‘வளர்த்த கடா, மார்பில் பாய்ந்தது’ என்கிற கதைதான், இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நேர்ந்துள்ளது.

24x7 என்கிற செய்தி ஊடகங்கள் வட இந்தியாவிலும், கேரளத்திலும் மட்டுமே இருந்த நிலையை மாற்றி, ’சன் நியூஸ்’ அதனை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. இருந்த போதிலும், அது ஒரு பிபிசி-யைப் போலவோ, டைம்ஸ் நவ் போலவோ கவனிப்புகளைப் பெறவில்லை. ஒரு கட்சிக்கான ஊடகப் பிரிவாகவே சன் நியூஸ் செயல்பட்டது. அப்படியான சூழலில் அந்த இடத்தை நிரப்பி, தமிழ்ச் செய்தி ஊடக உலகில் புதிய பரிணாமங்களை ஏற்படுத்தியது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

puthiya thalaimurai

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும், ‘நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தினரால், 24.08.2011 அன்று தொடங்கப்பட்டதுதான், “புதிய தலைமுறை தொலைக்காட்சி’ ஆகும். இந்நிறுவனம் தொலைக்காட்சியை துவங்குவதற்கு முன்பிருந்தே, ‘புதிய தலைமுறை’, ‘புதிய தலைமுறை கல்வி’ ஆகிய வார இதழ்களை நடத்தி வந்தது. இந்த இதழ்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று, தமிழ் இதழ்களில் முன்னோடி இதழ் என்கிற எல்லையை மிகக் குறுகிய காலத்தில் எட்டிப் பிடித்தது. இதன் தொடர்ச்சியாகவே, இது செய்தி தொலைக்காட்சியை ஆரம்பித்து அதிலும் அதிவேகத்தில் முன்னேறி, முன்னிலையை அடைந்தது. இப்படி அது உயர்ந்ததற்கு, அதன் செய்தி யுக்திகளும், நடுநிலைத் தன்மையுமே காரணமாக அமைந்தன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான, இடிந்தகரை மக்களின் போராட்டத்தையும், அம்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் உடனுக்குடன் ஒளிபரப்பியது இத்தொலைக்காட்சி. பாலஸ்தீனை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இசுரேலை எதிர்த்துப் போராடும், பாலஸ்தீனர்களைக் குறித்து செய்தி ஒன்று ஒளிபரப்புகையில். ‘பாலஸ்தீனப் போராளிகள்’ என்கிற உண்மையான வரிகளை காய்தல், உவத்தலின்றி எடுத்துக் கூறியது புதிய தலைமுறைதான்.

பலதரப்பட்ட செய்திகளை நடுநிலைமைத் தன்மையோடும், புதிய கோணங்களோடும் வழங்கி, வழக்கமாக செய்திகளைப் பார்க்கும் நபர்களை மட்டுமல்லாது, புதியவர்களையும், குறிப்பாக இளைஞர்களை செய்திகளைப் பார்க்க ஈர்த்ததும் புதிய தலைமுறைதான் என்றால் அது மிகையாகாது. நேரெதிர் கருத்துடையவர்களை அழைத்து விவாதிக்கும் ‘நேர்பட பேசு’ என்கிற நிகழ்ச்சியும், ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் டீக்கடை பெஞ்சைப் போல பேசிக் கொள்ளும் ‘நண்பேண்டா” நிகழ்ச்சியும், ஒரு விடயத்தின் உண்மைகளை ஆவணப்படுத்தும் ‘ரெளத்திரம் பழகு’ நிகழ்ச்சியும், தினசரி செய்தி நாளேடுகளை அலசி ஆராயும் ‘புதுப் புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியும் என செய்தி உலகில் அதன் யுக்திகள் எல்லையற்று விரிந்தன. இன்று தமிழில் விறுவிறு, சுறுசுறுவென இயங்கும் செய்தி தொலைக்காட்சிகளுக்கான முழுமையான வடிவங்கள் புதிய தலைமுறையில் இருந்துதான் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்பது யாரும் மறுக்கவியலாத உண்மை.

