மன்மோகன்சிங் தலைமையிலான பத்தாண்டுகால காங் கிரஸ் ஆட்சியில் பல்வேறு துறைகளில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடியது. கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் அல்லலுற்றனர். பணவீக்கம் அதிகரிப்பு, உள்நாட்டு உற் பத்தி பாதிப்பு, பங்கு சந்தையில் பெரும் சரிவு என மொத்தத் தில் இந்தியப் பொருளாதாரமே நலிவடைந்து காணப்பட்டது. சிறுபான்மை மக்கள் மீதும் தலித்/பழங்குடியினர் மீதும் ஈவு இரக்கமற்ற முறையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. விவசாயம் நசிந்துபோய் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இப்படியான காரணங்களால் இந்திய மக்கள், காங்கிரஸ் ஆட்சியின்மீது நம்பிக்கையிழந்தும் அதிருப்தியுடனும் காணப்பட்டனர் அன்று. இந்துத்வா அடிப்படைவாத சக்திகளின் அரசியல் கேடயமாக விளங்கும் பாஜகவின் அரசியல் மூளை இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள துரிதமாக செயல்பட்டது. அன்றைக்கிருந்த பலவீனமான அரசியல் நிலைமையை மக்கள்முன் மேலும் மிகைப்படுத்திக் காட்டிவிட்டு, இந்திய ஊடகங்கள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவோடு இக்கட்டானதொரு சூழலில் தேசம் சிக்கிக்கொண்டிருப்ப தாகவும் சித்தரித்தது. இத்தகைய தயாரிப்புகளுடன் வளர்ச்சி நாயகன் (விகாஷ் புருஷ்) எனும் பிம்பமாக நரேந்திர மோடியை யும் முன்னிறுத்தி 2014 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இறங்கிய பாஜக வெற்றி மகுடமும் சூடிக்கொண்டது.

Modi in parliamentஇவ்வகையில் பாஜக, இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஓராண்டு காலம் முடிந்துவிட்டதன் நினைவாக நாடெங்கும் பேசிவரும் அக்கட்சியின் பிரமுகர்களும் மத்திய அமைச்சர்களும் மேற்கண்ட மோசமான நிலைமையிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள் வதுடன் பிரதமர் மோடி, தன் சாகசங்களால் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்திக் கொண்டிருக் கிறார் என்றும் தமக்குத் தாமே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொள்கின்றனர். "12 மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலத்தில், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற தோற்றத்தை இந்தியாவுக்கு மீட்டுத் தந்தது தேஜகூ அரசு" என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் நவ தாராளவாத பொருளாதார கோட்பாடுகளை அப்படியேக் காப்பியடித்து இன்னும் தீவிரமாக செயல்படுத்துவதால் பெரும் நிறுவனங்கள் மட்டுமே பலன டைந்திருக்கின்றன. விவசாயிகள் உட்பட சாதாரண மக்களுக்கு இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை; உண்மையில் ஏழை-ஏளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பின்னுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள்.

"பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு பீற்றிக்கொள்ளும் சாதனைகள் அனைத்துமே அற்பமானவை" எனும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் சர்வதேச சந்தையில் 2014 மே மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலர்களாக இருந் தது; அது, அதே மாதம் 60 டாலர்களாக குறைந்தது என்பதைச் சுட்டிக்காட்டி நிதிப் பற்றாக்குறை ஓரளவு சரிகட்டப்பட்ட விவ காரத்தை சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் பொருத்திப் பார்க்காமல் தனது தனிப்பட்ட சாதனையாக வரிந்துக் கட்டிக்கொண்டு பேசுகிறது பாஜக என்று குறைபட்டுக் கொள்கிறார். "அரசின் ஆசிர்வாதத்துடன் மதப்பிரிவினைவாதம் எந்நேரமும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. நவீன, மதசார்பற்ற , ஜனநாயக இந்தியக் குடியரசை சகிப்புத் தன்மையற்ற 'இந்து ராஷ்டிரமாக மாற்றுதல்' என்ற செயல் திட்டத்தை நோக்கி ஆர். எஸ். எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக சென்றுகொண்டிருக்கிறது" என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. மகாராஷ்டிரம், தில்லி போன்ற இடங்களில் முஸ்லீம்கள் மீதும் தேவாலயங் கள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதை மூடிமறைத்து விட்டு ஓராண்டு கால தேஜகூ ஆட்சியில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று பாஜக வட்டாரம் பிரசங்கம் செய்து வருவதையும் அரசியல் விமர்சகர்களின் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன. பிரதமர் மோடி அரசு மீது எழுப்பப்படும் இவ்வகைப்பட்ட ஆதரவுxஎதிர்ப்பு விமர்சனங்க ளைத் தொடர்ந்து அவ்வாட்சியின் பலங்களும் பலவீனங்களும் என்று அடுக்கப்படுவன/மதிப்பிடப்படுவனக் குறித்து சுருக்கமாகப் பேச முயற்சிக்கிறது இக்கட்டுரை.

