமுருகன், மாநிலச் செயலர், (பி.யு.சி.எல்)