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் நிறுவனரான, பாரிவேந்தர் என்றழைக்கப்படும், முனைவர் டி.ஆர்.பச்சமுத்து அவர்களின் தலைமையில் இயங்கும் “இந்திய ஜனநாயகக் கட்சியின்’ பின்புலத்தில் செயல்படும் தொலைக்காட்சி என்கிறபோதும், புதிய தலைமுறை தனது செய்தி வழங்கும் முறைகளால், கட்சியின் பின்புலத்தைத் தாண்டி எல்லோராலும் பார்க்கப்பட்டது மட்டுமன்றி பாராட்டவும்பட்டது. ஆனால், இந்த நடுநிலைமை என்கிற அதன் முத்திரையை உடைத்தெறிந்தது, 2014-ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்.

இந்தத் தேர்தலில், வகுப்புவாதக் கொள்கையில் இயங்கும் இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பி.ஜே.பி-க்கு தனது ஆதரவை அளித்தது, பாரிவேந்தர் தலைமையிலான, ‘இந்திய ஜனநாயகக் கட்சி’. இதிலிருந்து தனது செய்திகளை, பாஜக-விற்கான பிரச்சாரக் களமாக மாற்றியமைத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி. வளர்ச்சி நாயகன் என்று மோடியைக் குறித்து கட்டமைக்கப்பட்ட பொய் பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கியது, தமிழகத்தில் புதிய தலைமுறைதான்.

ஒவ்வொரு விவாத நிகழ்ச்சிகளையும் நடுநிலைமை என்கிற போர்வையிலேயே நடத்தி, இறுதியில் அதனை அப்படியே பா.ஜ.க-விற்கான ஆதரவுப் போக்காக மாற்றியமைத்ததில், அதன் விவாத நெறியாளர்கள் ரொம்பவுமே சிரமேற்கொண்டு உழைத்தனர். தந்தி டிவி-யின் நெறியாளர்களில் ஒருவரான, ரங்கராஜ் பாண்டே என்கிற பார்ப்பனரைவிடவும், ஒருபடி அதிகமான முனைப்பைக் காட்டினர் புதிய தலைமுறையின் நெறியாளர்கள். நெறியாளர்கள், செய்தித் தொகுப்பாளர்கள் ஆகியோரின் இந்தச் செயல்பாடுகள், அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளல்ல, புதிய தலைமுறை நிறுவனத்தின் அழுத்தங்களின் விளைவாகவே அமைந்தன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றுதான்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தப் பின்னர், புதிய தலைமுறை மீண்டும் தனது நடுநிலைப் போர்வையை போர்த்திக் கொள்ள, சிறுபான்மை சமூகத்தின் ஆளுமைகளை தனது விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டது என்பது தனிக்கதை.

இப்படி வகுப்புவாதக் கட்சியான பா.ஜ.க-வை ஆதரித்து நின்ற புதிய தலைமுறையின் மீது சமீபத்தில் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர் வகுப்புவாத, இந்துத்துவச் சக்திகள்.

 “பெண்களுக்கு தாலி தேவையா? இல்லையா? என்கிற ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தது புதிய தலைமுறை. 08.03.2015, மகளிர் தினத்தையொட்டி போடவிருந்த இந்த நிகழ்ச்சியின், முன்னோட்டக் காட்சிகள், அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இப்படி ஒளிபரப்பப்பட்டபோது, தங்களின் எதிர்ப்பையோ, கண்டனத்தையோ உரிய முறையில் தெரிவிக்காத இந்துத்துவச் சக்திகள், நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் நாளின் காலையில், கும்பலாகச் சென்று அத்தொலைக்காட்சியின் முன்பு ஆர்பாட்டம் செய்துள்ளனர். அத்தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரையும், பெண் நிருபர் ஒருவரையும் தாக்கி, கேமராவையும் உடைத்துள்ளனர்.

இந்தச் செயல்பாடுகளினால், புதிய தலைமுறை அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. மேலும் தாக்குதல் நடந்தது என்கிற செய்தியை ஒளிபரப்பும் போதும் கூட, ‘சமூக விரோதிகள்’ என்று குறிப்பிட்டு, குற்றவாளிகளை இனங்காட்டாது, மென்மைப் போக்கையே கடைபிடித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ அமைப்பினர்தான் என்பதனை, இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்த, ஜனநாயகச் சக்தியினரின் வாய்களாலே காட்டியதே ஒழிய, தானாக முன்வந்து சொல்லவில்லை புதிய தலைமுறை. அதன் அச்ச உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்கிற போதும், இது ஊடக தர்மத்திற்கு எதிரானது என்கிற வகையில் நாம் கண்டித்துதான் ஆக வேண்டும்.

