ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், சேஷாசலம் வனப்பகுதியில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மரம் வெட்டுவோர் 20 பேர் சிறப்பு அதிரடிப்படை பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில், பெருபான்மையோர் பழங்குடியினர். இதைப் போன்ற தொடர் சம்பவங்களில் இது மற்றுமோர் சம்பவம். அரசதிகார - தனியார் கூட்டுக் கொள்ளை முதலாளியமும், அரசு மற்றும் பலம் வாய்ந்த அரசு சாரா அமைப்புகளிலிருந்து தோன்றும் வன்முறையும், இயற்கை வளங்களின் மீதான தாக்குதலை ஊக்குவிக்கின்றன. இதன் வெளிப்பாடே இத்தகு சம்பவங்கள். இந்த இரத்தக்களறியை தடுத்து நிறுத்தும் ஆற்றலற்று சட்டம் மௌனியாக நிற்கிறது.

tribes hut

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதை போலி மோதல் சாவுகள், திட்டமிட்ட கொலைகள் என்று அறிவிக்கின்றனர். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி எனும் பழமொழிக்கேற்ப, துப்பாக்கிகளுக்கு இரையாவதற்கு இன்னும் ஏராளம் பேர் வனங்களிலும், அதைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களிலும் இருக்கின்றனர்.

குற்றச்சாட்டுக்கள்-எதிர் குற்றச்சாட்டுக்களால் எழும் பெருங்கூச்சலில், இரு முகாமையான கேள்விகள் காணாமல் போகின்றன: 1) வனவாசிகள் ஏன் உயிரைப் பணயம் வைக்கின்றனர்? 2) வனக்கொள்ளைக் கும்பலுக்கு மட்டும் வனங்கள் ஏன் திறந்த வீடாக இருக்கிறது?

வசதிமிக்க வனக்கொள்ளைக் கும்பலும், வறிய பழங்குடி மக்களும்:

பழங்குடியினருக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி, அவர்களைப் பண்பாட்டு கூட்டுறவால் இணைக்கும் மையங்களாக வனங்கள் விளங்குகின்றன. பெரும்பாலான வனப்பகுதிகள், அரசால் அதிகாரப் பூர்வமாக 'வனங்கள்' என்று வரையறுத்து அறிவிக்கப்பட்டதன் விளைவாக, உணவு, மூலிகைகள், தீவனம், விறகு, தண்ணீர், பண்பாடு மற்றும் ஆன்மிகம் போன்ற தேவைகளுக்காக வனங்களைப் பயன்படுத்தும் பாரம்பரிய உரிமைகள் பழங்குடி மக்களுக்கு மறுக்கப்பட்டன; இதுகாறும் பாரம்பரிய உரிமைகளாக இருந்த இச் செயல்கள் யாவும், ஒரே பொழுதில் குற்றச்செயல்களாக மாறின.

ஒரு காலத்தில் திறந்த வனமாக இருந்த காடுகள், அரசின் வருவாய் குவிப்பு நோக்கத்தால், வன அதிகாரிகளின் கடுங் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. வணிக மதிப்புமிக்க மரங்களை வெட்டி வெளியேற்றுவதுதான் இவர்களின் தலையாய பணியாக இருந்தது. காடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் பழங்குடியினர்; இதனால் தனித்திறம் வாய்க்கப் பெற்ற இவர்களை வன வளங்களை அறுவடை செய்வதற்கு வன அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டனர். "கூப்" மரங்களை வெட்டிச் சாய்த்தல் அல்லது வகை தொகையற்ற முறையில் வனங்களை சுத்தம் செய்தல் எனும் பெயரில் காடுகளை அழிப்தற்காக வனத்துக்குள் குடியிருப்புக்கள் கட்டப்பட்டன; பிறகு வனத்துறை அலுவலர்களால் முதிர்ந்த, நோயுற்ற மரங்கள் அல்லது வெட்டுவதற்குரிய வேறு மரங்கள் என முத்திரை குத்தப்பட்டவற்றை வெட்டுவதற்காகவும் குடியிருப்புக்கள் கட்டப்பட்டன.

