poverty 500

உணவுத்தட்டுப்பாடு நாளைய உலகை அச்சுறுத்தக் காத்துக் கொண்டிருக்கும் மிகக் கொடிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. இன்று அதன் போக்கை பல நாடுகள் உணர்ந்து வருகின்றன. இன்று சுமார் 88 நாடுகள் உணவுப்பற்றாக்குறையில் தம் குடிமக்களுக்குஉணவு கொடுக்க வழியின்றி விழிபிதுங்கி நிற்கின்றன. கிடைக்கின்றகுறைந்தபட்ச உணவும்கூட ஊட்டச்சத்து குறைபாடுடையதாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் 49 நாடுகளும். ஆசிய பசுபிக் பிராந்தியப் பகுதிகளில 17 நாடுகளும். இலத்தீன் அமெரிக்காவில் 9 நாடுகளும், ஐரோப்பா கண்டத்தில் 6 நாடுகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ளத் திணறி வருகின்றன. இன்று உணவுக்காக பல நாடுகளில் கலவரம் நடக்கத் தொடங்கிவிட்டன. உணவுப்பஞ்சம் உலக மாந்தர்களின் தலைக்குக் கீழ் தொங்கும் ஆபத்தான கத்தியாக உருவெடுத்திருக்கிறது. சோமாலியா போன்ற நாடுகளில் பட்டினிச் சாவுகள் பெருகி வருகின்றன.

உலக ஐ.நா மன்றம் உலகிலுள்ள நாடுகளின் வறுமையின் அளவு விரைவான வேகத்தில் அதிகரித்து வருவதை ஒப்புக் கொள்கிறது. ஆனால் இந்தியாபோன்ற மூன்றாம் உலக நாடுகளோ வளர்ச்சியை நோக்கிப் பாய்வதாக பாசாங்கு செய்கிறது.

சுமார் 80 கோடிப்பேர் அன்றாடம் பட்டினியில் வாடுவதான புள்ளி விவரங்கள் நமக்கு அதிர்ச்சியளிக்கின்றன. இவ்வுணவுப் பஞ்சம் விவசாயிகள் அதிகம் வாழும் இந்தியாவையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்தபட்டினிச் சுழலில் சிக்கப்போவதுஎன்னவோ வழக்கம்போல் ஏழை எளிய மக்களாகவே இருக்கப் போகிறார்கள்.

இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமும் வற்றி வறண்டு, பாலையாகிப்போனது எப்படி என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

தமிழர்கள் உலகிற்கு உணவிட்ட வரலாறு ஒப்புயர்வற்றது. “உலகில் தோன்றய முதல் மாந்தன் தமிழன்”; என்று தன் ஆய்வறிவின் வழி நிரூபித்திருக்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப்பாவணார். ஆதிகாலச்சமூகம் நாடோடிக் கூட்டமாக வாழ்ந்து வந்தது. பின்னர் வேளாண்மையின் அறிதலால்தான் நிலையமர்ந்த சமூகமாக நிலைக்கொள்ளத் தொடங்கியது என்பதே மனிதகுல வரலாறு. தமிழர்களே வேளாண் தொழிலின் மூலவர்கள். இதனை ஜப்பான், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் வரலாறு வழியே நன்கு அறிய முடிகிறது!.

உலகிலேயே மானிட வாழ்விடங்களை ஐவகை திணை மண்டலங்களாகப் பகுத்து நெறிப்படுத்தியவர்கள் தமிழர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. சங்க இலக்கியங்களில், பல்வேறு இடங்களில் வேளாண்மையின் பல்வகைக்கூறுகள் படிந்திருக்கின்றன. பழந்தமிழ் இலக்கிய நூலான பத்துபாட்டின் - பொருநர் ஆற்றுப்படை,“சாலி நெல்லின் சிறைகொள்வேலி;,ஆயிரம் விளையாட்டு ஆக”என்று சொல்கிறது. ஆக, வேலி நிலத்தின்கண் ஆயிரம் கலம் நெல் விளைந்திருக்கிறது. ஆனால் அறிவியல் சூழ்ந்த இந்நாட்களில,; ஒரு ஏக்கர் நிலத்தில் இருபது-முப்பது மூட்டை நெல்லை விளைவிக்க செய்வது என்பதே சாத்தியமில்லாததாக இருக்கிறது.

