தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் எதிர்பார்த்த படி அதிமுக பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. 2006 தேர்தலில் திமுக கூட்டணி அஇஅதிமுக கூட்டணியை விட 4.72% கூடுதலாகப் பெற்றது. அந்தக் கூட்டணியை விட 15,57,858 வாக்குகள் கூடுதலாகப் பெற்றது.
2011 தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி திமுக கூட்டணியை விடக் கூடுதலாக 12.36 சதமும், 45,55,000 வாக்குகளும் பெற்றுள்ளது.
2006ல் பதிவான மொத்த வாக்குகள் 3,30,05,492
திமுக அணி வாக்கு சதவீதம் 44.57
அஇஅதிமுக அணி வாக்கு சதவீதம் 39.85
2011 தேர்தல் முடிவுகள்
பதிவான மொத்த வாக்குகள் 3,67,53,114
அஇஅதிமுக கூட்டணி 51.80%
தி.மு.க. கூட்டணி 39.44%
இந்த சட்டமன்ற தேர்தலில் முக்கிய சிக்கலாக தமிழக மக்கள் பார்த்தது ஒன்று ஊழல் இரண்டு ஈழம். தமிழகத்தை பொறுத்தவரை ஈழச் சிக்கல் என்பது உணர்வு பூர்வமான சிக்கல். தமிழகத்தில் வாக்கு விகிதம் படி சட்டமன்ற உறுப்பினர் தேர்வு இல்லாதது மக்களின் விருப்பம். இங்கு முழுமையாக அந்த அந்தக் கட்சிக்கு போய் சேர்வதில்லை. அதனால் மக்களிடம் செல்வாக்கு இல்லாத கட்சிகள் கூட இங்கு வெற்றி பெறுவது சாத்தியமாகிறது. 38% சதவீதம் வாக்கு பெற்ற அதிமுக 150 இடங்களும், 22% சதவீதம் பெற்ற திமுக 23 இடங்கள் மட்டும்தான் பெற முடிந்தது. 9.30% சதவீதம் பெற்ற காங்கிரசு 5 இடங்களும், 5.30% சதவீதம் பெற்ற பா.ம.க 3 இடங்களும், அதே நேரத்தில் 2.40% சதவீதம் பெற்ற இ.பொ.க. (மா) 10 இடங்கள், 1.97% சதவீதம் பெற்ற இ.பொ.க. 9 இடங்களும் வெற்றி பெற்றன.
மக்கள் வாக்களித்தபடி பார்த்தால் திமுக கூட்டணி 100 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 39% சதவிதம் பெற்றும் 31 இடங்கள் கிடைத்தன. அதனால் “இத் தேர்தலில் ஸ்பெக்டரம் ஊழல் ஈழ சிக்கல் முன்னிலை வகித்தாலும் திமுகவின் ஓட்டு வங்கி பெரிய அளவிற்கு பாதிப்பில்லை. ஆனாலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது பொது மக்களின் முடிவு'' அதுதான் இத் தேர்தலில் நடந்தது. தமிழக மக்களின் உரிமைகளைக் காக்கவோ தமிழர்களின் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் இரு திராவிடக் கட்சிகள் மீது நமக்கு நம்பிக்கையில்லை. அதனால் அதிமுக தமிழர்களின் ஆதரவு கட்சியல்ல. "அதே நேரத்தில் திமுக பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
இந்த அம்மையார் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகத்தான் இருந்து வந்துள்ளார். 1991 இல் தடா நாயகி 2001 இல் பொடா நாயகி, அரசு ஊழியர் மீது எஸ்மா டெஸ்மா ஒடுக்குமுறை சட்டங்கள் ஏவியதை நாம் மறந்து விட முடியாது. தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் என்பதை நாம் இந்த நேரத்தில் எச்சரிக்கை உணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எப்படி தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்?
“வரலாறு எப்போதும் ஒரே திசை நோக்கிப் பயணிக்க முடியாது'' என்றாலும் அதிகாரம் மற்ற வாழ்க்கை (செயா) சிலருக்கு புதிய பாடங்களைச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அடிப்படை (பார்ப்பன) அரசியல் குணமும் மாறாது என்பது போல புதியதாக ஆட்சி ஏற்றுள்ள தமிழக அரசு கொண்டுவந்துள்ள இரண்டு தீர்மானம் முக்கியமானது. இரண் டும் தமிழர்களுக்கு ஆதரவானது. ஆனால் அந்த தீர்மானங்களை எப்படி நிறைவேற்று வார்?
