சாதியும், ஆணாதிக்கமும் தலித் பெண்களை எப்படியெல்லாம் கடைநிலையில் வைத்து இழிவுபடுத்தி வருகிறது என்பதை மீண்டும் ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. மதுரை மாவட்டம் அனுப்பானடி கிராம அதிகாரத்திற்குட்பட்டது தெப்பக்குளம் காவல்நிலையம். சாதிய நோக்ககோடு குறைந்த பட்சம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை குறிவைத்து தாக்குவதிலும், செய்யாத குற்றத்திற்கெல்லாம் கூண்டிலேற்றி வாழ்நாளெல்லாம் சிறைபிடித்து வைப்பதிலும் கெட்டிக்காரர்கள் இந்த காவல் நிலைய காவலர்கள்.

அனுப்பானடி கிராமம் என்றாலே அனைவருக்கும் தெரிந்த ஒன்று - சாதி கட்டமைப்புகளோடு மிகவும் தெளிவாக பிரிக்கப்பட்ட ஒரு பகுதி என்பது யாரும் எளிதில் கண்டறியக்கூடிய ஒன்றாகும். ஒரு பகுதியில் நாயுடு, பிள்ளைமார் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினரும் மறுபகுதியில் பள்ளர், பறையர் மற்றும் சக்கலியர் சமூகத்தினரும் வாழ்ந்து வருகிறார்கள். 90களுக்கு முன்பு ஆதிக்க சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிக்கடி சாதிய மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. சில உயிரிழப்புகளும் கூட இரு தரப்பினர்களிடையே நடந்தேறியுள்ளது ஊரறிந்த இரகசியமாகும்.

தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜையை 2005க்குப் பிறகு பள்ளர் சமூகத்தினர் அதிவேகமான உந்துதலோடும், விழிப்புணர்வோடும் கொண்டாட ஆரம்பித்தார்கள். அதுதான் காவல்துறையின் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பரமக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் 2012ல் நடந்தேறிய தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது சின்னஉடைப்பு அருகே தாழ்த்தப்பட்டவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் இவையிரண்டும் பின்னிப் பிணைந்து கோர்வையாக்கி, அதனையடுத்து காவல்துறையினர் தாழ்த்தப்பட்டவர்கள மீது நடத்தி வருகின்ற வன்கொடுமைகளும், வழக்குப்பதிவுகளும் ஏராளம், ஏராளம்.

அனுப்பானடியின் ஒரு பகுதி தெப்பக்குளம் காவல்துறை அதிகாரத்திற்கும் மறுபகுதி அவனியாபுரம் காவல்துறை அதிகாரத்திற்கும் உட்பட்டது. எந்நேரமும் காவலர்கள் லத்தியோடும், துப்பாக்கியோடும் உள்நுழைந்து சந்தேகம் என்கிற பெயரில் அங்குள்ள இளைஞர்களை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட காவலர் ஊர்தியில் சைரன் சத்தம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இரவில் யாரும் நீண்ட நேரம் வெளியில் நடமாடக்கூடாது. நான்கு பேர் சேர்ந்து பேசக்கூடாது. காவலர் உடையைக் கண்டாலே பேண்டு கொண்டிருப்பவர்கள் கூட ஓடி ஒளிய வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள்.

28.01.2015 அன்று இரவு 9.00 மணியளவில் ஊருக்குள் நுழைந்த தெப்பக்குளம் காவலர்கள் பறையர், பள்ளர் மற்றும் சக்கலியர்களை - புதைக்கும் சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று மது குடித்துக் கொண்டிருந்த இளைஞர்களை - வேனில் ஏற்றி வந்துள்ளது. அருகில் இருசக்கர வாகனமொன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்து காவலர்கள் வண்டியையும் சேர்த்து உருட்டிக் கொண்டு வந்துள்ளார்கள். பறையர் சமூகத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் சுடுகாட்டுப் பகுதியில் மலம் கழிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றவர் திரும்பி வந்து பார்த்தால் வண்டியைக் காணவில்லையென்று தேடிக் கொண்டிருந்தவரைப் பார்த்து அருகில் உள்ளவர்கள் “உனது வண்டியை காவலர்கள் தூக்கிச் சென்றுள்ளார்கள்” என்று கூறியதும் வண்டியை மீட்க ஓடோடி வந்திருக்கிறார்.