ஓராண்டில் 18 நாடுகளுக்குப் பயணம் செய்ததன் விளை வாக 20.8 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடு 28.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்திருக்கிறது. நிலக்கரி வயல்கள், அலைக்கற்றை அலைவரிசை ஏலங்கள் ஊழலுக்கு இடமற்ற வகையில் வெளிப்படையாக நடைபெற்றுள்ளன. 8.3% நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதனால் பல மின்னுற் பத்தி நிலையங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. பணவீக்க சதவீதம் குறைந்துள்ளது என்று பேசிக்கொண்டு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் "இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்திருக்கிறது. அரசியல் ரீதியாக வும் பொருளாதார ரீதியாகவும் நாடு இப்போது நல்ல நிலை யில் இருக்கிறது" என்கின்றனர் பிரபு சாவ்லா போன்ற பத்திரிகையாளர்கள்.

பாஜக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று சிலவற்றை பட்டியலிட்டு "நாட்டின் பொருளாதாரத்தை முன் னின்றும் அரசியலைப் பின்னின்றும் இயக்கும் தொழில் துறை யின் ஏகபோகப் பிரதிநிதியாகத் தன்னை நிறுவிக்கொண்டிருக் கிறார்" என்று பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டுகின்றன ஊடகங்களும். மேற்கண்ட விவரங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்தும் நிச்சயமாக துணைபுரியக் கூடியவைத்தான் என்றாலும் ரூபாயின் மாற்று மதிப்பு (Exchange value) அதிகரித் திருப்பது, 2013-2014 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2014-2015 நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்திருந்தும் விலைவாசி கட்டுக்குள் வராமல் இருப்பது, ஏற்றுமதி அளவு வீழ்ந்திருப்பது போன்றவைக் குறித் தெல்லாம் மோடி புகழ்பாடிகள் பேச மறுப்பதை நேர்மையான விமர்சனமாக எப்படி கருதிக்கொள்ள முடியும் நாம்? இன்னொருபுறம் அடல் பென்சன் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், 'ஜன் தன் யோஜனா' (வீட்டுக்கொரு வங்கிக் கணக்கு துவங்கும் திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் 15 கோடிப்பேர் இணைக் கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது) திட்டம், ரூ.12ஐ ஆண்டு சந்தா செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடாக பெற வழிவகுக்கும் 'சுரக்ஷா பீம யோஜனா' திட்டம், ரூ.330ஐ ஆண்டு சந்தாவாக செலுத்தி ரூ.2 இலட்சம் ஆயுள் காப்பீடாக பெறும் 'ஜீவன் ஜோதி யோஜனா' திட்டம் போன்ற திட்டங்கள் துவங்கப்பட்டிருப்பதுவும் பெரும் சாதனைகளாக பேசப்படுகின் றது. இத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்பட்டு சாதாரண மக்கள் பலன் பெறும் பட்சத்தில் வரவேற்கப்பட வேண்டியவை தான் என்றாலும் நிதியாதாரம் வழங்கிவிட மத்திய அரசு முன் வரும்போது ஓர் அரசாணை மூலம் ஒரு சிறு நிறுவனத்தா லேயே சிறப்பாக செயல்படுத்திவிட முடியக்கூடிய இத்திட்டங் களை மோடி அரசின் பெரும் சாதனைகள் என்று மிகைப் படுத்திப் பேசுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