கம்பராமயணம் படைத்த கம்பர் உழவுத் தொழிலை “திருக்கை வழக்கம்”என உயர்த்திப் பிடிக்கிறார். தமிழர்களின் ஆதிநூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் “ஏரோர் களவழி” என்றொரு தொடர் இருக்கிறது. இதன் மூலம் தமிழர்களுக்கும் ஏர்த்தொழிலுக்கு இருந்த மரபுரீதியாக உறவுபாலத்ததை அறியலாம்.

நம் முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையும் தம் குறப்பாவில்,“உழன்றும் உழவே தலை” என்றும், அதனை செம்மைப்படுத்துவதற்கு நீர் மிகவும் அவசியம் என்பதைக் குறிக்கும் வகையில் “நீரின்றி அமையாது உலகு” எனவும் பதிவு செய்துள்ளார்.

நம் முப்பாட்டி ஒளவை மூதாட்டி“உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை” என்று உழவுக்கு மகுடம் சூட்டுகிறார்!

இவ்வகையில் உழவின் மூலம் கிடைக்கபெற்ற அரிசியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதை பன்னாடுகளில் அரிசியைக் குறிக்கும் சொல்லாலும், அச்சொல் பிறப்பின் பொருத்தப்பாடுகள் வழியேயும் அறியமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவும், பாசன நுட்பமும் உலகோரால் போற்றும்படியாக சிறந்து விளங்கி இருந்திருக்கின்றது. இவ்வாறாக தமிழர்களின் நுட்பமான அறிவுபெருக்கால் உருவான மரபுவழி வேளாண்மை,“பசுமைப்பரட்சி”என்ற பெயரால் இன்று அழிவுக்குள்ளாகி நிற்கின்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வெடிமருந்து தொழிற்சாலைக்கிடங்குகளில் செயலற்று கிடந்த வேதிஉரங்களை சந்தைப்படுத்தி இந்தியா பேன்ற மூன்றாம் உலக நாடுகளின் வேளாண்மையில் இடுபொருள்களாகச் செயல்படுத்தினார்கள். அதற்கு“பசுமைப்புரட்சி” என்று சொல்லி பல்லித்தது இந்திய அரசு. அக்கணமே நமது உழவுதொழிலும் மிகக்கொடிய நச்சுவலைக்குள் சிக்கிக்கொண்டது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பசுமைப்புரட்சித் திட்டம் தால்வியைத் தழுவிற்று. ஆனாலும் தன்னாட்டில் தோல்வியுற்;ற பசுமைப்புரட்சித் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்து திணித்தது அமெரிக்கா. அதற்கு ஈடாக ஏராளமான உணவுப்பொருட்களை இந்திய மக்களுக்கு வாரிக்கொடுத்தது. இன்று அதே போன்று உலக வங்கியும் நமது விவசாயிங்களுக்கு கடன்களை வழங்கி வருகிறது. இந்நிகழ்வுகளை நம் விவசாயிகள் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். நமது வேளாண்மையில் மிச்சச்சொச்சம் எஞ்சியிருக்கும் ஒரு பகுதியை அழிப்பதற்கும் தன்வயப்படுத்திக் கொள்வதற்குமே இந்த ஏற்பாடு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா விடுதலையடைந்ததாகச் சொல்லப்பட்டபோது, இந்திய மொத்த உள்நாட்டு பொருளாதாரத்தில் வேளான்மையின் பங்கு 56.1 விழுக்காடாக இருந்தது. இப்போது அது கழுதைதேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 21.6 விழுக்காடாக ஆக குறைந்து விட்டது. உணவு உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு பெற்றிருந்த இந்தியா இன்று உணவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய இக்கட்டான நிலையில் நின்றுகொண்டிருக்கிறது. காரணம் என்ன?