இந்த நிலையில், தாலி விவாத நிகழ்ச்சியின் எதிரொலியாக, 12.03.2015 வியாழக் கிழமை, சென்னையிலுள்ள புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

தாக்குதல் அதிகாலை 3:30 மணியளவில் நடைபெறுகிறது. தாக்குதல் நடத்தியது நான்தான் என காலை 10 மணியளவில், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிறார் பாண்டியன் என்கிற ஒருவர். “இந்து இளைஞர் சேனா” என்கிற அமைப்பின் தலைவராகிய என்னுடைய, உத்தரவின் கீழ்தான் தாக்குதல் நடந்தது என்று, மிக வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார் அவர்.

பொதுவாகவே குண்டுவெடிப்புகள் என்றதும், சட்டென அரபுப் பெயரில் ஏதோ ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கு ஒரு தலைவரை உருவாக்கி, அந்தத் தலைவருக்கு தாடியும், தலைப்பாகையையும் சூட்டி செய்தி வெளியிடும் ஊடகங்கள், இந்தச் சம்பவத்தைக் குறித்து, ஆஜரானவரின் வாக்குமூலத்தைக் கூட முழுமையாக வெளியிடவில்லை.

அதற்கு மாறாக, தினமலர் செய்தி தருகின்றது, “புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது பட்டாசு வீச்சு” என்று. இந்த இடத்தில்தான் நடிகர் வடிவேலுவின், “உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினியா?” என்கிற வசனம் முக்கியத்துவம் அடைகிறது.

புதிய தலைமுறையைப் பொருத்தவரை ஒரு நிகழ்ச்சியை தொகுக்கிற போது, எல்லா தரப்பு நபர்களையும் அழைப்பது என்பதுவே அதன் தனிச் சிறப்பு. அப்படித்தான் அது தனது எல்லா நிகழ்ச்சிகளையும் வடிவமைத்துச் செல்கிறது. கண்டிப்பாக தாலி குறித்த இந்த நிகழ்ச்சியிலும் ’வேண்டும், வேண்டாம்’ என்கிற இரண்டு தரப்பினரும் அழைக்கப்பட்டிருப்பர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவைகளை எதுவுமே கண்டு கொள்ளாமல், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக பெரும் போரை நடத்தியிருக்கின்றனர் இந்துத்துவச் சக்திகள். இப்படியானவர்களுக்குத்தான், புதிய தலைமுறை தனது ஆதரவை வழங்கி வளர்த்தியது. அதனால்தான் தொடக்கத்தில் குறிப்பிட்டேன், ‘வளர்த்த கடா, மார்பில் பாய்ந்தது’ என்று.

இந்துத்துவச் சக்திகளின் இந்தத் துணிவுகரப் போக்கிற்கு மிக முக்கியக் காரணம், மத்தியில் உள்ள அரசு தங்களுடையது என்பதும், மாநிலத்தில் நடைபெறும் அரசும் தங்களுக்கு மறைமுக ஆதரவில் இருக்கும் அரசு என்பதுவுமே ஆகும்.

தங்களளைக் குறித்த ஒரு கருத்து விவாதத்திற்கு எதிராக இவ்வளவு பெரிய வன்மங்களை நிகழ்த்திய இந்துத்துவச் சக்திகளைப் பார்த்து யாரும் சொல்லவில்லை, சகிப்புத் தன்மையற்றவர்களென்று. எந்தத் தொலைக்காட்சியும், செய்தி நாளேடுகளும் முழங்கவில்லை இந்துத்துவச் சக்திகள் கருத்துரிமைக்கு எதிரான பயங்கரவாதிகளென்று. வெகுசில அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களையும் தவிர்த்து.

ஆனால், இசுலாமியர்கள் தங்களது கோரிக்கையை ஜனநாயகப் பூர்வமாக வெளிப்படுத்திய போதும் கூட, அவர்களை சகிப்புத் தன்மையற்றவர்கள், கருத்துரிமையை மிதிப்பவர்கள் என்றெல்லாம் வர்ணித்தார்கள். யார் சகிப்புத் தன்மையற்றவர்கள் என்பதனை புதிய தலைமுறையின் நிகழ்ச்சிகளைக் கொண்டே நாம் எளிதில் இங்கு ஆராய்ந்துவிடலாம்.