குடுகுடுப்பைக்காரன் பாவனையில் "நல்ல காலம் வரும்" என்று அவர்கள் சொன்னது பணக்காரர்கள் விசயத்தில் மட்டும் நடந்துள்ளது எனலாம். வளர்ச்சி, முன்னேற்றம் என்னும் அம்சங்களை அச்சாணியாகக் கொண்டு ஓயாது சுழலும் ஓர் அவதாரமாக காட்சிப்படுத்தப்படும் பிரதமர் மோடியின் அரசு ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வாரி வழங்கும் அரசாக விளங்குகிறது. பெரு நிறுவனங்களின் கையிருப்பும் பணக்காரர்களின் சொத்து மதிப்பும் ஓராண்டில் கணிசமாக அதிகரித்துள்ளதையும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. ஒரு பக்கம் 'மேக் இன் இந்தியா' என்று சொல்லிக் கொண்டு மறுபக்கம் உற்பத்தித் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் பெருநிறுவனங்களின் கை ஓங்கி, இந்திய தொழில் நிறுவனங்களும் சிறு/குறு தொழில்களும் முடங்கிவிடும் அபாயம் உயர்ந்து வருகிறது.

கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 இலட்சம் செலுத்துவோம் என்றார்கள்; அதனை செயல்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட குழு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது; துரும்பளவு முயற்சியும் அரசு சார்பில் எடுக்க்கப்படவில்லை. மொத்தத்தில் பார்க்கப்போனால் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற அவர்களது முழக்கம் அர்த்தம் இழந்துக் கிடக்கிறது. தேஜகூ தனது தேர் தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுள் குறைந்தபட்சம் விலைவாசி கட்டுப்படுத்தப்படும், வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும் என்ற ஒருசில வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதுவும் குறிப்பிடத்தகுந்தது.. இப்படியான குற்றச்சாட்டுகளினூடே பெரும்பான்மைவாத மனோபாவ பாஜக அரசு இந்திய கலாச்சார மையங்களையும் கல்வி மையங்களையும் தமது உள்ளடி வேலைகள் மூலம் காவிமயமாக்கத் துடிக்கும் சமிக்ஞை இந்திய ஜனநாயகம், மத சார்பின்மை என்னும் உன்னதக் கோட்பாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக விளங்குகிறது என்றும் விமர்சிக்கப் படுகிறது.

மோடி அரசு, நாட்டின் வளர்ச்சி என்பதை தொழில்துறை முன்னேற்றம் எனும் ஒற்றை பரிமாணத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மதிப்பிடுவதாக தெரிகிறது. இது தவறாகும்; உண்மையான வளர்ச்சி என்பது தொழில்துறை முன்னேற்றம் உட்பட அந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் வாங்கும் திறன், சுகாதாரம், கல்விநிலை, தனிமனித/சமூக உரிமைகளுக்கு மதிப்பளிப்பது, பெண் சுதந்திரம் என்பனவற்றையும் உட்கிடக்கையாகக் கொண்டதாகும் என்பதை பாஜக அரசு வசதியாக மறந்துவிட்டது. பாஜக அரசானது மக்கள் நலனில் அக்கறைக்கொள்ளாத மக்கள் விரோத அரசு என்பதற்கு 2015-2016 க்கான பட்ஜட்டில் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவுக்கு குறைத்திருக்கிறது என்பதையே உதாரணமாக சொல்லலாம். இச்செயற்பாடுகளை, அரசு சமூக நலத் திட்டங்களுக்கு மதிப்பளிப்பதை படிப் படியாகக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்னும் நவீன தாராளவாத பொருளாதார கோட்பாட்டின் வழிகாட்டுதல் பேரிலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனைகளின் பேரி லும் எடுக்கப்படும் நடவடிக்கைகளே ஆகும் என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