வேளாண்மை - உழவுத்தொழில் - உணவுஉற்பத்தி தொடர்பான அரசின் தெளிவான திட்டமின்மையும்; பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் எடுபிடிகளாக தன்னை மாற்றி கொண்டதுமே காரணம். நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சைப் பூமி - காவிரி டெல்டா பகுதி இன்று மீத்தேன் எடுக்கும் வணிகமையங்களாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அதே நிலைதான் கெயில் நிறுவன குழாய் பதிப்பு திட்டத்திலும். உழவர்களின் நிலங்களைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களின் ஆடம்பரத் தேவைக்கான வாகனங்கள் மற்றும் ஆலைகளின் பெருக்கத்தினால் மாயமாகிப்போன பருவமழைகள் அல்லது பருவப் பிறழ்;வுமழை…

இடுப்பொருட்களின் விலைஉயர்வு, விளை பொருட்களுக்கு உரிய விலையின்மை, வேதி உரங்களால் மலடாகிப்போன வேளாண் நிலத்தில், உழவர்கள் மாடாய் உழைத்தாலும் போட்டதைக்கூட எடுக்கமுடியாத அவலம்…

“மரபீனி மாற்றப்பயிர்களால் விளைச்சல் பல மடங்கு பெருகும்”; என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியான இந்நிய அரசின் வஞ்சகச் சொல்லை நம்பி, பி.ட்டி பருத்தி, கத்தரி போன்ற மரபீனி மாற்றுப் பெயர்களை பயிரிட்டு நட்டத்திற்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டு மாண்டு போன விவசாயிகள்…

இவ்வாறாக, பல்வேறு அக - புறகாரணிகளால் வேளாண் குடிமக்கள் விவசாயத்தை விட்டு விலகிநிற்கவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

மேலும் நகரமயமாதலுக்காக நம் அன்னை நிலங்கள் உள்நாட்டு - பன்னாட்டு பெரும் பணமுதலைகளுக்கு காவு கொடுக்கப்பட்டு வருகிறது நில வணிகம் என்ற பெயரில்.

பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை நாடு முழுவதும் - நாளாபுறத்திலும் எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவதற்காகப் போடப்பட்டுள்ள நாற்கரச்சாலைகளுக்கான இடங்கள,; கோடிக்கணக்கான விளைநிலங்களை அரசின் அதிகார பலத்தைகொண்டு உருட்டிமிரட்டியே பெறப்பட்டுள்ளன.

 சிறப்புப் பெருளாதார மண்டலங்களை செயல்படுத்துவதிலும் நிலங்கள் பெரிய அளவில் பறிபோயிக்கொண்டிருக்கின்றன.

நம் உழவர்கள் வேதி உரங்களால் நிலத்தையும் உடல்நலத்தையும் இழந்து ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தற்சார்பு நிலையை இழந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சுமார் 50 விழுக்காட்டிற்கும் மேலானோர் உழவுத் தொழிலை உதறித்தள்ளிவிட்டு நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்து விட்டார்கள். அந்த வகையில் உழவைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. அதற்கு அடுத்தாற் போன்ற இடத்தில் முறையே மகாராட்டிரமும்; குசராத்தும் இருக்கின்றன. நடப்பாண்டில் இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வேளாண் ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என உலக வங்கி தெரிவித்துள்ளது. நம் ஆட்சியாளர்களும், மக்களிடம் குடிகொண்டுள்ள வறுமையை ஒழிக்க மக்கள் வேளாண்மை தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என அச்சுறுத்துகிறார்கள்.

உழவை ஒழித்துவிட்டு எந்த மந்திரக்கோலைக் கொண்டு வறுமையை விரட்டபோகிறார்களோ தெரியவில்லை?

வேளாண்மையிலிருந்து உழவர்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த வெற்றிடத்தில் யாரை நிலை கொள்ளச் செய்யப்போகிறது இந்திய அரசு?