பழங்குடியினர், தங்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் பறிபோன நிலையில், செல்வாக்கும், ஆயுத பலமும் உடைய நாட்டுப்புற வன வளக் கொள்ளைக் கும்பலின் எடுப்பார் கைப்பிள்ளையாயினர். பேராசை மிக்க வனக் கொள்ளைக் கும்பலின் முழு நோக்கமே, கானக வளங்களையும், உயிரினங்களையும் சுருட்டுவதுதான்!வனப்பகுதி சிறு கடைக்காரர்களும், கந்து வட்டிக்காரர்களும் இவர்களது முகவர்களாகச் செயல்பட்டனர். பழங்குடி மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, அவர்களை கொத்தடிமைகளாக்கி தங்களின் சட்ட விரோதச் செயல்களுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இக் கொள்ளைக் கும்பலின் சட்ட விரோதச் செயல்களை எதிர்கொள்ளும் திராணியின்றி அவர்களிடம் வன அலுவலர்கள் அடி பணிந்தனர் அல்லது கண்டும் காணாதது போல் நடந்து கொண்டனர்.

இவ்வாறாக, வன அலுவலர்களாலும், வனக் கொள்ளைக் கும்பலாலும் சுரண்டப்பட்ட வனவாசிகள், வேறு வழியின்றி, சட்ட ரீதியான மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடலாயினர். ஆனாலும், பழங்குடி மக்கள் இந்த சட்ட விரோதச் செயல்களை அம்பலப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் எப்போதும் இருந்து வந்தது. ஏதேனும் சில வகையில் வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் காட்டியாக வேண்டிய கட்டாயம் வன அலுவலர்களுக்கு இருந்தது. இதனால் வனவாசிகள் கைது செய்யப்படுவது வாடிக்கையானது. வனம் திறம்பட பாதுகாக்கப்படுகிறது என்பதை வெளிக் காட்டுவதற்காக வழக்குகள் என்ணிக்கையும் உயர்த்திக் காண்பிக்கப்பட்டது.

ஆனால், சூத்ரதாரியாக திகழும் வனக் கொள்ளைக் கும்பலுக்கு, யாரும் நெருங்க முடியாத பாதுகாப்பு இருந்தது. துணிவோடு நடவடிக்கை எடுக்க முனைந்த ஒரு சில நேர்மையான அதிகாரிகளும் கொள்ளைக் கும்பலின் சீற்றத்துக்கு இலக்காயினர்; எனவே, கண்டு கொள்ளாமலிருப்பதே தமக்கு பாதுகாப்பு என உணர்ந்தனர்; வனத்துறை அலுவலர்களே தமக்குள் கட்சிகளாய் பிரிந்து கிடந்தனர்.

வருமானக் குவிப்பை விட வனப்பாதுகாப்பே முதன்மையானது என்பதை சாரமாகக் கொண்டு 1989ம் ஆண்டு வன பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. காடு வளர்த்தல் முன்னிலை பெற்றது. வனம் சாரா நடவடிக்கைகளுக்கு நடுவணரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனஅமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் (1990-களின் நடுவிலிருந்து தொடரும் “கோதவர்மன் வழக்கின்" விளைவாக) இசைவுகளைப் பெற்ற பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், காட்டு வள இழப்பின் நட்டமாக தற்போதைய மதிப்பின்படி(N.P.V.) ஒரு ஹெக்டேருக்கு ரூ 5.8 இலட்சமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ 9.2 இலட்சமும் தர வேண்டும் எனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பழங்குடியினர்கு உரிமைகள் வழங்கும் சட்டங்கள் இருந்தாலும், "முன்னேற்ற திட்டங்கள்" மற்றும் வனப் பாதுகாப்பு முயற்சிகள்" எனும் இருவித நெருக்கடிகளுக்கு ஆளாகி, பழங்குடி மக்கள் மேலும் கீழான நிலைக்கு தள்ளப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தில், கோதவர்மன் வழக்கில் 2004-ம் ஆண்டு தாக்கல் செய்த"உண்மை உறுதி மொழி வாக்கு மூலத்தில்" பழங்குடி மக்களுக்கு “வரலாற்று அநீதி" இழைக்கப்பட்டிருப்பதை ஒத்துக் கொள்வதாக வனம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கூறியிருந்தது.

மண்ணின் மைந்தர்களான பழங்குடியினருக்கு வன உரிமைகள் வழங்கப்படா நிலையில், வலு மிக்க தனியார் பொருளாதாரச் சக்திகளுக்கு, சட்ட மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்காக வனங்கள் தாராளமாக திறந்து விடப்பட்டன. 2010 – 2014 காலக்கட்டத்தில் வன வளக் கொள்ளைக்காக 3,30,512 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இங்கு ஒரு டன்னுக்கு 20 இலட்சம் விலை மதிப்புடைய செம்மரக்கட்டைகளுக்கு, இவ்விலையைப் போல் 10 மடங்கு விலை உலகச் சந்தையில் கிடைக்கின்றது.