முதல் தீர்மானம்: சிங்கள இன வெறியன் ராசபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்த அய்.நா மன்றம் அறிக்கையை இந்திய அரசு நடைமுறைப் படுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அதை உடனே இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிடம் கொண்டு சென்றார்.
அந்த மனுவில் இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள் ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திர மாக செய்திகள் சேகரிக்கவும், அனுமதிக்கப்பட வில்லை. பரவலான இரசாயன குண்டு வீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவ மனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள் ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய போர்க் குற்றங்களில் ஈடுபட்ட வர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க இப்பிரச் சினையை இந்திய அரசு ஐநா சபையிடம் கொண்டு செல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல் இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இது குறித்து நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் நீண்ட காலமாக இரண்டாம் தர குடிமக்க ளாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத் திருத்தம் மூலம் அவர்களுக்கு சம வுரிமை வழங்கு வதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது.
சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடிய மர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளா தாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்.
இவ்வாறு செயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். அதே நேரத்தில் அய்.நா மன்றம் அறிவித்துள்ள அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி அதிமுக அரசு ஒன்றும் கூறாதது நமக்கு பல அய்யங்கள் இந்த ஆட்சியாளர் மீது நமக்கு எழுகின்றன. இந்த ஆட்சியாளர்களை ஆதரிக்கும் கட்சிகள் இயக்கங்கள் இதில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் நமது கோரிக்கை.
இரண்டாவது தீர்மானம்: கச்சத் தீவை மீட்கும் முயற்சி தீர்மானம், 1974, 1976 ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத் தீவு இந்தியாவின் எல்லை யிலிருந்து பிரிக்கப்பட்டு இலங்கையில் சேர்க்கப் பட்டது. கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோயிலுக்கு தமிழர்கள் சென்று வருவதும், தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல், இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று இந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இது வெறும் எழுத்தில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை.
1956ல் இலங்கை கடற்படை வீரர் களுக்கு கச்சத் தீவில் பயிற்சி அளித்தபோதே இந்தப் பிரச்சினை எழுந்தது. இருப்பினும் அப்போது அதை அப்போதைய அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித நேரு பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்பது போல பேசித் தட்டிக் கழித்து விட்டார். கச்சத் தீவு ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்பது பிரிட்டிஷாரின் ஆவணங் களிலேயே தெளிவாக உள்ளது. ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான கடலோர ஊர்கள் 69 மற்றும் 9 தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. ஆனால் அதை நேரு வலியுறுத்தவில்லை.
1974ல் இந்திய அரசு அணுகுண்டு வெடித்த போது ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவர பாகிஸ்தான் முயன்றபோது, அப்போது முக்கிய பதவியில் இருந்த இலங்கை மூலம் இத்தீர்மானம் முறியடிக் கப்பட்டது என்பதால், நன்றிக் கடனாகவே இதனை இந்தியா வழங்கியது.
நியாயமாகப் பார்த்தால், இந்திய அரசு இத்தீவை இலங்கை அரசுக்குக் குத்த கைக்கு விட்டிருக்க வேண் டுமே தவிர, அவர்களுக்கே சொந்தமாக்கியிருக்கக் கூடாது. இதுபற்றி எதிர்த்துப் போராடி இருக்க வேண்டிய அன்றைய தமிழக அரசு எதிர்க்கவில்லை. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் மு. கருணாநிதி என்பது வேடிக்கை. அந்த நேரத்தில் இதன் அவசியம் உணரப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் உலர்த்தவும் கூட அனுமதிக்கப் படாமல், விரட்டியடிக்கப்படுவதும் தொடர்ந்தபோது, தமிழக அரசு மிகப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித் திருக்க வேண்டும். ஆனால், இப்போது தமிழக முதல்வர் குறிப்பிடுவதைப் போல் அன்றைய திமுக அரசு வேதனை தெரிவித்ததே தவிர, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு கூறிய குற்றச்சாற்றுகளுக்கு எப்போதும் புள்ளி விபரமும் கேலியும் பேசும் முன்னாள் முதல்வர், “கச்சத்தீவு விவகாரத்தில் வென்றவர்கள் சொல்வதெல்லாம் வேதமாகி விடாது'' என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கச்சத்தீவை தாரை வார்க்க திமுக ஒப்புக் கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. பாராளுமன்றத்திலேயே இந்த தீர்மானம் வந்தபோது வெளிநடப்பு செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கச்சத்தீவுக்காக பேரவையிலே கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஜெயலலிதா வும், அந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்கட்சியினரும் தேவையில்லாமல் கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்று ஆரம்பித்து கச்சத் தீவினை நான்தான் மத்திய அரசிடம் கூறி இலங்கைக்கு வழங்கும்படி கூறியதைப் போல எண்ணிக் கொண்டு என் மீது வசைமாறி பொழிந்திருக் கிறார்கள்.