நடுத்தர வர்க்கத்தினரின் நவீன நுகர்வுக் கலாச்சாரம் இன்று மகிழுந்து மோகத்தில் கொண்டுபோயி நிறுத்தியுள்ளது.எனவே மகிழுந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சாலைப் போக்குவரத்து வழியே அறிகிறோம். நடுத்தர மக்களின் பொருளாதாரக் பலத்தை காட்டும் குறியீடுகளாக மகிழுந்துகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மகிழுந்துகளை உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. அந்நிறுவனங்கள் மகிழுந்து தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான இடங்களை வேளாண் நிலங்களை அழிப்பதன் மூலமே பெற்று வருகிறார்கள். நாட்டின் போக்கைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாது பகட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் பணக்காரர்களும்,அதீத நுகர்வு மோகச் சந்தைக்குள் நுழையத்துடிக்கும் நடுத்தர வர்க்க மக்களும் வாங்கி குவித்த மகிழுந்துகளுக்கு தீனி போட வேண்டமா?மகிழுந்து போன்ற தனி போக்குவரத்து சாதனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவைகளுக்கான பெட்ரோல் நுகர்வுத்தேவையும் உயரும் தானே?

பன்னாட்டு எண்ணை நிறுவன முதலாளிகள், நாளையத் தேவைப்பற்றிய எந்தச் சிந்தனையும் இன்றி விளைநிலங்களையும், இதர வளங்களையும் தூர்த்து எண்ணை கொட்டும் கருவிகளாக மாற்றத் துடித்துக் கொண்ருக்கிறார்கள். “கார்;ப்பரேட்டு”களின் பெட்ரோலிய நுகர்வு வெறிக்கு ஏற்ப இயற்;கை தன்னைப் புதுப்பித்து கொண்டே இருக்குமா என்ன? எனவே பெட்ரோல் இருப்பு என்பது விளிம்பு நிலையைத் தொட்டு நிற்கிறது. இதனை நன்குணர்ந்த பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மாற்று எரிபொருளை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றன. அதுதான் தாவர எண்ணெய். தாவர எரி எண்ணையின் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமே அதிகப்படியான மகிழுந்துகளை உற்பத்தி செய்து, அதற்குத் தீனியும் போடமுடியும். ஆனால் தாவர எண்ணெய் வித்துப் பயிர்களைப் பயிரிடுவதற்கான நிலத்திற்கு எங்கே செல்வது? அப்போதுதான் இந்திய வேளாண்நிலங்களின் மீது “கார்ப்பரேட்டு”களின் கடைக்கண் பார்வை விழுந்தது. நம் ஆட்சியாளர்களும் தாய் மண்ணைத் தாரைவார்த்து தருவதில் தாராள குணம் படைத்தவர்கள் இல்லையா?

நமது ஆட்;சியாளர்களுக்கு தற்போதுள்ள பெரும் சிக்கலே விவசாயிகளை விவசாயத்தை விட்டு எப்படி அப்புறப்படுத்துவது? ஊரகங்களை எப்படி ஒழிப்பது? என்பதுதான். அதற்காகத்தான் அவர்கள் படாதபாடு பட்டுகொண்டிருக்கிறார்கள். சிலர் வல்லடி வேலை பார்க்கிறார்கள். மன்மோகன்சிங் போன்றவர்கள் உளறித்தள்ளி விடுகிறார்கள். ஆனால் அது வெறும் உளறல் இல்லை. நம் உயிரை பிழிந்து உலைக்கலத்தில் சாத்தும் சதிகாரக்குரல்.

ஓரிரு நாட்களுக்கு முன், இந்தியப் பிரதமர் மோடி “விவசாயிகளுக்கு நான் எதிரியில்லை” (தி இந்து – 07-03-15) என்பதாகப் பேசியிருக்கிறார். இது நான் திருடன் இல்லை என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்வதைப் போன்று இருக்கிறது.

தற்போது மத்திய பா.ச.க அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் துடிக்கும்,“நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டம்” நமது விளைநிலங்களை கொத்தாக,பன்னாட்டு பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் அசுரச் சட்டம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

 மேலும்,நடைமுறையில் இருக்கும் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் உழவர்கள் பலரை சோம்பேறியாக்கி பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை தரிசுகளாக்கிவிட்டன. இதுதான் “கார்ப்பரேட்டு”களின் எதிர்பார்ப்பு. இந்த தரிசுநிலங்களை பல மடங்கு விலைக்கொடுத்து வாங்க பன்னாட்டு எண்ணெய் நிறுவன பணமுதலைகள் காத்திருக்கின்றன, மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல.