"மானியச் செலவின் பங்கு 2.1%-லிருந்து 1.7% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.82,771 கோடியிலிருந்து ரூ. 69,074 கோடியாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடு ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29,653 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் ரூ. 5,000 கோடி; பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டில் ரூ. 12,000 கோடி; மகளிருக்கான ஒதுக்கீட்டில் ரூ. 20,000 கோடி; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒதுக் கீட்டில் ரூ.8000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது" (தி இந்து தமிழ்-தலையங்கம்; மே 27, 2015) ஏழை/எளிய, மத்தியதர மக்கள் நலன்களை மையமாகக் கொண்ட சமூக நலத் துறைகளுக்கான நிதி ஆதாரங்களைக் இப்படிக் குறைத்துவிட்டு அம்மக்களின் பின்னடைவுகள் மேல் பாஜக கட்டி எழுப்ப நினைக்கும் நாட் டின் வளர்ச்சி யார் நலனை கருத்தில் கொண்டுள்ளது? என்ற கேள்வியும் இயல்பாகவே எழத்தான் செய்யும் அல்லவா, டிஜிட்டல் இந்தியனுக்கு.

4 சதவீதம் என்றிருந்த விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தை 11 சதவீதமாக உயர்த்தி விவசாயிகளின் வெறுப்புணர்வுக்கு ஆளாகியிருக்கும் பாஜக அதுபோதாதென்று நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுவதற்குக் கையாளும் குறுக்கு வழிகளைக்கண்டு முகம் சுளிக்கின்றனர். மக்கள் மேற்கண்ட வரிசையில் நிறுத்தி கவனித்தாக வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் தேவைப்படுமாயின் நில உரிமையாளர்களின் சம்மதம் இல்லா மலேயே நிலங்களை கையகப்படுத்துவற்கு ஏதுவாக நிலம் கையகப்படுத்தும் சட்டம் வடிவமைக்கப்பட்டு அதனை அவசர சட்டமாக குறுக்கு வழியில் நிறைவேற்றத் துடிப்பதுவும் பன்னாட்டு நிறுவனங்களை திருப்திப்ப்டுத்துவதற்கேயாகும். இதன் நீட்சியாகவே சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்டு பல்வேறு சட்டங்களைத் திருத்தவும் முயற்சிக்கிறது பாஜக அரசு. ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே 50க்கும் மேற்பட்ட சட்டங்களை குறுக்கு வழியில் பாஜக நிறைவேற்றியிருப்பதாக சொல்லப் படுகிறது. . 1.86 கோடி தொழிலாளர்களும் அவர்களது குடும்ப நபர்களும் பலன் பெற்று வந்த இ.எஸ்.ஐ. என்னும் மருத்தவத் திட்டத்தை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் 'தேசிய நலவாழ்வுக் கொள்கை 2015' படி தனியார் காப்பீட்டுக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சித்து வருவது போன்ற மக்கள் விரோத, தொழிலாளர் விரோத செயல்பாடுகளையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குத்தான் என்றால் எந்த இளிச்சவாயன் நம்புவான்?

இந்து தீவிரவாத அமைப்புகளின் நல்லாசியுடன் தேசிய கல்வி/கலாச்சார மையங்களை காவி மயமாக்கும் உள்ளடி வேலைகளை சப்தமில்லாமல் செய்து வருகிறது பெரும்பான்மைவாத பாஜக அரசு. இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பிரச் சாரகர் சுதர்சன் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யா லாய பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பது கட்டாயம் என்றுமாக் கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் உதாரணங்களாக நம்முன் நிற்கின்றன. இதேபோல 'கர் வாப்ஸி' என்னும் பெயரில் மதம் மாறிச்சென்ற இந்துக்களை சில சடங்குகள் செய்து தாய் மதத்துக்கு திருப்புவோம் என்று இந்து பழமைவாத இயக்கங்கள் செயல்படும்போது அரசியல் பாதுகாவலனாகவே அங்கு போய் நிற்கிறது பாஜக.

பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் துணிச்சலில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் மதம் மாறி நடக்கும் காதல் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் இயக்கம் நடத்துகின்றன. இதுபோன்ற வெளிப்படையான மதவாத செயல்பாடுகளை பின்னின்று தூண்டிவிடுகிறது மோடி அரசு. "மாட்டிறைச்சியை சாப்பிட விரும்புபவர்கள், பாகிஸ்தானுக்கு செல்லட்டும்" என்று மத்திய அமைச்சர் சர் முக்தார் அப்பாஸ் நக்வி என்பவரை பேசவைத்துவிட்டு அதன்மேல் எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியதும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று பின்வாங்கியபடி பதுங்கிக்கொண்டார் பாஜகவின் தலைவர் அமித்ஷா. பிரதமர் மோடியின் காவி ஆதரவு கருத்தியல் சகாக்களின் இது மாதிரி யான பேச்சுக்கள் ஜனநாயகம், மதசார்பின்மை என்னும் இந்தியத் தனித்தன்மைகளுக்கு எதிராக விடப்படும் சவால்களா கவும் அச்சுறுத்தல்களாகவும் விளங்குகின்றன என்பதை கைடு (வழிகாட்டி)போட்டு விளக்க வேண்டியதில்லைதானே!

பாஜக ஆளும் மஹாராஷ்டிரம், ஹரியானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டம் அமல் படுத்தப்பட்டு மாட்டுக்கறி விற்பதுவும் உண்பதுவும் சட்டப்படி குற்றம் என்றும் மீறுவோர்க்கு 5 ஆண்டு முதல் பத்தாண்டுகள் வரைக்கும் சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்டம் இயற்றப்பட்டுப்பட்டுள்ளது. இந்துக்களின் கோமாதாவான புனிதப் பசுவைக் காப் போம் என்னும் கருத்தியல்தான் இச்சட்டம் இயற்றப்பட்டதன் பிரதான நோக்கம் என்று நம்பவைக்கப்பட்டுள்ளது; ஆனால், மும்பை போன்ற இந்திய மாநகரங்களில் வாழும் பெரும் பாலான முஸ்லிம்களின் பொருளாதார வளம் மாட்டுக்கறி ஏற்றுமதி (உலக அளவில் அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடம் வகித்து வந்தது இந்தியாவைப் பின்புலமாகக்கொண்டு அமைந்துள்ளது என்பதை அறிந்து அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுவிழக்க செய்யும் மதவெறி சிந்தனை மேற்படி சட்டத்தின் பின்னணியில் இருப்பதை எந்த ஊடகமும் அரசியல் விமர்சகரும் பேச முன்வருவதில்லை.

மாட்டுக்கறி உண்பது குற்றம் என்றாக்கப் பட்டது முதல் அண்மையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இயங்கும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்தது என்பதற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதிராணி வழிகாட்டுதல் படி அவ்வியக்கம் தடை செய்யப்பட்டது வரைக்கும், அரசியல்/கல்வி/கலாச் சாரம் தொடங்கி கருத்தியல் தளம் வரைக்கும் பாஜகவும் அதன் பரிவாரங்களும் காவி கருத்தியலை திணிப்பனூடாக மதசார் பற்ற ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது என்பதை யேக் காட்டுகிறது.. நெறிபடும் ஜனநாயகம் மற்றும் மதசார்பின் மையின் ஓலக்குரல் நாட்டின் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் பெரும்கூச்சல் எழுப்புவதன் மூலம் வெளியில் கேட்டு விடாதபடிக்கு அமுக்கப்படுகிறது என்பதுவே நிதர்சனம். மற்றபடிக்கு நம்மைப் பொறுத்தவரையில் மோடி தலைமையிலான பாஜகவின் புனையப்பட்ட ஓராண்டு சாதனைகளைக்காட்டிலும் நாம் அருவெறுக்கும்படியான வேதனைகளே விஞ்சி நிற்கின்றன.

- வெ.வெங்கடாசலம்

Pin It