காவலர் கையில் வண்டி இருப்பதைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் சார் இந்த வண்டி என்னுடையது என்று கூறியதும் “தேவையான ஆவணங்களை காட்டிவிட்டு வண்டியை எடுத்துச் செல்” என்று கூறியுள்ளார்கள். சரியென்று அவரும் கூற அருகிலுள்ள ஒருவனைக் கூறி இந்த வண்டியின் பிரேக் வயர் மற்றும் கிளெட்ஸ் வயர்களை கத்தியால் அறுக்கும்படி கூறியுள்ளார்கள். உடனே சாமிநாதன் கையிலிருந்த இருசக்கர வாகனத்தின் சாவியைக் கொடுத்து “சார் வண்டியை ஓட்டிச் செல்லுங்கள் நான் காவல்நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்கள். “நான் அப்படித்தாண்டா வயரை அறுப்பேன் நீ சாவி கொடுத்து ஓட்டிட்டு போகனுமா போடா" என்று தரக்குறைவாகப பேசி, வண்டியின் வயர்களை அறுத்துள்ளார். சாமிநாதனுக்கு கோபம் வர “என் வண்டியோட வயரை அறுக்குறதுக்கு நீங்க யாரு, என் வண்டியில் உள்ள பொருட்கள் ஏதேனும் டேமேஜ் ஆகியிருந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு” என்று கூற “வண்டியை உன்னிடம் தரமுடியாது, கேச போட்டு உள்ள தள்ளாமல் விடமாட்டோம் காவல்நிலையத்துக்கு வாடா ஒன்ன வச்சுக்கிறேன்” என்று காவல்நிலையத்திற்கு அடித்து இழுத்துச் சென்றுளார்கள்.

தெப்பக்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற சாமிநாதன் என்னை (வழக்கறிஞர் நீதிமலர்) தொடர்பு கொண்டு பேச காவல்நிலையத்திற்கு சென்ற நான், என்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு "எதற்காக சாமிநாதன் வண்டியை எடுத்து வந்தீர்கள், அவரையும் காவல்நிலையத்திற்கு இழுத்து வந்ததற்கான காரணமென்னவென்று தெரிந்து கொள்ளலாமா" என்று கேட்க, என்னை வெளியில் அழைத்து வந்து வண்டியைக் காட்டி "ரூ500ஃ- கொடுத்துட்டு சைலெண்ட்டா வண்டியைக் கொண்டு போங்க” என்று காவல்துறை என்னிடம் கூற “காரணமே இல்லாம நான் எதுக்கு சார் அபராதம் கட்டனும், அவரு என்ன தப்பு செய்தாருன்னு சொல்லுங்க சார்" என்று கேட்டேன். உள்ளே அழைத்துச் சென்று “வண்டி சுடுகாட்டுப் பகுதியில் அனாமத்தா கெடந்தது, அதான் எடுத்துட்டு வந்தோம்” என்று திமிராக பதில் கூறினார். சாமிநாதனிடம் கேட்க, நான் மலம் கழிப்பதற்காகத்தான் அங்கு சென்றேன் என்று பதிலளித்தார். “பேல்றதுக்கு அரைமணி நேரமாடா ஆகுது சொல்லுடா" “சார் அது அவனோட தனிப்பட்ட விசயம்’ என்று நான் கூற, “ஆளையும் விடமுடியாது, வண்டியையும் கொடுக்கமுடியாது. ஒன்னால முடிஞ்சத நீ பாத்துக்க" என்று கூற SI அழகுமுத்து கூறினார். மேலும் “அவன் குடிச்சுட்டு வண்டிய ஓட்டிட்டு (Drunk and Drive) வந்தான், அதனால அவனp பிடிச்சு கேச போடப்போறேன்” என்றார்.