வேறுசிலர் தமிழகத்தின் அழிவுக்கே நான்தான் காரணம், காவிரி பிரச்சினைக் கும் நான்தான் காரணம் என்றெல்லாம் வீராவேசமாக முழங்கி யிருக்கிறார்கள். இதிலிருந்து கச்சத் தீவு தீர்மானம் கொண்டுவரப் பட்டதே என்மீது விமர்சனக் கணைகள் வீசத்தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
கச்சத்தீவு மத்திய அரசி னால் திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு வழங்கப்பட்டது பற்றியும், அதனை வழங்கும்போது 1974ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்திலே இருந்த உரிமைகள் கூட 1976ம் ஆண்டு தமிழகத்திலே குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற போது பறிக்கப்பட்டு விட்டன என்பது குறித்தும் நான் பலமுறை விளக்க மளித்திருக்கிறேன்.
கச்சத்தீவை திமுக தாரை வார்த்து விட்டது என்று தகவல்கள் எதையும் ஆரம்பம் முதல் அறிந்து கொள்ளாமல் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் அதிமுக தாங்கள் ஆட்சி செய்த 22 ஆண்டுகளில் கச்சத் தீவை ஏன்மீட்கவில்லை? 2009ம் ஆண்டு திமுக கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது ஜூன் மாதம் 18ந் தேதியன்று கச்சத்தீவு தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சார்பில் கச்சத்தீவு பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டுமென்று ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தபோது பேரவை தலைவரால் அனுமதிக்கப்பட்டு உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஞானசேகரன், கோ.க.மணி, மகேந்திரன், சிவபுண்ணியம், ரவிக்குமார் ஆகியோர் பல்வேறு கருத்துகளை அவையில் எடுத்துச் சொன்னார்கள்.
அத்தகைய கருத்துகளின் மொத்த தொகுப்பு என்னவென்றால் கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற் குத் தரப்பட வேண்டும் என்பதாகும். அதனை யொட்டி தமிழக சட்டப் பேரவையில் நான் உரையாற்றியபோது, கச்சத்தீவினை தாரைவார்க்க திமுக ஒப்புக் கொள்ளவும் இல்லை, ஒருபோதும் உடன்படவும் இல்லை. அனைத்து கட்சியினரும் ஆதரிக்க தயாரென உறுதி அளித்தால் கச்சத்தீவை திரும்பப் பெற அவையிலேயே தீர்மானம் கொண்டுவரத்தயாராக இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் திமுக மீது பழி போடுவதற்கு காரணங்களை தேடுகிறார்கள் என்று சொல்லி தப்பித்து கொள் ளப் பார்க்கிறார் கருணாநிதி.
கச்சத்தீவின் அவசியத்தை அந்த நேரத்தில் உணரப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் உலர்த்தவும் கூட அனுமதிக்கப் படாமல், விரட்டியடிக்கப்படுவதும் தொடர்ந்த போது தமிழக அரசு மிகப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தமிழக முதல்வர் குறிப்பிடுவதைப் போல், அன்றைய திமுக அரசு வேதனை தெரிவித்ததே தவிர, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லாமல் இந்தத் தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என்று செயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு தன்னையும் சேர்த்துக் கொண்டு இருந்தாலும் கூட, இந்நேரம் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அரசியல் கருத்துமாறுபாடு காரணமாக இந்த வழக்கைத் தமிழக அரசு கண் டும் காணாமல் இருந்து விட்டது. அதிலும் குறிப்பாக, மத்திய கூட்டணி அரசில் மிக முக்கிய இடம் பெற்றிருந்தும் கூட திமுக இதில் அதிக அக்கறை கொள்ளவில்லை.
இப்போது தமிழக அரசின் வருவாய்த் துறை, இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி யிருப்பதன் மூலம், ஏற்கனவே உள்ள வழக்கு வலிமை பெறுகிறது. மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்த பி.சி. ராய் முயற்சியில் பெருபாரி தீவு எப்படி மீட்கப்பட்டதோ அதேபோல், கச்சத்தீவை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வழங்கியது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகளும் நியாயங் களும் தமிழக அரசுக்கு நிறையவே இருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து நமது கச்சத் தீவை மீட்க நாம் அனைவரும் முன்வர வேண்டும். ஆனால் செய்வார்களா?