செம்மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக சில ஆயிரம் கோடிகள் வருமானத்தை சீமந்ரா அரசு எதிர்பார்க்கிறது. செம்மரக் கடத்தல்காரர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் சட்டரீதியாக நடக்கும் வன அழிப்பும், கொள்ளைக் கும்பலின் சட்ட விரோதச் செயல்களால் நடக்கும் வனக் கொள்ளையும் போட்டி போட்டுக்கொண்டு நடக்கின்றன. இவ்விரண்டிலிருந்தும், வனவாசிகளுக்கு எப்பங்கும் கிடைப்பதில்லை. ஆனால், இவர்கள் கறிவேப்பிலைகளாக பயன்படுத்தப்பட்டும், தவறான வழிகளுக்கு ஆட்படுத்தப்பட்டும் எவ்வித முன்னேற்றமுமின்றி அடி நிலையிலேயே இருக்கின்றனர்.

tribes 365

தங்களின் நிலங்களிலிருந்து, சரியான நட்ட ஈடோ, மறு வாழ்வோ வழங்கப்படாமல், வெளியேற்றப்படுகின்றனர். வன நிலங்களில் வாழ்ந்த 10 கோடி மக்களும் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் 27. 5 கோடி மக்களும் கடும் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வேலை தேடி நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

வனங்களுக்கு வெளியே உள்ள வருவாய் நிலங்களின் மீதான பழங்குடி மக்களின் உரிமைகள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு அவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதை நிறைவேற்ற சட்டங்கள் தவறுகின்றன. பழங்குடி மக்களின் வாழ்வாதார, நில உரிமைகளை வழங்கும் எந்த ஒரு சட்டமும் தமிழ் நாட்டில் இல்லை. இச்சூழலில், வாழ வழியின்றி, பழங்குடி மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணத்துக்காக சேஷாசலம் காட்டுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை.

தீர்வுகளைத் தேடல்:

வனம் மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் சரியான பார்வையற்ற ஆணையின் விளைவாக பழங்குடியினர் பேரளவில் தங்கள் மண்ணிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்; இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டம் வெடித்தது; இதன் விளைவாக நடுவணரசு ‘2006 வன உரிமைகள் சட்டத்தை’ இயற்றியது. இது வன நிர்வாகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. நிலங்களையும், மக்களையும் நிர்வகிக்கும் பழைய காலனி முறை மாறி. மலை வாழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் சனநாயக முறை வந்தது. பழங்குடியினரின் உரிமைகளை தீர்மானிக்கின்ற மற்றும் வனங்களைப் பேணி, பாதுகாத்து நிர்வகிக்கின்ற அதிகாரம் கிராம சபைக்கு வழங்கப்பட்டது.

வன உரிமை சட்டத்தால் மட்டுமே வனம் மற்றும் வனவாசிகளின் நலன்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை, வன உரிமை சட்டத்தை சந்தேகிக்கிறவர்கள் கூட ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒடிசா மாநில டாங்கிரியா கோண்ட் பழங்குடியினர் தாங்கள் புனிதமாகக் கருதும் நியாம் கிரி மலைகளை, தாதுவளச் சுரண்டல் பேராபத்திலிருந்து வன உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தியே பாதுகாத்தனர். மராட்டிய மாநிலம் காட்சிரோலியைச் சார்ந்த காண்ட்ஸ் பழங்குடியினர் இச் சட்டத்தின் வாயிலாக, வன விளை பொருள்களின் வசதியான உடைமையாளர்களாக மாறியுள்ளனர்; இச் சட்டம் வருவதற்கு முன் சாதாரண கூலித் தொழிலாளர்களாகவே இருந்தனர்.

ஆனால், வனத்துறைக்குள் செல்வாக்குடன் இயங்கும் ஒரு பிரிவு, இச் சட்டத்துக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது; இச் சட்டத்துக்கு எதிராக பல ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்; எடுத்துக் காட்டாக: ஆந்திரா பிரதேசத்தில் “ஜே. வி. சர்மா மற்றும் பலர் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பலர்" , தமிழ் நாட்டில் “வி. சாம்பசிவம் எதிர் இந்திய அரசு மற்றும் பலர்" போன்ற வழக்குகளைச் சொல்லலாம்.

