ஓர் இனத்தை அழிக்கவேண்டுமானால் முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும்  என்பார்கள். 

ஹிட்லர்,  நாசிச ஆட்சி  என்ற கொடுங்கோல் ஆட்சியை ஆளத்தொடங்கியதும் செய்த முதல் கொடூரம் தனது நாட்டு நூலகங்களைத்  தீக்கிரையாக்கியதுதான். ஈழத்தமிழர்களை ஒடுக்க நினைத்த சிங்களர்கள் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ்ப்பாண நூலகத்தை 1981இல்  தீக்கிரையாக்கினார்கள். 

anna libary 600ஹிட்லரால் ஜெர்மனியிலும், சிங்களர்களால் ஈழத்திலும் நடந்த  இலக்கிய அழிப்பு, நம் மாநிலத்திலும் அரங்கேறத் தொடங்கியது 2011இல் அதிமுக அரியணை ஏறியபோது. ஆம்! இந்தியாவிலே அல்ல, தெற்காசியாவிலேயே பெரிய நூலகம் என்ற பெருமிதத்தோடு சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கியது ஜெயலலிதாவின் அதிமுக அரசு.

ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக வெற்றிகரமாக மாற்றிய மமதையில், தமிழகத்தின் மகுடமாக, அறிவுச்சுடராக, ஒளிக்கீற்றாக இருக்கும் அண்ணா நூலகத்தை அழிக்கும் வேலையைத் தொடங்கினார் ஜெயலலிதா.

தமிழக மக்களை அறிவிலிகளாக மாற்றும் மூடச்சிந்தனையோடு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் குறிக்கோளாகக் கொண்ட ஜெயலலிதாவின் தனிப்பட்ட வெறுப்பால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் குழந்தைகளுக்கான மருத்துவமனையாக மாற்றப்போகிறோம் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு வாங்கி நூலகத்தைக் காப்பாற்றிய போது, ஆய்வு மாணவர்கள் ஆய்வு செய்வதைக் கெடுக்கும் நோக்கிலும், வாசிப்பவர்களை விரட்டும் நோக்கிலும் 2012இல் நூலக அரங்கைத் திருமணத்துக்கு வாடகைக்கு விடும் கூத்தை ஜெ. அரசு செய்தது..

அதற்கும் உடனடியாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி அண்ணா நூலகத்தை உயிரோடு காப்பாற்றினாலும்  இந்த ஏழு ஆண்டுகளாகக் கோமா நிலையில்தான் நூலகம் இயங்கிவருகிறது. நூலகம் 2010இல் தொடங்கப்பட்ட நிலையைச் சொல்ல வேண்டுமென்றால்....

1)  3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் அமைந்துள்ள ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம்..

2)  தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. 

3) பல்வேறு துறைகளைச் சார்ந்த பல லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், 

4) நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library) நூலகம் இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

5)  படிப்பு சார்ந்த நிகழ்ச்சி நடத்த உள்அரங்கு மற்றும் பளிங்குக் கற்களால் ஆன இருக்கை கொண்ட அரைவட்ட வடிவிலான மிகப்பெரிய வெளியரங்கம்

6) நூலகம் முழுக்கக் குளிர்சாதன வசதி. 

7)  ஒவ்வொரு தளத்திலும் கழிவறை வசதி, குடிநீர் வசதி.

8) பார்வையற்றோர்களுக்குத் தனிப்பிரிவு.

9)  வீட்டில் இருந்து புத்தகம் எடுத்து வந்து படிக்க ஒரு தனித் தளம்     (இன்று இந்தத் தளத்தில்தான் கூட்டம் நிரம்பி இருக்கிறது)

10) தரைத்தளத்தில் உணவகங்கள்

11) குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு

என்று தமிழகத்தின் கிரீடமாகக்  கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூலகம், இன்று பராமரிப்புப் பணிகள் ஏதுமில்லாமல்! 

மூன்றாம் தரத் திரையரங்கின் கழிவறைகள்  போல நூலகத்தின் கழிவறைகள். பத்தாண்டுக்கு முன் போடப்பட்ட தரை விரிப்பு அழுக்கேறிப்போய்க் கிடக்கக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் புதிதாகப் புத்தகங்கள் ஏதும் வாங்கப்படாத நிலை! உணவகங்கள் காணாமல் போய் ஒரே ஒரு ஆவின் பாலகம் மட்டுமே அங்கு செயல்படுகிறது.

அவ்வளவு பெரிய நூலகத்தில் தலைமை இயக்குநரே இல்லாத (அ) பணிக்கு வராத நிலை!

புனரமைப்பு செய்யாததால் அங்கங்கு தேனீக்கள் கூடு, சிலந்திகளின் கூடு,  கட்டட விரிசல் எனப் பொலிவற்றுப் போய்,  ஆட்கொல்லிப் புற்றுநோயைப் போல அதிமுக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று இன்று கோமா நிலையில் ஆக்கி வைத்துள்ளது.

தமிழகத்தின் அறிவு சார்ந்த நூலகத்தை அழிப்பது, மழலைக் கல்வியில் பொதுத்தேர்வைத் திணிப்பது,  மருத்துவக் கல்வியில் நீட் தேர்வைத்  திணித்தது, தமிழனின் தொன்மை நாகரிகமான கீழடியை  ஆய்வு செய்யவிடாமல் முடக்குவது, செம்மொழி ஆய்வு நிறுவனத்தைச் சிதைத்து வருவது என்று தமிழையும் தமிழர்களையும்  அழித்தொழிக்கும் வேலையை  நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களே செய்கிறார்கள்.

இவை அனைத்தும் அறிந்தும், அறியாததுபோல் வாய்ப்பேச்சு வீரனாய், எதிர்த்துப் போராட  முதுகெலும்பு அற்ற  குடிகளாக இன்றையத் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருமானால், வீழ்வது நாமல்ல, நம் எதிர்காலத் தலைமுறையாகத்தான் இருக்கும்.

Pin It