குலக்கல்விக்கு ஆதரவு! சமச்சீர் கல்விக்கு வேட்டு!!
அனைத்து மக்களுக்கும் சம நீதி, சமக் கல்வி, சம உரிமை வேண்டும் என்று தமிழகத்தில் தந்தை பெரியார் தொடங்கிய குலக் கல்வி எதிர்ப்பு போர் இன்னும் முடிய வில்லை என்பது இப்போது வெளிச்சமாகி யுள்ளது. பெரியாரைத் தொடர்ந்து பல்வேறு சமூக தலைவர்கள் போராடிய பின் கல்வியாளர்களும், அறிஞர்களும் வலியுறுத்திய பின் கடந்த ஆண்டு தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறி கல்வித் துறையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழக அளவில் இருந்துவரும் நான்கு கல்வி அமைப்புகளை ஒன்றாக்குவது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளையும் ஒன்றாக்கி மாநில அரசின் கீழ் செயற்படும் அமைப்பாக்குவதுதான் இதன் திட்டம்.
கடந்தாண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010 11ம் ஆண்டிலும், இரண்டாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகு“பபு முதல் 10ம் வகுப்பு வரை, 201112ம் ஆண்டிலும் அமல்படுத் தப்படும் என, சமச்சீர் கல்விச் சட்டத்திலேயே கூறப்பட்டது.
இச்சட்டத்தின்படி, கடந்த ஆண்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர்கல்வி அறிமுகப்படுத்தப் பட்டு விட்டது. இந்த கல்வியாண்டில், மற்ற வகுப்புகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு விட்டது. இந்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு அறிமுகப் படுத்தப்படு வதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகிக்கத் தயாராக இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்தி வைப்பது என முதல்வர் செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.
தமிழ்நாட்டில் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் சமச்சீர்க் கல்வித் திட் டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்களும், அறிஞர்களும் வலியுறுத்திவரும் நிலையில், சமச்சீர்க் கல்வி முறையை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த முன்வடிவை தமிழக அரசு சட்டப் பேரவையில் அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
“சமச்சீர்க் கல்வித் திட்டம் ஏற்கனவே நடை முறைக்கு வந்து விட்ட நிலையில் அதைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறைகளை களைந்து நடைப்படுத்த வேண்டுமே தவிர அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட வேண்டும் என்று இப்போதைய அரசு செயல்படுகிறது. இதற்காக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள முன்வடிவில், முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படாதது உட்பட சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் பல்வேறு குறை பாடுகள் இருப்ப தாக குறிப்பிடுகிறது தமிழக அரசு. இவற் றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட அரசு திட்டமிட்டி ருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. சமச்சீர் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
செயல்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறை களைக் களைய வேண்டும். சமச்சீர்க் கல்வித் திட்டம் மீண்டும் எப்போது செயல்படுத்தப்படும் என்று அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
திமுக தமிழகத்தில் நல்லாட்சி தரவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மாற்று அதிமுக இல்லை என்ற உண்மையை மீண்டும் ஜெயலலிதா நிரூபித்திருக்கிறார். இவர் சீர் செய்ய வேண்டிய பணிகள் பல இருக்க, ஒரே ஒரு நல்ல திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தை குப்பை யில் போட முனைகின்றார்.
இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சினை என்பதை இவர் உணர வேண்டும். எப்போதும் போல் கல்விக்கும் எனக் கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முடிவெ டுக்கக் கூடாது. ஏழைக்கு ஒருகல்வியும், பணம் படைத்தவனுக்கு ஒரு கல்வியும் என்ற நிலையை மாற்றுவது தான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொது உரிமை, பொதுக் கல்வி என்று பேசும் பொதுவுடைமைப் (போலி) போராளிகள், சமச்சீர்க் கல்வி சட்டத் திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன், சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்தது ஆனால் அதில் 3, 4 திருத்தங்களை ஏற்றுக் கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறைவேற்றினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்துக் கான திருத்த திட்டத்தை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறி திட்டத்தை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ., ஆறுமுகம், “இந்த சட்டத்தின் வடிவு சமூக நீதிக்கான சட்ட முன்வடி வாகும்' என்றுகூறி திட்டத்தை ஆதரிக்கிறார். (தினமணி 8.6.2011, பக்.9)
ஆனால் அதே நேரத்தில் தா.பாண்டியன் அவர்கள், “சமச்சீர்க் கல்வித்திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சமூக நீதியை நாம் காலங் காலமாக புறக் கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம்.
சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம் மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதால் இத்திட்டம் ரத்து செய்யப்படு வதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம் பெறாமல் இருந்த தில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர கை விடுவது ஆரோக்கிய மானதல்ல.
அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், “சமச்சீர் கல்விக் குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வி முறை பற்றி நன் கறிந்த கல்வியாளர் களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கும் போதுஇந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?
அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்? எதற்காக இந்தஅவசரம்?
சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளை தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியிட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்? இந்தப் புத்தகங்களை ரத்து செய்வதால் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு யார் பொறுப்பு?
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
சமச்சீர் கல்வி குறித்து தமிழக (கருணாநிதி) அரசு கொண்டு வந்துள்ள சட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நன்கு ஆராய்ந்த பிறகே தமிழக அரசு இந்தத் தி“டடத்தை கொண்டு வந்திருப்ப தாக கூறிய நீதிபதிகள், இதனை மெட்ரி குலேஷன் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சமச்சீர் கல்விக்கான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரிகுலேஷசன் பள்ளிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், சௌகான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவுக்கும், சமச்சீர் கல்விக்கான தமிழக அரசின் குழுவுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சமச்சீர் கல்வி சட்டம் சரியானதுதான் என்றும், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமச்சீர்க் கல்வி குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருப்ப தாகவும் தெரிவித்தனர்.
மற்ற மாநிலங்களில் இரண்டு கல்வி வாரியங்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே 4 கல்வி வாரியங்கள் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பெற்றோர் களோ, மாணவர்களோ தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதபோது மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாகங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்றும் கேட்டனர். அதன்பின் உடனே தமிழக அரசு,
ஜூன் 17, உச்சநீதி மன்ற உத்தரவின்படி செயல்பட வேண் டிய நிலையில் "சமச்சீர் கல்வி' அமைப்பிற் குட்பட்டு, பாட திட்டங்களை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை நிய மித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் கல்விக்கு, குறிப்பாக ஏழை எளியோருடன் எந்தத் தொடர்பும் இல்லாத, மேலும் நெருங்க விரும்பாத ஒருசிலரை தனது குழுவில் நியமித்திருப்பது நகைப்புக்கிடமாகி யுள்ளது. சமச்சீர் கல்வி உறுப்பினர் பட்டியலில் உள்ளவர்கள் கீழ்க்கண்டவர்கள் ஆவர்.
தலைவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்.
உறுப்பினர் இரு மாநில பிரதிநிதிகள்
1. ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்.
2. திருமதி விஜயலட்சுமி சீனிவாசன், முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை.
உறுப்பினர் இரு கல்வியாளர்கள்
1. சி. ஜெயதேவ் நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம், கோபாலபுரம், சென்னை.
2. டாக்டர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி, முதல்வர் மற்றும் இயக்குநர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை.
உறுப்பினர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள்.
1. பேராசிரியர் பி.கே. திரிபாதி, அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித் துறை, புதுதில்லி.
2. பேராசிரியர் அனில் சேத்தி, சமூக அறிவியல் துறை, புதுதில்லி உறுப்பினர் அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, உறுப்பினர் செயலாளர் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்.
மேற்கண்ட குழுஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் ஜுலை மாதம் 6ம் தேதிக்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்.
மேற்கண்ட பட்டியலில் உள்ள கல்வியாளர்கள் உறுப்பினர்களான டி.ஏ.வி. பள்ளிகள், சி.ஜெயதேவ், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் கல்வி கொள்ளைக்கு பேர் போன இரண்டு பள்ளிகளின் முதலாளிகளே அன்றி இவர்கள் கல்வியாளர்கள் அல்ல.
இத்தகையவர்களைக் கொண்ட இந்தக் குழு "சமச்சீர் குலைவு கல்வியை' வகுக்க இயலுமே அல்லாமல் உண்மையான சமச்சீர் கல்வியை இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிகம் கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர்.
கல்வியாளர் என்பதற்கான எந்த வரை யறையுமே இவர்களுக்குப் பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும், கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.
அதுமட்டுமின்றி சமச்சீர் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படு வார்கள் என்பது ஐயமே. இந்த கல்விக் குழு குலக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.