பொய்யா எதுககு சார் குடிச்சுருக்காருன்னு சொல்றீங்க என்று நான் கேட்க, “நீ வக்கீல்ன்னா அந்த திமிற கோர்ட்டுக்குள்ளதான் வச்சுக்கனும் இங்க வந்து கேள்விக்கு மேல கேள்வி கேட்கக் கூடாது" என்றார். "என்ன கேள்வி கேட்கக் கூடாதுன்னு சொல்லாதீங்க சார், பொய் வழக்கு போட்டீங்கன்னா நான் ஒங்க மேல தனிவழக்கு போடவேண்டியிருக்கும், காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுக்க வேண்டியிருக்கும் என்று நான் கூறினேன். “இந்தம்மா என்னைப் பார்த்து கமிஷ்னர்கிட்ட போய் கம்பிளையண்ட் கொடுக்க போறேன்னு சொல்றது, பார்ல்ல கம்பிளையன்ட் கொடுப்பேன்னு சொல்றத இதெல்லாம் எங்கிட்ட சொல்லாத, நீ சொன்னதும் ஒன்னப் பாத்து பயந்து நடுங்கி ஒன் கால்ல விழுந்து கும்புடுவேன்னு நெனக்காத. நீ எவன்கிட்ட வேணுண்ணாலும் சொல்லிக்கோ.. என்ன நடவடிக்கை வேணுன்னாலும் எடுத்துக்கங்க... நீ யாரு, என்ன சாதி, எங்க இருக்க எல்லாம் எங்களுக்குத் தெரியும், பொம்பளையா இருக்கேன்னு பாக்குறேன். இல்லை ஒன்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன். மரியாதையா வெளிய போயிரு.. வண்டி ரொம்ப நேரமா தனியா கெடக்குது.. திடீர்ன்னு குண்டு வெடிச்சா யார் பதில் சொல்லுவா?" என்று மிரட்டினார்.

"என் வண்டில வெடிச்சா நான்தான் பதில் சொல்லனும் சார், நீங்க எப்படி பொறுப்பு"ன்னு கேட்க, "ஒழுங்கு மரியாதையா வெளியே போ.. இல்லன்னா ஒன்னோட வண்டிலையும் குண்டு இருந்துச்சுன்னு சொல்லி ஒம்மேலையும் வழக்கு போடுவே"ன்னு என்னையும் மிரட்ட ஆரம்பித்தார். SSI ராஜேந்திரன் “இனிமே ஒங்கிட்ட பேச நாங்க தயாரா இல்ல. மொதல்ல ஸ்டேசன்ன விட்டு வெளியே போடி"ன்னு மிக அநாகரீகமா பேசி அவமதிப்பு செய்தார். நான் வெளியே வந்ததும் Drunk and Drive 75 ஆக மாற்றி 1300 அபராதம் வாங்கிக் கொண்டு சாமிநாதனையும், வண்டியையும் விட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், ஆணையாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி என பல்வேறு நபர்களுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையின் எண்ணப்படி அனுப்பானடியிலிருந்தோ, சிந்தாமணி பகுதியிலிருந்தோ யாரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்தாலும் குறைந்த பட்சம் 75 கேசாச்சும் போட்டு அனுப்ப வேண்டுமே தவிர யாரையும் சும்மா அனுப்பக்கூடாது என்பது காவலர்களின் எண்ணமாக உள்ளது. இந்த அராஜகத்திற்கு யார் மணி கட்டுவது என்கிற கேள்வியே மனதின் போராட்டமாக உள்ளது.

- நீதிமலர், வழக்கறிஞர்

Pin It