வல்லூறுகள் கோழியிடமிருந்து குஞ்சுகளைப் பறித்துச்செல்லும் போது ஏங்கித் தவிக்கும் தாய்கோழியை போல, உழவர்களிடமிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வேளான் நிலங்களை பிடுங்கிச் சென்ற பின்பு நாமும் தவித்து நிற்போம். நிலத்திற்காக மட்டும் அல்ல. உணவிற்காகவும். அதன் முன்னோட்டமாகத்தான் காட்டுப் பகுதிகளில் நம் முன்னோர்களால் பொறுக்கி எடுக்கப்பட்ட மண்ணின் மரபான விதைகளை நம்மிடமிருந்து தற்போது பிடுங்கி வருகிறார்கள் அதற்காக“விதைச்சட்டம்” என்றொரு சட்டத்தை இயற்றியுள்ளது இந்திய அரசு.

பன்னாட்டு நிறுவனங்களால் நம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் வேலையின்றி வாடும் நம் உழவர்களைத்தான் பணிசெய்ய பணிக்கப்பட இருக்கிறார்கள். உணவு பயிர்களை அல்ல. எண்ணெய்வித்துப் பயிர்களை. பன்னாட்டு நிறுவன அடியாட்கள் நம்மை கண்காணிப்பு செய்துகொண்டிருப்பர். நம் ஆட்சியாளர்கள்அவர்களுக்கு கங்காணி வேலை பார்த்துகொண்டிருப்பார்கள். இதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் நீண்ட காலத்திட்டம்.

கொத்துக் கொத்தாய் நெல்மணிகள் விளைந்த கழனிகளில் எண்ணெய் வித்துக்களை மட்டுமே பயிரிட்டால் நாம் உணவிற்கு எங்கே போவது? அதற்கு“கார்ப்;பரேட்டு”களிடம் கையேந்துவதை தவிர வேறுவழியில்லை.

இத்தகைய பேராபத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள மரபுவழி விவசாயத்தை முன்னெடுப்போம். இயற்கையே இறுதியில் வெல்லும் என்பதே உலக நியதி. எனவே இயற்கைவழி உழவுமுறையை வாழ்க்கை நெறியாய்க் கொண்டு மீண்டும் மீண்டும் அதனைச் செயல்படுத்துவோம்.

இலாபவெறிபிடித்தலையும் பன்னாட்டு பகாசுர பெருநிறுவன கும்பினிகளிடமிருந்து நம் மண்ணை தக்கவைத்துக்கொள்வதற்கே இனி வரும் காலங்களில் நம் உழவர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டிருக்கும். அதற்கு நிலவுகின்ற அரசியல் சூழலை உற்றுநோக்கி உண்மை நிலவரத்தை புரிந்துணர வேண்டும். நமது விவசாயத்தை மேம்படுத்துவது போன்று அரசு கொண்டுவரும் ஒவ்வொருதிட்டத்திலும் மரபான விவசாயத்தை குழிதோண்டிப் புதைக்கும் நயவஞ்சகம் அடங்கி இருக்கும்.

இத்தகைய விரிந்த பார்வைதான் நம்மை வேளான் நிலத்திலிருந்து போராட்ட களத்திற்கு கொண்டுவந்து சேர்க்கும்.அறத்திற்கு எதிராக,இலாவகமாக நம்மை ஏமாற்றத்துடிக்கும் இந்திய - பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுக்கொள்ளையை முறியடிப்போம். வேளாண்குடிமக்கள் உழவர்களாய் ஒன்றினையஆகப் பெருந்தடையாய் உள்ள ஆகமங்களால் கட்டமைக்கப்பட்ட சாதிய உளவியல் மனோபவத்தை அழித்தொழித்து “உழவர்கள்” என்ற ஒற்றை உணர்வாளர்களாய் இந்திய ஏகாதிபத்திய அதிகாரமையங்களை சாய்த்திடும் வரை ஓயோம்! தலைசாயோம்!!

உணவின்றி உலகம் ஒருநாளும் இயங்காது. எனவே பட்டினி கிடந்து மடிவதைவிட போராடிச்சாவது எவ்வளவே மேல்!

- தங்க.செங்கதிர்

Pin It