தாலியைக் குறித்து இன்று ஒரு விவாதத்தை ஒருங்கிணைத்த இதே புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, கடந்த 06.07.2013 சனிக் கிழமையன்று, இசுலாமியச் சட்டத்திலுள்ள, “தலாக் (விவாகரத்து)”, குறித்து ஒரு அலசலை ரெளத்திரம் பழகு எனும் நிகழ்ச்சியில் தொகுத்து ஒளிபரப்பியது.

இசுலாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனியார் சட்டத்தினால், தலாக் (விவாகரத்து) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் தலாக் வழங்கும் உரிமையை இசுலாமிய காஜிகளிடமிருந்து நீக்க வேண்டும் என, பதர் சயீத் தொடுத்திருந்த நீதிமன்ற வழக்கை ஒட்டி, நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி.

29.06.2013 அன்றே ஒளிபரப்பப்பட வேண்டிய நிகழ்ச்சி, ஏதோ காரணங்களால் அப்போது ஒளிபரப்பாகமல், ஒரு வாரம் கழித்து ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த நாளில் ஒளிப்பரப்படாமல் போனதற்கு இசுலாமிய அமைப்புகளே காரணம் என்று வர்ணிக்கத் தொடங்கினர். இசுலாமியர்கள் சகிப்புத் தன்மையற்றவர்கள் என்றவாறு கருத்தினை எழுதினார்கள். ஆனால் அதற்கெல்லாம் நேர்மாறாக, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியே ஆக வேண்டுமென, புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு விருப்பத்தை தெரிவித்தவர்கள் இசுலாமியர்களே ஆகும். இது தொடர்பாக அப்போது சமூக வலைதளங்களில் முஸ்லீம்களே பெரும்பான்மையாக, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டுமென, வேண்டுகளை வைத்து எழுதினர். இதன் நீட்சியாகவே புதிய தலைமுறை இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் வரும் கருத்துக்களைக் கண்டு இசுலாமியர்கள் எந்தப் போராட்டத்தையும் செய்துவிடவில்லை. தங்கள் சமூகத்தைக் குறித்த அலசல் என்கிற போதும், அதனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு கடந்து போயினர். ஆனால் இந்துத்துவச் சக்திகளோ, வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒருவாரத்திற்கு முன்னரே ஒளிபரப்பாக வேண்டிய இந்தத் தலாக் நிழ்ச்சி, தாமதமானதற்கு முஸ்லீம் அமைப்புகளே காரணம் என்று பல ஜனநாயகவாதிகளும், சமூக ஆர்வலர்களும் ஆத்திரம் பொங்க எழுதினர். அவர்களின் அந்தக் கோபம் நியாமானதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் அதற்கு உதாரணமாகக் காட்டியது, விஜய் டிவி-யில் நடத்தப்படவிருந்த, பர்தா குறித்த நிகழ்ச்சியை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற அமைப்பு நடத்தவிடாமல் செய்ததுதான் ஆகும்.

தவ்ஹீத் ஜமாத்தின் அந்த செயலை நாம் அங்கீகரிக்க கூடாதுதான். அது கருத்துரிமைக்கு எதிரானதுதான். ஆனால், அவர்கள் அந்தப் பிரச்சனையை ஜனநாயக முறையிலேயே அணுகினர் என்பதனை நாம் கவனிக்க மறந்துவிடக் கூடாது.

17.10.2010 அன்று, பர்தா குறித்த விவாதம், விஜய் டிவி-யின், நீயா? நானா? நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவிருந்தது. அதுகுறித்த முன்னோட்டக் காட்சிகளைக் கண்டதும், அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர், தங்களது லெட்டர் பேடில் இருந்து கடிதம் எழுதி விஜய் டிவிக்கு அனுப்பினர். இதனை ஒரு புகாராகவே, கமிஷனரிடத்தில் அளித்தனர். இந்த ஜனநாயக வரையறைகளைத் தாண்டி, இந்துத்துவச் சக்திகளைப் போல, நிருபர்களைத் தாக்கியோ, கேமராவை உடைத்தோ, அலுவலகத்தின் மீது வெடிகுண்டை வீசியோ அவர்கள் தடை கோரவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவர்களின் இந்த ஜனநாயக நடவடிக்கையால், விஜய் டி.வி தானாகவே முன்வந்து, 12.10.2010 அன்றே நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டோம் என அறிவிப்பு செய்தது. விஜய் டி.வி ஏன் இப்படி செய்ய வேண்டும்? அது எங்களின் ஊடக உரிமை என்று வழக்கைச் சந்தித்து நடத்தியிருக்க வேண்டியதுதானே? ஆனால், அது இப்படியான ஒரு சமரசப் போக்கை செய்து கொண்டது என்பது, தனது பக்கம் தவறு உள்ளது என்று ஒப்புக் கொண்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