இருப்பினும், நீதி மன்றங்கள் ஏதும் வன உரிமைகள் சட்டத்தின் மீது நிறுத்தாணை எதையும் பிறப்பிக்கவில்லை. இவ் வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளன. 2006 வன உரிமைகள் சட்டம் சரியாக நடைமுறை படுத்தப்படாமைக்கு வனத்துறையே காரணமென்று நடுவணரசின் அதிகார பூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் “வனப் பாதுகாப்பு குழுவுக்கு" நில உரிமைகள் பத்திரங்கள் வழங்குவது “2006 வன உரிமைகள் சட்டத்தை" மீறுவதாகும் என்று 2013-ம் ஆண்டு நவம்பரில், நடுவணரசின் பழங்குடியினர்கான அமைச்சகம் ஆந்திர அரசுக்கு எடுத்துச் சொன்னது. ஏனெனில், நில உரிமைகள் பத்திரங்கள் கிராம சபைக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால், 2010-ம் ஆண்டு நடுவில் வரை 9. 48 இலட்சம் ஏக்கர் நில ங்கள் 1669 வனப்பாதுகாப்புக் குழுக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த ஆண்டு சனவரி வரை 29, 92, 853 ஹெக்டேர் வனங்கள் வனவாசிகளுக்குரியது என அதிகார பூர்வமாக வரையறுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், இதுகாறும் 15, 57, 424 பட்டாக்கள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இது நாட்டின் மொத்த வனநிலத்தில் 3. 8 விழுக்காடு மட்டுமே!

அதிகார பூர்வமாக வன நிலங்கள் என பதிவு செய்யப்பட்டிருப்பவைகளில் சுமார் 9 விழுக்காடு நிலங்களையே வன மக்கள் பயன்படுத்துகின்றனர். அரசு தான் இயற்றிய சட்டத்தின் வழி நடக்கும் என்ற நம்பிக்கையோடு வனவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் 3723 நிலவுரிமைப் பத்திரங்கள் தயாராகயிருப்பினும், இந் நாள் வரை ஒரு உரிமைப் பத்திரம் கூட பழங்குடியினருக்கு வழங்கப்படவில்லை. மாறாக, பழங்குடி மக்கள் வாழ்கின்ற சுமார் 2968 ச.கி.மீ. பரப்பளவுள்ள வனம் நான்கு “புலிகள் வாழ்" சரணாலயமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளிலிருந்து அவர்கள் உடனே வெளியேற வேண்டும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்; அதே போல், 7935 ச. கி. மீ பரப்பளவுள்ள வனங்கள் யானைகள் வாழும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அரசின் இவ் நடவடிக்கைகளால், சட்ட விரோத செயல்களுக்காக வனத்துக்குள் புக வேண்டிய கட்டாயத்துக்கு பழங்குடி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பழங்குடி மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதும், பாதுகாப்பதும் மட்டுமே வனவாசிகளுக்கு சுய மரியாதையான வாழ்வை உறுதி செய்யும் நியாய நடவடிக்கையாக இருக்கும். வனங்கள் கட்டுப்பாடற்ற சுதந்திர பூமியாகவும், வனவாசிகளின் கூர்மையான கண்காணிப்பிலும் இருந்தால், காடுகளைப் பேணுவதும், பாதுகாப்பதும் சாதிக்கக் கூடிய செயலாக மாறும்!

துப்பாக்கிகளை சுழற்றிக் கொண்டு திரியும் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், தங்களால்தான் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற போலி நம்பிக்கையின் விளைவுதான் சேஷாசலம் கொலைகள். வனங்களை மோதல் பகுதிகளாக மாற்றுவதால் வனங்களைப் பாதுகாத்து விட முடியாது!கொல்வதை மட்டுமே உயர்ந்த பட்சமாக துப்பாக்கிகளால் செய்ய முடியும். ஆனால் வனங்கள் வாழ்வுக்கும், அனைத்து கானக உயிரினங்களோடு கூடி வாழ்வதற்கும் உரியன!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர்:சி. ஆர். பிஜாய் , பழங்குடி ஆர்வலர், பி.யு.சி.எல் செயல்பாட்டாளர் (தி இந்து (ஆங்கிலம்) நாள் 16. 04. 2015)
தமிழில்:து. சேகர் அண்ணாத்துரை, வழக்குரைஞர், மக்கள் சிவில் உரிமை கழக (பி.யூ.சி.எல்.) செயலர், கோவை.

Pin It