தங்களைக் குறித்த விவாதமென்றபோதும், அது எப்படியான ஒன்று என நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத்தான் தவ்ஹீத் அமைப்பினர் தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது முன்னரே தடை கோரியதற்கு காரணம், இதே நீயா? நானா? நிகழ்ச்சியில் தாலி குறித்த ஒரு விவாதத்தில், ஒரு பெண் தாலியை அறுத்து எறிவது போன்ற காட்சி ஒளிபரப்பானது. அப்படி பர்தா குறித்த இந்த விவாதத்திலும், பர்தாவைக் கழட்டி எறிவது போன்ற செயல்களை அரங்கேற்றியிருப்பார்கள் என்று கருதியே, தாங்கள் அப்படி தடை கேட்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்தாக வேண்டியுள்ளது, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு என்பது ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகத்தின் பிரதிநிதி அல்ல. அந்த அமைப்பிலும் இசுலாமியர்கள் இருக்கின்றனரே ஒழிய அந்த அமைப்பே இசுலாமியர்கள் என்றாகிவிடாது. ஆக பர்தா குறித்த நிகழ்ச்சிக்கு அத்தனை இசுலாமியர்களும் எதிர்ப்பு தெரிவித்து நின்றுவிடவில்லை என்பதனை உணர வேண்டும். அதற்கு உதாரணம்தான், புதிய தலைமுறையில் ஒளிபரப்பான ‘தலாக்’ தொடர்பான நிகழ்ச்சி என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு டிவி நிகழ்ச்சிக்கு எதிராக இசுலாமியர்களின் நிலைப்பாட்டையும், இந்துத்துவச் சக்திகளின் செயல்பாட்டையும் மட்டும் கூறி, இசுலாமியர்களின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினால், உடனே விஸ்வரூபம் திரைப்படம் குறித்த கேள்வி எல்லோர் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

இந்த இடத்தில் கூட இசுலாமியர்களின் செயல்பாட்டை நாம் கண்டிக்கவே செய்கிறோம். நமக்கு எதிரான கருத்துக்களை, ஒரு திரைப்படத்தை முடக்குவதன் மூலம் செய்துவிட முடியாது என்கிற புரிதல்களற்ற தன்மையால் நிகழ்கிற சம்பவம்தான் இது. கமலஹாசன் தன்னுடைய கருத்தைச் சொல்ல சினிமா எடுக்கிறார் என்றால், அது அவரின் உரிமை. அது நமக்கு எதிராக இருக்கிறது என்றால், நாம் அதே கருவியின் ஊடகத்தான் நமது தரப்பு வாதங்களை வைத்திருக்க வேண்டும். அதனைவிடுத்து ஒரு படைப்பை எதிர்ப்பதினால் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதனை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால், இசுலாமியர்களின் இந்த அச்ச உணர்விற்குப் பின்னாலுள்ள நியாயமான மனநிலையையும், இசுலாமியர்களைக் குறித்து உலக அரங்கில் பின்னப்பட்டிருக்கும் ‘தீவிரவாதி’ என்கிற சூழலைக் கருத்தில் கொண்டும்தான், இசுலாமியர்களின் எதிர்ப்பை பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்கிற பார்வையையோ, கருத்துரிமைக்கு எதிரானவர்கள் என்கிற பார்வையையோ கொண்டு இசுலாமியர்களை, ஜனநாயகச் சக்திகள் பார்க்கக் கூடாது.

ஒருவர் ‘திருக்குரானை’ படித்துவிட்டு, துப்பாக்கியை எடுத்து இன்னொருவரை சுடுவதைப் போல, விஸ்வரூபத்தில் ஒரு காட்சி அமைந்திருந்தது. இந்திய நாட்டில், ஏற்கனவே பொது நீரோட்டத்திலிருந்து திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இசுலாமியச் சமூகத்திற்கு, இதுபோன்ற காட்சிகள் எதுமாதிரியான, எதிர்வினைகளை உண்டாக்கும் என்பதனை மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மேலும், இசுலாமியர்கள் உண்மைக்குப் புறம்பான இதுமாதிரியான வன்மம் நிறைந்த காட்சிகளை மட்டுமே நீக்கச் சொல்லி கோரிக்கை வைத்தனரே ஒழிய, திரைப்படத்தையே ஒளிபரப்பக் கூடாது என்று அவர்கள் சொல்லிடவில்லை.

தங்களுக்கு எதிரான காட்சிகள் நீக்கப்பட்டதற்கு பிறகு, அவர்கள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காமல் திரைப்படம் வெளியாவதற்கு வழிவிட்டுவிட்டார்கள். ஆனால், கத்தி திரைப்படத்தை எதிர்த்தவர்கள் என்ன செய்தார்கள்?

நடிகர் விஜய் நடித்த கத்தி எனும் திரைப்படத்தை, ‘லைக்கா’ என்கிற நிறுவனம் தயாரித்தது என்கிற ஒரே காரணத்தை வைத்தே, இங்கு பலரும் எதிர்த்தார்கள். அவர்களின் எதிர்ப்பானது, ஈழ மக்களின் பக்கம் நின்றே ஒலித்தது. ஈழ மக்களை இனப்படுகொலை செய்த இராஜபக்சேவின் இணையர்களின் நிறுவனம்தான் லைக்கா என்பதனால்தான், அவர்கள் கத்தியை எதிர்த்தார்கள். இசுலாமியர்கள் எதிர்த்தது கருத்துத் திணிப்பிற்கு எதிராக, ஆனால் கத்தி எதிர்ப்பு என்பது ஒரு நிறுவனம் தயாரிக்கிறது என்பதற்கு எதிராக என்கிறதனை உற்று நோக்க வேண்டும்.

இலங்கையைச் சார்ந்த சிங்கள நிறுவனம் என்பதனால் எதிர்க்க வேண்டும் என்றால், இனப்படுகொலை செய்ததில் இந்தியாவும் உறுதுணையாக இருந்தது என்கிற ’ஜெர்மன் மக்கள் தீர்ப்பாயத்தின்’ சரத்தை முன்னிறுத்தி, இந்தியத் தயாரிப்புகள் அனைத்தையும் எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், தமிழின உறவுகளில் சிலர் தவறான ஒரு முன்னுதாரணத்தை செய்துவிட்டனர்.

இசுலாமியர்கள் தங்களுக்கு எதிரான காட்சிகள் நீக்கப்பட்டதும், படத்தை திரையிட வழிவிட்டுவிட்டனர். ஆனால் கத்திப் பட எதிர்ப்பாளர்களோ, லைக்கா என்கிற நிறுவனத்தின் பெயர் டைட்டிலில் வராது, அதனை நீக்கிவிட்டோம் என்று அத்திரைப்பட குழுவினர் சொல்லியப் பிறகும் கூட எதிர்த்தார்கள். இதற்கெல்லாம் உச்சகட்டமாகப் போய், படம் திரையிடப்படவிருந்த சத்யம் தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர். அங்கு இருந்த பேனர்களைக் கிழித்து எறிந்தனர். இத்தனைக்கும் அந்தப் படத்தில், தமிழர்களுக்கு எதிரான எந்தக் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது, படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஈழத்தில், நம் தமிழின உறவுகளை இனப்படுகொலை செய்த இராஜபக்ஷேவின் ஆதரவுக் கரங்கள், தமிழகத்தில் வளர்வதை ஒரு தமிழனாய் நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்கிற போதும், ஒரு ஒப்பீட்டிற்காகவே கத்தி திரைப்படப் பிரச்சனைகளை நான் இங்கு முன்வைக்கிறேன்.

கத்தி திரைப்படத்தை எதிர்த்து பெட்ரோல் வெடிகுண்டை வீசியவர்களைப் பார்த்து எழாத கேள்விகள், விஸ்வரூபப் பிரச்சனையை ஜனநாயக முறையில் எதிர்கொண்டவர்களின் மீது பாய்கிறது.

தலாக் குறித்த விவாதத்திற்கு அனுமதியளித்த முஸ்லீம்களைப் பார்த்து சகிப்புத் தன்மையற்றவர்கள் என்கிற முத்திரையைக் குத்த முயன்றவர்கள், தாலி குறித்த விவாதத்திற்கு எதிராக டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசி தாக்கியவர்களைக் குறித்து மெளனம் காக்கின்றனர். இதுதான் இங்கு ஜனநாயகம்(!);இதுதான் இங்கு நடுநிலைமை(!).

- பழனி ஷஹான்

Pin It